இளவரசி வித்யோத்தமா {வேறு பெயர்களும் கூறுவார்கள்} நன்கு கற்றவள், எல்லோரிடமும் வாதம் செய்து தோற்கடிக்கும் வல்லமை உள்ளவள், தான் தோற்கும்படி அறிவுள்ளவனையே திருமணம் செய்வேன் என்று வைராக்கியத்துடன் இருக்கிறாள். இவளுடன் வாதம் செய்து தோற்றவர்கள், மந்திரி உட்பட அந்த இராச்சியத்திலுள்ள அடி முட்டாளை அவளிற்கு திருமணம் செய்வித்து அவளை அவமானப்படுத்த சூழ்ச்சி செய்கின்றனர். அந்த சூழ்ச்சியில் திருமணம் நடந்து விடுகிறது. அதன் பின்னர் தான் இளவரசி நடந்ததைப் புரிந்து தனது கணவன் அடிமுட்டாள் என்பதை உணர்ந்துக் கொள்கிறாள்.
பின்னர் முட்டாளான தன் கணவனிற்கு காளி உபாசனை கற்பிக்கிறாள். அதன் பிரகாரம் காளி கோவிலின் உள்ளே சென்று தாழிட்டு தரிசனம் காணாமல் வெளிவரமாட்டேன் என்று உறுதியாக இருக்க அன்னை தோன்றுகிறாள். தான் மிகப் பெரிய அறிஞனாக வரவேண்டும் என்று கூற தேவியும் மகிழ்ந்து "காளி சடாக்ஷரி" மந்திரத்தை நாவில் எழுதி உபதேசிக்க அந்த உபாசனையால் மஹாகவியாகிறார்.
வீட்டுக்குத் திரும்பிய கணவனை நோக்கி இளவரசி கேட்கிறாள் “அஸ்தி கஸ்சித் வாக்விஷேஷஹ??" என்று, இதன் பொருள் சொல்வளம் ஏதாவது உண்டா? என்பது.
இந்த மூன்று வார்த்தைகளையும் ஆரம்ப அடியாகக் கொண்டு குமார சம்பவம், மேகதூதம், ரகுவம்சம் ஆகிய மூன்று காவியங்களைப் படைக்கிறார்.
காளிதாஸரின் படைப்புகளின் சிறப்பு கவித்துவம் மட்டும் அன்றி நவரசங்களைக் கூறி மக்களின் அடியாழ மனதினைப் பிரதிபலிக்கும் படைப்புகள்!
அவரது இலக்கியப் புலமைக்கெல்லாம் காரணம் சியாமளை எனும் காளியே என்று தன்னை அந்தக் காளியில் தாசராக்கிக் கொண்டார்.
அவர் எழுதிய ஸ்தோத்திர நூல் சியாமளா தண்டகம், இது தாந்திரீக சரஸ்வதி எனும் சியாமளையைத் துதிக்கும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.