இது ஒரு சித்தரியல் தத்துவப் பதிவு!
நேற்று பஞ்சகோசங்கள் பற்றி ஒரு உரையாடல்.
கோஷம் என்ற சமஸ்க்ருத (कोश - kośa) வார்த்தைக்கு உயிரைச் சூழ உள்ள ஒரு போர்வை என்று பலரும் நம்பிக்கொண்டும் நம்பவைக்கப்பட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். இதில் உண்மை இருந்தாலும் இந்த பஞ்ச கோசம் என்பது அனைவரிலும் இருப்பதில்லை என்பது மற்றொரு உண்மை!
கோஷம் என்றால் செல்வம் நிறைந்த கருவூலம், செல்வமும் கருவூலமும் உழைப்பில்லாதவனிடம் இருப்பதில்லை! இதைப் போல் தனது உடலையும், உயிர் சக்தியையும் உழைத்து சேமிக்காதவனிடம் பஞ்சகோசங்கள் உருவாவதில்லை!
பஞ்சகோஷங்களில் நோய் ஏற்படுவது என்று கூறுவது தவறானது!
உண்ணும் உணவு பிராணனின் ஆற்றலைக் கொண்டு சப்ததாதுக்களாக மாற்றப்படுகிறது.
இப்படி சப்த தாதுக்களாக மாற்றப்பட்டதில் சுக்கிலதாது வீணாகாமல் (இதன் அர்த்தம் வலிந்து சுக்கிலத்தை அடக்குவதல்ல) இருக்கும் ஒருவனில் அவனது எண்ணங்கள் உயர்வான சிந்தனையில் இருக்குமானால் (உயர்வான சிந்தனை என்பது அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல், மனப் பதட்டம் போன்றவை இல்லாமல் தன்னை உயர்த்த வேண்டும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணங்கள், பரமார்த்திகம் அடைய வேண்டும் என்ற ஊர்த்துவ எண்ணம்) அது ஓஜஸ் எனும் உயர்ந்த ஆற்றலாக மாற்றப்பட்டு மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் எனும் அந்தக் கரணங்களிற்கு செலுத்தப்படும்.
இந்த அதிகரித்த ஓஜஸ் சக்தி உடலில் சேமிக்கப்படும் போது அன்னமய கோசமும், தசப் பிராணன்களில் சேர்க்கப்படும் போது பிராணமய கோசமும், மனதில் சேர்க்கப்படும் போது மனோமய கோசமும் புத்தியில் சேர்க்கப்படும் போது விஞ்ஞான மயகோசமும், உயிரைச் சூழ சேர்க்கப்படும் போது ஆனந்தமய கோசமும் உருவாகிறது.
ஆக கோசங்கள் ஒழுக்கமான வாழ்க்கை வாழும் ஒரு சாதகனில் அவனது நெறிப்பட்ட வாழ்க்கையால் உருவாக்கப்படுபவையே அன்றி எல்லோருக்கும் இருக்கும் ஒரு விஷயம் அல்ல!
இதை எப்படி சாதிப்பது என்பதே யோக சாதனையின் முதல் படி, அதனாலேயே சாதகன் பஞ்சமுக காயத்ரி முதலில் உபாசிக்க வேண்டியிருக்கிறது!
ஒருவன் நோயாளி என்றால் அவனில் அன்னமய கோசம் என்ற பேச்சிற்கே இடமில்லை! அல்லது அவனது அன்னமய கோசம் பழுதாகவும் மற்றைய கோசங்களில் உயர்வாகவும் இருக்கலாம்!
ஆகவே யோகம் கற்பவர்களும், கற்பிப்பவர்களும், சித்த ஆயுர்வேத வைத்தியர்களும் சரியாக இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.