இன்று காலை வாசிப்பு The practical neuroscience of Buddha's Brain என்ற நூல்.
இந்த நூல் எப்படி தியானப்பயிற்சிகள் மூளையை மாற்றுகிறது என்பது பற்றி நவீன மருத்துவ அறிவிலான f-MRI தொழில் நுட்பத்தின் தரவுகளுடன் உரையாடுகிறது.
இதில் சுருக்கமாக புரிந்து கொண்டது,
மனம், மூளை இரண்டும் ஒன்றிணைந்த ஒரு தனித்த தொகுதி (mind and brain are a single, integrated system).
மனதின் மூலம் மூளையின் பாகங்கள் மாறுதலடையும், அதுபோல் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் மன நிலையைப் பாதிக்கும் என்பது!
இனித் தியானம் என்பதன் அர்த்தத்திற்கு வருவோம். தியானம் என்பதை தமது மனம்போன போக்கிற்கு வரைவிலக்கணம் செய்ய இயலாது. எமக்கு முன்னர் இதைப் பயிற்சித்து பலன் கண்ட ஆப்த வாக்கியப்பிரமாணத்தையே எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்படி எடுத்துக் கொண்டால் சிறந்து சுருக்க வரைவிலக்கணம் உள்ள நூல் பதஞ்சலியாரின் யோக சூத்திரம்.
யோகசூத்திரத்தின் விபூதி பாதம் 03வது சூத்திரம் தியானத்தை வரையறுக்கிறது.
तत्र प्रत्ययैकतानता ध्यानम्॥२॥
tatra pratyayaika-tānatā dhyānam ||2||
தியானம் என்பது எங்கு மனம் ஒருமைப்படுத்தப்பட்டதோ அதன் மீதான தொடர்ச்சியான இடைவெளியற்ற எண்ணஓட்டம்.
ஒரு பொருளைப் பற்றி தியானம் செய்கிறோம் என்றால் அதன் மீது மனதைச் செலுத்தி இடையூறாத எண்ணத்தை தைலதாரை போல் செலுத்திக் கொண்டிருத்தல் தியானம்.
இந்த விளக்கம் சரியாகப்புரிந்தால் கண்களை மூடிக்கொண்டு இருப்பதை தியானம் என்று நாம் கருதமாட்டோம்.
இந்த வரைவிலக்கணத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே எமது பூஜைப்பத்ததிகள். இதுபற்றி வேறு ஒரு நேரம் உரையாடுவோம். இப்போது தியானம் செய்யும் போது நவீன அறிவியலின் கூற்றுடன் ஒப்பிடுவதே எமது நோக்கம்.
நவீன அறிவியல் தொடர்ச்சியான நல்ல எண்ண ஓட்டம் மூளையின் பாகங்களை புத்துணர்ச்சி செய்ய வைக்கிறது என்பதை நிறுவியுள்ளது.
பதஞ்சலியாரும் தியானத்திற்கான வரைவிலக்கணமும் தியானிக்கும் பொருள் மீதான தொடர்ச்சியான இடைவெளியற்ற எண்ண ஓட்டமே தியானம் என்கிறார்.
ஆகவே சரியாக புரிந்து கொண்டு நல்ல எண்ணத்தை உருவாக்கக்கூடிய, நல்ல உணர்ச்சியை உருவாக்கக் கூடிய தியானம் மூளையை புத்துணர்ச்சி செய்ய வைத்து புதுப்பிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.