ஐந்தாவது பாடல்
நினையப் பிறருக் கரிய நெருப்பை
நீரைக் காலை நிலனை விசும்பைத்
தனையொப் பாரை யில்லாத் தனியை
நோக்கித் தழைத்துத் தழுத்த கண்டங்
கனையங் கண்ணீர் அருவி பாயக்
கையுங் கூப்பிக் கடிமலராற்
புனையப் பெறுவ தென்று கொல்லோ
என்பொல் லாமணி யைப்பு ணர்ந்தே.
இந்தப் பாடலில் முதல் வரியை அப்படியே சேர்த்து நினையப் பிறருக்கரிய நெருப்பை என்ற வார்த்தையை இறைவன் தன் அடியாரல்லாத பிறருக்கு நினைய அரிய நெருப்பாய் இருக்கின்றான் என்று பண்டிதர்கள் பொருள் காண்பார்கள்.
ஆனால் இந்த வார்த்தையை இரண்டாகப் பிரித்துப் பொருள் காண வேண்டும்.
நினையப் பிறருக்கரிய ஒரு வார்த்தை
நெருப்பை நீரைக் காலை நிலனை விசும்பைத் என்பது மற்ற வார்த்தை.
அடுத்த வார்த்தை தனையொப்பாரை யில்லாத் தனியை
இந்த மூன்று வார்த்தைகளும் இறையின் பண்புகளைக்கூறுகிறது.
நினையப் பிறருக்கரிய என்ற வார்த்தை தன்னை நினைக்காதவனுக்கு அரியவன் என்று பொருள் பட்டாலும் இதை ஏதோ இறைவனை நினைக்காவிட்டால் தண்டனை தருபவன் என்று விபரீத அர்த்தம் கொள்ளக்கூடாது. எந்தச் செயலை செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு அந்தச் செயலில் மனம் ஈடுபட வேண்டும். நினைப்பு இருக்க வேண்டும். இறைவனை தன்னில் உணர வேண்டுமானால் அதற்குரிய வகையில் மனம் பக்குவப்பட்டிருக்க வேண்டும். அப்படி இறைவனைப்பற்றி நினைக்காதவனுக்கு யோக சாதனை வாய்க்காது. அதுவே நினையப் பிறருக்கரியவன் என்பதன் பொருள்.
அடுத்து பஞ்ச வித்துக்கள் என்ற காரண நிலை சிவதத்துவங்களான அகர, உகர, மகார, நாத, விந்து கலைகள் நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களாகி, இவற்றை நாதத்தால் மனிதன் வசப்படுத்தக்கூடிய நிலையில் பஞ்சாக்ஷர மந்திரமான ந ம சி வ ய ஆகிறது. ஸ்தூல புலன்களால் அறியப்படக்கூடிய சிவம் பஞ்ச பூதங்கள், ஆகவே நெருப்பை நீரைக் காலை நிலனை விசும்பை என்று அடுத்த வரியில் குறிப்பிடுகிறார் பெருமானார்.
இத்தகைய சிறப்புள்ள சிவமாகிய ஆற்றல் தனக்கு நிகர் தானே எனும் சிறப்புள்ளது, அதைக்குறிக்க தனையொப்பாரை யில்லாத் தனியை எனும் வார்த்தைகளால் குறித்தார்.
அடுத்த வரி யோகத்தில் முக்கியமான குறியீட்டுப் பாஷையைக் குறிக்கிறது.
நோக்கித் தழைத்துத் தழுத்த என்ற வரயில் தழைத்தல் என்றால் வளர்ச்சி என்றும் பொருள். நினைப்பை புருவமத்தியில் செலுத்தி, உடலின் பிருதிவி பூதம் இருக்கும் மூலாதாரம், அப்பு பூதம் இருக்கும் சுவாதிஷ்டானம், அக்னி பூதம் இருக்கும் மணிப்பூரகம், வாயு பூதம் இருக்கும் அனாகதம். விசும்பு பூதம் இருக்கும் விசுத்தி இப்படி பஞ்ச பூதங்களையும் யோகத்தால் சுத்தி செய்து தனையொப்பாரை யில்லாத் தனியை புருவமத்தியில் உணர்வைச் செலுத்தி நினைக்க புருவமத்தியில் இருக்கும் உயிர் பொல்லா மணியாகிய சிவத்தை நோக்கித் தழைக்கும் - வளரும்.
இப்படி உயிர் தழைத்து வளர்ந்து பொல்லாமணியைப் புணர்ந்தால் அம்ருதம் சொரியும், இப்படி சொரியும் அம்ருதம் முதலில் சேருவது கண்டம் என்ற விசுத்தியில், இப்படி அம்ருதம் உடலில் பாய உடல் தழுதழுக்கும், யோகசித்தியில் முதல் குறி உடல் நடுங்கல், தழுதழுத்தல்!
அடுத்தது கண்டம் கனைதல், கனைத்தல் என்றால் ஒலி யெழுப்புதல், சித்தியடைந்த யோகிக்கு, மாணிக்க வாசகர் கூறும் பொல்லா மணியைப் புணர்ந்த யோகிக்கு கண்டம் கனைக்கும் அனுபவம் ஏற்படும். கண்டம் கனைதல் என்பது விசுத்தியில் உணர்வு ஒன்றும் யோகிக்கு ஏற்படும் வாக்கு சித்தியும், பிரபஞ்ச நாதத்தை மந்திர ஒலிகளாக கூறக்கூடிய ஆற்றலும்.
அடுத்த வரிகளில் சித்தர்கள் கூறும் மெய்ப்பொருள் இரகசியம் கூறுபடுகிறது. கண்ணீர் என்றவுடன் சாதாரணமாக அழுகைக்கு வரும் கண்ணீர் என்று பொருள் கொள்ளவும் இடம் தருகிறது. ஆனால் இங்கு கண்களை புருவ மத்தியில் செலுத்து தியானிக்க வழியும் அம்ருதத்தையே கண்ணீர் என்ற சொல் குறிப்பிடுகிறது.
ஒரு யோகி தனது கண்களை புருவ மத்தியில் செலுத்தி தியானத்தை செலுத்த அவனில் பரசிவத்தில் அருளால் அம்ருதம் சுரக்க ஆரம்பிக்கும். இது அண்ணாக்கு வழியாக உடலில் இறங்கி அவனில் யோக ஆற்றலை விழிப்பிக்கும். கண்களை செலுத்திப் பெறும் நீர் ஆகையால் அதைக் கண்ணீர் என்று சித்தர்கள் கூறுவது வழக்கம். இதை நாம் அழும் போது வரும் என்று கண்ணீர் பொருள் கொள்ளக்கூடாது. பலர் திருவாசகத்தை தாம் கண்ணீர் மல்கப் பாடுவதாகக் கூறுவார்கள். மென்மையான மனம் உடைய அவர்களுக்கு தமது அழுகைக் கண்ணீரைத் தான் பெருமானார் குறிப்பிடுகிறார் என்று எண்ண சகல உரிமையும் உண்டு. அனால் ஷத்திரிய அமாத்திய மாணிக்கவாசகர் தான் புரிந்த சிவராஜ யோகத்தை மிக நுணுக்கமாக மறைத்து வைத்திருக்கிறார் என்பதுதான் உண்மை.
இப்படி கண்ணீராகிய அம்ருதம் ஒருவன் பொல்லா மணியைப் புணர்ந்தால் அருவி போல் பாய ஆரம்பித்தால் என்ன செய்யவேண்டும் என்ற நுணுக்கத்தை அடுத்த வரிகளில் கூறுகிறார்.
கண்ணீர் அருவி பாயக் கையுங் கூப்பிக் கடிமலராற்
புனையப் பெற வேண்டும் என் கிறார்.
இப்படி அம்ருதம் உடலில் பாயும் நிலை பெற்ற யோகி அவன் தனது காரண சூக்ஷம் சரீரங்களில் உள்ள தாமரை இதழ் வடிவான சக்கரங்களில் சேர்க்க வேண்டும். இப்படிச் சேர்ப்பதற்கு கை கூப்புதல் என்பது கைகளால் காட்டப்படும் முத்திரைகளைக் குறிப்பது.
சிவத்தின் வழி யோக சாதனை செய்பவர்கள் அந்த வழிக்குரிய முத்திரைகளை அவர்களுடைய பூஜை பத்ததியில் குறிப்பிடப்பட்டிருக்கும். அகோர சிவாச்சாரியர் பத்ததியில் 27 வகை கை கூப்பும் முத்திரைகள் கூறப்பட்டுள்ளன.
முத்திரை என்பது கட்டுப்படுத்தல் என்று பொருள். முத்ரா சக்திகள் என்பது யோகசாதனையில் உருவாகும் தெய்வ பிராண சக்திகளை கட்டுப்படுத்தி உடலில் சேர்க்கும் முறையாகும். இவற்றைக் குருமுகமாகப் பயில வேண்டும்.
இங்கு மாணிக்க வாசகப்பெருமானர் பொல்ல மணியைப் புணர்ந்ததால் அருவியாய்ப் பாயும் அம்ருதத்தை கட்ட கையுங் கூப்பி என்ற முத்திரைகள் பாவிக்க வேண்டும் என்பதைக் கூறி அடுத்த வரியில் எங்கு கட்ட வேண்டும் என்பதைக் கூறுகிறார்.
கடிமலராற் புனைய என்கிறார். கடிமலர் என்பதை பண்டிதர்கள் வாசனையுள்ள மலர்கள் என்று கூறுவார்கள். ஆனால் இங்கு கடி என்பது சிறப்பு வாய்ந்த மலர் என்று பொருள் கொள்ள, எது யோகிக்கு சிறப்பு வாய்ந்த மலர்கள் என்று கேள்வி வரும்? யோகிக்கு தனது உடலிலில் இருக்கும் ஆறு ஆதாரத் தாமரை மலர்களே சிறப்பு வாய்ந்த மலர்கள். அந்த ஆறு ஆதாரங்களில் அருவியாகப் பாயும் கண்ணீர் எனும் அம்ருதத்தை புனைய வேண்டும்.
இதுவெல்லாம் புருவ மத்தியில் இருக்கும் பொல்லா மணியைப் புணர்ந்து வரும் யோக அனுபவத்தால் வரும் நிலைகள் என்பதை இந்தப்பாடலில் பெருமானார் அற்புதமாகக் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.