இனி மூன்றாவது பாடல்,
அல்லிக் கமலத் தயனும் மாலும்
அல்லா தவரும் அமரர் கோனுஞ்
சொல்லிப் பரவும் நாமத் தானைச்
சொல்லும் பொருளும் இறந்த சுடரை
நெல்லிக் கனியைத் தேனைப் பாலை
நிறைஇன் னமுதை அமுதின் சுவையைப்
புல்லிப் புணர்வ தென்று கொல்லோ
என்பொல் லாமணி யைப்பு ணர்ந்தே.
முதல் வரியிலுள்ள அல்லி என்ற வார்த்தை பூக்களில் உள்ளே இருக்கும் அகவிதழ்களைக் குறிக்கும், அதை அடுத்து கமலம் என்ற சொல் தாமரை என்று பொருள்படும். இதை உரையாசிரியர்கள் இப்படிப் பொருள் கொள்கிறார்கள்.
அக இதழ்களையுடைய தாமரை மலரிலுள்ள, அயனும் - பிரமனும், மாலும் - திருமாலும், அமரர் கோனும் - தேவர் தலைவனாகிய இந்திரனும், அல்லாதவரும் - மற்றைத் தேவரும், இது சாதாரணமாக மாணிக்கவாசகரை ஒரு பக்தர் என்று எண்ணிப் பொருள் கொள்ள இதுவும் சரியாகத் தான் இருக்கும்.
ஆனால் எமது கருத்தோ மாணிக்கவாசகர் சிவயோகத்தில் தேர்ந்த சிவராஜ யோகி, தனது யோக அனுப்பவத்தையே இந்தப் பாடல்களில் கூறுகிறார் என்பது.
ஆகவே அல்லிக்கமலம் என்பதை அகத்தில் இருக்கும் தாமரை என்று பொருள் கொண்டால் இவை உடலில் இருக்கும் குண்டலினி யோகம் குறிக்கும் ஆதாரச் சக்கரங்களையே சுட்டுகிறார் என்று வரும்.
இந்தப் பாடலில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம் என்று முதல் மூன்று சக்கரங்களின் செயலால் ஒரு யோகி தனது யோகப் பாதையில் ஏற்படும் தடையை எப்படி மீள்வது என்பது பற்றிக்கூறுகிறார்.
மூலாதாரத்தில் உறைபவன் இந்திரன்
சுவாதிட்டானத்தில் உறைபவன் பிரம்மன்
மணிப்பூரகத்தில் உறைபவன் விஷ்ணு
முப்பது முக்கோடி தேவர்கள் முள்ளந்தண்டு எலும்புகளில்,
இந்த முதல் மூன்று ஆதாரங்களும் உயிரைக் கீழ்ப்பரிணாமங்களில் செலுத்தி பொல்லா மணியாகிய சிவத்தை அடைய விடாமல் செய்பவை, இவற்றின் பிடியில் இருந்து முள்ளந்தண்டு வழி இருக்கும் சுழுமுனை நாடி வழி ஏறி புருவ மத்தியில் பொல்லா மணியைப் புணரவேண்டும்.
இந்திரன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூன்று சக்திகளும் உயிர் பூவுலகில் இயங்க அவசியமான சக்திகள்,
இந்திரன் என்று குறிப்பிடப்படுவது சூக்ஷ்ம உடலிற்கும், ஸ்தூல உடலிலும் அனுபவிக்கும் இன்ப உணர்வுகள்.
பிரம்மா என்பது படைப்புத் திறன், creativity என்று சொல்வது எல்லாம் பிரம்மா
விஷ்ணு என்பது காக்கும் திறன், மனிதனிடம் இருக்கும் காக்கும் பண்புகள் எல்லாம் விஷ்ணுவின் அமிசம்.
உயிர் இன்பத்தை அனுபவித்து, படைத்து, தன்னைக் காக்கும் போது தன்னுள் இருக்கும் தனது தலைவனாகிய சிவத்தை மறந்து போய் விடுகிறது.
இந்த மூன்று ஆற்றல்களும் சிவத்தின் கூறு தான் என்பதையும் மறந்து விடுகிறது.
இப்படி மறந்து இவற்றின் ஆளுகையில் மாட்டிவிடக் கூடாது என்பதாலேயே மணிவாசகப்பெருமான் அல்லிக் கமலத் தயனும் மாலும், அல்லா தவரும் அமரர் கோனுஞ்
சொல்லிப் பரவும் நாமத் தானை" என்கிறார்.
இந்த சிவம் ஒளியான சுடராகவும், சொல்லிற்கும் , பொருளுக்கும் அப்பாற்பட்டது என்பதையும் அடுத்த வரிகளில் கூறுகிறார்.
மிகுதி அடுத்த பதிவில்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.