முந்தைய பகுதிகள்:
பகுதி - 01
பகுதி - 02
பகுதி - 03
பகுதி - 04
பகுதி - 05
பகுதி - 06
*******************************************
ஆசிரமம் சென்ற முதல் நாள் ஆசிரம வாசிகளாக இருந்த இரண்டு அண்ணமார்களில் மூத்தவர் எனக்கு சாமியின் உடை கழுவும் பயிற்சி தந்தார். பிறகு சாமியின் அறை சுத்தம் படுத்துவது, ஆசிரமம் கூட்டுவது, கோயில் கூட்டுவது என்று வேலைகள்.
இரண்டொரு நாட்களில் இடிக்கப்பட்ட கோயில் மேல் மண்டபத்திற்கு கொங்கிறீட் போடும் வேலை ஆரம்பமாகியது. சாமி என்னிடம் "போய் வேலை செய்யுங்கப்பா" என்றார். எனக்கோ புது அனுபவம். அதுவரை காலமும் வீட்டி சாப்பிட்ட தட்டையோ, உடையையே கழுவிய அனுபவமே இல்லை. எல்லாம் அம்மாதான்! கொங்கிரீட் போடும் வேலைக்குழுவில் சேர்ந்து என்னை விட சற்றுப் பெரிய இளைஞர்களுடன் சேர்ந்து கொங்கிரீட் போட ஆரம்பித்தோம். இரவு வரை நீண்டது. வேலை செய்த உடல் உஷ்ணத்திற்கு குளிர் தெரியவில்லை. முழுமையாக கொங்கிரீட் போட்டு முடிய இரவாகி விட்டது.
எல்லோருக்கும் சாப்பாடு ஹோட்டலில் வாங்கி வர சாமி அன்பர் ஒருவரை கேட்டார். வேலைசெய்த அனைவருக்கும் மாமிச உணவு வாங்கிக் கொடுத்து வீட்டிற்கு அனுப்பும் படி சொன்னார். எனக்கு சற்று ஆச்சரியமாகி விட்டது, கோயில் வேலைக்கு மாமிச உணவு கொடுக்கச் சொல்கிறார் என்று. சாமியிடன் அப்போது ஒன்றும் கேட்க முடியாது. நேரம் வரும்போது கேட்போம் என்று விட்டு அமைதியாகி விட்டேன். எனக்கு மற்ற ஆசிரமவாசிகள் போல் ரொட்டியும் சோயாக் கறி குழம்பும்! வேலை செய்த களைப்பிற்கு நன்கு உறக்கம் வந்தது.
அடுத்த நாள் காலை எழுந்து குளித்து விட்டு தயாராக சாமியும் காலையில் எழுந்து கோயிலிற்கு சென்று எல்லா தெய்வங்களையும் வணங்கி விட்ட் காலை உணவிற்கு வந்து விட்டார். என்னை பார்த்து வாங்கப்பா சாப்பிடலாம் என்றார். நானும் கோயிலிற்கு போகாமல் சாமியுடன் சாப்பிட அமர்ந்து விட்டேன். பௌர்ணமி பூஜை இல்லாத நாட்களில் அதிக பட்சம் நான்கு அல்லது ஐந்து ஆசிரமவாசிகளும், தோட்ட வேலையாட்களும் இருப்பார்கள். சாமி சாப்பாட்டு மேசைக்கு வந்து அனைவருக்கும் தனது கைகளால் பரிமாறிவிட்டுத்தான் தான் சாப்பிட அமர்வார். இதுதான் மூன்று நேரமும் வழமையான நடைமுறை. அவரிற்கு தனது கைகளால் சாப்பாடு பரிமாறுவது மிகுந்த சந்தோஷம். அதேபோல் எவர் வந்தாலும் உணவருந்தாமல் அனுப்ப மாட்டார்.
சாப்பிட்டு முடிந்த பின்னர் சாமி ஆசிரமத்தின் முன்னால் இருக்கும் சிறிய வரவேற்பறையில் அவரிற்கு என்று இருக்கும் நாற்காலியில் அமர்ந்து விடுவார். இனி சாமியுடன் உரையாட முடியும். அவரது தலைக்கு மேல் அவரது குரு நாதர் ஸ்ரீ கண்ணைய யோகியாரின் படம் மாட்டியிருக்கும். மண்டபத்தின் மேற்புறத்தில் ஈஸ்வரப்பட்ட மகரிஷி, சிவானந்தர், ஞானானந்தர், சித்திர முத்திர அடிகளார், யோகி ராம்சுரத்குமார் போன்ற அவரது மற்றைய குருமார்களின் படங்கள் மாட்டியிருக்கும்.
சாமி அமர்ந்த பின்னர் நானும் அவருக்கு கீழே தரையில் அமர்ந்து கொண்டேன்.
எப்படி அப்பா நேற்று வேலை, கஷ்டமாக இருந்ததா என்று கனிவாகக் கேட்டார். "இதுவரை எனக்கு இப்படி வேலை செய்து பழக்கமில்லை சாமி, இதுமுதல் முறை" என்றேன். உண்மையில் இடுப்பு முறிந்து மேல் எல்லாம் சொல்ல முடியாத வேதனை, சாமி புன்சிரிப்புடன் "சாதனையின் முதல் படி கர்மயோகம்,செய்யுங்கப்பா, கர்மம் தீர ஆன்ம முன்னேற்றம் தானாக பிறக்கும்" என்றார்.
அதிலிருந்து அப்படியான உடல் உழைப்புகள் தேவைப்படும் வேலைகளில் ஆர்வத்துடன் சிரத்தையுடன் பங்குபற்றினேன். கோயிலில் பூசகருக்குத் தேவையான உதவிகள், தோட்ட உதவிகள், ஆசிரமத்தை கூட்டுதல் போன்றவற்றை.
காலை எழுந்து சாமிக்கு தேனீர் கொண்டு செல்ல வேண்டும், பின்னர் சாமி குளித்துவிட்டு தனது தியான சாதனையை முடித்துக்கொண்டு 0730 அளவில் கோயிலிற்கு சென்று 0800 மணிக்கு ஆசிரமத்திற்கு வருவார், 0800 - 0830 காலை உணவு. பின்னர் மதியம் வரை உரையாடல் போகும். சரியாக 1230 - 1300 மணிக்குள் மதிய உணவு, பின்னர் சாமி இரண்டு மூன்று மணிவரை உரையாடி விட்டு மதிய ஓய்விற்கு சென்று 0430 அளவில் தேனீரிற்கு திரும்புவார். பின்னர் மாலையில் உரையாடல் நிகழும். பின்னர் 0800 மணிக்கு இரவு உணவு, பின்னர் உரையாடல் 1100 மணிவரை, இதுவே ஆசிரம வாழ்க்கை!
பௌர்ணமிக்கு முதல் நாள் இலங்கை பூராகவும் இருந்து சாமியிடன் தீக்ஷை பெற்ற அடியார்கள் எல்லாரும் வருவார்கள். பூஜை முடிந்த மாலை அனைவரும் சென்று விடுவார்கள்.
அதான் பின்னர் சாமி, மற்றைய நுவரெலியாவில் வசிக்கும் அடியர்கள் ஒருசிலர்! ஆசிரமத்தில் நிரந்தர வாசிகள் இரண்டு அல்லது மூன்று, இப்போது நானும் நிரந்தர வாசியாகிவிட்டிருந்தேன்.
பௌர்ணமி பூஜைக்கு பின்னர் ஒருமாதம் கோயிலிற்கு வரும் பக்தர் கூட்டங்களைத் தவிர வேறு எவரும் இருக்க மாட்டார்கள். சுவாமிகளை சந்திப்பதற்கு எந்த தடையும் இல்லை. சாதாரணமாக ஆசிரம வராண்டாவில் கதிரையில் அமர்ந்திருப்பார். எவரும் சென்று உரையாடலாம்.
சில நாட்களில் சாமியின் நேர அட்டவணை புரிந்த பின்னர் அவருக்கு சிரமம் ஏற்படாமல், அனேகம் பேர் இல்லாத நேரமாக எனது கேள்விகளையும் கற்றலையும் செய்யலாம் என்று திட்டம் போட்டேன்.
யோக நுணுக்கம், நான் நூல்களில் கற்ற எவற்றையாவது மேதாவித்தனமாக கேள்வி கேட்டால் ஒரு புன்சிரிப்புடன் கடந்து விடுவார். ஒருபோதும் அந்தச் சிரிப்பு ஏளனமாக இருக்காது. ஆனால் அது அனாவசிய கேள்வி என்பது அவர் சொல்லாமல் எனக்குப் புரியும்.
ஒருமாதத்தில் நான் சாமியின் பிரதான சேவகனாகிவிட்டேன். என்னை "தம்பி" என்று அழைப்பார். மற்றவர்களிடன் சொல்லும்போது எனது ஊரையும் சேர்த்து "மாத்தளைத் தம்பி" என்று சொல்லுவார். சிறிது நாட்களில் தன்னுடைய அறையில் தங்கிக்கொள்ளும் படி சொன்னார்.
சாமி தங்கு வீடு ஆசிரமத்திலிருந்து தனியாக இருந்தது. தற்போது அந்த இடத்தில்தான் சிவாலயம் அமைக்கிறார்கள். சாமியின் உறங்கும் அறை, தியானம் செய்யும் அறை, இந்த அறையில் சாமியின் குருவின் உடைகள், யந்திரங்கள், தேவியின் சிலை, நூற்கள் என்று சாமியின் சாதனைக்குரிய எல்லாம் இருக்கும். அதில் ஒரு மான் தோலில் சாமி அமர்ந்து சாதனை செய்யக்கூடிய ஆசனம் இருக்கும்.
அதுதவிர இரண்டு அறைகள் இருந்தது.
சாமி எனக்கு வசதியானதில் உறங்கிக்கொள்ளும் படி கூறிவிட்டார். நான் அருகில் இருந்த சிறிய அறையில் கட்டிலில் தூங்கிக் கொண்டேன். இப்போது நான் சாமியின் பிரதான உதவியாளனாகி இருந்தேன்.
காலையில் சாமிக்கு முன்னர் எழுந்து தயாராகி நேரத்திற்கு தேனீர் கொடுப்பது பிரதான வேலை.
இப்படி இன்பமாக மாதங்கள் கழிந்து கொண்டிருந்தன.
சாமியுடன் நடந்த உரையாடல்களை சிலதை எனது நோட்டுப்புத்தங்களில் குறித்து வைத்துக்கொண்டேன். உண்மையில் வீட்டை, அம்மாவை, உலகத்தை மறந்து விட்டிருந்தேன். உயர்தரம் எழுதியிருந்தேன், ஆனால் என்ன செய்யப்போகிறேன் என்பது பற்றி எந்த சிந்தனயும் இருக்கவில்லை.
அம்மா தீக்ஷை பெற்றிருந்ததால் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் வரத்தொடங்கியிருந்தார். அம்மா வந்தவுடன் மரியாதையாக அழைத்து யாகத்திற்குரிய ஆகுதி தருவார். பொதுவாக அந்த மரியாதை பெறுபவர்கள் எல்லோரும் சாமியின் பணிக்கு நிதி அளவில் பெரும் பங்களிப்புத் தருபவர்களாகவே இருந்தர்கள். ஆனால் நாமோ எந்த விததிலும் சாமியின் பணிக்குநிதி தரும் வசதி இருக்கவில்லை. ஆனால் சாமி எந்த விதத்திலும் பாரபட்சம் காட்டியதில்லை.
சாமி என்னையும் அவருடைய தம்பியின் புதல்வரையும் ஆசிரமத்தில் இருக்கச் சொல்லிவிட்டு இந்தியா சென்று விட்டார். சாமி சென்றால் முழுமையாக ஆசிரமம் வெறுமையாகிவிட்டது. அடுத்த பௌர்ணமி வரை, சாமி திரும்பி வரும் வரை இனி எவரும் வரமாட்டார்கள்.
எனக்கோ காலை எழுந்து ஆலையம் செலவது தியானம் செய்வது, சாப்பாடுவது, சாமி போல் பகல் உணவிற்கு பிறகு உறக்கம் என்றவாறு ஆசிரம வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது. ஊர்சுற்றிப்பார்க்கும் ஆர்வமோ ஆசிரமத்தை விட்டு வெளியே செல்லும் ஆர்வமோ இருக்கவில்லை. சாமியின் புத்தகங்கள் வாசிப்பது சாதனை சென்றவாறு என்று நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது.
அப்படி இருக்கும் போது ஒரு நாள் அந்த இரகசியம் எனக்குச் சொல்லபட்டது!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.