காமத்தின் மூலம் இறைவனை அடைவது என்பதே சாத்தியமில்லை, தாந்திரீகம் காமத்தின் மூலம் இறைவனை அடையலாம் என்று கூறவில்லை, காமத்தை உயர்ந்த தெய்வ சக்தியாக மாற்றினால் இறையை - சமாதி அனுபவத்தை - விழிப்புணர்வை அடையலாம் என்றே கூறுகிறது. எல்லோரிடமும் ஆழமாக இருக்கும் காமத்தை மறுத்தால் அது இறைவனை அல்லது விழிப்புணர்வினை அடைவதை தடைப்படுத்தும் என்பதால் அதைக் கவனிக்காது அழுத்தி விடவேண்டாம் என்கிறது.
மாணிக்கவாசகர் காதல் வாக்கியங்களை இறைவனை நோக்கி தனது புலன் வழி செல்லும் உணர்ச்சிகளை மடை மாற்றவே பாடியுள்ளார் என்பதையே எனது பதிவுகளில் கூறியுள்ளேனே தவிர மாணிக்கவாசகர் காமம் சார்ந்து பாடியுள்ளார் என்று கூறவில்லை.
காமம் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் ஏதோ தவறான ஒன்றைப் பற்றிப் பேசப் போகிறோம் என்று மனம் பதறுகிறது, பேசக் கூடாத ஒன்றை, அருவருக்கத்தக்க ஒன்றை உரையாடுகிறோம் என்று மனம் கலங்குகிறது. அதற்கும் இறைவனுக்கும் தொடர்பில்லை என்று எண்ணத் தோன்றுகிறது.
வினோதம் என்னவென்றால் அறம், பொருள், இன்பம், வீடு - தர்ம அர்த்த காம மோஷ என்று வாழ்வின் இலட்சியத்தைக் கூறித் தந்த முன்னோர்களின் வழி வந்த எமக்குத் தான் இந்தப் பதட்டம்!
சிவனை எல்லா உயிர்களையும் தன்னை நோக்கி ஈர்ப்பதால் காமேஸ்வரன்!
ஸக்தி காமேஸ்வரி!
காமனோ ஸக்தியின் மைந்தன்!
உலத்தாருக்கு கிடைக்கக் கூடிய ஸ்ரீ வித்தை காமன் உபாசித்த காதி வித்தை மட்டும்!
புனிதமானது என்று நாம் நம்பும் எதைப் பற்றி எதுவும் எண்ணக் கூடாது, சிந்திக்கக் கூடாது என்று பழக்குவிக்கப்பட்ட சமூகமே மூடத்தனமும், வன்முறையும், மூட நம்பிக்கையும், தீவிரவாதமும் உருவாக காரணமாகிறது.
சிந்திக்க வேண்டும்! எம் முன்னோர்கள் அந்தக் காலத்தில் பின்பற்றிய தர்மம் இப்போது மாறியிருந்தால் அந்த மாற்றத்திற்கு தகுந்த மாதிரி தர்மத்தை மாற்றி அதன் மூல நோக்கம் மாறாமல் வாழ்க்கைக்கு பிரயோசனமாக்க வேண்டும்!
மாணிக்கவாசகரின் ஞானத் தாழிசைக்கு உரை விளக்கம் எழுதும்படி பற்றி சில காலத்திற்கு முன்னர் பலர் கேட்ட காலத்தில் நான் நகைச் சுவையாக கூறியது "இங்கு பலர் அவரை உரிமைக்கு குத்தகை எடுத்து வைத்திருக்கிறார்கள், நாம் எழுதினால் வீண் சர்ச்சைகளும் கருத்து மோதல்களும் வரும், நேர விரயம், நான் என் குருநாதரின் (அகத்தியரின்) பாடல்களுக்கே விளக்கவுரை எழுதுகிறேன் என்று!
நான் கருத்துப் பகிர்வது சிந்தனை விரிவிற்காக! எந்தப் பற்றையும் வைத்துக் கொண்டு இல்லை! எனது குருநாதரிடம் அவர் அனுபவங்களைக் கேட்டு பூரிப்படைவதைக் காட்டிலும் அவர் எப்படி அந்த அனுபவத்தை அடைந்தார் என்பதைப் பற்றிய பயிற்சிகளை சாதனையை அறியவே ஆர்வத்தைக் காட்டியுள்ளேன்!
மணிக்கவாசகர் அடைந்த அனுபவத்தில் எனக்கு எந்த திருப்தியும் பூரிப்பும் இல்லை, அவர் எப்படி அதை அடைந்தார் என்பதை அறிவதும் தெரிவதுமே எல்லோருக்கும் பிரயோசனமானது! பலரை அந்த நிலைக்கு உயர்ந்த வல்லது!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.