சர்வ ஞான உத்தர ஆகமத்தின் (யோகபாதம்) படி யோகசாதனைக்கான நிபந்தனைகள்
Posted in FB : https://www.facebook.com/tsumanenthiran/posts/10158138005541589
**************************************************
சிவபெருமான் முருகனிற்கு உபதேசிக்கும் படியான இந்த ஆகமத்தின் யோக பாதம் யோக சாதகன் எப்படி யோக சாதனையைத் தொடங்க வேண்டும் என்ற வழிமுறையைச் சொல்கிறது!
இது துல்லியமான மொழிபெயர்ப்பு அல்ல, சுருக்கமாக விஷயத்தைப் புரிய பகிரப்படுகிறது.
சிவயோகத்தினை சாதிக்க விரும்பும் சாதகன் தனது மனதை புகழ்ச்சியிலும், இகழ்ச்சியிலும் சம நிலையாக வைத்திருக்கும் ஆற்றலும், மகிழ்ச்சியிலும், துன்பத்திலும் மனம் சம நிலை இழக்காத தன்மையும், அதிக மகிழ்ச்சியோ, பயமோ, அவ நம்பிக்கையான மன நிலையைத் தோற்றுவிக்கும் சந்தர்ப்ப சூழலிற்குள் செல்லாமல் சாதகன் தொடர்ச்சியாக தனது சாதனையைத் தொடர வேண்டும்.
சாதகன் தனிமையான வீடு, புனிதம் நிறைந்த தேவாலயம், மக்கள் அதிகம் நடமாடாத நதிக்கரை, எவரும்நெருங்கமுடியாத மரங்கள் நிறைந்த காடுகள், நிசப்தமான இடம், விலங்குகள், பூச்சிகள், மனிதர்களால் தொல்லை ஏற்படாத அமைதியான இடம், அல்லது தனது சொந்த வீடு ஆகிய இடங்களில் சாதனையைத் தொடங்கலாம்!
சாதகன் தனக்குச் சொந்தமில்லாத வேறு ஒரு தனி நபரின் இடத்தில் சாதனை செய்வது தவிர்க்கப்படவேண்டும் என்று கூறப்படுகிறது. மேலும் சூரியன், வெப்பம், ஆகியவற்றால் பாதிக்கப்படக்கூடாத இடமாகவும் இருக்க வேண்டும்.
சாதகன் தனது ஸ்னானத்தின் மூலம் உடலைச் சுத்தி செய்துகொண்டு மனச்சுத்தியுடன் விபூதி தரித்துக்கொண்டு சிவபெருமான் முன்னும் தனக்கு யோக தீக்ஷை தந்த குருவிற்கும் வீழ்ந்து வணங்கி ஆசிபெற்றுக்கொண்டு தனது சாதனையை தினசரி தொடங்க வேண்டும்.
யோக சாதனையில் அமர்வதற்கு அனேக ஆசனங்கள் உள்ளன; இவற்றுள் சாதகன் தனக்கு வசதியான பத்மாசனம், சுவஸ்திகாசனம், அர்த்த பீட, அர்த்த சந்திர, சர்வதோபத்ர ஆசனங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து உடலை நிமிர்த்தி, தலை முதுகெலும்பு நேராக வைத்து, மனதில் எந்த எதிர்மறை எண்ணங்களும் இன்றி சாதனையில் அமர வேண்டும்!
குகனே (இந்த ஆகமம் முருகனிற்கு உபதேசிக்கப்பட்டது) சாதகன் தனக்குள்ளே மனதைச் செலுத்தி சாதனையை ஆரம்பிக்க வேண்டும்!