குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, December 13, 2019

யோக வாசிஷ்டம் கூறும் யோகசாதனையின் அதிகாரிகள்!

யோக வாசிஷ்டம் என்பது ஸ்ரீ இராமர் தனது குருவான வசிஷ்ட மகரிஷியிடம் தனது ஆன்ம சாதனைக்கான வழிகாட்டலைப் பெற உரையாடிய உரையாடலின் தொகுப்பு நூல்.

இது 32,000 பாடல்களைக் கொண்ட ப்ரஹத் யோக வாசிஷ்டம் என்றும், இதைச் சுருக்கி 6000 பாடல்கள் கொண்ட நூல் லகு யோக வாசிஷ்டம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நூலில் உள்ள சிறப்பம்சம் அதைப் படிப்பவனுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதியைப் பற்றி பேசுகிறது.

ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்ட பலர் தாம் எதற்காக ஆன்மீகத்தில் தேடலை செய்கிறோம் என்பதை ஆழமாக ஆராய்ந்தால் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் தோல்விகள், துன்பங்கள் போன்ற காரணத்தால் அதற்குத் தீர்வு வேண்டி!

பலரும் தோல்வி, துன்பத்திற்கான காரணம் என்னவென்ற ஆராய்ச்சிக்குச் செல்ல விருப்பம் இல்லாமல் அதற்குத் தீர்வு என்னவென்ற நிலைக்குள் நின்றுவிடவே விரும்புகிறார்கள், ஏன் இந்தத் துன்பம் என்று கேட்பதில்லை! எதைச் செய்தால் துன்பம் தீரும் என்பதை மட்டும் கூறுங்கள் என்ற மனப்பாங்குடன் இருப்பவர்களே போலி ஆன்மீகவாதிகளிடன் சிக்கிக்கொண்டு அர்த்தம் தெரியாத சடங்குகளுக்குள் மாட்டிக்கொள்பவர்கள்.

எனக்குத் துன்பம் தீரும் வழியைச் சொல்ல முன்னர் துன்பத்தின் மூல காரணம் என்ன என்று தெரியவேண்டும் என்ற உறுதியுடன் தேடலைச் செய்பவனே யோக ஞான மார்க்கத்திற்கு அதிகாரி!

இப்படி துன்பம் நாம் எல்லாவற்றுடனும் பந்தப்பட்டுள்ளோம், அதனால் துன்பமடைகிறோம் என்ற விழிப்புணர்வு பெறுதல் முதல் நிலை!

யோக வாசிஷ்டம் யாருக்குரியது என்றால் " நாம் பந்தப்பட்டுள்ளோம், இதிலிருந்து எப்படி விடுபடுவது?" என்ற சிந்தனை உதித்தவனுக்கு! முழுமையாக ஞானம் பெற்ற ஞானிக்கும், முழுமையான அஞ்ஞானம் பெற்ற அஞ் ஞானிக்கும் இந்த நூல் உரியதல்ல என்று வசிஷ்டர் வரையறுக்கிறார்.

இருவருக்கு இந்த நூல எந்தப்பயனையும் தராது.

அடுத்து அஞ்ஞானி யார்? என்று நான்கு வரையறைகள் தரப்படுகிறது.
  1. தேகமே அகம் என்ற ஜடபுத்தி உள்ளவன்; நான் இந்த உடல் மாத்திரம்தான் என்ற எண்ணம் கொண்டவன் அதற்கு மேல் எந்தக்காரணமும் இருக்கலாம் என்ற முயற்சியைச் செய்ய மாட்டான்.
  2. எனது புலன்களால் பார்க்கப்படும் உலகம் மாத்திரமே சத்தியம், அதற்கு மேல் ஒன்றும் இல்லை என்ற நினைப்பு உள்ளவன்.
  3. புலன்களால் மாத்திரமே மகிழ்ச்சி உள்ளது என்று நம்புவன்.
  4. உண்பது, மது அருந்துவது, உறங்குவது, உடலின்பம் பெறுவது மாத்திரமே வாழ்க்கையின் நோக்கம்

என்ற இந்த நான்கு எண்ணங்களைக் கொண்டவனால் யோகப்பாதையில் பயணிக்க முடியாது.

மேற்கூறிய நான்கு எண்ணங்களுக்கும் மேலாக உண்மை இருக்கிறது என்ற பிரித்தறியும் புத்தி உள்ளவர்கள் முமுக்ஷுக்கள் எனப்படுகிறார்கள்.

இப்படி முமுக்ஷுத்துவத்துடன் ஆன்ம சாதனை முயற்சி செய்பவர்கள் ஜிக்ஞாசுக்கள் எனப்படுகிறார்கள்.

Wednesday, December 11, 2019

சாதனையைத் தவறவிட்டல் மனம் மிகவும் துன்பமடைகிறதே?

என்னால் ஒரு நாள் கூட சாதனை செய்யாமல் இருக்க முடியவில்லை, அப்படி இருந்தால் வெறுமையாகவும் துன்பமாகவும் உணர்கிறேன்?

இப்படி பலசாதகர்கள் அனுபவமாக உணர்கிறார்கள்.

இந்த நிலை சரியானதா? பிழையானதா?

ஒருவிதத்தில் சாதனை மீது மிகுந்த பற்று வைத்திருக்கிறீர்கள் என்ற நிலையில்,

இன்னும் பரிபூரணமாக உங்கள் ஆளுமை தெய்வ ஆளுமையாக மாறவில்லை என்ற அளவில் நல்லது!

ஆனால் அடிப்படையில் குடிகாரனுக்கு சாராயம் குடிக்கவில்லை என்றால் ஏற்படும் ஒருவித போதை நிலைக்கு மனதை ஆழ்ப்படுத்தி வைத்திருக்கிறீர்கள் என்ற அளவில் நீங்கள் சம நிலையில் இல்லை என்றால் பிழையானது.

சாதனையைத் தவறவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பது என்பது மிக அவசியமான பண்பு, இதற்கு சிரத்தை என்று பெயர்!

ஆனால் நாம் உலகவாழ்க்கையில் இருக்கிறோம், பலவித கடமைகளைச் செய்கிறோம் என்ற அளவில் யதார்த்த நிலையினைப் புரிந்துகொள்ள வேண்டும். எமது தினசரி வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் எமது சாதனையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

வீட்டில் பிள்ளைகள் உள்ள அம்மாவிற்கு அதிகாலை வேளை கணவனும் பிள்ளைகளுக்கும் உணவு தயாரிக்க வேண்டும், எட்டு மணிக்கு எல்லா வேலைகளும் முடிந்த பின்னர்தான் ஓய்வு கிடைக்கும் என்றால் அதற்கேற்றால் போல் நேரத்தை ஒதுக்கி வைத்துகொள்ள வேண்டும். இல்லாமல் எமது கடமைகளைத் தள்ளி வைத்து விட்டு சாதனை செய்கிறேன் என்று வீட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவது சாதனையின் நோக்கம் தெரியாமல் இருக்கிறோம் என்று அர்த்தம்.

சிரத்தையும், சோம்பலும், இறைசக்தியும் இன்று துன்பப்படும் நாம் அவற்றை சாதனையில் கொண்டு வந்து பின்னர் அதை வாழ்வின் ஒவ்வொரு விஷத்திலும் குடும்பம், தொழில், நட்புகள் அனைத்திலும் கொண்டுவருவதே சாதனையின் நோக்கம்.

வாழ்வின் அடிப்படை சாதனை, அதற்கான எமக்கு கர்மத்தால் அமைந்த வாழ்வினை, கடமைகளை வலிந்து வெறுத்து ஓடக்கூடாது.

ஆகவே சாதனை தவறவிட்டால் அதற்கு மனம் வருந்துவது கூடாது, ஏன் தவற விட்டோம் என்பதை விழிப்புணர்வுடன் ஆராய வேண்டும். காரணத்தைக் கண்டுபிடித்து அதை உடனடியாக திருத்திக்கொண்டு அடுத்த நாளிலிருந்து சாதனையைத் தொடரவேண்டும்.

அதை விடுத்து அதிக மனவருத்தம் அடைகிறோம் என்றால் நாம் சம நிலையில் இல்லாமல் எம்மை நாமே வருத்துகிறோம் என்று அர்த்தம். மனதிற்கு தாழ்வுமனப்பான்மையினை ஏற்படுத்தும் எதைச் செய்வதும் ஆன்ம முன்னேற்றத்திற்கு எதிரானது.

இல்லற யோகம்


இல்லறம் என்பது வாழ்வில் மிகப்பெரிய ஆன்ம முன்னேற்றத்தை அடைவதற்கான வாய்ப்பு. அது புனிதமானது, அர்த்தமுள்ளதும் முக்கியமானதுமாகும். பூரணமற்ற இரு ஆன்மாக்கள் கணவன் மனைவியாக ஒற்றுமையாக இணைந்து பூரண வாழ்க்கையை மேற்கொள்ளும் நிகழ்வு அது. இரண்டு இறக்கைகள் கொண்ட பறவைகள் போல அல்லது சக்கரங்கள் கொண்ட தேர் போல ஆணும் பெண்ணும் இணைந்து வலிமையான உறுதியான ஒரு தொகுதியை உருவாக்கும் நிகழ்வு இல்லறம். உளவியல் நிபுணர்களுக்குத் தெரியும் ஆண்களதும் பெண்களதும் பலமும், பலவீனங்களும் என்னவென்று. ஒருவர் மற்றொருவரது பலவீனத்தை நிரப்பும் பலமாக செயற்படுவதே. ஆணும் பெண்ணும் கவர்ச்சியுறுவது மற்றவரின் ஆற்றலைப் பெற்று தன்னை பலப்படுத்திக்கொள்ளவே. எப்பொழுதும் எமது ஆழ்மனம் எமது பலவீனத்தை பூர்த்தி செய்து வலிமையடைவதற்குரிய மார்க்கத்தைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறது. இதுவே ஒவ்வொருவருக்கும் இருக்கும் நட்பிற்கும் உறவினைத் தேடுவதற்குமான காரணமாகும்.   ஒரு குருடன் மற்றவர்களின் உதவியுடன் தான் நடமாடுவதுபோல் தம்பதியினர் ஒருவருக்கொருவர் உதவி செய்தல் வேண்டும்.
அடிப்படையில் ஆண்கள் கூடாதவர்கள், பெண்கள் கூடாதவர்கள் என்ற பொதுமைப்பாட்டுக்கருத்துடன் ஒருவர் மற்றொருவரது ஆன்மீக வாழ்க்கைக்கு தடையானவர்கள் என்ற கருத்து தவறானது. எல்லோரும் இறைவனின் படைப்பே. அனைவருக்குள்ளும் அந்த இறைவனின் ஒளி மறைந்து இருக்கத்தான் செய்கிறது. ஆண் வீட்டிற்கு வெளியே அதிகம் புழங்குவதால் அவனது வெளிப்புற ஆளுமை விருத்தியடைகிறது. வலிமையான, மற்றவர்கள் மேல் செல்வாக்குச் செலுத்தும் புத்திசாலித்தனம் விருத்தியடைகிறது. ஆனால் தொடர்ச்சியான இந்தப்போராட்டத்தால் அவன் தனது அகத்தில் ஆன்மாவின் நல்ல பண்புகளை இழந்து விடுகிறான்.   அதனால் எளிமை, உயிர்ப்புடன் செயலாற்றுதல், நேர்மை, தியாகம், கருணை, அன்பு ஆகிய நல்லுணர்ச்சிகள் ஆணைவிட பெண்ணிலேயே அதிகம் காணப்படுகிறது. பெண்கள் குணத்தில் ஆணைவிட மேம்பட்ட நிலையில் இருக்கிறார்கள். பலரும் கூறுவதுபோல் பெண் மாயையின் உரு, பெண்ணுடன் இருந்தால் ஆன்மீக நிலை தவறிவிடும் என்பது தவறான கருத்து. பெண்ணுடன் இருக்கும் ஒரு ஆண் தனது அரக்க இயல்பினை தெளிவாக அறிந்துகொள்ள முடியும். அவளது அன்பும் அருளும் அழகிய நதிபோன்றது, அது அவனது மனதைச் சுத்தி செய்து, மனதைப் பாவங்களிலிருந்து விடுத்து துன்பங்களிலிருந்து விடுபடச் செய்யக்கூடியது.
பாவங்களும் புண்ணியங்களும் வெளிப்படையாகச் செய்யும் செயல்களில் மட்டும் இல்லை. நாம் எமக்குள் எண்ணும் எண்ணமும் செயலிற்கான நோக்கமும் காரணமாகும். தன்னலமும் தன்னலமின்மையும், நற் செயல்களும், தீய செயல்களும் வெளியே செய்யப்படும் செயல்களால் தீர்மானிக்கப்படுவதில்லை, அந்தச் செயலைச் செய்வதற்கு தூண்டிய மனப்பாங்கு எது என்பதைப் பொறுத்தே அமைகிறது. இறைவனின் நீதிமன்றத்தில் வெளிப்புறச் செயல்கள் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. செயலிற்குப் பின்னால் இருக்கும் நோக்கமே கருத்தில் கொள்ளப்படுகிறது.
இல்லறம் இல்லாவிட்டால் எப்படி நல்ல பழக்கவழக்கங்களுடைய குழந்தைகள் உருவாகுவார்கள்? எப்படி உயர்ந்த யோகிகள் உருவாகுவார்கள்? இல்லற யோகம் எல்லாவிதமான ஆன்மீக சாதனைகளையும் பயிற்சித்து சித்தி செய்யக்கூடிய புனிதமான ஆன்ம முன்னேற்றம் தரக்கூடிய ஒரு அரிய வாழ்க்கை முறையாகும். எந்தவொரு குடும்பஸ்தனும் தனது குடும்ப வாழ்க்கையால் தனது ஆன்மீகம் இல்லாமல் போகிறது என்று எக்காலத்திலும் எண்ணக்கூடாது. அடிப்படையில் திருமண வாழ்க்கைக்கும் திருமணமற்ற வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. ஒவ்வொருவருடைய தேர்வும் அவரவர் வசதி, ஆர்வம், வாழ்க்கைமுறையில் தங்கியுள்ளது. யாருடைய வாழ்க்கை முறை மனைவி பிள்ளைகள் என்று அதிக பொறுப்புகளைச் சுமக்க முடியாதபடி இருக்கிறதோ அவர்கள் திருமணமற்ற வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். யாருக்கு உறுதியான வாழத் தேவையாவான வசதிகளும் மனப்பண்பும் இருக்கிறதோ அவர்கள் திருமண வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். எந்த வாழ்க்கையத் தேர்ந்தெடுத்தாலும் தூய, தன்னலமற்ற, ஆன்ம முன்னேற்றம் விளையும் நோக்கம் இருந்தாலும் அங்கு துரித முன்னேற்றம் நடைபெறும்.
அடுத்து இல்லறயோகத்தின் அடிப்படைகளைப் பற்றிப்பார்ப்போம். வாழ்வின் அடிப்படை இந்த ஜீவான்மா இறுதியாக பரமான்மாவை அடைதாலாகும். எமது சுய நல எண்ணங்ககளைத் துறந்து அனைத்து உயிர்களும் நலமாக வாழச் செய்யக்கூடிய ஆன்மீகச் செயல்கள் சாதனை எனப்படுகிறது. இந்த சாதனாவை வாழ்வில் செய்வதற்கு பலவிதமான முறைகள் இருக்கிறது. இல்லற யோகம் ஒரு வழியாகும். ஒரு குழந்தை தனது திறனகளை வளர்த்துக்கொள்ளும் இடம் வீடாகும். தனது வாழ்க்கையில் அரைவாசிக்கும் மேற்பட்ட திறனை வளர்த்துக்கொள்ளும் இடம் வீடாகும். ஆகவே எமது அகத்தைப் பண்படுத்தும் சாதனையும் தொடங்கப்பட வேண்டிய இடம் வீடாகும்.  வாழ்வில் மேன்மை, சுயகட்டுப்பாட்டுடன் நாகரீகமாகவும், சுய சார்புடையவரகளாகவும் உருவாக மிகச்சிறந்த இடம் வீடாகும். இதைச் சாதிப்பது வீட்டில் இலகுவாக இருக்கும், ஏனென்றால் வீட்டில் இயல்பாகவே அன்பு, பொறுப்பு, கடமை, ஒருவரை ஒருவர் தங்கியிருத்தல், ஒற்றுமை என்பன காணப்படுகிறது. வீடு மற்றவர்களது தாக்கம் இன்றி எம்மை நாமே வளர்த்துக்கொள்ள நல்ல இடம்.
இல்லற யோகத்தினைத் தேர்ந்தெடுக்கும் சாதகன் கீழ்வருமாறு தனது சிந்தனையில் தியானானிக்க வேண்டும்.
·       குடும்பமே எனது சாதனைக்கான புனித ஆசிரமம். எனது பூஜை அனுஷ்டானங்கள் என்பது எனது வீட்டினையும் குடும்பத்தினையும் அழகாகவும், நறுமணமுள்ள, வளமான தோட்டத்தைப் போன்று ஆக்குவதற்கு எனது சக்தி முழுவதையும் செலவழிப்பேன். கடவுள் மேலுள்ள பக்தி என்பது என்மீது நம்பிக்கை வைத்து எனக்குத் தரப்பட்டுள்ள எனது பொறுப்புக்களை சரிவரச் செய்வது. மலர்த்தோட்டத்தை நீரூற்றி, பராமரித்து செழிப்படையச் செய்வது போன்று நானும் எனது குடும்பத்தவர்கள் அனைவரது வாழ்வினையும் செழிப்படையச் செய்வேன். எனது குடும்பத்தில் எவரையும் சிறியவர், பயனற்றவர், எனது சேவையினைப் பெறத் தகுதியில்லாதவர் என்ற எண்ணத்தினைக் கொண்டிருக்க மாட்டேன், சுய கட்டுப்பாட்டுடன் இருப்பேன். நானே அதிகாரி, வழிகாட்டி, தலைவர், எல்லாவற்றையும் முடிவெடுப்பவன் என்ற அகங்காரம் கொண்டிருக்கமாட்டேன். எப்போதும் சுய கட்டுப்பாட்டுடன் முடிவெடுப்பேன்.  நான் கருணையுடனும், சுய நலமற்று எனது சேவையை குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு ஆளுமையினையும் விருத்தி செய்யப் பாடுபடுவேன்.
·       எனது சரணாகதி என்பது கடமையுடன் எதையும் எதிர்பார்க்காமல் தூய மனதுடன் மற்றவர்களுக்கு சேவை செய்வது.. எனது தவம் என்பது எனது குடும்பத்தவர்கள் அனைவரும் வசதியாக, மகிழ்வுடன் வாழ்வதற்குரிய வழிமுறைகளைச் செய்வது.
·       எனது யாகம் என்பது உலகமும், எனது குடும்பத்தவர்களும் உண்மையுடனும், நேர்மையுடனும், பொறுப்புணர்வுடனும், அமைதியாகவும், மகிழ்வாகவும் வாழ்வதற்குரிய செயல்களைச் செய்வது.
·       எனது மத உறுதிமொழி என்பது எனது நடத்தையும், செயலும் தூய்மையாகவும், இலட்சியமுடையதாகவும், மற்றவர்களை உத்வேகப்படுத்தும் படியாகவும், மற்றவர்கள் என்னைப் பார்த்து பின்பற்றும் ஆளுமையுடையதாகவும் புனிதமடையச் செய்வது.
·       எனது சுய கட்டுப்பாடு என்பது எனது குடும்பத்தினர் அனைவரையும் சரியான வழியில் பணம் ஈட்டுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவது.
·       எனது ஆராதனை என்பது அன்பும், கருணையும் நிறைந்த மனத்துடன் மகிழ்ச்சி, ஆனந்தம், ஒற்றுமையினை குடும்பத்திலும், சமூகத்திலும் உருவாக்கப் பாடுபடுவது.
·       எனது பூஜை என்பது எனது குடும்பம் எனும் கோயிலில் வாழும் அனைத்து தெய்வங்களையும் வணங்கி குடும்பத்தில் நல்லெண்ணங்கள், நற்பழக்க வழக்கங்கள், நல்ல நடத்தைகளை உருவாக்க   பாடுபடுவது.
·       தினசரி எனது காயத்ரி சாதனையில் உண்மையுடன் இருக்கிறேன் என்பதை  ஆத்மார்த்தமாக இருத்தல். நான் பற்றற்ற கர்மயோகி, எனது சந்தோஷமும் திருப்தியும் என்பது உண்மயான அர்ப்பணிப்புடன் வெற்றி தோல்வி பற்றிய எந்தக்கவலையும் இன்றி தினசரி சாதனையைத் தொடர்தல்.  நான் உண்மையுடனும், சரியான வழியிலும் எப்போது இருப்பேன் என்ற உறுதிமொழியுடன் சரியான உண்மையான வழியைப் பின்பற்றுவேன் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்ளுதல்.
·       இந்த உறுதிமொழிகள் அனைத்தையும் ஒவ்வொரு இல்லறயோகியும் முழுமனதுடன் இதயப்பூர்வமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.    
  ஒவ்வொரு இல்லறத்தவர்களும் கடைப்பிடிக்கக்கூடிய எளிய உயர்ந்த சாதனை குரு அகத்திய காயத்ரி சாதனா உபதேசமாகும். இதில் காணப்படும் குருமந்திரம், சங்கல்பம், மந்திர ஜெபம், சித்த சாதனை என்ற அமிசங்கள் ஒருசாதகனின் அந்தக்கரணத்தில் துரிதமுன்னேற்றத்தினை ஏற்படுத்தும் வழிமுறையாகும்.
எல்லா உன்னத ரிஷிகளும் இல்லற யோகவாழ்க்கை வாழ்ந்த சாதர்களின் குடும்பத்திலேயே பிறந்து வளர்ந்து அரிய சாதனைகளைச் செய்தார்கள். சில புத்திக்குறைவான நபர்கள் இல்லறம் மாயையால் ஆனது, லௌகீகயமயமானது என்று கூறுவது உண்மையானால் எப்படி இராமர், கிருஷ்ணன், புத்தர், நபிகள், காந்தி போன்றோர் வந்திருக்க முடியும். எப்படி பதிவிரதைகளான சீதை, சாவித்ரி, மதலசா, தமயந்தி, பார்வதி போன்றோர் இருக்க முடியும். துருவன், பிரகலாதன், நசிகேதன் போன்ற தெய்வக்குழந்தைகள் உருவாகியிருக்க முடியும். இவர்கள் அனைவரும் ஆன்மீக உலகின் மாணிக்கம் போன்றவர்கள். மற்றைய அனைத்து ஆசிரமங்களான பிரம்மச்சாரிய, வானப்பிரஸ்த, சந்நியாச ஆசிரமங்கள் அனைத்தும் கிரகஸ்த ஆசிரமத்திலிருந்தே தோற்றம் பெறுவதால் இந்த இல்லறம் என்பது அனைத்து ஆசிரமங்களினதும் தந்தை என்று கூறுவது மிகையில்லை. ஆகவே இல்லறத்தைக் கேவலப்படுத்துவது தந்தையைக் குறைகூறுவது போன்றதும், சமூக முன்னேற்றத்தினைத் தடை செய்வதுமாகும்.
{இந்தக்கட்டுரை குருதேவர் பண்டிட் ஸ்ரீ ராம்சர்மாச்சார்யாவின் க்ருஹஸ்த யோகம் என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டது}


{இன்று வெள்ளவத்தை கிரியா பாபாஜி யோக ஆரண்யத்தின் 11வது ஆண்டு விழா மலர் "ஆரண்யப் பிரசாதத்திக்" எமது "இல்லற யோகம்" என்ற இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது.}

Saturday, November 23, 2019

எண்வகை குணங்களை உருமாற்றும் தாய்சக்திகள்


நாம் எட்டுவகையான உணர்ச்சிகளால் (emotions) ஆக்கப்பட்டிருக்கிறோம். இந்த உணர்ச்சிகள் அடிப்படையில் மனிதனின் அனுபவத்திற்காக இருக்கிறது. இந்த உணர்ச்சிகளைச் சரியாகப் பயன்படுத்தும் அறிவினைத் தரும் சக்திகளை எண்வகைத் தாய்சக்திகள் - அஷ்ட மாத்ருகா என்று கூறுவோம்.

இது காயத்ரி சாதனையிலும், ஸ்ரீ வித்யா சாதனையிலும் இருக்கும் ஒரு நுட்பம்.
சாதகர்கள் எவராவது தமது உணர்ச்சிகள் ஏற்படுத்தும் தடைகளால் சாதனையில் முன்னேறிச் செல்ல முடியாமல் இருந்தால் இந்தத் தாய் சக்திகளின் உதவியுடன் துரித முன்னேற்றம் பெறலாம்.

1)காமம்/ஆசை - எதையாவது ஆசைப்பட்டுக்கொண்டிருப்போம் ஆனால் நிறைவேற்றமுடியாதபடி இருப்போம். இப்படி எமது மனதிலுள்ள ஆசைகளை நிறைவேற்றும் அறிவினைத் தருபவள் பிராம்ஹி என்ற தாய்சக்தி

2)கோபம் - ஆசை அல்லது நமது எண்ணங்கள் நிறைவேறாத போது ஏற்படும் நிலை. கோபத்தினை உருமாற்றி நிதானத்தினைத் தரும் தாய்சக்தி மாகேஷ்வரீ.

3) லோபம்/பேராசை - தமது தகுதிக்கு வலிமைக்கு மேல் உள்ள விஷயங்களை அடையவேண்டும் என்ற அதி ஆசை, ஆசையிருக்கும் ஆனால் தகுதி இல்லை, ஆனால் அறிவின் சொல்லைக் கேட்காது. ஆகவே அவசரமாகச் செயல்புரிந்து துன்பத்தில் மாட்டிக்கொள்வோம். பேராசையை உருமாற்றி தியாகத்தினைத் தரும் தாய்சக்தி கௌமாரி.

4) மோஹம் - ஒன்றைப் போலியாக எண்ணி மயங்கும் நிலை. பலரும் எதைப்பார்த்தாலும் அதை நம்பி மயங்கி அதை அடைய எண்ணி முயற்சி செய்து துன்பத்தில் விழுந்துவிடுவார்கள். இப்படி மோகத்தை அன்பாக மாற்றும் தாய்சக்தி வைஷ்ணவி.

5) மதம் - தன்னைப்பற்றி அதிகமாகச் சிறப்பாக எண்ணும் தற்புகழ்ச்சி: ஒருவன் தன்னைப் பற்றி அதிகமாகச் சிந்திக்குபோது சிறப்பாக மற்றவர்களுடன் இணைந்து செயற்பட முடியாது. யானைக்கூட்டத்தில் மதம் பிடித்த யானை தனது குழுவுடன் இணைந்து செயற்படமுடியாமல் கூட்டத்துடன் சண்டையிட்டு தன்னைப் கூட்டத்திலிருந்து பிரிந்து அழிவு நடவடிக்கையில் ஈடுபடும். இதைப்போல் மதம் கொண்ட மனிதன் தன்னைப்பற்றி அதிகமாக எண்ணி சுய நலத்துடன் செயல்புரிந்து துன்பம் ஏற்படுத்திக்கொள்வான். இந்த மதகுணமாகிய தற்புகழ்ச்சியை உருமாற்றி அடக்கத்தை அளிக்கும் தாய்சக்தி வாராஹி

6) மாத்ஸர்யம் - பொறாமை: ஒருவன் நம்மை விட சிறப்பாக இருந்தால் மனதில் எப்போதும் ஒரு எரிச்சல் அல்லது அந்த நபரைப்பற்றி ஏதாவது குறை கூறும் மன நிலை இருக்கிறது என்றால் மாத்ஸர்யம் என்று பொருள். இந்த பொறாமை குணம் இருந்தால் நாம் எப்போதும் மற்றவர்களைக் குறை கூறி மன நிம்மதி இன்றி இருப்போம், இப்படி மாத்ஸர்ய பொறாமை குணத்தை உருமாற்றி அமைதியை அளிக்கும் தாய்சக்தி மாஹேந்த்ரீ.

7) பாபம்: நாம் தர்மத்திலிருந்து விலகி செய்யும் செயல்கள் எல்லாம் எமது ஆழ்மனமாகிய சித்தத்தினை பதிவினை ஏற்படுத்தி மீண்டும் மீண்டும் எம்மை பாபங்களை செய்வித்து அதனால் துன்பம் ஏற்படுத்தும் நிலையைத் தரும். இப்படி பாவங்களை உருமாற்றி புண்ணியமாக்கி, மீண்டும் பாவங்கள் செய்யாமல் தடுத்க்கும் தாய்சக்தி சாமுண்டா.

8) ஐஸ்வரியம்: மேலே உள்ள ஏழுகுணங்களையும் சரியாக உருமாற்றினால் எமக்குக் கிடைக்கும் பலன் ஐஸ்வரியம். எமது மனோ காமியங்களை அடையச் செய்து, கோபத்தினை உருமாற்றி நிதானம், லோபத்தை உருமாற்றி தியாகம், மோகத்தை உருமாற்றி அன்பு, மதத்தை உருமாற்றி அடக்கத்தை, மாத்ஸர்யத்தை உருமாற்றி அமைதியை, பாவங்களை உருமாற்றி புண்ணியத்தை தரும் நிலையினை சாதகன் காப்பாற்றி நிலைபேறாக வைத்திருக்கும் சக்தி மகாலக்ஷ்மி தாய் சக்தி.

Friday, November 22, 2019

சாதனையின் படிமுறைகளை எனக்கு விருப்பமான படி மாற்றிக்கொள்ள முடியுமா?

அண்மையில் ஒரு சாதகர் குரு அகத்திய காயத்ரி சாதனையின் அனைத்துப் படிகளையும் தன்னால் மனவிருப்புடன் செய்ய முடியவில்லை, மனம் ஏற்றுக்கொள்ளவில்லை, அகத்தியர் மூல குரு மந்திரமும், காயத்ரியும் மாத்திரம் தினசரி சாதகம் செய்து வருகிறேன், இது சரியா? என்று கேட்டிருந்தார்.

சாதனையை தொடர்ச்சியாக ஈடுபடுவதற்கு மனம் எம்முடன் ஒத்துழைக்கும் விஷயத்திலிருந்து தொடங்க வேண்டும் என்பது எந்த விஷயத்திலும் நாம் நீண்டகால ஈடுபாட்டுடன் செய்வதற்கு மிக அத்தியாவசியமான நிபந்தனை. ஆகவே தற்போதைய நிலையில் தாங்கள் சரி!

ஆனால் மனதினையும் சித்தத்தினையும் பரிபூரணமாகச் சுத்தி செய்து தெய்வ உருமாற்றம் விரும்பினால் மனம் போன வழியில் சென்று குருகாட்டிய வழியிற்கு தடம் மாறவேண்டும்.

சாதனை முறை என்பது ஒரு Process, பயணத்தின் அனுபவத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டுமானால் நாம் பயண ஒழுங்கினைப் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் பயணத்தின் முழு அனுபவமும் கிடைக்காது.

ஆகவே குறித்த இரண்டு மந்திரங்கள் மாத்திரம் எனக்குப் போதும் என்று நினைத்தால் அந்த அனுபவங்களுக்குள் எம்மை மட்டுப்படுத்திக்க்கொள்கிறோம்.

மனிதன் அடிப்படையில் சலனிக்கும் மனமும், சித்தமும் உடையவன், அவன் தனது இயல்புடன் தன்னை உருமாற்ற முடியாது. ஆகவே அவனுக்கு தன்னை விட ஒரு உயரிய சக்தியும் அந்த சக்திக்கான பாதையைக் காட்டும் படிகட்டுகளும் தேவை, இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே சித்த வித்யா குருமண்டல நாமாவளி.

பின்னர் அகத்தினை ஈசனாக்கும் வழியை இணைக்கும் மூல குரு மந்திரம்.

மனம் நாம் எதற்காக இந்த சாதனையைச் செய்கிறோம் என்ற எண்ணத்தினைக் தெளிவாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இது அற்ப காரணங்களாக அல்லாமல் எமது இறுதி இலட்ச்சியத்தித்திற்கு வழிகாட்டும் சங்கல்பமாக இருக்கவேண்டும். அதற்காக காயத்ரி சங்கல்பம்

பின்னர் மனதினை கூர்மையாக்கி ஒருமைப்படுத்தி மனதினை புத்தியைத் தூண்டும் அந்தப்பேரொளியுடன் இணைக்கும் காயத்ரி மந்திரம், இது பிராணசக்தியை எம்மில் அதிகரிக்கும்.

இப்படி அதிகரித்த சக்தியை எம்மில் தெய்வ உருமாற்றத்திற்கு பயன்படுத்த வேண்டிய கட்டளைகளை எமது ஆழ்மனமாகிய சித்தத்திற்கு தரும் சாதனை சித்த சாதனை.

இறுதியாக எமது உலக வாழ்வு இன்பமாக இருப்பதற்குத் தேவையான பதினாறு பேறுகளையும் பெற துதி.

இப்படிச் செய்யப்படும் சாதனை ஒருவனை இந்தப் பிரபஞ்சத்தின் உயர் ஞான நிலையில் இருக்கும் குருமண்டலத்துடன் இணைத்து, சாதனையைச் சரியாகச் செய்யக்கூடிய வல்லமையை சாதகனில் உண்டாக்கி, அவனது அந்தக்கரணங்களைச் சுத்தி செய்து தெய்வ குணங்களால் நிரப்பத்தொடங்கும்.

ஆகவே இவற்றைச் சிந்தித்து இந்த process இனை பின்பற்றுவதால் உங்கள் பயணம் இலகுவாகும் என்பதை உங்கள் மனதிற்கு உணர்த்தினால் மனம் அதை ஏற்றுக்கொண்டு சாதனையை முழுமையாகச் செய்ய ஒத்துழைக்கும்.

காயத்ரி உபாசனை ஏன் கட்டாயம் தேவை?

காயத்ரி மந்திரம் ஏன் சிறப்பானது, இளமையில் உபதேசிக்கப்படுகிறது என்றால் ஒரு மனிதனின் இளம் வயதில் பிரபஞ்சத்தின் இறைவனின் உண்மை இயல்பு புத்தியைத் தூண்டும் அந்தப்பேரொளி என்ற உண்மை ஆழமாகப் பதியவைப்பதற்காகவே.

ஒரு மனிதன் தன்னை தெய்வ உருமாற்றம் செய்துகொள்ள இறைவனின் உண்மையான ஸ்வரூபம் பற்றி அறிந்திருக்க வேண்டும். பலரும் உருவங்களில் இருக்கும் வடிவத்தை இறைவன் என்று எண்ணி மயங்கிவிடக்கூடாது என்பதற்காக இறைவனின் உண்மை ஸ்வரூபம் பேரொளி என்ற உண்மை சித்தத்தில் பதிய வேண்டும் என்பதாலேயே காயத்ரி உபதேசம் அடிப்படையும் கட்டாயமும் ஆக்கப்பட்டது.

எந்த உபாசனை செய்தாலும் காயத்ரி ஜெபம் கட்டாய என்பது எமது மனதினது, சித்தத்தினது அமைப்பிற்கேற்றவாறு பல்வேறு தெய்வ உருவங்களில் எமது மன ஒன்றுவதால் நாம் இஷ்ட தெய்வங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் சுதந்திரத்தைனைக் கொடுத்து அதே வேளை அந்த சுதந்திரத்தால் வெறுமனே ஸ்தூல உருவத்தில் மயங்கி இறுதிப்பாதையைத் தவறவிட்டுவிடக்கூடாது என்பதால் இறையின் உண்மை ஸ்வரூபம் புத்தியைத் தூண்டும் அந்தப்பேரொளி என்பது எப்போது ஞாபகத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக எந்த தெய்வ உபாசனை செய்தாலும் காயத்ரி உபாசனை கட்டாயம் என்று சொல்லி வைத்தார்கள்.

Wednesday, November 20, 2019

சித்த வித்யா சங்கத்தின் இலச்சினைமூன்று வெளிவட்டங்கள் ஸ்தூல, சூக்ஷ்ம, காரண சரீரத்தைக் குறிக்கும்.

உள்ளே இருக்கும் ஐங்கோணங்கள் பஞ்சபூதங்கள் {ப்ருதிவி,அப்பு, அக்னி, வாயு, ஆகாயம்} பஞ்சதன்மாத்திரைகள் {ரூபம், கந்தம், ஸ்பரிசம், சுவை, ஸப்தம்}, ஞானேந்திரியம் {கண், மூக்கு, தோல், நாக்கு, செவி} கர்மேந்திரியம் {பாதம், கைகள், எருவாய், கருவாய், வாய்} இவற்றை செம்மைப்படுத்தி பஞ்சகோசங்களை {அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய} உருவாக்கும் யோகமுறையைக் குறிக்கும்.

ஐங்கோணங்களினது நிறங்கள் பஞ்சகோச சித்திகளைக் குறிக்கும்.

சலனிக்கும் நீர் அந்தக்கரணங்களைக் குறிக்கும்.

தாமரை சேற்றிலிருந்து சூரியனை நோக்கி மலர்வது போல் சாதகன் தனது உலக, குடும்பக் கடமைகளிலிருந்து விலகாமல் சாதனையின் மூலம் ஞானத்தை தேடவேண்டும் என்ற உத்வேகத்தின் குறியீடு. தாமரையாக சாதகன் மலரும்போது அனைத்து சம்பத்துக்களும் பெற்ற லக்ஷ்மித்துவம் உடையவனாக சாதகன் இருப்பான்.

தங்க நிறச் சூரியன் ஸவிதாவாகிய புத்தியைத் தூண்டும் அந்தப் பரம்பொருளின் பேரொளி.

சிவப்புப் புள்ளி சாதகனின் உணர்வாகிய ஆன்மா.

சித்த வித்யா என்றால் ஒருவனை செம்மைப்படுத்தும் அறிவு என்று பொருள். விஞ்ஞான என்றால் சரியான புரிதலைத் தரும் என்று அர்த்தம்.

சங்கம் என்பது மேற்குறித்த ஆர்வம் உள்ளவர்கள் சேருமிடம் என்று அர்த்தம்.

சித்த வித்யா விஞ்ஞானச் சங்கம் ஒரு மனிதனின் அந்தக்கரணங்களைச் செம்மைப்படுத்தும் எது உண்மை என்ற அறிவினையும் புரிதலையும் தரும் ஆர்வமுள்ள சாதகர்கள் சேரும் இடம் என்று பொருள்.

Monday, November 18, 2019

ஸம்பளா - ஸித்தாஸ்ரமம் - பூலோகத்தின் ஒளி - 03


ஸம்பளா பற்றிய நூற்குறிப்புகள் பெரும்பாலும் திபேத்தியப் பௌத்த நூற்களிலேயே நம்பக்கூடிய மகிமை வாய்ந்த தகவல்கள் கிடைக்கின்றன. எனினும் இந்த திபேத்திய நம்பிக்கைக்கு ஒத்த விஷயங்கள் மற்றைய கலாச்சாரங்களிலும் காணக்கிடைக்கின்றது.

இயல்பாக எழக்கூடிய முதலாவது கேள்வி ஸம்பளா என்ற பெயர் எப்படி உருவாகியது என்பதே. “ஸம்” என்றால் சமஸ்க்ருதத்தில் அமைதி அல்லது சாந்தி என்று அர்த்தம். புராணங்களில் ஸம்பளத் தீவு பற்றிய வர்ணனைகள் கிடைக்கின்றது. அந்த தீவில் அம்ருத வாவி இருப்பதாகக் குறிப்படப்பட்டுள்ளது. திபேத்திய பௌத்த நூற்களில் ஸம்பளாவைப்பற்றிய குறிப்புகள் பல பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏழாம் நூற்றாண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதற்கு முந்திய இரண்டாயிரம் வருங்கள் பழமையான Bon மதப்புத்தகங்களிலும் ஸம்பளா பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றது. Bon மதப்புத்தகங்களில் ஸம்பளாவை அடைவதற்கான வரைபடங்களும் கிடைக்கின்றது.

அறு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஸம்பளாவில் ஏற்படுத்தப்பட்ட விதிகளின் படி ஒவ்வொரு நூற்றாண்டின் முடிவிலும் உலக அமைதிக்கும் ஒற்றுமைக்குமாக ஸம்பள யோகிகள் பூமியில் செயல்பட வேண்டும் என்ற விதி ஏற்படுத்தப்பட்டது.

உலக அமைதிக்கும் ஸாந்திக்குமாக பாடும் ஆன்மீகர்கள் அனைவரும் இந்தத்திட்டத்தில் ஒருபடியாகவே தமது பணிகளைச் செய்கிறார்கள். ஸம்பள யோகிகளின் நோக்கம் உலகைச் சூழ உள்ள ஆகாச ஏட்டில் இருக்கும் நல்ல உணர்வுகளை அதிகரித்து பூமியில் மனித குலம் தெய்வ நிலை அடையும் சந்தர்ப்பத்தை அதிகரித்து தெய்வ குணமுள்ள மனித குலத்தை ஏற்படுத்துவதாகும்.

அடுத்து ஸம்பளா பற்றி ஆன்ட்ரூ தோமஸ் அவர்கள் தமது அறிமுகத்தில் கூறியவற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.

அந்த நூலின் நோக்கமாக பூலோகத்தில் பிரபஞ்ச ஒளிமிகுந்த ஒரு கலாச்சாரத்தை தெரிவிப்பதற்குரிய ஒரு வழிகாட்டி நட்சத்திரம் என வர்ணிக்கிறார். பல நூற்றாண்டுகளாக மனிதகுலம் தமது அறிவிலும், பண்பிலும் முன்னேறி, புரிதலை மேம்படுத்தி, உயர் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து அனைத்து மனிதர்களும் சகோதரத்துவத்துடன் பழகுவதற்குரிய பண்பினை உருவாக்குவதற்குரிய புரிதலை வழங்குவதற்காக என்று கூறுகிறார்.

உலகில் இருவகையான மனிதர்கள் இருக்கிறார்கள். உண்மையை உண்மை என்று உடனே புரிந்துகொள்பவர்கள் ஒரு வகை, மற்றவர்கள் உண்மை என்பதை இறுதியில் புரிந்துகொள்வார்கள்.

உலகம் உருண்டை என்பதை பலவருடங்களாக ஏற்றுக்கோள்ள மறுத்தவர்கள் சோவியத் ரஷ்டா ஸ்புட்னிக் விணகலத்தின் மூலம் எடுத்த படங்களைக் கோண்டு உருண்டை என்பதை அறிந்துகொண்டனர். ஆனால் அதற்கு பல காலத்திற்கு முன்னரே உலகம் உருண்டை என்பதை அறிந்தவரகள் இருக்கத்தான் செய்தார்கள்.

இதைப்போல மனித குலத்தின் ஆன்ம பரிணாமத்தை ஒரு இரகசிய உயர் ஆன்ம சக்தியுள்ள குழு வழி நடாத்திவருகிறது என்பதை நம்ப மறுக்கலாம். ஆனால் ஒருகாலத்தில் இது உண்மை என்று தெரியும் போது அனைவரும்  ஏற்றுக்கொள்வார்கள்.  ஆகவே இந்த அடிப்படையில் ஸம்பளா பற்றி படிக்கத்தொடங்குங்கள் என்கிறார்.   

ஸம்பளா - ஸித்தாஸ்ரமம் - பூலோகத்திற்கான ஒளி - 02

1957 ம் ஆண்டளவில் எனது குருநாதர் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகள் தான் வேலை செய்த கம்பனியின் சார்பாக ஏற்பட்ட வழக்கு ஒன்றிற்காக திருச்சியில் தங்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. சுதந்திரம் பெற்று சிறிது காலம் என்பதால் ஆங்கிலேயக்கம்பனியின் வழக்கு திருச்சி நீதி மன்றத்தில் நடந்து வந்தது. அதில் குறித்த வழக்கில் எடுத்துக்கொள்ளப்படும் கணக்கு வழக்குகள் சுவாமிகளில் கைகளால் எழுதப்பட்டது என்பதால் சாட்சிக்கு சுவாமிகள் பங்குபற்றச்சொல்லில் சில மாதங்கள் திருச்சியில் தங்கச் சொல்லிவிட்டார்கள். 

திருச்சியில் ஸ்ரீ ரங்கத்தில் ராமானுஜர் சன்னதியில் நின்றுகொண்டு இருக்கும் போது தனது சிறுவயதில் தன்னைச் சந்தித்து விநாயகர் கவசம் கொடுத்த அதே பெரியவர் அவரை என்னைத்தெரியுமாடா உனக்கு? என்று கேட்டுக்கொண்டு அவர் கையைப் பிடித்து இழுக்க சுவாமிகள் நினைவிழந்து போய்விடுகிறார்.  மீண்டும் பார்க்க அடந்த வனத்திற்குள் இருப்பதை உணர்ந்து எழுந்து பார்க்க அதே பெரியவர் மாட்டிக்கொண்டாயா? என்று கேட்டுவிட்டு மறைந்து விட காட்டிற்குள் சிக்கிக்கொள்கிறார். சிறிது தூரம் நடக்கும் போது வனவாசிகளிடன் மாட்டிக்கொள்ள அவர்கள் ஈட்டியும் அம்பும் எறிய ஓடிச் சென்று ஆற்றில் குதித்தவருக்கு அதன் பிறகு நடந்த எதுவும் தெரியவில்லை. 

நினைவு திரும்பிய போது அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பர்ணசாலையில் இருப்பதை உணர்ந்து எழுந்த போது, தன்னுடைய உடலில் தழும்புகளும், காயங்கள் முற்றாக மாறி இருப்பதை உணர்ந்தார். அங்கு பல மேல் நாட்டவர்களும், மற்றும் சிலரும் தியானத்தில் இருப்பதையும் எழுந்து அவதானிக்க அவர்களுக்கு குருவாக இருந்த தெய்வீகக் களை பொருந்திய ஒருவர் சுவாமிகளை புன்னகையுடன் "உனது குரு கண்ணைய யோகி, மதராஸில் அம்பத்தூரில் இருக்கிறார், சென்று சந்திப்பாய்" என்று கூறி விட்டு தன்னுடைய இரண்டு சீடர்களை அழைந்து இவர் குணமாகிவிட்டார் அழைத்துச் சென்று விட்டுவாருங்கள் எனக்கூறிவிட்டு தன்னுடைய வேலையைப் பார்க்கப் போய் விட சீடர்கள் அழைத்து வந்து  பணமும் கொடுத்து ரயில் நிலையத்தில் விட்டுச் சென்றனர். அது நீலகிரி ரயில் நிலையம் என்று சுவாமிகள் சொல்லுவார்கள். 

சுவாமிகள் நேர மதராஸ் வந்து, அம்பத்தூர் சென்று கண்ணைய யோகியாரைத் தேடிச் சென்றபோது அங்கு ஒரு பெரியவர் சிறு குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு ஒரு கடையோரமாக இருக்க அவரிடம் சுவாமிகள் சென்று கண்ணைய யோகியாரின் வீடு எங்கிருக்கிறார்? என்று கேட்க, அந்தப்பெரியவர் கண்ணைய யோகி என்று ஒருவரும் இல்லை, கண்ணைய நாயுடு என்று ஒருவர் அந்த வீட்டில் இருக்கிறார் என்று கூறி வழிகாட்ட இவரும் அங்கு செல்ல வீட்டினுள்ளே நாலைந்து  நபர்கள் ஏதோ கற்பதற்கு வந்தவர்கள் போல் அமர்ந்திருந்தார்கள். சற்று நேரத்தில் கடையில் இருந்த பெரியவர் வெள்ளை சட்டை போட்டுக்கொண்டு உள்ளே வர அனைவரும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினர். அவர்தான் கண்ணைய யோகி என்பது சுவாமிகளுக்கு புரிந்துகொண்டு அவரும் வணங்கினார். பின்னர் யோக வகுப்புகள் தொடங்கியது. சிறிது நேரத்தில் ஒரு மேலை நாட்டு நபர் ஒருவரும் அங்கு வந்து சேர்ந்தார். அவரும் கண்ணைய யோகியாரிடம் மாணவராக கற்கும் படி ஸம்பளா எனும் ஆசிரமத்திலிருந்து ரிஷிகளால் அனுப்பப் பட்டவர் என்பதை பின்னர் சுவாமிகளுக்கு கண்ணைய யோகியார் கடிதம் மூலம் கூறியிருந்தார். 

அந்த மேலை நாட்டவர்தான் உலகத்திற்கு ஸம்பளா எனும் சூக்ஷம் ஆசிரமம் பற்றி எழுதிய ஆண்ட்ரூ தோமஸ் என்பவர். இந்த ஆண்ட்ரூ தோமஸ் Shambhala Oasis of Light எனும் நூலை எழுதியிருந்தார். 

ஆண்ட்ரூ தோமஸும், எனது குருநாதரும் ஒரே நாளில் ஸ்ரீ கண்ணைய யோகியாரை சந்தித்தார்கள் என்பது எனது குரு நாதருக்கு வழிகாட்டல் நீலகிரி மலைச்சாரலில் உள்ள சூக்ஷ்ம ஆசிரமத்திலிருந்தும், ஆன்ட்ரூ தோமஸிற்குரிய வழிகாட்டல் ஸம்பளா ஆசிரமத்திலிருந்தும் கிடைத்தது என்பது முக்கிய செய்தி. 

பின்னர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் ஆன்ட்ரூ தோமஸிற்கு ஆங்கிலத்தில் Sidhman course என்றும் எனது குரு நாதரிற்கு சித்தி மனிதன் பயிற்சி என்றும் பாடத்தொகுப்பு எழுதிக் கற்பித்தார். இந்த சித்தி மனிதன் பயிற்சி என்பது ஒரு மனிதன் தனது அந்தக்கரணங்களை எப்படி வலுப்படுத்தி சித்திகளை அடைவது என்பதற்கான பயிற்சியாகும். 

 நாம் குரு நாதரிடம் இந்த சித்தி மனிதன் பயிற்சிப்பாடங்களைப் பயிலும் போது ஆண்ட்ரூ தோமஸ் பற்றி சுவாமிகள் அடிக்கடி கூறுவார்கள். மிக உயர்ந்த மனப்பிராண ஆற்றல் பெற்று ஸம்பளாவின் ரிஷிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர் என்று அடிக்கடி கூறுவார். 

அவர் எழுதிய நூற்கள் பற்றி அடிக்கடி குறிப்பிடுவார். அவருடைய Shambhala Oasis of Light நூலிலுள்ள விஷயங்களைப் பற்றி இந்தக்கட்டுரைத் தொடரில் உரையாடுவோம். 

ஸம்பளா - ஸித்தாஸ்ரமம் - பூலோகத்திற்கான ஒளி - 01

Image result for SHambala

வைகாசிப்பௌர்ணமி என்பது எமது குருபரம்பரைக்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வு. இப்படியான ஒரு பௌர்ணமியில்தான் எனக்கும் எனது தாயாருக்கும் குருநாதர் தீக்ஷை தந்தார். 

வைகாசிப் பௌர்ணமியின் சிறப்பு என்னவென்பது பற்றி குருநாதர் தெளிவாகக் கூறியிருந்தார். 

மனிதகுலத்தில் உதித்து ஒளிசரீரம் பெற்ற மகரிஷிகள் பூலோகத்தின் ஹிமாலயத்தின் மிக உட்பகுதியில் அதீத தவ ஆற்றலால் சாதாரண மக்கள் நெருங்கமுடியாதபடி உலகின் பரிணாமம் இறைவனை நோக்கி தெய்வகுணத்துடன் நெருங்குவதற்கு தேவையான சக்தியை, அறிவினை, ஞானத்தினை பூவுலகிற்கு கொடுப்பதற்காக நீண்ட தபஸில் இருந்துகொண்டு, காலத்திற்கு காலம் தகுந்த பக்குவம் பெற்ற மனித உடலில் இருக்கும் ஆன்மாக்களை தேர்ந்தெடுத்து உலகின் பரிணாமத்தை உயர்விக்க தகுந்த சாதனை செய்விக்கிறார்கள், அல்லது சிலரிற்கு தமது சக்தியைக் கொடுத்து அவர்கள் உணர்வினை மேம்படுத்தி பலரையும் அந்த அருள் வட்டத்திற்குள் கோண்டுவந்து உணர்வினை மேம்படுத்தச் செய்கிறார்கள். இப்படி பாரதத்தில் மட்டுமல்லாமல் உலகெங்கும் செயல்கொள்கிறார்கள். 

இதில் தென் நாட்டின் ஆன்ம பரிணாமத்தைத் தீர்மானிக்கும் தலைமை ரிஷி ஸ்ரீ அகத்திய மாமகரிஷியாவார். நீலகிரிமலைச் சாரலில் உள்ள அவரின் சூக்ஷ்ம ஆஸ்ரமத்தில் தகுந்த ஆன்மாக்கள் ஆன்ம பரிணாமத்திற்காக (evolution of consciousnesses) பயிற்றுவிக்கப்படுகிறார்கள். எமது குருபரம்பரை அகத்தியமகரிஷியிடமிருந்து வழிகாட்டல் பெற்று வருகிறது.  வைகாசிப் பௌர்ணமி தினத்தில் அனைத்து ரிஷிகளும் இந்த ஸம்பளா என்ற இடத்தில் கூடி தங்கள் ஆற்றல்களை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றி முடிவெடுக்கிறார்கள். இதனைப் பற்றி குருநாதர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் மகரிஷிகளின் மர்ம வாசம் என்ற கட்டுரையில் தெளிவாக விளக்கியுள்ளார்கள். 

இப்படி மனிதகுலத்தின் உணர்வினை (consciousnesses) உயர் நிலைக்கு கொண்டு செல்வதற்கு மகரிஷிகள் காலம் காலமாக பல முயற்சிகளை செய்து வருகிறார்கள். 

பூமியைச் சூழ ஆகாச தத்துவத்தில் மனிதகுலம் தோன்றியது முதல் உருவாகிய எண்ணங்கள் அனைத்தும் அழியாமல் சேமிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதில் தீய எண்ணப்பிரபாவங்கள், நல்ல எண்ணப்பிரபாவங்கள் அனைத்தும் சேமிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் தீய எண்ணப்பிரபாவங்களின் அளவு சிறிதாக இருந்தாலும் அவை வீரியமிக்கதாகவே இருக்கிறது. இதுவரை உலகில் நடைபெற்ற போர்களும், ஓலங்களும், துன்பங்களும், வன்முறைகளும் இங்கு பதியப்பட்டு அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இப்படி ஏற்படுத்தப்பட்ட எண்ணங்கள் எதுவும் ஆகாசத்தில் இருக்கும் பதிவுகள் எதையும் அழிக்க முடியாது.  நல்ல எண்ண அதிர்வுகளால் சமப்படுத்த மாத்திரமே முடியும். இதைச் சாதிப்பதற்கு மனிதகுலத்தினால் மாத்திரமே முடியும் என்பதால் மனிதகுலத்தின் உணர்வினை தெய்வ குணத்திற்கு உயர்த்தி இந்த தீய எண்ண அதிர்வினை சமப்படுத்த முடியும். இப்படி சமப்படுத்துவதற்குரிய நல்ல அதிர்வினை ஏற்படுத்த பூமியில் வாழும் மனிதர்களின் உணர்வு தெய்வ உணர்வாக (Divine consciousnesses) இருப்பதற்காக காலம் காலமாக ஸம்பளாவில் இருக்கும் மகரிஷிகள் செயல்கொண்டு வருகிறார்கள். 

பூலோகத்தின் மனிதனின் உணர்வினை மேம்படுத்தும் அந்த ஒளி ஸம்பளாவில் உள்ள மகரிஷிகளின் வழி மனித குலத்திற்கு கொடுக்கப்பட்டு வருகிறது. 

திபேத்திய மொழியில் ஸம்பளா எனவும் பாரத புராணங்களில் ஸித்தாஸ்ரமம் என்றும் சீன மொழியில் ஷங்ரிலா எனவும் அழைக்கப்படுகிறது. 

எமது சித்த வித்யா குருமண்டல  நாமாவளியில் துதிக்கும் குருமார்கள் அனைவரும் இந்த ஸம்பளா எனும் ஒளி மண்டலத்தைச் சார்ந்தவர்களே. 


Wednesday, November 13, 2019

குரு தெய்வமா?


இப்போது ஆன்மீகத்தில் இருக்கும் பெரிய அறியாமை தமது குருவை உலகத்திற்கு குருவாகவும், அனைவருக்கும் கடவுளாகவும் பிரகடனப்படுத்தி தமது குருவையும் அவமதித்து, சித்தர்கள், ரிஷிகளின் பாரம்பரியத்தையும் அவமதிக்கும் செயலைச் செய்வது.

குரு என்பவர் ஒவ்வொருவருக்கும் உரிய தனிப்பட்ட தெய்வம் - Personalized God! எவரிடம் எமது மனம் அடங்கி, அகவிழிப்பு ஏற்படுகிறதோ அவரை நாம் குருவாக ஏற்கலாம்.

எமக்கு ஏற்படும் இந்த அனுபவம் மற்றவர்கள் எல்லோருக்கும் ஏற்படமுடியாது. ஆகவே குரு என்பவர் Marketing effort இன் மூலம் குருவாக முடியாது. எமது அக அனுபவத்தின் மூலமே குருவை நாம் அறிய முடியும்.

இப்படி எமக்கு அகவிழிப்பு அனுபவம் வாய்த்தால் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று மற்றவர்களுக்குப் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால் மற்றவர்களுக்கு எமது குரு மூலம் அகவிழிப்பு ஏற்படுமா என்பதை உறுதி செய்ய முடியாது. சூரியன் ஒளியை எங்கும் பரப்பினாலும் மண்ணிற்கு கீழ் இருக்கும் மண்புழுவிற்கு சூரியன் ஒவ்வாதது போல் குரு ஞானியாக இருந்தாலும் அறியாமையில் மூழ்கி இருக்கும் ஒருவனுக்கு ஞானியால் பலன் எதுவும் கிடைப்பதில்லை.

இன்று பலருக்கு தமது வியாபாரப் பிரச்சனை, உடல் நோய், மன அழுத்தம், வீட்டுப்பிரச்சனை, கடன் பிரச்சனைகளைத் தீர்த்துவைப்பவரே குரு என்ற பிம்பம் ஏற்பட்டுவிட்டதால் பலருக்கு இந்தப்பிரச்சனைகளைத் தீர்க்கும் ஆற்றல் உள்ளவர்களே குருவாகிப் போய்விட்டார்கள்.

அகவிழிப்பு வேண்டும் சாதகன் தனது குரு தனக்கு மட்டுமே உரித்தான இஷ்ட தெய்வம் என்ற உண்மை உணர்ந்து தனது சாதனையைத் தொடரவேண்டுமே அன்றி குருவின் புகழ் பரப்புகீறேன் என்று குருவைப் பற்றிய தேவையற்ற வதந்திகளை, அற்புத ஆற்றல் உள்ளவர் போன்ற நம்பிகைகளை மற்றவர்களுக்கு விதைக்கக் கூடாது. இது சாதகனின் ஆன்ம முன்னேற்றத்தையும், மற்றவரகளது மனதில் குழப்பத்தையும் ஏற்படுத்தும்.

காயத்ரி சாதனையும் புத்துணர்ச்சியும்

காயத்ரி சாதனை என்பது பிராண சாதனை. மூச்சை அடக்கி பிராணாயாமம் எதுவும் செய்யத்தேவையில்லை. சீரான நீண்டகால காயத்ரி சாதனையில் மனச் சலனம் அடங்குவதால் பிராண சேமிப்பு உண்டாகும். சரியான ஒழுக்கத்துடன், மன அடக்கத்துடன் காயத்ரி சாதனை செய்பவர்கள் உடலிலுள்ள நோய்கள் குறைந்து குணமாகும்.
ஆரோக்கியமானவர்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். பலர் காயத்ரி சாதனயால் வரும் புதுச்சக்தியை தம்மில் சேமிக்காமல் அதிகமான உடலுழைப்பு, பணம் சேர்த்தல் போன்றவற்றிற்கு செலவழித்து தமது சக்தியை இழந்து விடுவார்கள்.
கடன்வாங்கி வியாபரம் செய்த ஒருவன் காயத்ரி சாதனையால் தனது கடன் தீர்ந்தவுடன் தனது கர்மா தீர்ந்தது என்று ஞானத்துடன் அதற்குப் பிறகு கடனே வாங்கக்கூடாது என்று எண்ணம் கொண்டு தனக்கு அமைந்த வியாபாரத்தை சிறப்பாகச் செய்ய சிறந்து முன்னேறுவான். அப்படியில்லாமல் எம்மிடம்தானே காயத்ரி சாதனை இருக்கிறது, இன்னும் பல இலட்சம் கடன்வாங்கி வியாபாரத்தை விஸ்தரித்தால் சாதனை காப்பாற்றும் என்று பேராசைப் பட்டு செய்யப்போனால் பிரபஞ்ச ஞானசக்தி அவனுக்குத் துன்பத்தைக் கொடுத்து ஞானத்தை விழிப்பிக்கும். இந்தப்பாதை மிகக் கடினமானது. ஆகவே புத்தியுள்ள சாதகர்கள் தமது சாதனையில் வரும் சக்தியை அதிகமாக வீணாக்காமல் தம்மை பண்பிலும், குணமாற்றத்திலும் தெய்வ் உருப் பெற பயன்படுத்த வேண்டும்.
இதைப்போல் காயத்ரி சாதனை செய்யும் பிராண பலம் உள்ளவர்கள் இரவில் நித்திரை முழித்தாலும் அடுத்த நாள் உற்சாகமாக செயலாற்றும் வல்லமை இருக்கும். இப்படி இருப்பது ஒரு தற்காலிக நிலையே. ஸ்தூல உடல் இயற்கைக்கு கட்டுப்பட்டது. அது இரவில் ஓய்வெடுப்பதற்கும் படைக்கப்பட்டுள்ளது. ஒழுங்காகத் தூங்காமல் அதிக பிராணசக்தியால் உடலை களைப்படையச் செய்யாமல் வைத்திருந்தால் உடல் வலுவிழப்பது உணர்விற்குத் தெரியாமல் உடல் பாதிப்படைய ஆரம்பிக்கும்.
ஆகவே சாதகர்கள் தமது சாதனையால் அதிக பிராண சக்தி பெற்றாலும் அதை இயற்கைக்கு எதிரான வழியில் தவறாகப் பயன்படுத்தக்கூடாது.

Saturday, October 26, 2019

மந்திர ஜெபத்திற்கு எந்த மாலையைப் பயன்படுத்தினால் அதிக நன்மை?

இன்று பலரும் மந்திர சாதனைக்கு எந்தமாலையைப் பயன்படுத்தினால் இவ்வளவு நன்மை, அவ்வளவு நன்மை என்று புலம்புவதைக் காண்கிறோம்.  இது அடிப்படையில் மந்திர சாதனையின் நோக்கம் தன்மை புரியாதவர்கள் கூறும் கூற்று. 

மாலைகளை மாற்றியவுடன் அதிக சக்தி பெற்றுவிடலாம் என்று மனப்பால் குடிப்பது தவறு. 

மந்திரம் என்றால் மனதைத் திடப்படுத்துவது என்று பொருள். மனம் என்ற சொல்லை விரித்துச் சொல்வதானால் மேல்மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் என்று நான் காக்கி அந்தக்கரணங்கள் என்று சொல்லுவார்கள் சித்தர்கள். 

மந்திர சாதனையின் முதல் சித்தி மேல் மனதின் சலனிக்கும் தன்மையைக் கட்டுப்படுத்தி எண்ணங்கள் குறைந்து சாதனைக்கு எடுத்துக்கொண்ட மந்திரத்தில் மேல் மனம் லயமாகுவது. இப்படி நடந்தால் அந்த மந்திர ஜெபத்தின் பலன் ஒரு மடங்கு. 

மந்திர சாதனையின் அடுத்த சித்தி புத்தி தெளிவடைதல், புத்தி தெளிவடைந்தால் சித்தத்தில் ஏற்படும்  விருத்திகளை கட்டுப்படுத்தலாம். இப்படி புத்தி தெளிந்தால் அந்த மந்திர ஜெபத்தின் பலன் ஒன்றுக்கு பத்து மடங்கு. 

மூன்றாவது சித்தி சித்த விருத்தி நிரோதமாதல், எண்ணங்கள் கட்டுப்பாடு இல்லாமல் உள்ளிருந்து எழுந்து எம்மைக் குழப்பாமல் சித்தம் புத்தியால் கட்டுப்படுத்தக்கூடிய அளவு ஆற்றலைப் பெறுதல். இப்படி ஜெபிக்கப்படும் மந்திரத்திற்கு ஒன்று 100 மடங்கு பலன். 

 நான் காவது எமது ஆங்காரம் நான் பணக்காரன், நான் அறிவாளி என்ற சிறு ஆங்காரம் ஒழிந்து நான் ஜெபிக்கும் மந்திர தெய்வத்தின் தன்மையுடையவன் என்று உணர்தல். இது நடந்தால் மந்திரத்திற்கு 1000 மடங்கு பலன். 

ஐந்தாவது எமது மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் ஆகிய அந்தக்கரணங்கள் நான்கும்  நாம் உபாசிக்கும் தெய்வத்தின் தன்மை பெறுதல், இதற்கு பலன் லட்சம், கோடி என்று உங்கள் மனத்திருப்திக்குத் தேவையான எண்ணிக்கையைச் சொல்லி வைத்துக்கொள்ளுங்கள். 

இதை விட சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கும் குறித்த மாலைகள், குறித்த மந்திரங்களுக்கு என்ற விதிகள் அவை சாதனைக்கு மேற்கூடியபடி அந்தக்கரணங்கள் ஒழுங்காகினால் பிரபஞ்சத்தில் இருந்து குறித்த தெய்வ சக்தியை எம்மில் ஈர்த்து சேர்ப்பதற்கு உதவியாக இருக்கும் என்பதே. 

ஆகவே ஒரு சாதகன் ஆரம்ப காலத்தில் தனது சாதனையை அந்தக்கரணங்கள் ஈடுபாடு கொள்ளச் செய்வதற்கான எளிய வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதை விடுத்து தங்கமணி மாலையில் ஜெபம் செய்தால் ஒரு லட்சம் பலன் என்று கூறியிருப்பதைக் கேட்டு தங்கமணி மாலை செய்ய பணமில்லையே, இருந்தால் விரைவாக முன்னேறலாமே என்று மயங்கி தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்ளக்கூடாது. இவை எல்லாம் முற்காலத்தில் சாதனையைச் சாதாரணமானவர்கள், தகுதியற்றவர்கள் செய்துவிடக்கூடாது என்பதற்காக நுட்பமாகத் தடைகளை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட விதிகள். உண்மை சாதனை சித்தியின் நுட்பம் அந்தக்கரணங்களைச் சீர்படுத்துவதில் இருக்கிறது. 

தற்காலத்தில் சாதனை செய்யும் ஆர்வம் அதிகரித்து வருவதால் அதை வியாபாரமாக்க ஜெபமாலை வியாபாரம் நல்ல வழியாகிப் போவதால் இப்படியான சாதனையில் முக்கியத்துவம் குறைந்த விஷயங்கள் அதிகம் பிரபலப்படுத்தப்படுகிறது. 

ஆகவே உண்மையில் சாதனை செய்யும் ஆர்வமிருந்தால் உங்கள் கைகளில் எண்ணிக்கையினை எண்ணும் முறையினைக் கற்றுக்கொள்ளுங்கள். அதிக அளவு ஜெபம் செய்யும் சாதகர்களாக இருந்தால் குறித்த தெய்வ மந்திரங்களுக்கு சாஸ்திரம் கூறும் எளிய மாலைகளைப் பயன்படுத்துங்கள். அதை விடுத்து கிடைத்ததற்கரிய, விலைகூடிய மாலைகளைத் தேடி சாதனையைச் செய்யாமல் விடாதீர்கள். 

ஒரு லக்ஷம் ஸ்ரீ காயத்ரி ஜெபம் பூர்த்தி செய்த சாதகரின் அனுபவம்

சாதனை அனுபவம் -------------- குரு ஸ்ரீ ஸக்தி சுமனன் அண்ணாவின் வழிகாட்டலில் சாதனை செய்ய ஆரம்பித்து இந்த ஆண்டோடு 7 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. ...