முந்தைய பகுதிகள்:
பகுதி - 01
பகுதி - 02
பகுதி - 03
பகுதி - 04
பகுதி - 05
*******************************************
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று அதிகாலை சென்று பூஜையில் பங்கு பற்றி அடுத்த நாள் வருவதாக எனது நிகழ்ச்சி அமைந்திருந்தது. இதனால் சாமியுடன் சிறிது நேரம் இருக்கலாம்.
சுவாமிகள் மிகக் கருணை வாய்ந்தவர். எவர் உதவி என்று நாடி வந்தாலும் அவர்களுக்கு இல்லை என்றோ கடிந்து பேசவோ மாட்டார்! அடிக்கடி அவர் சொல்வது நான் தேவியிடன் தினசரி கேட்கும் பிரார்த்தனை " என்னைக் கைவிட்டாலும் என்னை நாடி வரும் எவரையும் எக்காரணம் கொண்டும் கைவிட்டுவிடாதேயம்மா?" என்று.
உயர்தரம் படித்துக்கொண்டிருக்கும் போது பாடசாலையில் அதிபருடன் எமது வகுப்பிற்கு எப்போதும் முரண்பாடு. அதில் அதிபர் குறிப்பாக என்னுடன் ஒருவித பகையுணர்ச்சியுடனேயே இருந்தார். அதன் விளைவுகள் பலவாக இருந்தது! எனினும் நானோ தீக்ஷை பெற்று தீவிரமாக உபாசனை செய்துகொண்டிருந்தேன். எனக்குப் பிடித்த உயிரியல் விஞ்ஞானம் பயின்றுகொண்டிருந்தேன். அதற்கு முந்திய சாதாரண தரப்பரீட்சையில் பாடசாலை மட்டத்தில் நானே முதலாவதாக வந்திருந்ததால் எல்லோரும் நான் கட்டாயம் உயர்தரத்தில் அதியுயர் சித்தி பெற்று ஒரு மருத்துவனாவேன் என்று நம்பினார்கள்! நானோ பிறவிப்பிணிக்கு மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்தேன்!
பௌர்ணமிகளில் எந்த வகுப்பாக இருந்தாலும் அதற்குச் செல்லாமல் பூஜைக்குச் செல்வதே வழக்கமாகிவிட்டது. இப்படி இருக்க எனது எண்ணம் முழுவதும் பரீட்சை முடிந்தவுடன் சுவாமிகளிடம் சென்று அவரிற்கு குருசேவை செய்து யோகம் பயில்வது என்ற எண்ணத்திலேயே இருந்தது. எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறோம் என்பது பற்றி சிறு துளியும் எண்ணம் எதுவும் இருக்கவில்லை.
இப்படி இருக்க ஆகஸ்ட் மாதம் பரீட்சை முடிந்து விட்டது. மூன்று பாடங்களும் சித்தியடைந்து விடுவேன் என்பது தெரியும், ஆனால் போட்டிப்பரீட்சை என்பதால் பல்கலைக்கழகம் கட்டாயம் கிடைக்காது என்பது தெளிவாகத் தெரிந்தது. பரீட்சை முடிந்துவுடன் சாமியிடம் சென்று பரீட்சை எழுதிவிட்டதாகவும், ஆனால் பல்கலைக்கழகம் கிடைக்காது என்பது தெரியும் என்றும் சொன்னேன்.
அதற்கு சாமி, அம்மாவிற்கு நீங்க படிச்சு நல்ல தொழிலுக்கு வரூவீங்க என்று சொல்லியிருக்கேன் அப்பா, அதைச் செய்யாம அம்மாவின் ஆசி கிடைக்காது! இந்த சின்ன விஷயத்தையே செய்து வெற்றி பெற முடியவில்லை என்றால் எப்படி யோகத்தில் முன்னேறி இறைவனை அடைவது" என்று சாமி சொல்லிவிட்டார்!
அப்போதுதான் எனக்கு உறைத்தது! படிப்பில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கவேண்டும் என்று! அடுத்த வருட பரீட்சையை ஏப்பிரல் மாதத்திற்கு மாற்றி இருந்தார்கள்! ஆகவே இன்னும் ஏழு மாதங்கள்தான்! கட்டாயம் முயற்சித்தால் பல்கலைக்கழகம் கிடைக்குமாறு சித்தியடைந்து விடலாம் என்று மனம் சொல்லியது!
அம்மாவிற்கு தனது பிள்ளைகள் பட்டதாரி ஆகவேண்டும் என்ற கனவு சிறுவயதில்! அதுவும் மருத்துவராகவேண்டும் என்று! எனக்கோ ஆழ்மனம் யோகம் பயில வேண்டும் என்று பூர்வ ஜென்ம சம்ஸ்காரத்தால் தூண்டிக்கொண்டிருக்கிறது! சாமியோ அம்மாவினைத் திருப்திப்படுத்தாமல் உனக்கு வழி இல்லை என்கிறார். ஆகவே முதல் நிபந்தனை அம்மாவின் ஆசி பெற வேண்டும் என்பது! அதை நிறைவேற்றப்படிப்பது என்ற முடிவிற்கு வந்தேன்!
வழமையாக சாதனைக்கு மூன்று மணிக்கு எழுந்து பழகிய எனக்கு பௌதீகவியல் ஆசிரியர் பரீட்சை மாதிரி வினாக்களுக்கு விடை எழுதும் பயிற்சி 0400 மணிக்கு காலையில் வந்தால் சொல்லித்தருவதாக கூறினார். மலை நாடு! அதிகாலைக் குளிரில் எழுந்து நானும் இன்னும் மூன்று நண்பர்களும் சென்று படிக்கத்தொடங்கினோம். ஆறுமணிக்கு வகுப்பு முடிந்தபின்னர் சாதனை, பின்பு படிப்பு உணவு, படிப்பு, பகல் உற்க்கம், பின்னர் மாலை சாதனை, பின்னர் படிப்பு, இரவு உறக்கம் என்று ஒழுங்குபடுத்திக்கொண்டு படிக்கத்தொடங்கினேன்.
ஒவ்வொரு பௌர்ணமியும் விடாமல் சென்று வந்து கொண்டிருந்தேன். சாமிக்கு நான் ஒழுங்காக படிக்கத்தொடங்கிவிட்டேன் என்றும், ஏப்பிரலில் பரீட்சை முடிந்தவுடன் முழுமையாக அவரிடம் வந்து விடுவதாகவும் சொல்லியிருந்தேன்.
இப்படி ஏழுமாதம் படித்து பரீட்சையும் வந்தது. மூன்று பாடங்கள், ஒரு பொது அறிவு வினாத்தாள், மற்றும் ஆங்கில பரீட்சை கடைசி! கடைசிப்பரீட்சையில் வினாக்களை செய்து முடித்தவுடன் கொடுத்துவிட்டு வந்துவிடலாம்! கடைசி நாள் பரீட்சை முடிந்த சந்தோஷத்திற்கு மை தெளிக்கும் விளையாட்டு நடக்கும்! எனக்கோ அதிலெல்லாம் ஆர்வம் இல்லை! முதல் நாள் சுவாமியிடம் செல்வதற்கு உடைகள் எல்லாம் பையில் எடுத்து வைத்துவிட்டு அடுத்த நாள் 0900 மணிக்கு பரீட்சை, 1100 மணியளவில் எழுதிக்கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்து ஒரு மணிக்கு சாமியிடம் செல்ல பஸ்ஸில் ஏறியாகிவிட்டது!
சாமி இருக்கும் இடத்திற்கு போய்ச் சேர மாலை 0600 மணியாகிவிட்டது. கடுங்குளிர் பிரதேசம். இரவுச் சாப்பாடு தயாராகிக் கொண்டிருந்தது. நான் போனவுடன் வந்தாச்சப்பா என்று மிக மகிழ்ச்சியுடன் சாமி கேட்டார். பின்னர் இரவு உணவு! அதன் பின்னர் ஆசிரமத்தில் உள்ள அறையில் ஒரு கட்டில் எனக்கு ஒதுக்கப்பட்டது!
அத்துடன் ஆசிரம வாழ்க்கை தொடங்கியது!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.