முந்தைய பகுதிகள்:
பகுதி - 01
பகுதி - 02
பகுதி - 03
சுவாமிகள் கூறியபடி முதல் பௌர்ணமி சென்று வந்தபின்னர் மிகவும் ஆழமாக தொடர்ந்து செல்லவேண்டும் என்று எண்ணம் உருவாகியது. பள்ளிப்படிப்பு தொடர்ந்தது ஆனால் மனம் முழுமையாக சாதனையிலும், யோக நுணுக்கங்களிலும் கற்பதையே விரும்பியது.
எனது தந்தை அகத்திய மகரிஷியை குருவாக வணங்கச் சொல்லிய பின்னர் எனது வைத்தியக் கற்கைக்காக அகத்தியர் வைத்திய காவியத்தையும், யோககற்கைக்காக சித்தர் பாடல்கள் என்ற நூலையும் எடுத்துக்கொண்டேன்.
|
எனது முதலாவது சித்தர் பாடல் புத்தகம் |
அகத்தியர் வைத்திய காவியம் உலகத்தமிழாரய்ச்சி நிறுவனம் உரையுடன் பதிப்பித்தது. சித்தர்பாடல்கள் பாட்டு மட்டும். அவற்றை தொடர்ந்து கற்பதும் மேலும் சித்தர் நூற்களை சேகரிப்பதுமாக எனது ஆர்வம் சென்றுகொண்டிருந்தது.
எல்லா இடத்திலும் குருவில்லாமல் வித்தை பாழ் என்பதும் குருவின் அருள் வேண்டும் என்பதையும் புரிந்துகொண்டேன். இப்போது ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் அதிகாலை 0330 க்கு எழுந்து குளித்து பஸ் எடுத்து வீட்டிலிருந்து நுவரெலியாவிற்கு செல்வதை வழக்கமாக்கிக்கொண்டேன். காலையில் சென்று இலங்காதீஸ்வரரிற்கு அபிஷேகம் பின்னர் யாகத்தில் ஆகுதி போட்டு பூஜையில் பங்குபற்றிய பின்னர் சுவாமிகளிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வது, அத்தனைபேரிற்கு மத்தியில் சுவாமிகள் என்னை அடையாளம் கண்டு "சாப்பிட்டுவிட்டு போங்கப்பா" என்று சொல்வதுமாக பல மாதங்கள் சென்று கொண்டிருந்தன.
சுவாமிகள் என்னிடம் காட்டும் தனிப்பட்ட கரிசனை எனது உள்ளுணர்விற்கு அவரிடம் ஒரு அன்பாக பரிணமிக்கத்தொடங்கியது. மற்றும்படி சுவாமிகளிடம் ஆரம்பத்தில் கடிதம் எழுதிய விஷயத்தையோ, எந்த எதிர்பார்ப்பையோ ஏற்படுத்திக்கொள்ள வில்லை! அவர்காட்டும் அன்பும், பரிவும், அவரது தேஜஸ் மிகுந்த முகமும், அவரது வெள்ளை உடையும் ஒருவித கவர்ச்சியை ஏற்படுத்தியது.
சுவாமிகள் உபதேசத்தில் குருவின் பெருமைகள், காயத்ரி மந்திரத்தின் ஆற்றல், சாதனையின் முக்கியம் பற்றி எளிமையாக உபதேசம் செய்வார். உயர் பரிணாமத்தில் முன்னேற குரு தீஷை அவசியம் என்று எப்போதும் கூறுவார். நான் ஏற்கனவே தந்தை உபதேசித்தபடி அகத்தியர் மந்திரமும், மனோன்மணி அகவலும், காயத்ரி மந்த்ரமும் தினசரி சாதனை செய்து வந்துகொண்டிருந்தேன்.
காயத்ரி கோயிலில் அகத்திய மகரிஷியிற்கு ஒரு சன்னதி இருக்கிறது. நான் குருவாக வணங்கும் மகரிஷி உள்ள கோயில் என்பதும், சுவாமிகள் மற்றைய நூற்கள் படித்து, உபதேசங்களிலும் சுவாமிகளின் குரு கண்ணைய யோகியார் அகத்திய மகரிஷியின் நேர்முகச்சீடன் என்றவுடன் எனக்கு ஆச்சரியம் தாளாமல் போய்விட்டது. எனது தந்தை யாரைக் குரு என்று எனக்குச் சொல்லித்தந்தாரோ அவரின் குருபரம்பரைத் தொடர்பு கிடைத்துள்ளது என்று மனம் புளுகாங்கிதம் அடைந்தது.
ஒரு பௌர்ணமி பூஜை முடிந்தபின்னரும் சுவாமிகள் தனது ஆசீர்வாதம், அன்னதானம் முடித்த பின்னர் தான் அவரிடம் சென்று விடைபெறுவது வழக்கம். அப்படி ஒரு நாள் செல்லும் போது சுவாமிகளைச் சூழ அவரது அப்போதைய நெருங்கிய சிஷ்யர்கள் சுவாமிகளின் காலில் சேறுபட்டுவிட்டது என்று அவரது பாதங்களைக் கழுவிக்கொண்டு இருக்க, சுவாமிகள் என்னைப்பார்த்து விட்டு "என்னப்பா சாப்பிட்டாச்சா?" என்று கேட்க நானும் "ஆமா சாமி", என்று சொல்ல, "புறப்பட்டாச்சா, வந்தா அவசரமா புறப்படாம இரண்டொரு நாள் தங்கி செல்ல வேண்டும்" என்றார். நானும் சிரித்துக்கொண்டே "சரி சாமி" என்று சொல்லிவிட்டு எல்லோர் முன்னிலையும் "சாமி ஒருவிஷயம் கேட்க வேண்டும்" என்றேன். அவரும் மிகவும் கவனமாக "சொல்லுங்கப்பா" என்றார்.
"சாமி, நான் சித்தராகோணும்" என்றேன். அருகில் இருந்தவர்கள் சிரித்துவிட்டார்கள். சிறுபையன் சித்தராக வேண்டும் என்கிறான் என்று.
ஆனால் சுவாமி சிரிக்கவில்லை, ஒரு கணம் யோசித்துவிட்டு ஆசிரமத்திற்குள் சென்று கைகளில் ஒரு சிறிய புத்தகம் எடுத்து வந்து
இந்த புத்தகத்தைப் தினசரி எவ்வளவு முடியுமோ அவ்வளவு படியுங்கள், சித்தத்தில் இவை எல்லாம் பதிந்தால் குருநாதர் உத்தரவு இருந்தால் தீக்ஷை கிடைக்கும், ஆசீர்வாதம் அப்பா" என்று தந்தார்.
அவர் தந்த புத்தகம் ஆதிசங்கரர் எழுதிய சாதனா பஞ்சகம் நூலிற்கு ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் எழுதிய உரை, ஞான குரு என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டிருந்தது, அதில் இறுதியில் பிரம்ம பிராப்தி என்ற மந்திரத் தொகுப்பின் அர்த்தங்கள் தமிழில் இருந்தது.
அன்றிரவு வீட்டிற்கு வந்ததிலிருந்தே எனது சாதனையைத் தொடங்கி விட்டேன். பாடப்புத்தகம் பாடம் படிப்பதை விட தினசரி நான்கு ஐந்து தடவை முழுப்புத்தகமும் படிக்கத்தொடங்கினேன். அந்த நூல் ஒரு சாதகனுக்குரிய பண்பினை பெறுவதற்குரிய வழிமுறைகளைத் தெளிவாகக் கூறுகிறது. இப்படி இதைக் கற்பதை தீவிரமாக பல மாதங்கள் செய்து கொண்டு ஒவ்வொரு பௌர்ணமிக்குச் சென்று சுவாமிகளிடன் ஆசி பெற்று நான் கற்பதை அவரிடம் சொல்ல மிக மகிழ்வு அடைவார்.
இப்படி இருக்கும் போது ஒரு பௌர்ணமி பூஜையின் பின்னர் அன்று சுவாமிகளிடம் அமர்ந்து உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது, அப்போது சாமி நீங்கள் ஞானகுரு படித்து பக்குவம் பெற்றால் தீக்ஷை தருவதாகச் சொன்னீர்கள், நான் விடாமல் படித்துக்கொண்டு இருக்கிறேன், எனக்கு எப்போது தீக்ஷை கிடைக்கும் என்று கேட்டேன்.
அதற்கு அவர் புன்சிரிப்புடன் தனது தலைக்கு மேல் மாட்டியிருக்கும் ஸ்ரீ கண்ணைய யோகியாரின் படத்தைக் காட்டி, குருநாதரின் உத்தரவு இன்னும் கிடைக்கவில்லை அப்பா, அவர் கூறியவுடன் தருகிறேன் என்றார். நானும் சரிசென்று வருகிறேன் என்று விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்து கோயில் கடைக்கு சென்று சாமியின் குருவின் படம் கிடைக்குமா என்று கேட்க கடையில் இருந்த மோகன் அண்ணா கண்ணைய யோகியாரின் படம் ஒன்று பிரேம் போடாமல் இருக்கிறது என்று தந்தார். அதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து படத்தை பிரேம் போட்டு எனது சாதனை இடத்தில் வைத்துக்கொண்டேன். இப்போது நான் கையால் வரைந்த அகத்தியர் படம், சாமி தந்த தன்னுடைய படம், அவருடைய குரு நாதரின் படம் ஆகிய மூன்றும் வந்து விட்டது.
தினசரி எனது சாதனை முடிந்தவுடன் சாமியின் குருவின் படத்தைப் பார்த்து எப்போது நீங்கள் எனக்கு தீக்ஷை தரச்சொல்லப்போகிறீர்கள் என்று கேட்டுவிட்டு மனக்கண்ணில் அவரிடம் பிரார்த்தனை செய்து வரலாயினேன்.
இப்படி இருக்கும் போது அடுத்த பௌர்ணமி சென்று மீண்டும் சாமியிடன் சென்று எனக்கு தீக்ஷைக்கு உங்கள் குரு உத்தரவு கொடுத்துவிட்டாரா? என்று கேட்டேன். அதற்கு அவர் "இல்லையப்பா, உங்களுக்கு உங்கள் அம்மா அனுமதி தரமுடியாமல் தீக்ஷை கொடுக்க முடியாது என்று சொல்லியுள்ளார், அம்மா அனுமதித்தால் மட்டும் தீக்ஷை கிடைக்கும்" என்றார்.
ஏற்கனவே படிப்பில் ஆர்வம் குறைந்து தியானம், சாதனை என்று மூழ்கி இருக்கும் வேளையில் அம்மாவிடம் சென்று இப்படி அனுமதி கேட்பது முடியாது என்று பயத்தில் ஒன்றும் சொல்லாமல் இருந்து விட்டேன். ஆனால் தியனசரி கண்ணைய யோகீஸ்வரரிடம் எனக்கு தீக்ஷை கிடைக்க அம்மாவின் ஆசி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு வந்தேன்.
இப்படி இருக்கும் போது அந்த அபூர்வ அனுபவம் ஏற்பட்டது.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.