இனி நான்காவது பாடல்
திகழத் திகழும் அடியும் முடியும்
காண்பான் கீழ்மேல் அயனும் மாலும்
அகழப் பறந்துங் காண மாட்டா
அம்மான் இம்மா நிலமுழுதும்
நிகழப் பணிகொண் டென்னை ஆட்கொண்
டாவா என்ற நீர்மை யெல்லாம்
புகழப் பெறுவ தென்று கொல்லோ
என்பொல் லாமணி யைப்பு ணர்ந்தே.
மாணிக்கவாசகர் தனது மிகவுயர்ந்த யோக அனுபவத்தையே புணர்ச்சிப்பத்தில் பாடியுள்ளார். அதிலும் ஒரு சாதகன் தனது கீழ்ச் சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம் ஆகிய மூன்றின் பிடிகளில் சிக்கி புருவமத்தியில் இருக்கும் சிவத்தை அடைய முடியாமல் போய்விடக்கூடிய சாத்தியங்களை எல்லாம் கூறியுள்ளார்.
இந்த நான்காவது பாடல் சுவையானது, இன்று இறையை அடைதல் என்றவுடன் முதல் நிலையில் கோயிலிற்கு சென்று தம்மை வெளி வேடங்களால் பக்திமானாக காட்டிக் கொள்ள ஆரம்பிக்கின்றனர். பின்னர் முன்னோர்கள் கூறிய நூற்களை ஆழ்ந்து கற்று தம்மை அறிவாளி ஆக்கி இறைவனைப் பற்றி தெரிந்தவர்களாக முன்னிறுத்துகின்றனர். இதற்கு மேல் ஒரு படி போய் தமது மனதின் கற்பனை ஆற்றலால் இறைவனைக் கண்டோம், உணர்ந்தோம் என்று உணர்ச்சிவசப்பட்டு இறை அருள் பெற்றவர்களாக நிறுவ முயல்கின்றனர்.
இவை எல்லாம் ஆன்ம முன்னேற்றத்தின் படிகள் என்பதில் எந்த ஐயமுமில்லை, ஆனால் இறுதி நிலை இல்லை.
அறிவால் இறைவனைக் காண்பது மகாவிஷ்ணு அடியைக்காண வராகமாக புறப்பட்டது போன்றது. மனதின் படைப்பு ஆற்றலால் இறைவனைக்காண முனைவது பிராமா அன்னமாக மாறி முடியைக் காண விளைந்தது போன்றது.
இந்த இரண்டும் சிவத்தை அறியமுடியாத வழி, இதையே
திகழத் திகழும் அடியும் முடியும்
காண்பான் கீழ்மேல் அயனும் மாலும்
அகழப் பறந்துங் காண மாட்டா
என்ற வரிகளால் கூறுகிறார்.
இப்படி அறியமுடியாத சிவம் (அம்மான்) இம்மா நிலம் முழுவதும் நிகழப் பணிகொண்டு என்னை ஆட்கொண்டான் என்கிறார். அகத்தியர் பெருமானார் தனது ஞானம் முப்பதில் "பூசையென்ன மாநிலமே பூசையாகும், புருவமையத்தொளிகண்டா லதுவே போதும்" என்கிறார். இந்த வரிகள் மாணிக்கவாசகரின் அடுத்த வரிகளுடன் ஒப்பிடக்கூடியவை. மாணிக்கவாசகர் தனது அமைச்சர் பதவியை விட்டு விலகி சிவத்தை அடைய நோக்கம் கொண்டவர், அப்படிப்பட்ட ஒருவர் இந்த பெரிய உலகம் முழுவதும் விளங்க என்னை ஆட்கொண்ட என்று வெளியுலகப் புகழுக்கு சிவன் எனக்கு அருளினான் என்று பாடுவாரா? ஆகவே கீழே உள்ள வரிகள் அகமுகமாக பொருள் கோடல் செய்ய வேண்டியவை.
அம்மான் இம்மா நிலமுழுதும்
நிகழப் பணிகொண் டென்னை ஆட்கொண்
டாவா என்ற
என்கிறார்.
இங்கு மாநிலம் என்பது உடலைக் குறிக்கிறது, தனது யோக சாதனையால் கீழ்ச் சக்கரங்களின் இயக்கங்களை வென்ற யோகி தனது உடலில் சிவ உணர்வு அல்லது விழிப்புணர்வு அல்லது துரியம் என்ற நிலையைப் பெறுகிறான். அது புருவமத்தியில் உணவினை இருத்தி சித்தி பெற்ற யோகிக்கே வாய்க்கும். இந்த நிலை பெறுவதற்கு புருவமத்தியில் ஜோதி வடிவான பொல்லா மணியைப் புணர வேண்டும் என்று பாடலை முடிக்கிறார் .
அடுத்த வரிகளில் வரும் நீர்மை எல்லாம் என்ற வரிகள் யோகத்தில் ஒருவனுக்கு ஏற்படும் குணமாற்றங்களைக் குறிக்கிறது. யோகி தனது உணர்வை சிவத்தில் இருத்தி சாதனை புரிந்து விழிப்புணர்வினைப் பெற தனது குணங்கள் தெய்வ குணங்களாக மாறுவதைக் காண்பான். இந்தக்குண மாற்றத்தினால் உலகம் அவனை வியந்து போற்றும். இவையெல்லாம் புருவமத்தியில் உள்ள பொல்லா மணியைப் புணர்வதால் வரும் நிலை என்கிறார் பெருமானர்.
நீர்மை யெல்லாம்
புகழப் பெறுவ தென்று கொல்லோ
என்பொல் லாமணி யைப்பு ணர்ந்தே.
இந்தப் பாடலின் யோக விளக்கம் ஒருவன் தனது அறிவின் ஆற்றலாலும், மனதின் ஆற்றலாலும் சிவத்தை அறிய முடியாது, மாநிலம் எனும் உடலின் புருவமத்தியில் சிவத்தை அறிந்து, அந்த அனுபவத்தால் சாதகன் தெய்வ குண மாற்றம் பெறுவான் என்பதைக் குறிக்கிறது.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.