இனி நான்காவது பாடல்
திகழத் திகழும் அடியும் முடியும்
காண்பான் கீழ்மேல் அயனும் மாலும்
அகழப் பறந்துங் காண மாட்டா
அம்மான் இம்மா நிலமுழுதும்
நிகழப் பணிகொண் டென்னை ஆட்கொண்
டாவா என்ற நீர்மை யெல்லாம்
புகழப் பெறுவ தென்று கொல்லோ
என்பொல் லாமணி யைப்பு ணர்ந்தே.
இந்தப் பாடலில் பொதுப் பொருள் அயனும் மாலும் அடியும் முடியும் காணாத பேரொளி வடிவான சிவம் என்று தொடங்குகிறது.
அடியும் முடியும் காணும் கதை எல்லோருக்கும் தெரிந்தது, ஆனால் இந்தக் கதையில் ஒரு மறை பொருள் இருக்கிறது.
மனிதனின் ஆன்மா அல்லது உயிர் என்ற இறையின் கூறு மனம் என்ற கவசத்தால் சூழ்ந்து இந்த உடல் இயக்கத்தில் ஈடுபடுகிறது.
இந்த மனம் இரண்டு பண்புகள் உடையது. தனது கற்பனா சக்தியால் படைப்புத் திறன் உடையதாக இருக்கிறது. இதுவே பிரம்மாவின் ஆற்றல்.
அதேவேளை அறிவு செயற்பட்டு உடலையும் உயிரையும் காக்கும் சக்தியையும் கொண்டிருக்கிறது. இதுவே விஷ்ணுவுன் ஆற்றல்.
ஆனால் இந்த இரண்டு பண்புகளும் உயர்ந்த நோக்கத்திற்கு சிவமாகிய விழிப்புணர்வினை அடைவதற்கு பயன்படாமல் போகும் போது அது உயிரை அழிக்கும் நிலைக்கு கொண்டு செல்லும். அதேவேளை இந்த இரண்டாலும் மனிதனை தன்னை மாயாசக்திக்குள் உட்படுத்திக் கொள்கிறனும் கூட,
இந்த இரண்டின் பிடியில் இருந்து மனம் விழிப்புணர்வு பெற்றால் மட்டுமே சிவத்தை அடையமுடியும். ஆனால் இந்த இரண்டு ஆற்றலும் ஒருவனை எப்போதும் தான் இறைவனை அறிந்து விட்டோம் என்று ஒரு மமதையில் வைத்திருக்கும். இப்படி படைப்பாற்றலினதும், காக்கும் அறிவு ஆற்றலினதும் மமதையில் சிக்காமல் விழிப்புணர்வு பெறுவதே அடி முடி தேடிய கதை!
இந்த இரண்டு ஆற்றலும் மனிதனின் கீழ்சக்கரங்கள் என்று சொல்லப்படும் சுவாதிஷ்டானம், மணிப்பூரகத்தில் செயற்படுகின்றது.
மாணிக்கவாசகரின் புணர்ச்சிப்பத்தில் அனேகமாக விஷ்ணுவும், பிரம்மனும் பற்றியே கூறுகிறார். யோகத்தில் இந்த இரண்டு சக்கரங்களின் பிடியில் இருந்து வெளி வருவதே முதல் சித்தி!
இந்தப் பாடலில் மாணிக்க வாசகர் கற்பனை எனும் படைப்புத் திறனிடமும், அறிவு எனும் காக்கும் சக்தியினதும் மாயையில் விழுந்து ஆன்மா விழிப்புணர்வினை இழந்து விடக் கூடாது என்பதை மறைப் பொருளில் பாடியுள்ளார்.
இன்று பலர் இறைவனைப் பற்றி பல நூற்களில் கூறப்பட்டதை கூறுவதும், அறிவால் ஆராய்ந்து கூறுவது இத்தகைய ஒரு மாயை தான்! இவை எல்லாம் தாண்டி யோகத்தின் மூலம் பொல்லா மணி என்ற சிவ ஜோதியில் கலப்பதுவே உண்மையான இறை நிலை அடைதல் என்பதையே இந்தப் பாடல் கூறுகிறது.
அறிவாலும், கற்பனையாலும் காண முடியாதவன் என்பதே மாலும் அயனும் காண முடியாதவன் என்பதன் சூக்ஷ்ம பொருள்.
இப்படி அறிவாலும், கற்பனையாலும் இறைவனை அறிய முயலாமல் அனுபவமாக பொல்லா மணியை புருவமத்தியில் யோகத்தால் அறிந்து புணர வேண்டும் என்பதே இந்தப் பாடலில் பொருள்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.