குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, September 30, 2012

அனைவரும் செய்யக்கூடிய எளிய காயத்ரி உபாசனை (பகுதி 05)


கிழ்வரும்  பதிவுகளை வாசித்துவிட்டு இந்த பதிவினை வாசிக்கவும். 

*********************************************************************************************************************
கடந்த பதிவில் நியாச முறை பற்றிப் பார்த்தோம்.  இந்தப் பதிவில் எங்கும் நிறைந்த பராசக்தியான காயத்ரி தேவியை நாம் வணங்கும் தேவியின் படத்திலோ அல்லது விளக்கொளியிலோ ஆவாஹனம் செய்து ஸ்தாபிக்கும் முறையினைப் பார்ப்போம். தெய்வ சக்தி எங்கும் நிறைந்திருந்தாலும் எமது மனதால் ஆகர்ஷிக்ககூடிய வண்ணம் ஒரிடத்தில் குவித்து அதன் மூலம் பயன் பெறும் செய்முறையே பூஜை என்பது. இதனை விரிவாக செய்வதற்கு பலமுறைகள் இருக்கின்றன, அவற்றை எல்லாராலும் செய்யமுடியாதென்பதால் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் அழகுதமிழில் தேவியின் பூஜைமுறையினை வகுத்து தந்துள்ளனர். இந்த தமிழ் பத்ததி கடந்த நாற்பது வருடங்களாக காயத்ரி சித்தர் முருகேசு ஸ்வாமிகளால் இலங்கை நுவரெலியா காயத்ரி பீடத்தில் இன்று வரை பூஜை முறையாக இருந்து வருகிறது. இதன் மூலம் சமஸ்கிருதம் அறியாதவர்களும் இலகுவாக தேவியின் அருளை பெற்றிருக்கிறார்கள். 

இந்த பூஜை பத்ததி ஆவாஹனம், ஸ்தாபனம், சந்தனம், குங்குமம், புஷ்பம், அஷதை, தாம்பூலம், பழம், தூபம், தீபம், நைவேத்யம், கர்ப்பூரம், பிரார்த்தனை, அர்ச்சனை, தியானம், ஜெபம், ஹோமம் என்ற 17 அங்க்கங்களுடைய பத்ததியாகும். இவற்றை முழுமையாக செய்வதற்கு கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் வரை ஆகும். இதனை தனிப்பட ஜெபசாதனை செய்துகொள்ள விரும்புபவர்கள் செய்துகொள்ளக்கூடிய வகையில் சுருக்கி இங்கு தருகிறோம். முழுமையாக காயத்ரி பூஜா பத்ததி தமிழில் கற்று பூஜை புரிய விரும்புபவர்களுக்குரிய விபரம் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் சுருக்கமாக பூஜை முறை வருமாறு; முதலாவது ஆவாஹனம், 

ஆவாஹனம்: கீழ்வரும் மந்திரத்தினை பக்தியுடன் கூறி, படத்தில், விளக்கு ஒளியில் காயத்ரியினை அழைப்பதாக பாவிக்கவும்

அந்தமும ஆதியில்லா, அருட்பெருஞ் ஜோதி மாயே, வந்திடாய் வந்திடாய், நீ வந்தெங்கள் பூஜையேற்பாய், 

ஸ்தாபனம்: அழைத்த காயத்ரி தேவியை படத்தில், விளக்கொளியில் உறைவதாக பாவிக்கவும்.

வந்தனை வந்தனை நீ வரதே வான்முகிலேயம்மா, சிந்தனை களித்துயிங்கே சிறப்புடன் வீற்றிருப்பாய். 

இதன் பின்னர் மேற்குறிப்பிட்ட உபசாரங்களை (சந்தனம், குங்குமம், புஷ்பம், அஷதை, தாம்பூலம், பழம், தூபம், தீபம், நைவேத்யம், கர்ப்பூரம், பிரார்த்தனை, அர்ச்சனை) விரும்பின் செய்யலாம். அல்லது நேரடியாக தியான ஸ்லோகத்தினை கூறி தேவியை மனத்திரையில் உருவகப்படுத்தலாம். 

தியானம்: கீழ்வரும் தியான ஸ்லோகத்தினை பக்தியுடன் மெல்லிய குரலில் கூறவும்.

முக்த வித்ரும ஹேம நீல தவளச் சாயைர் முகைஸ் த்ரீஷ்ணைர் யுக்தா மிந்து நிபத்த ரத்ன முகுடாம் தத்வார்த வர்ணாத்மிகாம், காய்த்ரீம் வரதா பயாங்குச கஸா பாஸம் கபாலம் குணம் ஸங்கம் சக்ர மதார விந்தயுகளம் ஹஸ்தைர் வஹந்தீம் பஜே

இதன் பொருள் சுருக்கமாக வருமாறு: முத்து, பவளம், பொன், நீலம், வெண்மை ஆகிய நிறங்களுடைய ஐந்து முகங்களுடனும், முக்கண்கள், சந்திரகலை பொருந்திய கிரீடம், தத்துவார்த்தத்தை விளக்கும் எழுத்துக்களின் வடிவாகவும், வர முத்திரை, அபய முத்திரை, அங்குசம், கசை, வெள்ளைக் கபாலம் (இது தற்போது வரும் காயத்ரி படங்களில் காணப்படுவதில்லை, அவற்றில் பாத்திரம் ஒன்று இருப்பதாகவே வரைகின்றனர்) பாசக்கையிறு, சங்கு, சக்ரம், இரண்டு தாமரைப்பூக்கள் ஆகியவற்றை கைகளில் தாங்குபவளான காயத்ரி தேவியினை வணங்குகிறேன். 

இதன் தத்வார்த்த விளக்கம் உயர்சாதனைகள் செய்ய விரும்புபவர்களுக்குரியது, அவற்றை வேறொரு பதிவில் தேவை வேண்டிவிளக்குவோம். 

இப்படி தேவியை மனத்திரையில் பிரத்யட்சமாக உண்மையில் இருப்பதாக பாவித்து அவளது வரம் தரும் கைகளில் இருந்து ஒளிவடிவாக அவளது அருட்கிரகணங்கள் உங்களில் வந்து சேர்வதாக பாவிக்கவும். இப்படி பாவித்தபடி ஜெபமாலையினை கையில் எடுத்து அதே பாவனையில் மந்திர ஜெபத்தினை தொடரவும். ஆரம்பத்தில் 09 முறை ஜெபத்தினை தொடங்கி வாரத்திற்கு ஒன்பது ஒன்பதாக கூட்டி வந்து அதாவது முதல் வாரம் 09. இரண்டாவது வாரம் 18, மூன்றாவது வாரம் 27 என்றவாறு 108 ஆக்கி தினசரி 108 செய்யும் படி பழகிக்கொள்ளுங்கள். இந்த பாவத்தில் ஜெபத்தினை முடித்தபின்னர் கடைசியில் கீழ்வரும் பிரார்தனையினை செய்யவும். 

பிரார்த்தனை: 
அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா;
ஆயுள் ஆரோக்கியம் வீரம் அசைந்திடா பக்தியன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா!

என பணிந்து தேவியிடமிருந்து வரமாக இவற்றை பெற்றுக்கொள்வதாக பாவிக்கவும். 

இதன் பின்னர் சிறிதளவு தீர்க்க சுவாசம் (ஆழமான மெதுவான மூச்சு) அல்லது நாடி சுத்திப்பிரணாயாமம் செய்துகொள்ளவும். 

இதன் பின்னர் தீர்த்தப்பாத்திரத்தில் உள்ள உத்தரணியில் நீரை வலது கையில் எடுத்து தேவியின் பாதத்தில் " எனது உபாசனையில் ஏதும் குறைகள் இருந்தால், ஜெகன்மாதாவான நீ சிறுபிள்ளையாகிய எனது பிழைகளை பொருத்தருளி எனது பிரார்த்தனையினை நிறைவேற்று தாயே' என மானசீகமாக பிரார்த்திது நீரை கீழே விடவும். இந்த செயன்முறை கட்டாயம் செய்யவேண்டிய ஒன்றாகும். 

இதுவரை ஐந்து பதிவுகளாக காயத்ரி உபாசனையினை எளிய முறையில் செய்யக்கூடிய முறையினை விளக்கியுள்ளோம். இதனை வாசித்தவர்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும் என்றாலும் நேரடியாக கற்காமல் எப்படிச் செய்வது என்ற மனத்தடங்கல் இருப்பதை நாம் உணர்ந்துள்ளோம். இதனை தீர்ப்பதற்கு இரண்டு வழிகளில் நாம் உங்களுக்கு உதவ முன்வந்துள்ளோம். 

முதலாவது: நீங்கள் இலங்கையில் வசிப்பவராக இருந்தால் மாதாந்தம் பௌர்ணமி தினங்களிலும், வாரந்தம் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நுவரெலியா காயத்ரி பீடத்தில் இந்தப்பூஜை முறையின் முழுமையான பத்ததி தமிழில் நடாத்தப்படுகிறது. ஒருமுறை சென்று நேரில் பங்கு பெற்றி கற்றுக்கொள்ளலாம். அங்கு காயத்ரி தேவியின் விரிவான தமிழ் பூஜைப் பத்ததி அச்சிட்டும், காயத்ரி சித்தரின் குரலிலும் சீ.டீக்களாக தருவார்கள். அவற்றை வாங்கி பலமுறை கேட்டு நீங்களே கற்றுக்கொள்ளலாம். பூஜையில் வத்த காயத்ரி படம் ஒன்றினை வாங்கிவந்து உங்கள் உபாசனையினை தொடரலாம். 
இரண்டாவது: நீங்கள் வெளி நாடுகளில் வசிப்பவராக இருந்தால் காயத்ரி பீடத்தினை தொடர்பு கொண்டு காயத்ரி உபாசனா பத்ததி நூலையும், காயத்ரி சித்தரின் குரலில் உள்ள பூஜை சீ.டி ஒன்றினையும் அனுப்பும்படி கேட்டுக்கொண்டால் அனுப்பி வைப்பார்கள், அவற்றை பெற்று உங்கள் உபாசனையினை தொடரலாம். 

மேற்கூறிய தொடர்புகளுக்கு,
திரு. ச, சந்திரமோகன்
நிர்வாக அறங்காவலர்
ஸ்ரீ காயத்ரி பீடம் இண்டர் நஷனல் ட்ரஸ்ட்
82, லேடி மக்கலம்ஸ் ட்ரைவ்
நுவரெலியா.
தொலைபேசி:+94-52-2222609
அலைபேசி: +94-773249554
ஈமெயில்: srigayathripeetam@gmail.com  

முக்கிய குறிப்பு: எமக்கும் காயத்ரி பீடத்திற்கும் நிர்வாக ரீதியாக, சட்ட ரீதியாக எதுவித தொடர்பும் இல்லை. காயத்ரி உபாசனையினை தமிழில் செய்வதற்குரிய வளங்களை, முறைகளை, தகவல்களை வாசகர்களுக்கு அடையாளம் காட்டுவதே இந்த தகவலின் நோக்கம், 

இந்த தகவல்களால் ஆர்வமுடைய யாராவது பயன் பெறுவார்கள் என உறுதியாக நம்புகிறோம். 

ஸத் குருபாதம் போற்றி!

Saturday, September 29, 2012

அனைவரும் செய்யக்கூடிய எளிய காயத்ரி உபாசனை (பகுதி 04)


சென்ற பகுதிகளில் முறையே அறிமுகம், குருவணக்கத்தின் முக்கியத்துவமும் செயன்முறையும், பிரணாயாமத்தின் முக்கியத்துவம் ஆகியன பற்றி விரிவாகப் பார்த்தோம். இந்தப் பதிவில் காயத்ரி மந்திரத்தின் நியாச முறையும் அதன் அவசியம் பற்றியும் பார்ப்போம். 

முந்தைய பதிவுகளைப் பார்க்க கீழே அழுத்தவும்;

நியாசம் என்றால் வைத்தல் எனப் பொருள் படும். அதாவது ஒரு பொருளை/சக்தியை  குறித்த இடத்தில் வைக்கும் செயன்முறையே நியாசம் எனப்படும். மந்திர சாதனையில் நியாசம் முதன்மையான ஒன்றாகும். ஒரு மந்திரத்திற்கு ரிஷி, சந்தஸ், தேவதா, பீஜம், சக்தி, கீலகம், நியாசம் என ஏழுபாகங்கள் காணப்படும். இவற்றைப்பற்றி விரிவாக வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். இங்கு நியாசத்தின் அடிப்படை பற்றிப் பார்ப்போம். நியாசம் என்பது தெய்வ சக்திகளை உடலில் வைக்கும் செயன்முறையாகும். அதாவது ஜெபிக்கப்படும் மந்திரத்தினை ஆறு பகுதிகளாக பகுத்து அதனை உடலில் ஒவ்வொரு இடத்தில் வைக்கும் செயல் முறையே நியாசம் எனப்படும். நியாசங்கள் பலவகை உண்டு. மந்திர சாதனை செய்பவர்களுக்கு அதன் விபரங்கள் நன் கு அறிவர். இங்கு குறிப்பாக மூன்று நியாசங்களை கூறுவோம். 

முதலாவது: ரிஷ்யாதி நியாசம், இது மந்திரத்தின ரிஷி, தேவதை, அளவு என்பவற்றினை உடலில் பதித்து சாதனையின் நோக்கத்தினை உடல் முழுவதும் பதிப்பிக்கும் செயன்முறையாகும். 

இரண்டாவது: கர நியாசம், அதாவது கைகளில் தெய்வ சக்தியினை இருத்தி விழிப்பித்தல் எனப்பொருள்படும். இது இருகரங்களிலும் உள்ள ஐந்து விரல்களும் உள்ளங்கையும் சேர்த்த ஆறு அங்கங்க்களில் செய்யப்படும். இதனால் குறித்த மந்திரத்தின் தெய்வ சக்தி கைகளில் விழிப்படைந்து உடலில் ஆகர்ஷிக்கத்தொடங்கும். அக்யுபிரஷர், வர்மம் தெரிந்தவர்கள் உடலில் பிராண ஓட்ட செயன்முறையினை அறிவர். கைகளில் அனைத்து அங்கங்க்களுக்குமான பிராண சக்தி செலுத்தும் புள்ளிகள் உள்ளன. அவற்றில் தெய்வசக்தியினை விழிப்பிக்க உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பிராண சக்தியினூடு தெய்வ சக்தி செலுத்தப்படும். 

அடுத்தது: ஹ்ருதயாதி நியாசம், இது ஹ்ருதயம், தலை உச்சி, பிடரி, தோற்பட்டைகள் இரண்டும், மூன்று கண்கள் (வலது, இடது, நெற்றிக்கண்), உடலைச் சூழ கவசமாக என செய்யவேண்டும். இந்த இடங்கள் சூஷ்ம சரீரத்தின் முக்கியமான சக்கரங்களை இணைக்கும் இடங்களாகும். இவை முறையே அநாகதம், சகஸ்ராரம், பிடரிச் சக்கரம் (பிராண அலைவேகத்தினை கட்டுப்படுத்தி பரிணாமத்தினை துரிதப்படுத்தும் சக்கரம் அமைந்துள்ளது) விசுத்தி சக்கரம், ஆக்ஞா சக்கரம் ஆகிய உயர் பரிணாமச் சக்கரங்களில் உள்ள இடங்களாகும், இந்த இடங்களில் தெய்வ சக்தியினை பதிப்பிப்பதால் மனிதனது பரிணாமம் தெய்வ பரிணாமத்தினை நோக்கி முன்னேறும். 

முதலாவது கர நியாசம் ஸ்தூல உடல் அங்கங்களுக்கு தெய்வ சக்தியினையும் ஹ்ருதயாதி நியாசங்கள் சூஷ்ம உடல் சக்கரங்களிலும் தெய்வ சக்தி பதிப்பிக்கும் செயன்முறையாகும். அன்பர்களே இப்போது உங்களுக்கு இவற்றினை செய்யவேண்டிய அவசியம் பற்றி விரிவாக விளங்க்கியிருக்கும். இது பற்றி விரிவாக விளக்க வேண்டுமானால் பல பக்கங்கள் எழுதவேண்டி இருக்கும், அவற்றை வாசித்து தெரிந்துகொள்வதை விட அனுபவத்தில் தெரிந்துகொள்வதே சிறந்த வழி ஆதலால் விளக்கங்களை இத்துடன் நிறுத்தி செயன்முறைக்குச் செல்கிறோம். 

இந்த செயன்முறைக்குரிய மந்திரங்கள் வருமாறு:

ஆசமனம்: வலது உள்ளங்க்கையில் நீர் விட்டு ஒவ்வொரு மந்திரமும் சொல்லும் போது உறிஞ்சிக் குடிக்கவும். விரல்களைப்பிரித்து ஆட்காட்டி விரலை உயர்த்தி மற்றைய விரலை தாழ்த்தி வைக்கவும். 
 • ஓம் ஸ்ரீ ஜகன் மாத்ரே நமஹ
 • ஓம் ஸ்ரீ பராம்பிகாயை நமஹ
 • ஓம் ஸ்ரீ பராஸக்த்யை நமஹ

சங்கல்பம் அல்லது வினியோகம்: ஒவ்வொரு மந்திரமும் ஒவ்வொரு காரிய சித்தி வேண்டி செய்யப்படுவதாக இருக்கும், அதனை ரிஷி, சந்தஸ், தேவதா, பீஜம், சக்தி, கீலகம் ஆகியவற்றுடன் இணைத்து கூறும் பகுதி விநியோகம் எனப்படும். காயத்ரி மந்திரத்தின் விநியோக பகுதி கீழ்வருமாறு; 

தீர்த்தப்பாத்திரத்தில் உள்ள உத்தரணியில் நீரை எடுத்து வலது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு கீழ்வரும் மந்திரத்தினைச் சொல்லி கீழே விட்டுவிடவும். 

ஓம் அஸ்யஸ்ரீ காயத்ரி மஹா மந்திரஸ்ய விஸ்வாமித்திர ரிஷிஹி தேவி காயத்ரி சந்த; ஸவிதா தேவதா ஜபோபாஸனே வினியோக

ரிஷியாதி நியாசம்: வலது கைவிரல்களை நீரில் தொட்டுவிட்டும் கிழே உள்ள மந்திரங்களை சொல்லி அந்தந்த அங்க்கங்களுக்கு நடுவிரல் மோதிரவிரல் சேர்த்து தொடவும்
 • ஓம் விஸ்வாமித்திர ரிஷியே நம - தலை
 • ஓம் காயத்ரீ சந்தஸே நம - முகம்
 • ஓம் ஸவிது தேவதாய நம - இருதயம்
 • ஓம் ஜபோபாஸனே விநியோகாய நம - உடல் முழுவதும். 

கர நியாசம்: 
 • ஓம் தத்ஸவிதுர் ப்ரஹ்மனே - அங்குஷாடாப்யாம் நம - இரு கை ஆள்காட்டி விரல்களால் பெருவிரலின் அடியிலிருந்து முனைவரை தடவவும்
 • ஓம் வரேண்யம் விஷ்ணவே - தர்ஜனீப்யாம் நம - இருகை பெருவிரலையும் ஆட்காட்டி விரல்களில் அடியிலிருந்து நுனிவரை தடவவும். 
 • ஓம் பர்கோதேவஸ்ய ருத்ராய - மத்யமாப்யாம் நம = இரு கை பெருவிரலையும் நடு விரல்களின் அடியிலிருந்து நுனிவரை தடவவும்
 • ஓம் தீமஹி ஈஸ்வராய - அநாமிகாப்யாம் நம - பெருவிரல்களால் மோதிரவிரல் அடியிலிருந்து நுனிவரை
 • ஓம் தியோ யோன - ஸதாஸிவாய - கனிஷ்டிகாப்யாம் நம - பெருவிரல்களால் அடியிலிருந்து நுனிவரை
 • ஓம் ப்ரசோதயாத் - ஸர்வாத்மனே - கரதல கரப்ருஷ்டாப்யாம் நம - இரு உள்ளங்கைகளையும் சேர்த்து தேய்த்து இரு புறங்கைகளையும் சேர்த்து தேய்க்கவும். 

ஷடங்க நியாசம் 
 • ஓம் தத்ஸவிதுர் ப்ரஹ்மனே - ஹ்ருதயாய நம - வலது கைவிரல்களால் இருதயத்தை தொடவும்
 • ஓம் வரேண்யம் விஷ்ணவே - ஸிரசே ஸ்வாஹா - வலதுகைவிரல்களை மடக்கி முன் தலையினை தொடவும்.
 • ஓம் பர்கோதேவஸ்ய ருத்ராய - ஸிகாய வஷட் - மேலே மடக்கிய முட்டியின் பெருவிரலை நீட்டி உச்சந்தலையினை தொடவும். 
 • ஓம் தீமஹி ஈஸ்வராய - கவசாய ஹும் - வலது கையால் இடது தோளையும் இடது கையால் வலது தோளையும் தொடவும். 
 • ஓம் தியோ யோன ஸதாஸிவாய - நேத்திரத்ராய வௌஷட் - வலது கை பெருவிரலால் வலது கண்ணையும் நடுவிரலால் இடது கண்ணையும், ஆட்காட்டி விரலால் நெற்றிக்கண்ணையும் தொடவும். 
 • ஓம் ப்ரசோதயாத் ஸர்வாத்மனே - அஸ்திரய பட் - இரு உள்ளங்க்கைகளாலும் தாளம் போடுவது போல் தட்டவும். 

இதுவே காயத்ரி மந்திரத்திற்கான நியாச முறை, மேலே கூறிய விளக்கங்களை நன் கு மனதில் பதிவித்துக்கொண்டு மந்திரங்களை மனனம் செய்து, குறித்த பாவனையில் செய்துவர உங்கள் சூஷ்ம உடலிலும், ஸ்தூல உடலிலும் காயத்ரி மந்திர சக்தி விழிப்படைய ஆரம்பிக்கும். 

அடுத்த பகுதியில் தேவியை ஆவாஹனம் செய்யும் மந்திரத்தினை தமிழிலும், தியான மந்திரத்தின் விளக்கத்தினைப்பற்றியும் பார்ப்போம். 

ஸத்குரு பாதம் போற்றி!

Friday, September 28, 2012

சூஷ்மதிருஷ்டி சாதகன் பெறும் ஆற்றல்கள் (பகுதி 07)


சூஷ்ம திருஷ்டி பற்றி முன்னைய பதிவுகளில் விளக்கப்பட்டுள்ளது. அவற்றைப் படிக்க கீழ்வரும் பகுதிகளைப் பார்க்கவும். 
பகுதி 06

இந்தபதிவில் சூஷ்மதிருஷ்டி சாதகன் பெறும் ஆற்றல்கள் பற்றிப் பார்ப்போம். 

சூஷ்மசாதனையில் சித்திபெற்ற மாணவன் முதலில் பெறும் ஆற்றல் ஆகாயப்பார்வை எனப்படும். இது சூஷ்ம கண்களால் பார்க்கப்படும் பொருட்களில், இடங்களில் வெறுமையாக வேறும் கண்ணிற்கு தோற்றமளிக்கும் இடங்கள் கூட புகை மண்டலங்களாக காட்சி அளிக்கத்தொடங்கும். பௌதீகப்பொருட்களை சூழ தடிப்பான ஒரு மண்டலம் இருக்கக்காண்பான். உதாரணமாக ஒருவரை நீங்கள் சூஷ்ம திருஷ்டியில் உருவகப்படுத்தும் போது முதலில் அவரது பௌதீக உருவம் மறைந்து படிப்படியாக அவரது பிராண சரீரம் தெரிய ஆரம்பிக்கும். அதை மேலும் ஏகாக்கிரமாக பார்க்கும் போது மேலும் அதன் தன்மைகள் பற்றிதெரிய வரும். இப்படி எந்தப்பொருளினதும் சூஷ்ம பிராண சரீரத்தினை காணும் ஆற்றல் வரும். இது சூஷ்ம திருஷ்டி சாதகன் பெறும் முதலாவது ஆற்றலாகும். இதன் படி சூஷ்ம உலகில் வாழும் தேவதைகள், இறந்த உடலைச் சூழ உள்ள ஆவிகள் என்பனவும் அவனது காட்சிக்கு தெரியும். 

அடுத்த ஆற்றல் தூரத்தில் உள்ள பொருட்களை உருவகப்படுத்தும் போது அவை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மிக அருகில் கண்களால் காணும் ஆற்றல் வரும். அதாவது தூரதிருஷ்டி கண்ணாடி - பைனார்குலர் மூலம் காணுவது போல் காட்சிகள் தெரியும். அணுக்களின் அசைவும் தெரியும். இதுவும் சூஷ்ம திருஷ்டி சாதகன் பெறும் ஒரு ஆற்றலாகும். 

அடுத்த ஆற்றல் பிராண உலகத்தினையும் மானச உலகத்தினையும் காணும் ஆற்றலாகும். இந்த ஆற்றலைப் பெற்றுவிட்டால் தேவருலகில் உள்ள ஆன்மாக்களுடன், தேவதைகளுடன் நேருக்கும் நேர் தொடர்பு கொள்ளும் ஆற்றலை சாதகன் பெறுவான். இப்படி பிராண மானச உலகங்களை காணும் ஆற்றல் பெற்றவர்களே பிரபஞ்ச பேரேடான ஆகாய மனத்துடன் தொடர்புகொள்ளும் ஆற்றலைப் பெறுவான். குறிப்பாக மானச உலகினை கண்டு அதில் குறித்த ஒருவரை ஏகாக்கிரம் செய்து அவரது கடந்த காலத்தினை அறியவேண்டும் என்று சகஸ்ரார ஜோதியினை செலுத்த அவரது கடந்த காலம், கடந்த பிறவி வரை திரைப்படக்காட்சி போல் தெரிய ஆரம்பிக்கும். 

இதைப்போல் எதிர்காலத்தினையும் அறிந்து கொள்ளலாம், இதுவே திரிகால ஞானம் எனப்படும் சித்தியாகும். திரிகாலஞானம் சூஷ்ம திருஷ்டியின் முன்னேறிய சாதனையாகும். 

இதைப்போல் கிரகங்களின் அமைப்பும் செயற்பாடு என பலவிடயங்களை சாதகன் தனது குருமூலமும் சிந்தித்தறிந்தும் தெரிந்து கொள்ளலாம். 

அடுத்த பதிவில் திரிகால ஞான சாதனை எப்படி செயற்படுகிறது என்பதனை சாதனை முறையுடன் பார்ப்போம். 

Thursday, September 27, 2012

அனைவரும் செய்யக்கூடிய எளிய காயத்ரி உபாசனை (பகுதி 03)


சென்ற பதிவில் குருவணக்கம் பற்றிப் பார்த்தோம், இந்தப்பதிவில் பிரணாயமத்தின் அவசியமும் செய்முறையினைப் பற்றியும் பார்ப்போம்.

காயத்ரி உபாசனையில் பிரணாயாமத்தின் முக்கியத்துவம்

காயத்ரி என்பதே பிராணனை காப்பாற்றும் உபாசனைதான். இந்த விளக்கமே பிரணாயாமத்தின் அவசியத்தினை விளக்கும். எந்த உபாசனையாக இருந்தாலும் மனதிலும், பிராணனிலும் செயற்பட வேண்டும். பிராண ஓட்டம் சரியாக இருந்தால் மட்டுமே மந்திர அலைகளால் உருவாகும் தெய்வ சக்தி சூஷ்ம உடலில் சேமித்து வைக்கப்படும். இதனால் பிராணனை ஒழுங்கு படுத்துதல் மிகமுக்கியமான ஒரு அங்கமாகும். பிரணாயாமம் என்றவுடன் பலவாறான மூச்சுப்பயிற்சி என்று அவசரப்பட்டு முயற்சிக்க ஆரம்பித்து விடாதீர்கள். உபாசனையில் பிரணாயமத்தின் அடிப்படை நோக்கத்தினை புரிந்து கொண்டால் பயிற்சி இலகுவாகிவிடும்.

பிரணாயாமத்தினை இருவகையான சாதகர்களை மனதில் கொண்டு கீழ்வரும் பயிற்சிகளை கூறுகிறோம்.

முதலாவது பிரணாயாம பயிற்சியில் நன்கு தேர்ச்சிபெற்ற, கும்பகப்பிரணாயம் கைவந்த சாதகர்கள். இவர்கள் மூன்று தடவைகள் கும்பகப்பிரணாயாமம் செய்து இந்தப்பயிற்சியினை பூர்த்தி செய்யலாம்.

மற்றையவர்கள் பிரணாயாம பயிற்சியில் அதிகம் பரிட்சயமில்லாதவர்கள், இவர்கள் முதுகெலும்பினை நேராக வளையாமல்  நுரையீரல் முழுமையாக நிரம்பும் வண்ணம் மெதுவாக மூச்சினை இழுத்து சில நொடிகள் மாத்திரம் மூச்சினை நிறுத்தி (02-03 செக்கன்) மெதுவாக விடவும். இப்படி 05 - 10 தடவைகள் மெதுவாக செய்து மூச்சு சீராக செல்லத்தொடங்கிய பின்னர் அதே நிலையில் இருந்து உபாசனையின் அடுத்த பகுதியினை செய்யவும்.

இங்கு சாதகர்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விடயம் பிராணனின் ஓட்டமே மனதின் ஓட்டம் , அது ஒருங்கிணைக்கப் பட்டால் மாத்திரமே ஜெபசக்தி மனதில் ஆகர்ஷிக்கப்படும். ஆகவே ஜெப சாதனைக்கு முன்னர் பிராணனை ஒழுங்குபடுத்த இந்த எளிய சாதனையினை செய்து வாருங்கள். 

அடுத்த பதிவில் உபாசனையின் அடுத்த அங்கமான காயத்ரி நியாசம் பற்றி பார்ப்போம். 

ஸத்குருபாதம் போற்றி

Wednesday, September 26, 2012

அனைவரும் செய்யக்கூடிய எளிய காயத்ரி உபாசனை (பகுதி 02)


சென்ற பகுதியில் இந்த எளிய காயத்ரி உபாசனையின் அங்கங்களைப் பார்த்தோம். இந்தப்பதிவில் அவை ஒவ்வொன்றினதும் விரிவான விளக்கத்தினையும் செய்முறையினையும் பார்ப்போம். இந்த பதிவில் முதலாவது அங்கம் குருவணக்கம்;

குருவணக்கம்: 

குருதத்துவம் பற்றி எமது மற்றைய பதிவுகளில் படித்தறியலாம். உபாசனையில் குருவணக்கத்தின் அவசியம் யாதெனில் குருபரம்பரையினூடாகவே மந்திர சக்தி கடத்தப்பட்டு வருகிறது. அதாவது மந்திர சித்தி பெற்ற குருவுடன் நாம் சூட்சுமமாக தொடர்பினை ஏற்படுத்தி அந்த நிலையினை எம்மில் ஏற்படுத்திக்கொள்ளும் வழிமுறையே குருவணக்கம். உதாரணமாக பௌதீகவியலில் காணப்படும் அலைகளது செயற்பாட்டு தத்துவத்தின் மூலம் இதனை விளங்க்கி கொள்ளலாம். குரு தனது சாதனையின் மூலம் தனது சூஷ்ம உடலினை மந்திர சக்தியின் வடிவாக ஆக்கு வைத்திருப்பார். அவர் தனது சூஷ்ம உடலிலிருந்து எப்போதும் இந்த தெய்வ கதிர்களை வெளியிட்ட வண்ணம் இருப்பார். இது சக்தியினை வெளிப்படுத்தியவண்ணம் இருக்கும். நாம் அந்த சக்தியினை பெறும் உத்திதான் இந்த குருவணக்கம். அதாவது ஒருவகை டியூனிங்க் எனக்கூறலாம். இது சித்தர்களின் வழிமுறையில் சித்தி பெற்றவர்களின் மூலம் செய்யவேண்டியது. இனி செய்முறை;

செய்முறை: 
இந்த வலைப்பின்னல் மூலம் சாதனையினை தொடங்க விரும்புபவர்கள் கீழ்வரும் முறையில் தொடங்கலாம். இந்த குருவணக்கத்தில் முதல் பகுதி எமது வாழ்வில் நாம் அறிவு ஞானம் என்பவற்றில் முன்னேறி இந்த பூவுலகில் இன்பமாய் காரணமாய் இருந்த ஆரம்பகர்த்தாகளின் ஆசியினை பெறுவது. இரண்டாவது பகுதி குரு தத்துவத்தின் இலட்சணம் எமது மனதில் பதிவித்துக்கொள்ள பொருளறிந்து பாடப்படுகிறது. மூன்றாவது பகுதியிலுள்ள குருமார் இந்த சாதனைமுறைகளை உங்களுக்கு இந்த வலைப்பின்னலூடாக அறியத்தரும் குரு பரம்பரையினர். இவர்களது ஆசியும் வழிகாட்டலும் சரியான சூஷ்ம தொடர்பு இருந்தால் மட்டுமே சாதனையில் முன்னேற முடியும். நாங்காவது பகுதியில் உள்ள ரிஷிமார் இந்த மந்திரத்தின் சித்தி, சக்திகளை கட்டுப்படுத்துபவர்கள், ஜெபிக்கும் எல்லாருக்கும் அனைத்து ஆற்றல்களும் வந்து விடாது, தவறான வழியில் பயன்படுத்த நினைப்பவர்களை கட்டுப்படுத்தி, அனுபவங்கள் மூலம் நல்வழிப்படுத்தி படிப்படியாக உங்களில் காயத்ரி மந்திரசக்தியினை செயற்படுத்தும் அதிகாரிகள். இவர்களது ஆசிகள் மந்திர சித்தியிற்கு முதன்மையானது.

முதல் பகுதியில் கூறியது போல் உருவவழிபாடு செய்ய விரும்புபவர்களாக இருந்தால் சாதனா குருமார்களில் படங்களை எமக்கு மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு கேட்கலாம். அல்லது நீங்கள் சாதனையின் போது ஏற்றும் விளக்கிலேயே ஒளி ரூபமாக அனைவரையும் ஆவஹிக்கலாம். 

முதல் பகுதி:
 • ஓம் தாயே நமஹ அல்லது போற்றி - சாதகன் பெற்ற தாயினை நினைத்து அவரின் ஆசியினை மானசீகமாக பெறுவதாக பாவிக்கவும், பெற்ற தாயே ஒருவனின் முதல் குரு, 
 • ஓம் தந்தையே நமஹ அல்லது போற்றி -  தந்தையினை நினைத்து அவரின் ஆசியினை மானசீகமாக பெறுவதாக பாவிக்கவும், தகப்பன் இரண்டாவது குரு. 
 • ஓம் ஸத்குருவே நமஹ அல்லது போற்றி - உங்களை ஞானப்பாதையில் வழிகாட்டிய அனைத்து குருமாரையும் நினைத்து அவர்களின் மானசீக ஆசியினை பெறுவதாக பாவிக்கவும்.
இரண்டாவது பகுதி:
பின்னர் கீழ்வரும் குருமந்திரத்தினை ஒரு முறை கூறவும்
 • குரு ப்ரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வரஹ குரு சாஷ்ஷாத் பரப்பிரம்மம் தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ - இதன் பொருள் சுருக்கமாக குருவே பிரம்மா, விஷ்ணு, சிவ ஸ்வரூபமாக எனக்கு பிரத்தியட்சமாக இருப்பவர், அவரே பரப்பிரம்ம ஸ்வரூபம் இத்தகைய குருவை நான் வணங்குகிறேன். 
 • ஆனந்தம் ஆனந்தகரம் ப்ரசன்னம் ஞானஸ்வரூபம் நிஜபோத ரூபம் யோகேந்திர மீட்யம் பவரோஹ வைத்தியம் ஸ்ரீம் ஸத்குரும் நித்யம் அஹம் பஜாமி
என குருவின் சக்தி உங்கள் உடலில் மனதில் வந்து சேர்வதாக பாவிக்கவும். உங்களில் உள்ள பாவங்கள் 

மூன்றாவது பகுதி:
பின்னர் 
 • ஓம் காயத்ரி சித்தரே நமஹ - சூஷ்ம உடலில் இருந்து பூவுலகில் காயத்ரி சாதனை செய்பவர்களுக்கு வழிகாட்டி வரும் குரு
 • ஓம் கண்ணைய யோகீஸ்வரரே நமஹ 
 • ஓம் அகஸ்திய மகரிஷியே நமஹ - இந்த குருபரம்பரையின் ஆதிகுரு, கண்ணைய யோகீஸ்வரரின் குரு. 
நான்காவது பகுதி 
 • ஓம் விஸ்வாமித்திர மஹரிஷியே நமஹ - காயத்ரி மந்திரத்தினை முதலில் உணர்ந்து உலகம் பயன் பெறவேண்டும் என வழங்கியவர்
 • ஓம் வஷிஷ்ட மஹரிஷியே நமஹ - காயத்ரி மந்திரத்தின் சக்தி தகுந்த பக்கும் அற்றவர்களுக்கு செயற்படக்கூடாது என சாபம் வழங்க்கியவர்
 • ஓம் பிரம்மாவே நமஹ -  காயத்ரி மந்திரத்தின் சக்தி தகுந்த பக்கும் அற்றவர்களுக்கு செயற்படக்கூடாது என சாபம் வழங்க்கியவர்

ஆக அன்பர்களே தற்போது நீங்கள் இந்த எளியமுறை காயத்ரி உபாசனையில் நன்மையினை தவிர எதுவித தீங்க்கும் நிகழாது என்பதில் மனத்தெளிவு அடைந்திருப்பீர்கள். எனெனில் உங்களை சரியான வழியில் செலுத்த அனைத்து ஏற்பாடுகளையும் இந்த குருவணக்கத்தின் மூலம் சாதிக்கிறீர்கள். ஆதலால் கட்டாயம் இந்த முறையில் குருவணக்கம் செய்வது முக்கியமான ஒன்று.


அடுத்த பகுதியில் பிரணாயாமம் பற்றி பார்ப்போம்...

Tuesday, September 25, 2012

அனைவரும் செய்யக்கூடிய எளிய காயத்ரி உபாசனை -‍ (பகுதி 01)


காயத்ரி மந்திரத்தினை அனைவரும் மானசீகமாக எப்போது வேண்டுமானாலும் ஜெபிக்க முடியும், அதற்கு எந்த வித கட்டுப்பாடோ நிபந்தனைகளோ, புறச்சுத்த நிபந்தனையோ தேவையில்லை. ஆனால் குறித்த நேரத்தில் ஒழுங்குமுறையாக அனுதினமும் செய்துவருவதால் பெறும் நன்மைகள் ஏராளம். இது மனதினை ஒழுங்குபடுத்தி எமது அந்தக்கரணங்களை படிப்படியாக் சுத்தி செய்து கர்மாவினை வெல்லும் வழியில் செலுத்தும். பலரும் பூஜை புனஸ்காரம்  என ஒரு கடமைக்காக இயந்திரத்தனமாக வழிபாடுகளை நடாத்தி வருவர் இதனால் எந்தவித பயனும் கிடைப்பதில்லை.

தெய்வ உபாசனை என்பது எமது உணர்வு மனத்தினை சுத்திசெய்து அந்த தெய்வத்தின் குணங்களை எம்மில் உருவாக்கும் ஒரு சாதனை ஆகும். அதாவது ஒவ்வொரு அங்கத்தினையும் ஆழ்மாக புரிந்து அந்த செயல்முறை எமது சூஷ்ம உடலில் எந்தவித மாற்றத்தினை செய்கிறது என்பதனை அறிந்து செய்யவேண்டும். இப்படிச் செய்யும் போதே உண்மையான மாற்றத்தினை, பலனினை அறிய முடியும்.

முதலில் காயத்ரி உபாசனை செய்யவிரும்பும் சாதகன் தனது மன அமைப்புக்கு உகந்த உபாசனை முறை எது என்பதினை சிந்தித்து உணர்ந்து கொள்ள வேண்டும். உபாசனை முறை இரு வகைப்படும். ரூப உபாசனை, அருவுருவ உபாசனை,

ரூப உபாசனை செய்யவிரும்புபவர்கள் பிராணபிரதிஷ்டை செய்த காயத்ரி தேவியின் படம் ஒன்றினை தமது சாதனா இடத்தில் பிரதிஷ்டை செய்துகொள்ளவேண்டும். அதற்கு மலர்கள் சாற்றி, ஊதுபத்தி, விளக்கேற்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

அருவுருவ உபாசனை செய்ய விரும்புவபர்கள் விளக்கு ஒன்றினை ஏற்றிக்கொண்டு அந்த சுடரில் ஆவாஹனம் செய்யலாம். அல்லது மனதில்சூரியன், மற்றைய சூட்சும ஒளியில் தேவியின் சக்தியினை ஆவஹிக்கலாம். சிலருக்கு உருவங்களை மனதில் காண்பதற்கு கடினமாக இருக்கும் அப்படிப்பட்டவர்கள் இந்த வித உபாசனையினை செய்யலாம்.

அதிகாலையே உபாசனைக்கு சிறந்த நேரம், வசதிப்படாவிட்டால் சூரிய அஸ்தமன நேரத்திலும் செய்யலாம், முன்னர் சாதனா ஒழுக்க பகுதியில் கூறப்பட்ட விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

இந்த எளிய உபாசனை கீழ்வரும் பகுதிகளை உடையது;
 • குரு வணக்கம்
 • பிரணாயாமம்
 • காயத்ரி நியாசம்
 • தேவி ஆவாஹனம்
 • தியானம்
 • ஜெபம்
 • ஜெபசமர்ப்பணமும் பிரார்த்தனையும்
இப்பொழுது இதனை வாசிக்கும் அன்பர்கள் எப்படி இவற்றையெல்லாம் செய்வது எமக்கு சமஸ்கிருதம் தெரியாதே! என்று உங்கள் மனம் கூறுவது தெரிகின்றது.

இதே கேள்வி எமக்கும் எமது குருதேவரை அண்டி காயத்ரி சாதனை பற்றி முதலில் கேட்டபொழுது ஏற்பட்டது, அதற்கு அவர் (காயத்ரி சித்தர்) அளித்த பதில் "காயத்ரி தேவி எல்லா அறிவுகளினதும் தாய், அவளை வழிபட மொழி ஒரு தடையில்லை, எந்த மொழியிலும் வழிபடலாம், உபாசனையில் தெய்வத்துடன் அன்பை வெளிப்படுத்தும் பகுதிகளை தமிழிலும், மந்திரசக்தி மூலம் தெய்வ சக்தியை கவரவேண்டிய இடத்தில் சம்ஸ்கிருத மந்திரங்களையும் பயன்படுத்தலாம், இதனால் எந்த குறையும் வராது, மந்திரங்களை சமஸ்கிருதத்திலேயே பயன்படுத்த வேண்டியதன் காரணம் அவற்றின் ஒலியமைப்பும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அவை தொடர்ச்சியாக ஜெபிக்கப்பட்டு வருவதால் அதனை பயன்படுத்துபவர்களது ஆத்மசக்தியும் அதில் பதிப்பிக்கப்பட்டு வரும், அதனை நாமும் ஜெபிக்கும் போது அதன் சக்தி பன்மடங்காகும்" என விளக்கம் அளித்தார்.

இதன் படி இந்த உபாசனை முறையின் அங்கங்களும் தமிழிலேயே காணப்படும், மந்திரங்கள் மட்டும் சமஸ்கிருத ஒலியமைப்பில் காணப்படும். இந்த முறை அகஸ்திய மகரிஷியிடம் நேரில் வித்தை பயின்ற மஹாயோகி கண்ணைய யோகீஸ்வரரால் உருவாக்கப்பட்ட சித்தர் முறை பத்ததி. ஆகவே சமஸ்கிருதம் பற்றி நன்கு அறியாதவர்களும் காயத்ரி உபாசனையின் முழுமையான பலனைப் பெறலாம்.

அடுத்த பதிவில் உபாசனையின் அங்கங்கள் பற்றி பார்ப்போம்.

Monday, September 24, 2012

காயத்ரி சாதனையின் மூலம் தெய்வீக ஞானத்தினை அடையும் வழி

காயத்ரி மந்திரம் அறிவினை தூண்டி நல்வழியில் செலுத்தும் ஆற்றலைத்தருகின்றது என்பதனை மந்திரப் பொருளினை விளக்கும் போது கூறியுள்ளோம். இது அந்தக்கரணங்களான மனம், புத்தி, சித்த அகங்காரம் ஆகிய நான்கினிலும் தனது தெய்வ காந்த சக்தியின் மூலம் சத்வ குணத்தினை பாய்ச்சுகிறது. இதற்கு சாதகன் மந்திரப் பொருளினை ஜெபத்துடன் பாவனை மூலம் செய்து வரவேண்டும். அந்த முறை இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இப்படிச் செய்து வரும்போது அவனது விஞ்ஞானமய கோசத்தில் மனதுடனும், உடலுடனும் தொடர்புகொள்ள ஆரம்பிக்கிறது. சாதாரண மனிதரில் மனமு,ஆழ்மனமுமே செயற்படும். இது தமக்கு ஏற்பட்ட முன் அனுபவங்களின் படி முடிவெடுக்கும் தன்மை உடையது. இதனாலேயே துன்பம் ஏற்படுகிறது. ஆனால் மனதிலும் மேலான ஒன்று புத்தி, புத்தி எது சரி, எது பிழை என சரியாக முடிவெடுக்கும் தன்மை உடையது, ஆனால் பலர் புத்தியினை தமது மனதுடன் இணைப்பதில்லை. அதனாலேயே பலரும் துன்பத்தினை அனுபவிக்கின்றனர். பாவனையுடன் கூடிய காயத்ரி மந்திர ஜெபம் புத்தியினை மனதுடன் இணைக்கும்.

இதன் பயனாக மனம் நல்ல எண்ணங்களை ஆகர்ஷிக்க தொடங்கும். மனதின் செயல்முறை அறிந்தவர்களுக்கு தெரியும் எண்ணங்கள் அதனை ஒத்த சமஅலை வேகமுடைய எண்ணங்களை ஈர்க்கும் என்பது. அதனால் காயத்ரி மந்திர ஜெபத்துடன் தகுந்த பாவனையினை செய்து வந்தால் மனம் தெய்வ சக்தியினை ஈர்க்கும் தன்மை உண்டாகிவரும். இப்படி பலகாலம் மனம் தெய்வ சக்தியினை ஈர்த்து வர படிப்படியாக அது உடலிலும் செயற்பட ஆரம்பிக்கும். இந்த மாற்றங்கள் அந்தக்கரணங்களில் நடைபெறுவதால் உடனடியாக வெற்றுக்கண்களுக்கு தெரியாது. ஆனால் உங்கள் மனதில் ஏற்படும் எண்ணங்களின் தன்மை மாற்றங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மனிதன் முக்குணங்களால் ஆக்கப்பட்டவன் என்பதனை அறிந்திருப்பீர்கள், அதாவது சத்வம், ரஜோ, தமோ குணங்களே அவை. இந்த மூன்றின் அளவு வேறுபடுவதற்கேற்பவே ஒருவரது வாழ்க்கையின் தன்மை இருக்கும்.

அமைதி, ஆனந்தம், இறைசாதனையில் விருப்பம்,ஆன்ம ஞானவிழிப்பு என்பன சத்வ குணத்தின் அடையாளங்கள்.

போராட்டம், அதிகாரம், எப்போதும் தன்னை ஏதாவது வேலைகளி ஈடுபடுத்தியவண்ணம் இருத்தல், ஆணவம் என்பன ரஜோகுணத்தின் தன்மை.

தமோகுணத்தின் தன்மைகள் இவை சோம்பல், உற்சாகம் இன்மை, தன்னம்பிக்கை இன்மை, பயம் என்பன.

ஒருமனிதனில் இவை மூன்றும் கலந்தே இருக்கின்றன. இதன் அளவு வேறுபாட்டிற்கமைய ஒருவரின் ஆன்ம பரிணாமமுமிருக்கும். அதாவது சத்வகுண வளர்ச்சி அதிகம் ஏற்பட ஆன்மீகத்தில் தன்னை அறிந்து இறைவனை அறிய வேண்டும் என்ற விருப்பு ஏற்படும்.

ரஜோகுணம் அதிகரிக்க ஏதாவது வாழ்வில் சாதிக்கவேண்டும், தனது பெயரை நிறுத்தவேண்டும், நன்றாக உழைத்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படும்.

தமோகுணம் அதிகரிக்க எதையும் செய்ய இயலாம், எப்போதும் விரக்தியும், உலகமே துன்பமயமானதாக தோன்ற ஆரம்பிக்கும். இந்த நிலையில் இருப்பவர்கள் தம்மால் எதையும் செய்ய இயலாதவர்களாவே உணர்வார்கள்.

ஆகா ஆன்ம வளர்ச்சி என்பது இந்த குணங்களின் வளர்ச்சியுடனும் தொடர்புடையது. மனதில் உள்ள தமோ குணத்திலிருந்து வாழ்க்கையினை ரஜோ குணத்திற்கு கொண்டுவந்து, பின்பு சத்துவ குணமாக்கி பின் அந்த குணங்களிலிருந்தும் விடுபட்டு குணமற்ற ஜோதி ஸ்வரூபமான இறையினை அடைதலே இறுதி இலட்சியம்.

இதனை சாதிப்பதே காயத்ரி சாதனையின் முதல் படி, அதாவது நீங்கள் முக்குணங்களில் எது அதிகமாக இருந்தாலும் அந்த குணத்திலிருந்து அடுத்த குணத்திற்கு உங்களை தனது தெய்வ காந்த சகதியால் படிப்படியாக மாற்றும், இதனால் உங்கள் வாழ்வு பிரகாசமடையத் தொடங்கும்.

உதாரணமாக நீங்கள் பூஜை, சாதனை என்பவற்றை மட்டும் செய்துகொண்டு உலக காரியங்களான வேலை, உழைப்பு, குடும்பத்தினை புறக்கணித்து வருவீர்களானால் உங்களில் தகுந்த ரஜோகுண வளர்ச்சி இல்லை என்று அர்த்தம். அந்த நிலையில் காயத்ரி சதனை செய்தீர்களானால் அவற்றை சரி வர செய்யும் ரஜோகுண ஆற்றலைப் பெறுவீர்கள்.

அதுபோல் எப்போது உழைப்பு, பணம், பெயர்,புகழ் என மன நிம்மதி இன்றி உழைப்பவராக இருந்தால் காயத்ரி சாதனை செய்யத்தொடங்க சத்துவ வளர்ச்சியினை அதிகரிக்கும்.

அதுபோல் சோம்பித்திரிந்து ஒரு வேலையும்செய்யாமல் சதா தமோகுணத்தில் மூழ்கியிருந்தல் காயத்ரி சாதனை ரஜோகுண வளர்ச்சியினை ஏற்படுத்தும்.
இது எப்படி நடக்கிறது?

காயத்ரி மந்திரத்தின் ஒலி அமைப்பு பிரபஞ்ச ஞானத்துடன் (Cosmic Inteligence) தொடர்புடையது, அதாவது பிரபஞ்ச ஞானத்தினை மனித ஞானத்துடன் இணைக்கும் இணைப்பு பாலமே காயத்ரி மந்திரம். பிரபஞ்ச ஞானம் உங்களை எந்த பாதையில் செலுத்த வேண்டும் என அறிந்து அந்த வழியில் செலுத்தும்.

இத்தனை மகிமை உடைய காயத்ரி சாதனையினைப் பற்றி மேலும் சில குறிப்புகள் குருவருளால் பகிர்வோம்.
ஸத்குரு பாதம் போற்றி

சூஷ்ம பார்வையில் இச்சா சக்தியின் பயன்பாடு (பகுதி 06)


இந்த பதிவினை வாசிக்கும் முன் புரிதலுக்கு கீழ்வரும் பதிவுகளை கட்டாயம் வாசித்தபின் வாசிக்கவும்.


சென்ற பதிவுகளில் சூஷ்ம பார்வை சஹஸ்ரார கோளத்தில் உள்ள ஒளியாலும் ஆக்ஞா சக்கரத்தின் மீது செலுத்துவதால் சூஷ்ம பார்வை உண்டாகிறது என்பது பற்றிப் பார்த்தோம். இந்தப்பதிவில் இதனை எப்படி சாதிப்பது என்று பார்ப்போம். 

சகஸ்ரார ஒளியின் அலைவேகங்களின் வேற்றுமைதான் வெவ்வேறு உலகங்கள், மன உலகங்கள் என்பது சகஸ்ரார ஒளியலையின் அதிக வேகமுடைய உலகம், பிராண உலகம் என்றால் அலைவேகம் குறைந்த உலகம். ஆக இந்த ஒளியின் அலை வேகத்தினை கட்டுப்படுத்த வெவ்வேறு உலகங்களுடன் தொடர்பு கொள்ளும் ஆற்றல் ஏற்படும். இதை எப்படி சாதிப்பது. அதற்கு மனிதனிடம் காணப்படும் சாதனம் தன் இச்சாசக்தி (WILL POWER). 

இறைவன் இந்த உலகை தனது இச்சா சக்தியால் படைத்தான் என கேள்விப்படுகிறோம், இச்சித்தால் நினைப்பது கிடைக்கும் எனக் கூறுவார்கள். இதை பலர் தவறாக ஏக்கத்துடன் ஆசைப்படுவது எனப் பொருள் கொண்டு அதிகம் அதிகம் ஆக ஆசைப்பட்டி இறுதியில் ஒன்றுமே கிடைக்காமல் போகின்றனர். இச்சாசக்தி என்பது மனதில் எழும் எண்ண அலைகளை படிப்படியாக கட்டுப்படுத்தி, பதஞ்சலியார் கூறுவது போல் சித்த விருத்தி நிரோத நிலை அடைந்த பின்னர் மனதினை ஏகாக்ரப்படுத்தி ஒரு எண்ணத்தில் மாத்திரம் மனதினை இயங்கவைக்கும் நிலை. இது வார்த்தைகளில் இலகுவாக கூறப்பட்டாலும் கடுமையான பயிற்சியின் மூலம் அடையும் நிலை, ஆனால் சிரத்தையுடன் பயிற்சித்தால் யாரும் அடையக்கூடிய நிலை. இந்த நிலையில் எமது இச்சா சக்தியினை ஆக்ஞா கோளத்தில் நிறுத்தி பிராண உலகில் செலுத்தினால் பிராண உலகு காட்சிகள் மனத்திரையில் தெரியும், மன உலகில் செலுத்தினால் மன உலகு காட்சிகள் தெரியும். இந்த முறையின் மூலம் நீங்கள் அறிய வேண்டிய விடயங்களில் உங்கள் இச்சா சக்தியினை செலுத்தி அறிந்து கொள்ளலாம். 

அடுத்த பதிவில் சூஷ்ம திருஷ்டியின் வகைகள் பயன்பாடு பற்றி சிறிது பார்ப்போம்,

Sunday, September 23, 2012

காயத்ரி சாதனை மூலம் சாதகன் அடையும் நவ சித்திகள் (ஒன்பது அரிய ஆற்றல்கள்)

பெரும்பாலானோர் சித்திகள் என்றவுடன் வானில் பறத்தல், நீரில் மிதத்தல், உருவை மறைத்தல் என்பன மட்டுமே சித்தி என எண்ணிக்கொண்டுருக்கின்றனர். அதை விட மனித வாழ்க்கை இன்பமாக அமைய மனதினை பயன்படுத்தி மனிதன் அடைய வேண்டிய சித்திகள் பலது உள்ளது. அத்தகைய ஒன்பது ஆற்றல்களை காயத்ரி சாதனை சாதகனுக்கு கொடுக்கும்.
 1. வாழும் கலையும் வாழ்வின் நோக்கம் அறிதலும்: காயத்ரி மந்திர பாவனையால் மனம் அடையும் ஞானத்தின் பயனாக சாதகன் தனது வாழ்வினை தனக்கும் மற்றவற்களுக்கும் பயனுடையதாக்கி கொள்கிறான். தான் ஆன்மா என்பதனை அறிவதன் மூலம் மரணபயத்திலிருந்து விடுபடுகிறான். இதனால் இன்ப துன்பங்கள் அவனை பாவிக்காத நிலையினை அடைகிறான். இந்த நிலையால் மனம் ஒருமை அடைகிறது. இதனால் வாழ்வில் அவன் தனது முயற்சிகளை முழுமனதுடன் ஈடுபட்டு வெற்றி அடைகிறான்.
 2. பிராணசக்தியிற்கான கவசம்: பிராணசக்தியே ஒரு மனிதனின் உயிராற்றல். காயத்ரி என்பதன் பொருளே பிராணனை ரட்சிப்பது என்பதே. காயத்ரி சாதகனது பிராணன் காயத்ரி சாதனையினால் காப்பாற்றப்படுகிறது. பிராணனின் இழப்பிற்கு மனதின் தவறான நடவடிக்கைகளே காரணம். பிராணன் அதிகமாக சேமிக்கப்பட உடல் நோய்களில் இருந்து விடுபட ஆரம்பிக்கிறது.
 3. வாழ்வில் மேன்மை அடைதல்: காயத்ரி மந்திர ஜெபத்தினால் புத்திமயகோசம் மனதுடன் தொடர்புகொள்ள ஆரம்பிப்பதால் வாழ்வு அனைத்து விடயங்களிலும் மேன்மையினை அடைய ஆரம்பிக்கிறது. அதாவது எண்ணும் எண்ணம், செய்யும் செயல் சரியான வழியில் செல்வதால் மேன்மை அடைய ஆரம்பிக்கிறது.
 4. தூய்மை: அகத்தூய்மை, புறத்தூய்மை இரண்டும் ஏற்படுவதால் சாதகனை சூழ காந்த சக்தி தூய்மை அடைந்து அவனை அனைவரும் விரும்ப ஆரம்பிப்பர்.
 5. தெய்வீக பார்வை: இன்று உலகில் யாரைப்பார்த்தாலும் தீயதைப் பேசி, தீயதை நினைத்து, தீய செயலாகவே நடப்பதை கவனித்து வெருகிறோம். உலகம் என்பது ஒவ்வொருவருடைய மனமும் கட்டமைக்கப்பட்டிருக்கும் விதத்தின் பிரதிபலிப்பே, தீய எண்ணங்களை உணர்ந்தவர்களுக்கு தீயதாகவும், நல்ல எண்ணங்களுடையவர்களுக்கு நல்லதாகவும் உலகம் தோன்றும்.உண்மையில் உலகம் என்பது எமது ஆழ்மனதில் சேர்ந்த பதிவுகளில் பிரதிபலிப்பே, காயத்ரி சாதகனது மனம் தெய்வ சக்தியினால் நிரப்பப்படுவதால் உலகினை தெய்வ சக்தி நிறைந்த உலகாகவே காண்பான். இந்த ஆற்றலை காயத்ரி சாதனை தரும்.
 6. உயர்ந்த குணங்களும் பண்புகளும்: ஒரு மனிதனின் ஆளுமை என்பது அவனது பண்புகளாலேயே தீர்மானிக்கப்படுகிறது. காயத்ரி சாதகன் கீழ்வரும் பண்புகளை தனது காயத்ரி சாதனையினால் அடைகிறான். மனிதபிமானம், ஈகை, இனிய பேச்சு, நட்புடன் பழகல், நேர்மை, பொறுமை, பாராட்டும் குணம், கடின உழைப்பு போன்ற குணங்கள்.
 7. பகுத்தறியும் தன்மை: அதாவது எது நல்லது? எது கெட்டது? இதனைச் செய்தால் நனமை வருமா? இல்லையா? இது தேவையா? இல்லையா? இப்படியான ஆற்றல் இல்லாமையினாலேயே மனிதன் மனம் போன போக்கில் சென்று துன்பத்தில் விழுந்து கொள்கிறான், காயத்ரி சாதனை செய்பவனுக்கு பகுத்தறியும் தன்மை அதிகரிக்கும். இதுவே உண்மையான பகுத்தறிவு! காயத்ரி சதகனே உண்மையான பகுத்தறிவாளன்.
 8. சுயகட்டுப்பாடு: மனித உடமும், மனமும் பேராற்றலின் இருப்பிடம்,அதனை சரியான வழியில் பயன்படுத்த ஒரு ஒழுங்குமுறை தேவை. அந்த ஒழுங்குமுறையினை தருவது சுயகட்டுப்பாடு. காயத்ரி சாதகன் சுயகட்டுப்பட்டினை அடைவான்.
 9. சேவை புரியும் மனம்: இன்று பலரும் சேவை என்று மனிதனை கையேந்தும் பிச்சைக்கார்களாக, பச்சாதாபத்துடன் செய்து வருகிறார்கள். உண்மையான சேவை என்பது உதவி தேவைப்படும் நபரிற்கு நாம் செய்யும் உதவியால் அவர் தனது சொந்த முயற்சியில் உந்துதல் ஏற்பட்டு முன்னேற்றம் அடைய வைக்கும் உதவி. இத்தகைய உதவும் ஆற்றம் காயத்ரி சாதகனுக்கு ஏற்படும்.
இந்த ஒன்பது வகையான ஆற்றல் தனிமனிதனையும் சமூகத்தினையும் அமைதியான, ஆனந்தமான, ஆக்கப்பாதையில் இட்டுச் செல்லும்.

ஆக‌வே இந்த அரிய‌ சாத‌னையினை நீங்க‌ளும் ப‌ய‌ன்படுத்தி உங்க‌ள் வாழ்வினையும் சூழ‌ உள்ளோர் வாழ்வினையும் இன்ப‌பாதையில் இட்டுச் செல்ல‌ குருதேவ‌ரை பிரார்த்திக்கிறோம்.
ஸத்குரு பாத‌ம் போற்றி!

Saturday, September 22, 2012

வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்!


எமது பதிவுகளை தொடர்ந்து வாசித்துவரும் அன்பர்களுக்கு எமது வேலைப்பளு காரணமாக தொடர்ச்சியாக எழுத முடியாமல் போனமைக்கும் வருத்தத்தினை தெரிவித்துக்கொண்டு குருவருளால் உங்கள் எதிர்பார்ப்பினை சிறிதளவாவது பூர்த்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். 

இதுவரைகாலமும் யோகமார்க்கம், சித்தர்களது வித்தைகள் என்பவற்றிற்கு எமது கற்கையில் எமது மனதில் உண்டாகும் தெளிவுகளை நேரம் கிடைக்கும் போது எழுத்துருவேற்றி பதிவித்து வந்தோம். எது வித ஒழுங்குமுறையும் இருக்கவில்லை. சில பதிவுகள் அரைகுறையாக விடுபட்டும் உள்ளன. ஆதலால் குருவருளுடன் ஒரு சில எல்லைகளை வகுத்துள்ளோம். இனி வரும் ஒரு மாதகாலத்திற்கு அக்டோபர் 31 ம் திகதிவரையிலான காலப்பகுதியிற்கு ஒவ்வொரு நாளும் காலை 10.00 மணியளவில் ஒரு பதிவு பதிப்பிக்கும் படி கட்டுரைகளை ஒழுங்கு படுத்த எண்ணியுள்ளோம். செப்டெம்பர் 30 வரையிலான பதிவுகள் முற்றாக எழுதி வலையேற்றியாகி விட்டது, ப்ளாக்கர் தானியங்கியாக தினசரி 10.00 IST மணிக்குபதிப்பிக்கும். 

இந்தப்பதிவுகள் கீழ் வரும் விடயங்களை உள்ளடக்கி இருக்கும்; 

காயத்ரி சாதனை: அடுத்த மாதம் நவராத்ரியினை ஒட்டி எமது வலைப்பின்னலைப்படிப்பவர்கள் பயன் பெற எமது குருபரம்பரையில் பெற்ற காயத்ரி சாதனை நுணுக்கங்களை எதுவித பாகுபடின்றி அனைவரும் செய்யக்கூடிய விதத்தில் வெளியிட உள்ளோம். இதுவே நவராத்ரி முடியும் வரையிலான பெரும்பகுதியாக இருக்கும். 

சூஷ்ம திருஷ்டி பதிவுகள்: இதன் மிகுதி பகுதிகள் பதிவிக்கப்படும், கிட்டத்தட்ட 05 - 06 பதிவுகளில் இது முடியும். இது முடியும் தருவாயின் அடுத்த பதிவாக முன்னைய பதிவுகளில் விடுபட்ட ஞானகுரு, அகத்தியர் ஞானம் மற்றும் சிறு குறிப்புகள் பதிவுகள் முடிவுக்கப்படும். 

வாசகர்களே எம்மை எழுதவேண்டும் எனத்தூண்டுவது யாராவது ஒருவரவது இந்த எழுத்துக்களால் பயன்படுகிறார்கள் என்ற மனத்திருப்தியே! ஆதலால் வாசிக்கும் பதிவுகளுக்கு ஒருவரியிலாவது உங்கள் ஆவலை தெரியப்படுத்துங்கள், இது எம்மை மேலும் சிரத்தையுடன் எழுதத்தூண்டும். அந்த வகையில் சிரத்தையுடன் கருத்து தெரிவுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்! 

காயத்ரி மந்திர பாவனை தியானம்
சென்ற பதிவில் காயத்ரி மந்திரத்தின் பொருளை பாவனை மூலம் ஜெபிப்பவன் தெய்வ சக்தியினை ஆகர்ஷிக்கும் தன்மையினை பெறுவான எனப் பார்த்தோம், அதனை சாதிக்கும் பாவனையினை எப்படிச் செய்வது என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். கீழே தரப்பட்டுள்ள மூன்று பாவனைகளையும் காயத்ரி மந்திரத்தினை மனதில் ஜெபித்த வண்ணம் மனத்திரையின் கண்டு வரவேண்டும்.

முதலாவது பாவனை:
பிரணவ மந்திரமான ஓம் இன மூலம் குறிப்பிடப்படும் பிரம்மம் எனப்படும் எல்லாம் வல்ல இறைசக்தி எல்லா உலகிலும் பரந்து நீக்கமற நிறைந்துள்ளது. மனதில் பூர், புவ, ஸ்வ எனும் மூன்று உலகிலும் இறை சக்தி ஒளிவடிவாய் வியாபிப்பதை காணவும். இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவும் இறைசக்தியின் வடிவே, அனைத்திலும் இறைவனையே காண்கிறேன், என்னிடமுள்ள தீயசக்திகள் விலகி இறை சக்தி நிறைவதை உணர்கிறேன், இதன் மூலம் என்னை தொடர்பு கொள்ளும் அனைத்திலும் இறைசக்தி நிறைகின்றது, அதன் பயனாக இறைவனின் குணங்களான சந்தோஷம், அமைதி, ஆனந்தம், அழகு என்பன என்னை சூழ‌ நிறைவ‌தை உண‌ர்கிறேன்.


இந்த‌ப் பாவ‌னையினை 'ஓம் பூர் புவ‌ ஸ்வ‌' என்ற‌ வ‌ரியினை உச்ச‌ரித்து பாவிக்க‌வும்.

இர‌ண்டாவ‌து பாவ‌னை:
இந்த‌ (த‌த்) இறைச‌க்தி அதீத பிரகாசமான ஒளிச் சக்தி, அது அதி உயர்ந்த (வரேண்யம்) பாவங்கள் அற்ற (பர்கோ) தெய்வ சக்தி (தேவஸ்ய. இத்தகைய தெய்வ சக்தியினை நான் என்னுள் ஈர்த்து எனது ஆன்மா அத்தகைய சக்தியினை, குணத்தினை, வல்லமையினை அடைகிறது. இதனால் எனது அறிவு சுத்தமடைகிறது. தெய்வ குணங்களும் சக்திகளும் என்னுள் வளர்கின்றது, நான் தெய்வமாகவே மாறிவிட்டேன்.


இந்த‌ பாவ‌னையினை "த‌த் ஸ்விதுர் வ‌ரேண்ய‌ம் ப‌ர்கோ தேவ‌ஸ்ய‌ தீம‌ஹி" வ‌ரியினை உச்ச‌ரித்து பாவிக்க‌வும்.

மூன்றாவ‌து பாவனை: 
தெய்வ‌ ச‌க்தி எம‌து அறிவினை தூண்ட‌ட்டும், அத‌னால் பெறும் ஞான‌ம் எம்மை ச‌ரியான‌ வ‌ழியில் ந‌ட‌த்த‌ட்டும். எம‌து புத்தி, என‌து குடும்ப‌த்த‌வ‌ர‌து புத்தி, என்னைச் சார்ந்து வ‌ருப‌வ‌ர்க‌ள‌து புத்தி ஆகிய‌வ‌ற்றை இந்த‌ தெய்வ‌ ச‌க்தி தூய்மைப்ப‌டுத்தி அனைவ‌ரையும் ச‌ரியான‌ வ‌ழியில் ந‌டாத்த‌ட்டும். ச‌ரியான‌ ஞான‌த்தினைப் பெறுத‌லே உல‌கில் உண்மையான‌ இன்ப‌த்தினைப் பெறுவ‌த‌ற்கான‌ வ‌ழி, இத‌ன் ப‌ய‌னாக‌ பூவுல‌கிலேயே இன்ப‌ம‌யமான‌ வாழ்வினை பெறுகிறோம்.


இத‌னை 'தியோ யோ ந‌ ப்ர‌சோத‌யாத்" என்ற‌ வ‌ரியினை உச்ச‌ரிக்கும் போது பாவிக்க‌வும்.

இந்த‌ பாவ‌னைக‌ளை செய்யும் போது மெதுவாக‌ ம‌ன‌தில் அவ‌ற்றை உருவ‌க‌ப்ப‌டுத்து உண்மையிலேயே உல‌க‌ம் அப்ப‌டி மாறுவ‌தாக‌ பாவிக்க‌ வேண்டும்.

முத‌லாவ‌து பாவ‌னையினை செய்யும் போது இறைவ‌ன‌ மூன்று உல‌க‌ங்க‌ளான‌ பூமி, சொர்க்க‌ம், பாதாள‌ உல‌க‌ங்க‌ளில் இறைச‌க்தி ப‌ர‌வுவ‌தாக‌ பாவிக்க‌ வேண்டும். இந்த‌ உல‌க‌ங்க‌ளில் காண‌ப்ப‌டும் வெப்ப‌ம், ஒளி, ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள், ம‌ண், ஆகாய‌ம் என்ப‌வ‌ற்றில் இறைவ‌ன் நிறைந்துள்ள‌தாக‌ பாவிக்க‌ வேண்டும். இந்த‌ பிர‌ப‌ஞ்சமே இறை ச‌க்தியால் நிர‌ம்பி உள்ள‌தாக‌ பாவிக்க‌ வேண்டும். இறைவ‌ன‌து ம‌டியில் தான் இருப்ப‌தாக‌ பாவிக்க‌ வேண்டும். இந்த‌ நிலையில் த‌ன்னை எந்த தீய‌ ச‌க்திக‌ளும் பாதிக்காது என்ப‌த‌னை உண‌ர‌வேண்டும்.

இர‌ண்டாவ‌து பாவ‌னையில் த‌ன‌து இஷ்ட‌ தெய்வ‌ம் த‌ன‌து இத‌ய‌த்தில் இருப்ப‌த‌னை உண‌ர‌ வேண்டும். இஷ்ட‌ தெய்வ‌த்தினை விள‌க்கு சுட‌ராக‌ அல்ல‌து க‌ண‌ப‌தி, அம்பாள், இராம‌ன்,கிருஷ்ண‌ன் என‌ விரும்பிய‌ உருவில் பாவித்து இத‌ய‌த்தில் இருத்த‌ வேண்டும். காய‌த்ரி மாதாவின் உருவினை இருத்தி தியானிப்ப‌து மேலும் ப‌ய‌ன‌ளிக்கும். அது முழுமையான‌ தெய்வ‌ ச‌க்தி விழிப்பையும் ஞான‌த்தினையும் கொடுக்கும்.

மூன்றாவ‌து பாவ‌னையில் காய‌த்ரி மாதாவின் தெய்வ‌ ச‌க்தி எம‌து புத்தி உண‌ர்ச்சிக‌ளில் ப‌ர‌வி அவ‌ற்றை தெய்வ‌ ச‌க்தியுடைய‌தாக்குவ‌தாக‌ பாவிக்க‌ வேண்டும். இத‌னால் புத்தி ந‌ல்வ‌ழிப்ப‌ட்டு ச‌ரியான‌ வ‌ழியில் செல்ல‌ ஆர‌ம்பிக்கும். இத‌ன் ப‌ய‌னாக‌ வாழ்வின் பிர‌ச்ச‌னைக‌ளுக்கு ச‌ரியான‌ தீர்வினை காணும் ஆற்ற‌ல் உண்டாகும்.

இந்த‌ மூன்று பாவ‌னைக‌ளின‌தும் ப‌ல‌ன் சாத‌க‌ன் இந்த‌ சாத‌னை ஆர‌ம்பித்து சிறிது கால‌த்திலேயே எல்லாவித‌ தீய‌ எண்ண‌ங்க‌ளிலுமிருந்து விடுப‌ட்டு ந‌ற்காரிய‌ங்க‌ளில் த‌ன‌து ம‌ன‌தினை செலுத்த ஆர‌ம்பிப்பான். இத‌ன் மூல‌ம் அந்த‌ சாத‌க‌ன் இறைவ‌னை அடையும் பேரின்ப‌ பாதையில் இல‌குவாக‌ ப‌ய‌ணிக்க‌ ஆர‌ம்பிப்பான்.

Friday, September 21, 2012

காயத்ரி மந்திரத்தின் உள்ளார்ந்த பொருளும் தியான சாதனையும்

 
 
காயத்ரிமந்திரத்தினை சிலர் வெறும் சூரியனை நோக்கிய பிரார்த்தனை மந்திரமெனவே கருதி வருகின்றனர். உண்மையில் அது ஒளியான பரம்பொருளை குறிக்கும் பிரார்த்தனை, அத்துடன் பிரார்த்தனை மட்டுமல்ல அதன் சொல் அமைப்புகளும் ஒலியமைப்புகளும் மந்திர சாஸ்திரத்தின் மூலம் பிரபஞ்ச சக்தியின் ஒலிஅதிர்வுகளை ஜெபிப்பவர்கள் உடலிலும் மனதிலும் உருவாக்கும் வண்ணம் ரிஷிகள் ஒழுங்கமைத்திருக்கிறார்கள். ஆக அது பிரார்த்தனை மந்திரமாக இருக்கும் அதேவேளை பிரபஞ்ச மஹாசக்தியை ஆகர்ஷிக்கும் மந்திரமாகவும் இருக்கின்றது என்பது தனிச் சிறப்பு.
  
அதன் மூலக்கருத்து ஞானத்தினை அடைவதியே வலியுறுத்துகிறது, புத்தி ஞானத்தினை அடைந்தால் வாழ்க்கையின் எல்லாப்பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் ஆற்றல் உண்டாகின்றது. காயத்ரிமந்திரத்தின் மூலக்கருத்தும் அதை ஜெபிப்பதால் உண்டாகும் தெய்வ சக்தியும் இந்த ஆற்றலை சாதகனில் ஏற்படுத்துகிறது. ஆக இது ஒரு கண்மூடித்தனமான விளக்கமற்ற மத வழிபாடல்ல! மந்திர அலைகளால் உருவான சக்தி சாதகனின் மனப்பரிணாமத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தி ஞானத்தினை தந்து அதனூடாக சாதகனது வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் வழி முறையே காயத்ரி சாதனையாகும்.

இனி காயத்ரி மந்திரத்தினை பார்ப்போம்

ஓம் பூர் புவ ஸ்வஹ தத் ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந ப்ரசோதயாத்

இனி இவற்றின் உள்ளர்த்ததினைப் பார்ப்போம்;

 • ஓம்: பிரம்மம்
 • பூர்: பிராணன்
 • புவ: துன்ப‌த்தினை அழிக்கும் ச‌க்தி
 • ஸ்வ‌ஹ‌: இன்ப‌த்தினை த‌ரும் ச‌க்தி
 • த‌த்: அது
 • ஸ‌விது:சூரிய‌னைப் போன்று பிர‌காச‌மான‌
 • வ‌ரேண்ய‌ம்: சிற‌ந்த‌
 • ப‌ர்கோ: பாவ‌ங்க‌ளை அழிக்கும்
 • தேவ‌ஸ்ய‌:::  தெய்வ‌ ச‌க்தி
 • தீம‌ஹி: என்னுள் உறைய‌ட்டும்
 • தியோ: புத்தி
 • யோ: யார்?
 • ந‌:: எங்க‌ள்
 • ப்ர‌சோத‌யாத்: தூண்ட‌ட்டும்

சுருக்க‌மாக‌, எல்லாம் வ‌ல்ல‌ இறை ச‌க்தியே, பிர‌ப‌ஞ்ச‌த்தினை ப‌டைத்த‌ ம‌ஹாச‌க்தியே, எம‌து வாழ்விற்கு ஆதார‌மான‌ ச‌க்தி எதுவோ அது எம‌து துன்ப‌ங்க‌ளை நீக்கி, இன்ப‌த்தினை அளித்து அத‌னுடைய‌ தெய்வ‌ ச‌க்தி எங்க‌ளில் உறைந்து அத‌ன் மூல‌ம் எங்க‌ள் புத்தி தூண்ட‌ப்ப‌ட்டு ந‌ல்ல‌ வ‌ழியில் சென்று ச‌ரியான‌ ஞான‌த்தினை பெறுவோமாக‌ என‌ பொருள் ப‌டுகிற‌து.

எந்த‌ ஒரு ம‌னித‌ன் காய‌த்ரி மந்திர‌த்தினை ஜெபித்து இந்த‌ அர்த்த‌த்தினை ம‌ன‌தி பாவ‌னை மூல‌ம் நிலை நிறுத்துகிறானோ அவ‌ன் ப‌டிப்ப‌டியாக‌ இந்த‌ பிர‌ப‌ஞ்ச‌ ச‌க்தியினை த‌ன‌து மன‌திலும் உட‌லிலும் ஆக‌ர்ஷிக்கும் ஆற்ற‌லைப்பெறுகிறான்.

அடுத்த‌ ப‌திவில் ம‌ன‌த்திரையில் இந்த‌ ப‌வ‌னையினை எப்ப‌டி செய்வ‌து என்ப‌து ப‌ற்றி விரிவாக‌ப் பார்ப்போம்.

Thursday, September 20, 2012

காயத்ரி சாதனையின் போது கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கங்கள் (பகுதி 02)

பகுதி 01 இனை படிக்க இங்கே அழுத்தவும்

 • அனுஷ்டான சாதனையின் போது பிரம்மச்சரியம் இருத்தல் அவசியம், இல்லறத்தவர்கள் 15 நாட்களுக்கொருமுறை இல்லறத்தில் ஈடுபடலாம்.
 • கீழ்வரும் ஒழுக்கங்களை கடைப்பிடிப்பது மனதினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உதவும்; சாத்னை காலத்தில் மற்றவரைக்கொண்டு சாதகன் தலைமுடி வெட்டிக்கொள்வது, சவரம் செய்துகொள்வதை தவிர்க்க வேண்டும், தானகவே சவரம் செய்துகொள்ளலாம்; வெறும் தரையில் நித்திரை செய்ய வேண்டும்; உணவு முடியுமானால் ஒரு வேளை மட்டும் உண்ண வேண்டும், மற்ற வேளைகளில் பழங்கள், பால் என்பன உண்ணலாம்; தனது வேலைகளை தனே செய்து கொள்ளவேண்டும், மற்றவர்கள சாதகனது உடலை, உடைகளை தொடுவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும். இவை மிக மிக முக்கியமானவை அன்று, ஆனால் கடைப்பிடிதால் உடலிலும் மனதிலும் ஜெபசக்தியினை அதிகளவு சேர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும்.
 • ஜெபமாலையின் நடுவில் மேரு மணி இருக்கும், ஜெபம் பூர்த்தியாகும் போது அந்த மணியினை கடந்து செல்லக்கூடாது. மாலையினை திருப்பி அடுத்த மாலை ஜெபத்தினை செய்ய வேண்டும். ஒவ்வொரு ஜெப முடிவிலும் மேரு மணியினை கண்களிலும் நெற்றிப் பொட்டிலும் வைத்து மறுபுறமாக திருப்ப வேண்டும். இப்படி செய்யும் போது ஆக்ஞா சக்கரத்தினுள் எமது ஜெப சக்தி இழுத்துக்கொள்ளப்படும்.
 • ஜெப‌மாலை, ய‌ந்திர‌ங்க‌ள், சாதனை பொருட்க‌ளை சாத‌க‌ன் த‌விர்ந்த‌ வேறு ந‌ப‌ர்க‌ள் தொட‌க்கூடாது.
 • காய‌த்ரி சாத‌னை எந்த‌ வித‌த்திலும் தீமை ப‌ய‌க்காத‌து. ஆத‌லால் யாவ‌ரும் ப‌ய‌மின்றி செய்ய‌லாம். ந‌ன்மையினை ம‌ட்டுமே த‌ர‌வ‌ல்ல‌து. இந்த‌ நிப‌ந்த‌னைக‌ளை க‌டைப்பிடிப்ப‌தால் ந‌ன்மைக‌ள் அதிக‌மாக‌வும், துரித‌மாக‌வும் கிடைக்கும்.
 • ம‌ந்திர‌ம் ச‌ரியாக‌ ப‌ய‌ன‌ளிக்க‌ அத‌னை ச‌ரியான‌ உச்ச‌ரிப்புட‌ன் கூறுவ‌து அவ‌சிய‌மாகும். காய‌த்ரி ம‌ந்திர‌த்தில் அந்த‌ உச்ச‌ரிப்பு பிழையானாலும் ப‌ல‌த‌ட‌வை முய‌ற்சிக்க‌ தேவியின் அருளால் ச‌ரியான‌ உச்ச‌ரிப்பினை அறிந்துகொண்டு ப‌ய‌ன்பெறும் ஆற்ற‌லை த‌ருவாள்.
 • ஒருமுறை காய‌த்ரி சாத‌னை முய‌ன்று விருப்ப‌த்துட‌ன் செய்து விட்டீர்க‌ள் என்றால் உங்க‌ள் ம‌ன‌து அத‌ன் ப‌ய‌ன் க‌ண்டு மீண்டும் மீண்டும் செய்ய‌த்தூண்டும். இத‌ன் ப‌ய‌னாக‌ ப‌டிப்ப‌டியாக‌ உங்க‌ளில் ஞான‌ வ‌ள‌ர்ச்சியும், ஆன்ம‌ வ‌ள‌ர்ச்சியும் ஏற்ப‌டும். ஆத‌லால் எப்ப‌டியாவ‌து இல‌ட்சிய‌த்துட‌ன் ஒரு அனுஷ்டான‌த்தினை பூர்த்தி செய்ய‌ முய‌லுங்க‌ள். அதாவ‌து 125 000 ஜெப‌த்தினை பூர்த்தி செய்த‌ல் ஒரு அனுஷ்டான‌ம் என‌ப்ப‌டும்.
 • இப்ப‌டி ஒரு அனுஷ்டான‌ம் பூர்த்தியான‌ பின்ன‌ர் உங்க‌ள் ம‌ன‌தில் பெரும் மாற்ற‌ம் ஏற்ப‌ட்டிருப்ப‌தை உண‌ர்வீர்க‌ள், ம‌ன‌ம் அன்பு, க‌ருணை, உற்சாக‌ம் போன்ற‌ உண‌ர்வுக‌ளால் நிர‌ம்பி இருப்ப‌தையும், எந்த‌வொரு சிக்க‌லான‌ பிர‌ச்ச‌னைக்கும் நொடியில் தீர்வு காணும் ஆற்ற‌லும் உண்டாகும்.
 • இந்த‌ சாத‌னையினை செய்வ‌த‌ற்கு ஜாதி, ம‌த‌ம், பால், வேற்றுமை, ச‌மூக‌ வேற்றுமை எதுவுமில்லை. யாருக்கு ம‌ன‌தில் விருப்ப‌ம் இருக்கிறதோ அவ‌ர்க‌ள் குருவ‌ருளுட‌ன் தொட‌ங்கி ப‌ய‌ன் பெற‌லாம். இறைவ‌ன் நீர் நில‌ம், காற்று என‌ இய‌ற்கையினை அனைவ‌ருக்கும் பொதுவாக‌த்தான் கொடுத்திருக்கிறான், அதுபோல் பிர‌ப‌ஞ்ச‌ ச‌க்தியான‌ காய‌த்ரியும் அனைவ‌ருக்கும் பொதுவான‌ ஒன்றே! ஆத‌லால் ஆர்வ‌முடைய‌ எவ‌ரும் இத‌னை ஜெபிக்க‌லாம்.
 • இடைக்கால‌த்தில் இந்த‌ அரிய‌வித்தை ஞான‌ம் ஒரு வ‌குப்பாரிற்கு ம‌ட்டும் உரிய‌து என‌ ம‌றைக்க‌ப்ப‌ட்டு பெண்க‌ள் ஜெபிக்க‌க‌கூடாது என்று சுய‌ந‌ல‌மாக்க‌ப்ப‌ட்ட‌து. இவ‌ற்றில் எந்த‌வித‌ உண்மையும் இல்லை, காய‌த்ரி ம‌ந்திர‌த்தில் வ‌ண‌ங்க‌ப்ப‌டும் தெய்வ‌மே பெண்ணாக‌ இருக்கும் போது எப்ப‌டி பெண்க‌ள் ஜெபிக்க‌க்க‌ கூடாது என்று சொல்ல‌லாம். பெண்க‌ள் தாராளாமாக‌ ஜெபிக்க‌லாம். இந்த‌ சாத‌னையினை செய்ய‌லாம். இத‌னால் ந‌ல்ல‌ ஒழுக்குமும் அறிவும் உடைய‌ ச‌மூக‌ம் மிளிரும்.
 • காய‌த்ரி சாத‌னை என்ப‌து ஒரு ம‌னித‌னின் அடிப்ப‌டை உரிமை, அத‌னை ப‌ய‌ன்ப‌டுத்தி ந‌ன்மை பெறுவ‌து அவ‌ர‌வ‌ர் விருப்ப‌த்தினை பொறுத்த‌து. ஆக‌வே அனைவ‌ரும் காய‌த்ரி சாத‌னை செய்ய‌ குருதேவ‌ரை பிரார்த்திக்கிறோம்.
 • மேலும் காய‌த்ரி சாத‌னை ப‌ற்றிய‌ ப‌திவுக‌ள் சாத‌னை புரிய‌ விரும்பும் சாத‌க‌ர்க‌ளுக்காக இந்த வலைப்பதிவில் வெளியிட‌ப்ப‌டும்.

Wednesday, September 19, 2012

காயத்ரி சாதனையின் போது கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கங்கள் (ப‌குதி 01)


இந்த பிரபஞ்சம் ஓர் ஒழுங்குமுறைக்கேற்பவே இயங்கி வருகிறது, ஆன்மீகம், சூஷ்ம சாதனைகள் புரிய விரும்புபவர்கள் அந்த நியதிக்கேற்ப்ப தம்மை ஒத்திசைய (Harmoney) வைத்துக்கொண்டால் மட்டுமே அவர்களால் தமது முயற்சியில் வெற்றியடைய முடியும். அதனால் காயத்ரி சாதனையின் போதுகடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள பற்றி இங்கு கூறுகிறோம். தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தால் அனைத்தையும் கடைப்பிடிக்கமுடியாவிட்டால் இயன்றளவு கடைப்பிடிக்க வேண்டும். இவற்றை கடைப்பிடித்தால் பலன் முழுமையாக கிடைக்கும் அன்றி தவறுவதால் துன்பங்களோ, பிழைகளோ நடந்துவிடாது. ஆகாயால் பயம் இன்றி நீங்கள் சாதனை செய்யலாம், காயத்ரி அறிவின் தாய், தாய் ஒரு நாளும் உங்களுக்கு தீங்கு செய்யமாட்டாள், தனது அன்பால் திருத்தி நல்வழிப்படுத்துவாள். அதுபோல் உங்கள் சாதனையில் உபாசனையில் பிழை இருப்பினும் மெது மெதுவாக உங்களில் அறிவில் அவள் அருள் காந்த சக்தியினை செலுத்தி மெது மெதுவாக உங்களை சரியான பாதையில் செலுத்துவாள்.

எமது வாழ்க்கையின் அனுபவம் என்பது மனதின் வழியே நடக்கிறது, மனமே இன்பத்திற்கும் துன்பத்தினையும் அனுபவிக்கும் காரணி. அதுபோல் எந்த தெய்வ சக்தியினையும், உயர்ந்த ஆற்றலையும் பெறுவதற்கும் மனதே தேவை.மனமே காயத்ரி மந்திர சக்தியின் மூலம் தெய்வசக்தியினை ஆகர்ஷிக்கின்றது. இது நமது எண்ணங்கள் மூலம் நடைபெறுகிறது. ஆக தெய்வ சக்தியினை ஆகர்ஷிக்க விரும்புவபர்கள் நல்ல எண்ணங்களை எண்ணுவதற்கு பழகிகொள்ளவேண்டும்.

நம்பிக்கைதான் (faith)  வாழ்க்கை என்பது பொதுவாக கூறப்படும் வார்த்தை, இது சாதனைக்கும் பொருந்தும். நம்பிக்கை இன்றி செய்யப்படும் எதுவும் முழுமையாக பயன் அளிப்பதில்லை. நம்பிக்கை என்பது ஆழமான ஒரு உணர்வு. மனதின் ஆற்ற்லை ஒரு விடயத்தில் குவிக்கும் குவிவு ஆடி (lence) போன்ற சாதனம். ஆகவே செய்யும் செயலில் ஆழமான நம்மிக்கை இருக்கவேண்டும்.

மற்றைய சாதனைகளினை விட காயத்ரி சாதனையின் சிறப்பு என்னவேன்றால் நீங்கள் மனத்தூய்மை இன்றி நம்பிக்கை இன்றியும் காயத்ரி ஜெபித்தாலும் அந்த மந்திர அலைகளின் மூலம் மனம் தூய்மையாக்கப்பட்டு உங்களில் அந்த பண்பு வளர்க்கப்படும். அதாவது சாதனையின் ஆரம்ப கால சக்தி உங்கள் மனதினை, பஞ்ச கோசங்களை தூய்மைப்படுத்த பயன்படுத்தி அந்த தகுதியையும் கொடுக்கும்.  இதற்கான  ப‌ய‌ன்பெறுவ‌த‌ற்கான‌ கால‌ம் அதிக‌மாகும்.
இனி கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகளை பற்றி கூறுவோம்.
 1. உடல் சுத்தமாக இருக்கவேண்டும், குளித்து சுத்தமான ஆடை அணிந்து சாதனையில் அமரவேண்டும். அப்படி முடியாத சமயத்தில் கை, கால் அலம்பி முகத்தினை கழுவிக்கொண்டும் அமரலாம். ஆக முடியாத காலத்தில் உடலினை ஈரத்துணியால் துடைத்து சுத்தப்படுத்திக்கொண்டு சாதனையில் அமரலாம்.
 2. உடலை தளர்வாகவைத்திருக்க கூடிய ஆடகளையே சாதனையின் போது அணியவேண்டும். இறுகிய காற்சட்டைகள், காலணி அணிந்து செய்யக்கூடாது. குளிர்பிரதேசத்தில் வசிப்பவர்கள் சால்வையால் உடலை போர்த்திக் கொள்ளலாம்.
 3. சாதனை செய்வதற்கு அமைதியான் சுத்தமான இடமொன்றினை தேர்ந்தெடுக்க வேண்டும். இவை புனித தலம், ஆற்றங்கரை, பூந்தோட்டம் போன்றவையாக இருக்கலாம். அல்லது வீட்டின் ஒரு மூலையில் அமைதியான தனியிடம் ஒதுக்கி கொள்ளவேண்டும்.
 4. சாதகன் பத்மாசன நிலையிலோ, அர்த்த பத்மாசனம், சுகாசனம் போன்ற நிலைகளில் அமர்ந்து கொள்ளலாம். அப்படி கால் மடித்து அமர முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்துகொள்ளலாம்.
 5. எப்படியாயினும் அமரும் போது முதுகுதண்டு நேராக இருக்க வேண்டும். இது மிக அவசியமான ஒன்றாகும், ஏனெனில் சாதனையின் போது பிராண ஓட்டம் அதிகரிக்கும், அது தடைப்படாமல் உடல் முழுவதும் பரவ ஏதுவாக முதுகுதண்டு நேராக இருக்க வேண்டும்.
 6. சாதனையின் போது உடல் வெறும் தரையுடன் தொடர்பு கொள்ளும் படி இருக்க கூடாது. இது உடலின் பிராண சக்தி ஓட்டத்தில் தடங்கல்களை ஏற்படுத்தும், ஆதலால் வெள்ளை அல்லது மஞ்சள் நிற பருத்தி துணியினையோ அல்லது தர்ப்பை பாயினையே ஆசனமாக இட்டுக்கொள்ளவேண்டும்.
 7. ஜெபத்திற்கு நூற்றூ எட்டு மணிகொண்ட துளசி அல்லது சந்தனம் அல்லது படிக ஜெபமாலை ஒன்று பாவிக்கலாம்.
 8. ஜெபம் சூரியோதயத்திற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக அதாவது பிரம்மமுகூர்த்தம் எனப்படும் அதிகாலை 04.00 மணீயிலிருந்து 06.30 இற்குள் செய்யவேண்டும். மாலையில் சூரிய அஸ்தமனத்திலிருந்து ஒருமணி நேரத்திற்குள் செய்யவேண்டும்.
 9. தகுந்த பலனைப்பெற குறைந்தது ஒரு மாலை அதாவது 108 தடவை ஜெபம் செய்வது அவசியமாகும். அதிகம் செயவதும் நன்மை பயக்கும், ஆனால் ஒவ்வொரு நாளும் சம அளவு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
 10. சாத‌னையினை தொட‌ங்க‌ முன்ன‌ர் ஒரு சாத‌னா குருவினை (யார் இந்த‌ காய‌த்ரி சாத‌னையினை செய்து ப‌ய‌ன்பெற்ற‌ ஒருவ‌ர்) தொட‌ர்புகொண்டு த‌ன‌து சாத‌னைங்குவ‌தற்கான‌ முறையினை கேட்ட‌றித‌ல் வேண்டும். பின்ன‌ர் அவ‌ர‌து வ‌ழிகாட்ட‌லில் சாத‌னையினை தொட‌ர்வேண்டும். இந்த‌ விட‌ய‌த்தில் எம‌து வ‌லைத்த‌ள‌த்துட‌ன் தொட‌ர்பு கொண்டு ஆலோச‌னை பெற‌லாம்.
 11. ஜெப‌த்தின் போது காலையில் கிழ‌க்கு நோக்கியும் மாலையில் மேற்கு நோக்கியும் அம‌ர்ந்து செய்ய‌வேண்டும்.
 12. ஒரு ஆச‌ன‌த்தில் இருந்து ஜெப‌ம் செய்யும் போது கால் வ‌லி, மேல் வ‌லி ஏற்ப‌டின் ஆச‌ன‌த்தினை மாற்றி த‌ம‌க்கும் வ‌ச‌தியான் ப‌டி‌ இருந்து செய்ய‌வேண்டும்.
 13. ஜெப‌த்தின் இடையில் ஏதாவ‌து த‌ட‌ங்க‌ல் (உதார‌ண்மாக‌ மல‌ ச‌ல‌ம் க‌ழிக்க‌ வேண்டிய‌ உண‌ர்வு, வேறு தேவைக‌ளுக்காக‌) கார‌ண‌மாக‌ எழும்ப வேண்டி வ‌ந்தால் மேல‌திக‌மாக‌ ஒரு மாலை ஜெப‌ம் செய்ய‌ வேண்டும்.
 14. சாத‌னையின் போது தொட‌ர்ச்சி இருத்த‌ல் வேண்டும். குறைந்த‌து ஆர‌ம்ப‌த்தில் 48 நாட்க‌ள் தொட‌ர்ச்சியாக‌ செய்ய‌வேண்டும். இடையில் ஒருநாள் ஜெப‌ம் செய்ய‌ முடியாம‌ல் போனால் அடுத்த‌ நாள் அதே அள‌வு அதிக‌மாக‌ செய்து தொட‌ர‌வேண்டும்.
 15. பொதுவாக‌ வீட்டில் ஏதும் தீட்டு விட‌ய‌ங்கள் (மரணம் பிறப்பு) ந‌டைபெறும் போது மாலை கொண்டு முறையான‌ உபாச‌னை இன்றி மான‌சீக‌ ஜெப‌ம் செய்ய‌வேண்டும். மான‌சீக‌ ஜெப‌ம் செய்வ‌த‌ற்கு எதுவித‌ நிப‌ந்த‌னைக‌ளும் இல்லை.
 16. ஏதாவ‌து அவ‌ச‌ர‌ தெய்வ‌ உத‌வி தேவைப்ப‌டின், அல்லது எதிர்பாராத துர்சம்பவங்கள் நடந்தால், அல்லது அவற்றை தடுக்க‌ முழுமையான‌ அனுஷ்டான‌த்தின் மூல‌ம் சாதிக்க‌லாம். முழுமையான‌ அனுஷ்டான‌ம் என்ப‌து தொட‌ர்ச்சியாக‌ ஒரு ல‌ட்ச‌த்து இருப‌த்தி ஐயாயிர‌ம் ஜெப‌ம் முடிப்ப‌தாகும், இதை 48 நாட்க‌ளுக்குள் முடிப்ப‌து துரித‌ ப‌ல‌னைத்த‌ரும்.
 17. தொட‌ர்ச்சியான‌ நீண்ட‌ ப‌ய‌ண‌ங்க‌ள் செய்யும் போதோ, நோயுற்றிருக்கும் போதோ புற‌ச்சுத்த‌ம்  ப‌ற்றி அதீத‌ க‌ட்டுப்பாடு தேவையில்லை, மான‌சீக‌ ஜெப‌ம் மட்டும் செய்ய‌லாம் .
 18. உண‌வில் மாமிச‌ங்க‌ளை த‌விர்க்க‌ வேண்டும், அதிக‌ கார‌ம், புளிப்பு சுவையுடைய‌ த‌ம‌ஸிக‌ உண‌வுக‌ளை த‌விர்க்க‌ வேண்டும். எளிய‌ சைவ‌ உண‌வுக‌ள் ம‌ட்டுமே உண்ண‌ வேண்டும். மாமிச‌ உண‌வுக‌ள் உண்ப‌தால் த‌வ‌று கிடைக்கும் ப‌ல‌னின் அள‌வு குறைவாக‌ கிடைக்கும்.  ` 
அடுத்த‌ ப‌திவில் தொட‌ரும்...

ஸத்குருபாத‌ம் போற்றி!

Tuesday, September 18, 2012

காயத்ரி சாதனைக் குறிப்புகள் - பகுதி 01


காயத்ரி மந்திரமானது பாரத ரிஷிகள் மக்களுக்கு கொடுத்த பெரும் செல்வம், இதனை குறித்த ஒரு வகுப்பினருக்கு மாத்திரமுரியது என்று வரலாறுகள் திரித்து சாதாரண பாமர்களுக்கு கிடைக்கமுடியாதபடி செய்யப்பட்டு வந்தது. மதம் அரசியலானதன் விளைவு இந்த அரிய விடயம் தமிழ் மக்களால் பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. அகஸ்தியமகரிஷியிடம் வித்தை கற்று 108 வருடங்கள் இந்த பூவுலகில் வாழ்ந்து கண்ணைய யோகியார் தன்னை அண்டி வந்த சாதகர்களுக்கு சித்தர் முறைப்படி சாபவிமோசனம் செய்வித்து காயத்ரி தீட்சை செய்வித்து வந்தார். அந்த வகையில் எமது குருநாதர் இலங்கையில் சாதாரண தோட்டத்தொழிலாளி ஒருவரின் மகனாக பிறந்து ஆன்ம தாகம் கொண்டு குருவைத்தேடி அலைந்த போது அவரை ஆட்கொண்டு காயத்ரி தீட்சை அளித்து குப்தவித்தையாக வைக்கப்பட்டிருந்த இரகசியங்களை உலகமக்கள் அறிந்துகொள்ளும்படி கற்பிக்கும் படி குரு இட்ட ஆணைப்படி, தன்னை அண்டி வந்த சாதகர்களுக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசித்து வந்தார், அவர் காயத்ரி சாதனையில் சித்தி பெற்றமையினால் காயத்ரி சித்தர் எனவே அழைக்கப்பட்டு வந்தார்.

இதுபோல் ரிஷிகளால் இந்த உலகிற்கு இவை கிடைக்கவேண்டிய காலப்பகுதியில் அவற்றை வெளிப்படுத்த தகுந்த ஆட்கள் மூலம் அவற்றை வெளிப்படுத்தியே வருகின்றனர்.

ஹரித்துவாரில் சாந்திகுஞ் எனும் நகரில் காயத்ரி சாதனையினை விஞ்ஞான முறைப்படி நிருபணத்துடன் இலவசமாக கற்பித்து வருகிறார்கள். இதன் நிறுவனர் பண்டிட், ராம் சர்மா ஆச்சார்யா அவர்கள் காயத்ரி மந்திரத்தின் அனைத்து உண்மைகளையும் உலக மக்கள் அறியும் வண்ணம் வெளியிட்டுள்ளார்கள்.

எமது வலைப்பின்னல் தமிழ் மக்கள் இந்த உண்மைகளினை அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக காயத்ரி சாதனை பற்றி எமது கற்கையிலும், சேகரிப்பிலும், தேடலிலும், குருமுகமாய் அறிந்த விடயங்களை தொகுத்து காயத்ரி சாதனை என்ற தொடராக வெளியிட முயல்கிறோம்.

இவற்றை எழுதுவதற்கான நேர அவகாசம் தர எல்லாம் வல்ல குருவருளை பிரார்த்திக்கிறோம்.

Monday, September 03, 2012

தெய்வ உபாசனை செய்வது எப்படி? - அறிவியல் விளக்கம்

பொதுவாக தெய்வத்தினை வணங்குவது பகுத்தறிவுக்கு ஒவ்வாது, பக்திமார்க்கம் இளகிய மக்களின் மனதினை வசப்படுத்தும் ஒரு உத்தி என தெய்வ வழிபாட்டினை ஒதுக்குவோர் பலர் உள்ளனர். அதுபோல் பல வருடங்கள் தெய்வத்தினை வணங்கி ஒருபயனும் பெறாதோர் பலர் விரக்தி உற்று வணங்காமல் விட்டு விடுகின்றனர். ஒரு சிலர் சிவவாக்கியர் பாடல்களை எடுத்து வைத்துக்கொண்டு புறவழிபாடு தேவையில்லை அக வழிபாடு மட்டும்தான் சித்தர்கள் கூறியுள்ளார்கள் என வாதிடுவர். இந்தக் காலகட்டத்தில் மேற்கூறிய கருத்துக்களை மறுப்பதற்கில்லை. குருதத்துவத்தினை என்பது முற்றாகவே தவறாக பிரச்சார உத்தியாக்கப்பட்டு, தனிமனித வழிபாடாக்கி மதிமயங்கி மயக்கமுற்று திரிவோர் பலர், இன்றைய காலகட்டத்தில் தெய்வ வழிபாடு, பூஜை, கோயில், ஆசிரமம் என்பனவெல்லாம் பணம் சேர்க்கும் படோபமான இடங்கள் ஆகிவிட்ட நிலையில் மக்கள் மனதில் விரக்தியும், ஏக்கமுமே மிஞ்ச்சி நிற்கின்றன. 

அது சரி இத்தனையும் வகுத்தவர்கள் எமது முன்னோர்களே, இவ்வளவற்றையும் ஒருவித பிரயோசனம் ஏதும் இல்லாமலா செய்துவைத்தார்கள்? என்பதும் வலுவான கேள்வி. இதற்கு சரியான பதிலே மக்கள் மனதில் உள்ள இந்த நிலையினை ஆற்றக்கூடியது. அந்த வகையில் தெய்வ வழிபாடு, கோயில் என்பவற்றின் தத்துவத்தினை விளங்க முற்படுவோம். 

எமது முன்னைய பதிவுகள் பலவற்றில் விளக்கியுள்ளோம், மனிதனின் அடிப்படை மனம், பிராணன், உடல் என்ற இந்த மூன்றும்தான். நாம் எதைச் செய்தாலும் இந்த மூன்றையும் உபயோகித்துதான் செய்கிறோம். எமது முன்னோர்கள்/சித்தர்கள் மனிதன் பெறவேண்டிய அடிப்படை கல்வி என்பது ஒருவன் தன்னை அறிதலே ஆகும் என எண்ணி அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தி வைத்தார்கள். அதாவது வெளியில் உள்ள அண்டத்தினை அறியவேண்டுமானால் முதலில் தன்னில் உள்ள பிண்டத்தினை அறியவேண்டும் என்பதற்கான வழிமுறைகளே இந்த தெய்வ உபாசனை/வழிபாடு, கோயில் வழிபாடு. பொதுவாக எந்த உயரிய விதியும் சரியாகவும் பயன்படுத்தலாம், பிழையாகவும் பயன்படுத்தலாம். இது விஞ்ஞானத்திற்கும் பொருந்தும், மெய்ஞ்ஞானத்திற்கும் பொருந்தும். ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த சக்தி சமன்பாடு இன்று உலகை அழிக்கவல்ல அணுகுண்டாகவும் உருவாகியுள்ளது, அதே நேரம் மின் உற்பத்தி முதற்கொண்டு பல பிரயோசனமான பௌதீக சக்திகளை விளங்கிக்கொள்ளவும் பயன்படுகிறது. இதே கதிதான் எமது சித்தர்கள் உருவாக்கிய தெய்வ வழிபாடுகள், கோயில் வழிபாட்டு முறைகளுக்கும் நடந்தது. அதாவது பிழையான பிரயோகங்களின் விளைவே முதற்பந்தியில் கூறிய நிலையின் காரணமாகும். 

சரி பீடிகை ஏதுமில்லாமல் தெய்வ வழிபாட்டின், கோயில் வழிபாட்டின் உண்மைத்தத்துவம் என்னதான் என்று சொல்லிவிடுங்கள் எனக்கூறுகிறீர்கள் அல்லவா! அதன் சுருக்கம் வருமாறு;

அனைத்து தெய்வவழிபாடுகளும் ஆழ்மனது மூலம் தெய்வ சக்தியினை தொடர்புகொள்ளும் செயல்முறைகளே. பிரபஞ்சத்தில் உள்ள சக்திகள் அனைத்தும்  மனிதனின் மனம் மூலமே செயற்படுகிறது. 

இந்த செயற்பாடு இயற்கையாக அமைந்த அளவில் இருக்கும் போது சீரான வாழ்க்கையினையும் அல்லாத போது துன்பத்தினையும் அனுபவிக்கிறோம். ஆக இந்து மதத்தில் ஏன்  பலகடவுள்கள் உள்ளார்கள் என்பதற்கும் இதுவே விளக்கம். ஒவ்வொரு சக்தியினையும் மனதினை ஒருமைப்படுத்த வல்ல வகையில் உருவமைத்து உள்ளனர். 

ஒரேகடவுளை வணங்குபவர்கள் எப்படி நன்மை பெறுவது? பலவித பிரார்த்தனை மூலம்,  தமக்கு வேண்டியவற்றை தகுந்த கருத்து வாக்கியங்களை அமைத்துக்கொண்டு  ஆழ்மனதினை செயற்படுத்தி பயன் பெறலாம். 

அப்படியானால் மனச்சக்தி மட்டும்தான் இந்த பிரபஞ்சத்தில் உள்ளதா ? என்ற கேள்வி எழலாம் . அதற்கு பதில் அலை வேகம் கூடிய பிரபஞ்ச மனச்சக்தியினையே  தெய்வ சக்தி என்கிறோம். அவற்றை ஈர்க்கும் செயன்முறையே தெய்வ உபாசனையும் அவற்றின் மற்றைய வடிவங்களும்.  அதாவது மனிதமனம் அத்தகைய உயர் சக்திகளை ஈர்த்து அறியகாரியங்களைசெய்ய வல்லது.

இத்தகைய அரிய உண்மைகள் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு பிற்காலத்தில் மதம் சமயம் என்பன ஒரு அதிகார அலகாக  மற்றப்பட்டதன் விளைவே இன்றைய சமூகத்தின் நிலையாகும். 

Sunday, September 02, 2012

கும்பகப் பிரணாயாமத்தின் அவசியம்

இன்று யோகம் பயில்பவர்கள் பலர் பிரணாயாம பயிற்சியின் முக்கியத்துவம் அறிந்து அதனை பயிலவேண்டும் என்ற பெரும் ஆவலினால் புத்தகங்களை வாசித்து செய்யத் தொடங்கி விடுகிறார்கள். அதிலும் எல்லா நூற்களிலும் கும்பகப் பிரணாயாமம் செய்தால்  பல சித்திகள் வரும் என்று இருப்பதால் பலரும் அதனைச் செய்வதற்கு ஆர்வப்படுகின்றனர். இது பற்றி ஒரு சில கருத்துக்களை பகிர்வதே இந்த பதிவின் நோக்கம். 

எமது முன்னைய பதிவுகளை படித்தவர்கள் மனம், உடல், பிராணன் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதும் இடைத்தாக்கமடைவதும் என்பதனை அறிந்திருப்பீர்கள். இவை மூன்று ஆன்மாவினைச் சூழ்ந்துள்ள கவசங்கள். இந்த மூன்றுமே பஞ்ச கோசங்களாக விரிவடைகின்றது. சாதனை அடிப்படையில் மனிதன் நேரடியாக இந்த மூன்றின் மூலமாகத்தான் அடுத்த இரண்டு கோசங்களை தொடர்புகொண்டு விரிவடையச் செய்யமுடியும்.  இந்த கோசங்கள்  "நான்" இல்லை என்ற அறிவு பெற்று இவற்றை ஒளிரச் செய்யும் உண்மையான ஆன்மாவினை அறிதலே யோக சாதனையின் நோக்கம். 

இந்த அடிப்படையில் பிரணாயாமம் என்பது பிராணன் மூலம் மனதினையும் உடலினையும் வலுப்படுத்தும் செயல்முறையாகும். இது மூச்சுடன் இரண்டற பிணைந்தது. மூச்சு சுவாசப் பையினூடாகவும் நரம்புத்தொகுதியின் ஊடாக கட்டுப்படுத்தப்படுகிறது . மூச்சினை உள்ளிழுக்கும் பொது மனிதனின் எழாதார சக்கரத் தொகுதியினூடாக (மூலாதாரம் தொடக்கம் சஹஸ்ராரம் வரை) பிராணன் உட்புகிகின்றது.  இதன் பின் இந்த சக்கரங்களில் சேமிக்கப்பட்டு சூஷ்ம உடலின் மூலம் மெதுவாக எமது உணர்ச்சிகள் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு ஸ்தூல உடலிற்கு வெளிப்படுத்தப் படுகிறது. இந்த செயன்முறையே சாதாரணமாக ஒவ்வொரு கணமும் நடை பெற்றவண்ணம் உள்ளது. 

மூச்சினை ஆழமாக சுவாசிக்கும் பொது அதிகளவு பிராணன் உட்புகுகின்றது. இதனாலேயே பிரணாயாமத்தில் ஆழ்ந்து மூச்செடுக்கும் பயிற்சி ஆரம்ப பயிற்சியாக்கப்படுள்ளது.

இனி நாம் எடுத்துக்கொண்ட தலைப்பினைப் பற்றி பார்ப்போம். கும்பகப் பிரணாயாமம்  ஏன் அவசியம் என்று? ஏற்கனவே  மனம், உடல், பிராணன் ஆகியமூன்றும்  தொடர்புடையவை என்று பார்த்துவிட்டோம். இதில் பிராணன் சக்தியினை வழங்குகின்றது, உடல் ஆன்மாவிற்கான தளத்தினை (base ) வழங்குகின்றது .  மனம் ஆன்மாவினைச் சூழ கவசமாக பரிணமித்து மாயையில் ஆழ்த்துகின்றது. 

மனதின் நிலைகள் விழிப்பு, கனவு, நித்திரை, தூரியம், தூரியாதிதம் என ஐந்து வகைப்படும். முதல்மூன்று நிலைகளும் சாதாரணமாக உலக மாயையிற்கு ஆட்பட்டு வாழும் அனைவருக்கும் உள்ள நிலையாகும். ஆன்ம சாதனையில் ஈடுபட்டு ஆன்மாவினை அறிந்த விழிப்புணர்வு பெற்ற நிலை தூரியம் - விழிப்புணர்வு (awakened state ) எனப்படும். இந்த நிலைவாய்க்கும் போது ஆன்மா மனதினை தனது இச்சா சக்தியினால் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெறுகிறது. அதாவது இதுவரை மனம் போன போக்கில் சென்ற உடல், பிராணன், புத்தி, ஆன்மா எல்லாம் தற்பொழுது ஆன்மாவின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. இது மனம் வசப்பட்ட நிலையாகும். இதுவே எந்த ஒரு சாதனையிலும் சாதாரண  மனிதன் அடையக்கூடிய அடுத்த நிலையாகும். 

இந்த தூரிய நிலையினை அடைவதுவே கும்பகப்  பிரணாயாமத்தின் உண்மையான நோக்கமாகும்.  இது எப்படி சாத்தியம் என்பதனை சற்று விளக்குவோம்.  

மேலே விளக்கப்பட்டது போல் மன-பிராண-உடல் இடைத்தொடர்புகளில்  பிராணன் ஓர் இணைப்புப் பாலமாகும். அதாவது binding  energy, இந்த ஓட்டத்தினை ஒருகணம் நிறுத்தினால் ஆன்மாவினைச் சூழ உள்ள கவசங்கள் அறுந்துபோகும். மரணத்தில்  பிராணனிற்கும் உடலிற்கும் இடையிலான தொடர்பு அறுந்தாலும் ஆன்மாவினைச் சூழ பிராண, மன, புத்தி கவசங்கள் ஒட்டிய வண்ணமே இருக்கும். அதாவது மரணம் என்பது உடலினைவிட்டு மற்றைய நான்கு கவசங்களும் பிரிதலேயாகும்.  

யோக இறை சாதனையில் உடலில் இருந்தவண்ணம் ஆன்மாவினைச் சூழுவுள்ள மற்றைய   கவசங்களை பிரித்து ஆன்மாவினை அறிகிறோம். இதற்கு கும்பகப்  பிரணாயாமம் துணைபுரிகிறது. எப்படி? மூச்சினை சில வினாடிகள் அடக்கும் போது பிராணன் அடங்க ஆன்மா தனது கவசங்களில் இருந்து பிரிந்து சுயத்தன்மை பெறுகிறது. இப்படி ஆகும் போது மனம் விழிப்புணர்வு அடைகிறது.  அதாவது தூரிய நிலை அடைகிறது. 

அப்படியாயின் மரணத்தின் போதும் மனிதன் பிராணனை இழக்கின்றானே? அப்போது  ஏன் அந்த நிலையினை பெறவில்லை!  

இந்த இடத்தில் எமது முன்னோர்கள் தேவர்களாக இருந்தாலும் மனித உடலிற்கு வந்துதுதான் தமது இறை சாதனையினை  பூர்த்தி செய்யவேண்டும்  , சித்தர்கள் மனித உடலினை போற்றியதன்  இரகசியத்தினை விளக்குவோம். 

தூரிய  நிலையினை அடைவதற்கு பிராணன், மனம், புத்தி கவசங்களை ஆன்மாவில் இருந்து பிரிக்க வேண்டும் என்பதனை அறிவோம். அவற்றை பிரித்து அழித்துவிட இயலாது, அப்படிச் செய்தால் அடுத்த நிலையினை (தூரியாதீதம் ) அடைய இயலாது. அவற்றின் பிடியிலிருந்து ஆன்மா வெளியில் வந்து அவற்றை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருதலே தன்னையறிந்த நிலையாகும். இதன் பின்னரே ஆன்மா தலைவனை அறிந்து இறைவனை அடைதல் எனும் துரியாதீத நிலையினை அடைய முடியும். இப்படி மனம், பிராணன், புத்தி கவசங்களை சாதனையினால்  பிரிக்கும் போது அவற்றை இழுத்து பிடித்து வைத்திருக்க ஒரு தளம் வேண்டும், அந்த செயற்பாட்டினை உடல் செய்கிறது.  ஆக உடல் இன்றி மனிதன் தனது உண்மையான ஸ்வரூபமான ஆன்மாவினையும் அறிய முடியாது. இறைவனையும் அறிய முடியாது. 

இந்த நிலையே கும்பகப் பிரணாயாமத்தில் ஏற்படுகின்றது. ஒரிருகணம் பிராணனை கட்டுப்படுத்தும் போது மற்றைய கவசங்கள் ஆன்மாவிலிருந்து பிரிந்து ஆன்மா மனதினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து மனம் விழிப்புணர்வு  நிலையடைகிறது. மனம் விழிப்புணர்வு அடைந்த நிலையில்  சித்திகள் வாய்க்கின்றது. 

தற்போது அன்பர்களுக்கு சித்தர்கள் ஏன் கும்பக பிரணாயாமத்தினை வலியுறுத்தினார்கள் என்பதன் உண்மை நோக்கம் விளங்கியிருக்கும். ஓரளவு மன, உடல் சுத்தி இல்லாமல் அதிகளவு கும்பக பிரணாயாமம் செய்தல் உடலிற்கும் மனதிற்கும் கேடு விழைவிக்கலாம் என்பதில் அவதானமாக இருத்தல் வேண்டும். இன்னொரு வார்த்தையில் கூறுவதானால் கும்பகப் பிரணாயாமம் ஒருவகையில் உடலுடன் இருந்ததே விழிப்புணர்வுடன் மரணத்தின் அனுபவத்தினை பெறுதல் எனலாம். 

இறுதியாக பிராணாயாமம் பழக  விரும்பும் அன்பர்கள் தம் நோக்கத்தினை துணிந்து அதற்கேற்றவாறு தம்மை தயார்படுத்தி பழகுதல் வேண்டும் என்பதனை நன்கு அறிதல் வேண்டும். 

கும்பகப் பிரணாயாமம் ஆத்ம சித்திக்குரிய அரிய சாதனம். 

ஸத் குரு பாதம் போற்றி !

ஒரு லக்ஷம் ஸ்ரீ காயத்ரி ஜெபம் பூர்த்தி செய்த சாதகரின் அனுபவம்

சாதனை அனுபவம் -------------- குரு ஸ்ரீ ஸக்தி சுமனன் அண்ணாவின் வழிகாட்டலில் சாதனை செய்ய ஆரம்பித்து இந்த ஆண்டோடு 7 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. ...