குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, December 28, 2012

காயத்ரி புரச்சரணம்



மந்திர சித்தியிற்கு புரச்சரணம் எனப்படும் பயிற்சி அவசியமாகும். மந்திரத்தின் மூலம் துரித பலனைப் பெற விரும்புபவர்கள் புரச்சரணம் செய்வது அவசியம். இது ஆன்மீக முன்னேற்றம் கருதியோ அல்லது லௌகீக முன்னேற்றம் கருதியோ செய்யலாம். புரச்சரணம் என்பது அக்ஷர லட்சம் தடவை ஜெபம் செய்து அதில் 1/10 பங்கு ஹோமம், ஹோமத்தின் பத்தில் ஒரு பங்கு தர்ப்பணம், தர்ப்பணத்தில் 1/10 பங்கு மார்ஜனம், அதில் 1/10 பங்கு அன்னதானம். இந்த ஐந்து அங்கங்களும் சேர்ந்த சாதனையே புரச்சரணம் எனப்படும். 

காயத்ரி புரச்சரணம் பிரம்ம காயத்ரி மந்திரத்தில் 24 எழுத்துக்கள் காணப்படுகின்றது, ஆகவே 24 இலட்சம் ஜெபமும் மேற்கூறியவகையில் மற்றை அங்கங்களும் செய்யவேண்டும். இதில் வேறு பல நியதிகளும் உண்டு, அது அவரவர் குருமுகமாய் அறிதல் வேண்டும். ஒரு நாளைக்கு 3000 தடவை ஜெபம் என முடிவு செய்து ஜெபிக்க தொடங்கினால் அதே அளவில் 24 லட்சம் ஜெபிக்கும் வரை செய்து முடிக்க வேண்டும். இதன் மூலம் அதிகளவு ஆன்ம ஆற்றலை துரிதமாக பெறலாம். 

மதன் மோகன் மாளவியா அவர்கள் தனது காயத்ரி புரச்சரணத்தின் பின்னரே காசியில் இந்து பலகலைக்கழகத்தினை ஸ்தாபித்தார். சாந்தி குஞ்சில் உள்ள காயத்ரி பரிவார் ராம் சர்மா ஆச்சார்யாவின் 24 காயத்ரி புரச்சரணத்தின் தபோபலத்தினால் அமைக்கப்பட்டது. 

யோகபிரஷ்டர்களும் (முற்பிறவியில் இறை சாதனை செய்து முடிக்காமல் விட்டார்களும்) தூய மனதுடையவர்களும் மட்டுமே ஒரு புரச்சரணத்தில் காயத்ரி தேவியின் காட்சியினை பெறமுடியும். அவரவர் சித்தத்தில் உள்ள பாவ சம்ஸ்காரத்திற்கேற்ப மந்திரசித்தி பெற ஜெபிக்க வேண்டிய அளவு வேறுபடும். இதனை பிரபலமான மதுசூதான ஸ்வாமிகளின் கதையிலிருந்து அறியலாம், அவர் கிருஷ்ண மந்திரத்தில் 17 புரச்சரணம் செய்தும் கிருஷ்ணனின் காட்சியினை பெற முடியவில்லை, 18 செய்யத்தொடங்கி சிறிதளவிலேயே காட்சியினை பெற்றார், பின்னர் கிருஷ்ணனிடம் அதற்கான காரணத்தினை கேட்ட போது முற்பிறப்பில் 17 பிராமணர்களை கொலை செய்த பாவத்தினை கழிக்கவே முன்னைய புரச்சரணத்தின் சக்தி செலவாகிவிட்டதென்று காரணத்தை உரைத்தார். இந்தவிடயத்தினை காயத்ரி புரச்சரணம் செய்பவர்களும் நினைவில் இருத்த வேண்டும். 

ஸத்குரு பாதம் போற்றி!

காயத்ரி ஜெபம் (பகுதி - 02) ரிஷிகேஷத்தின் ரிஷி சுவாமி சிவானந்தர் அருளியது


காயத்ரி ஜெபத்தின் பயன்கள் 

காயத்ரி வேதங்களின் தாய், அனைத்து பாபங்களையும் அழிக்கும் வல்லமை உள்ள மந்திரம். பூவுலகிலும், தேவருலகிலும் காயத்ரியிற்கு மேலான தூய்மைப்படுத்தும் புனிதமளிக்கும் ஒன்று இல்லை. காயத்ரியினை மட்டும் ஜெபிப்பது நான் கு வேதங்களையும் அதன் அங்கங்க்களுடன் ஜெபித்து பெறும் ஞானத்தினை தரவல்லது. இந்த ஒரு மந்திரம் ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று தடவைகள் ஜெபித்தாலே கைவல்யத்தையும் மோஷத்தையும் தரவல்லது. இதன் விரிவே மற்ற வேத மந்திரங்களின் விரிவு, இந்த மந்திரத்தின் தொடர்ச்சியான சாதனை நல்லாரோக்கியம், அழகு, வலிமை, வனப்பு, வீரியம் மற்றும் பிரம்ம தேஜஸ் எனப்படும் வசீகர காந்தசக்தியினை தரவல்லது. காயத்ரி எல்லாவித துக்கங்களையும் அழிக்க வல்லது. காய்த்ரி அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு வகையான புருஷார்த்தங்களையும் தர வல்லது. மனிதனை பீடித்துள்ள அறியாமை, காமம், கர்மம் என்ற மூன்று முடிச்சுகளில் இருந்தும் விடுவிக்க கூடியது. காயத்ரி மன தினை தூய்மைப்படுத்தி மனச்சக்தியினை வளர்க்க வல்லது. தொடர்ச்சியான சாதனையினால் அஷ்ட சித்திகளையும் தரவல்லது. காயத்ரி மனிதனை சக்தியுள்ளவனாகவும் ஞானவானாகவும் ஆக்குகிறது. இறுதியாக காயத்ரி சாதகன் பிறப்பு இறப்பு என்ற சுழல்ற்சியிலிருந்து விடுபட்டு முக்தி எனும் மோஷத்தினை அடைகிறான். 

தொடர்ச்சியான சாதனையினால் மனம் தூய்மை அடைகிறது. அதனால் மனம் நற்குணங்களினால் நிறைகிறது. தொடர்ந்து சாதனையினை புரிந்து வரும் போது மனதில் நல்ல சம்ஸ்காரங்கள் பதிகின்றன. மன தில் எண்ணுவதைப்போல் மனிதன் உருவாகிறான் என்பது உளவியல் விதியாகும். மனதினை நல்ல எண்ணக்களில் பழக்கும் மனிதனின் வாழ்க்கை மனதில் நல்ல எண்னங்களை ஈர்த்து நல்வாழ்க்கை அமையத்தொடங்குகிறது. காயத்ரி சாதனையில் காயத்ரி தேவியின் உருவை எண்ணி தியானிக்க தொடங்கும் மனது இந்த ஆற்றலைப்பேறத்தொடங்க்குகிறது. இடது மூளையில் பதியப்படும் எண்ணங்கள் சம்ஸ்காரங்கள் எனப்படும் (இவை நேரடியாக ஆழ்மனதில் பதியும்). இப்படி பதியும் எண்ணங்களை திரும்ப திரும்ப பதிப்பிக்கும் போது அந்த சம்ஸ்காரங்கள் வலிமையடைகின்றன. இதன்பயனாக மனதில் பழக்க வழக்கங்களும் செய்கைகளும் உருவாகின்றன. (இவை நல்லவற்றிற்கும் கெட்டவற்றிற்கும் பொதுவானது), எவன் ஒருவன் தெய்வீக எண்ணங்களை தொடர்ச்சியாக பதிப்பித்து தியானத்தின் மூலமும் தாரணை மூலமும் தனது மனதினை தெய்வத்தன்மை ஆக்குகிறானோ அவன் தெய்வத்தன்மை உடையவனாகின்றான். அவனது பாவனையினால் தூய்மை அடைகின்றான். தியானிப்பவனும் தியானமும், ஏகாக்கிரமும்(மன ஒருமை) ஏகாக்கிரம் செய்பவனும் ஒன்றாகின்றனர். இதுவே சமாதி எனப்படும், இது தொடர்ச்சியான உபாசனயினால் கிடைக்கின்றது. இவற்றை காயத்ரி உபாசனை செய்பவன் சுலபமாக அடைகின்றான். .

அடுத்த பதிவில் காயத்ரி மந்திர சித்தி அளிக்கும் புரஸ்சரணம்

Thursday, December 27, 2012

காயத்ரி ஜெபம் (பகுதி - 01) ரிஷிகேஷத்தின் ரிஷி சுவாமி சிவானந்தர் அருளியது

இந்தப்பதிவு யோக மார்க்கத்தினை உலகறியச் செய்த மஹாயோகியான ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தரது காயத்ரி ஜெபம் கட்டுரையின் மொழிபெயர்ப்பாகும். எமது வாசகர்களுக்கும் காயத்ரி சாதனை செய்ய விரும்புபவர்களுக்கும் உந்ததுதலையும் வழிகாட்டக்கூடிய ஒரு கட்டுரையாதலால் இங்கு பதிவிடுகிறோம். 

காயத்ரி தியானம்

ஓம் பூர் புவஹ ஸ்வஹ தத் ஸவிதுர் வரேண்யம்; பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ நஹ ப்ரசோதயாத்

சப்த அர்த்தம் (அதாவது சொற்களுடைய பொருள்)
ஓம் - பரப்பிரம்மன், பூர் - பூவுலகம், புவஹ - அந்தரிக்ஷ உலகம், ஸ்வ - சுவர்க்க உலகம், தத் - பரமாத்மா, ஸவிதுர் - சூரிய ஒளியான ஈஸ்வரன், வரேண்யம் - வழிபடுவதற்குரிய தகுதி,  பர்கோ - அறியாமையும் பாவங்க்களையும் அகற்றும்,  தேவஸ்ய - தெய்வ சக்தியுடைய ஞான ஸ்வரூபம், தீமஹி - தியானிப்போமாக, தியோ - புத்தி, யோ - எந்த, நஹ - எங்க்களுடைய, ப்ரசோதயாத் - ஞானமடைய செய்யும்.

பாவ அர்த்தம் (அதாவது தியானிக்க வேண்டிய அர்த்தம்)

எல்லாம் வல்ல பரம்பொருளான ஈஸ்வரனை தியானிப்போமாக; யார் இந்த உலகங்களை சிருஷ்டித்தானோ, யார் வனங்க்குவதற்கு தகுதியானவனோ, யார் எம்முடைய பாவங்களையும் அறியாமையினையும் அகற்றுபவனோ அந்த பேரொளி எமது புத்தியினை நல்வழியில் தூண்டட்டும். 

சாதகன் காயத்ரி மாதாவினை நோக்கி கீழ்வருமாறு பிரார்த்திக்க வேண்டும்; " தாயே, இந்தப் பிறப்பில் நான் பெற்ற இந்த உடலும் மனமும் புத்தியும் அஞ்ஞானமும் நிறைந்து துன்பத்தில் உழல்கின்றேன். என்னுடைய உண்மையான் ஆன்ம ஸ்வரூபத்தினை அறியக்கூடிய ஞானத்தினையும், தூய மனம், புத்தியினையும் ஒளியினையும் எனக்கு தரவேண்டும்" 

இதுவே பிரம்ம காயத்ரி மந்திரம், காயத்ரி வேதங்களின் தாய், வேத மாதா, காயத்ரியினை விட சிறந்த மந்திரம் எதுவுமில்லை, சுத்தப்பிரணவமாகிய "ஓம்" சன்னியாசிகளுக்குரியது, காயத்ரி பிரம்மச்சாரிகளுக்கும் குடும்பஸ்தர்களுக்கும் உரியது. ஓம்கார ஜெபத்தினால் தியானத்தினால் பெறக்கூடிய அத்தனை பலங்களையும் காயத்ரியினை ஜெபிப்பதனால் பெறலாம். ஓம்காரத்தினை சன்னியாசி ஜெபித்து அடையும் பரமஹம்ஸ நிலையினை காயத்ரியினை இடைவிடாது ஜெபிக்கும் கிரஹஸ்தனும் பிரம்மச்சாரியும் அடைகின்றனர்.

சாதனை புரிவதற்கான சில அனுபவ முன்மொழிவுகள்
பிரம்மமுகூர்த்தம் எனப்படும் காலை 04.00 மணிக்கு எழுந்து காயத்ரியினை (தாமரையில் அமர்ந்துள்ள பஞ்ச முக காயத்ரியினை) பத்மாசனம், சித்தாசனம், வீராஸனம் அல்லது சுகாசனத்தில் வ்டக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து ஜெபத்தினை ஆரம்பிக்கவும். அறையில் வாசனை பத்தி ஒன்றினை ஏறவும், வெயில் காலத்தில் குளித்தபின்னர் ஜெபத்தினை ஆரம்பிக்கலாம், குளிர்காலம் ஆயின் கை, கால் முகம் கழுவி ஆசமனம் செய்தபின்னர் ஆரம்பிக்கலாம். இரண்டு மணித்தியாலங்கள் ஜெபத்தினை தொடரவும். பின்னர் இரவு 07.00 மணிமுதல் 08.00 மணிவரை ஆக ஓரு நாளில் இருதடவை ஜெபம் செய்யவும். ஜெபத்தின் போதும் அந்த நாளின் மற்றைய வேளைகளில் தொடர்ச்சியாக காயத்ரியிடமிருந்து ஒளியினையும், தூய்மையினையும், ஞானத்தினையும் பெறுவதாக பாவிக்கவும். இது மிக முக்கியமான பாவனை. தியானத்தின் போது காயத்ரியின் உருவத்தினை திரிபுடி எனப்படும் புருவ மத்தியில் கண்களை மூடி தியானிக்கவும். அப்படி இல்லாவிடின் இருதயத்தில் தாமரையில் அமர்ந்திருப்பதாக தியானிக்கலாம். இப்படியான தியானத்தினால் காயத்ரியினை நீங்கள் சதரிசிக்கலாம்.


நாளொன்றிற்கு 3000 தொடக்கம் 4000 ஜெபம் செய்வது மிக்க நன்று, இதனால் உங்கள் மனமும் புத்தியும் துரிதமாக சுத்தியடையும், இந்த அளவினை செய்யமுடியாவிட்டால் தினசரி 1008 செய்யலாம். இதை செய்வதும் கஷ்டமாயின் மிகக் குறைந்தது 108 செய்யலாம், அதைக்கூட ஒருதடவையில் செய்ய கஷ்டமாயின் 36 தடவை சூரியோதயத்திலும், 36 தடவை நண்பகலிலும், 36 தடவை சூரிய அஸ்தமன நேரத்திலும் செய்யலாம். இந்த சந்தியாவேளைகளில் ஒரு அபூர்வ தெய்வ காந்த சக்தி பூவுலகில் செயற்படுகிறது, அந்த வேளைகளில் ஜெபிப்பதால் மனம் துரிதமாக சுத்தியடைகிறது. மனம் சத்துவ குணத்தால் நிறைவடையும். மன ஒருமை சக்தி எதுவித முயற்சியும் இல்லாமல் அதிகரிக்கும். பிரம்ம முகூர்த்தத்தில் எழும்ப முடியாவிட்டால் சூரியோதயத்திற்கு முன்னர் எழுந்து ஜெபத்தினை தொடங்கவும். யார் சந்தியா வேளையில் காயத்ரியினை ஜெபிக்க தவறுகிறார்களோ அவன் பிரஷ்டன் ஆகின்றான், அதாவது வீழ்ச்சியடைந்த மனிதனாகிறான், அவன் தனது வலிமை, வனப்பு, பிரம்ம தேஜஸினை இழக்கின்றான்.

எப்படி ஜெபம் செய்யவேண்டும்?
காயத்ரி மந்திரம் ஒன்பது பெயர்களை கொண்டிருக்கிறது 1. ஓம் 2. பூர் 3. புவஹ 4. ஸ்வஹ 5. தத் 6. ஸவிதுர் 7. வரேண்யம் 8. பர்கோ 9. தேவஸ்ய, இந்த ஒன்பது பெயர்களும் கடவுளை பணிந்து வேண்டும் நாமங்கள். தீமஹி என்பது கடவுளை வணங்க்குவோம் என்பதை குறைக்கும், தியோ யோ நஹ ப்ரசோதயாத் என்பது பிரார்த்தனை. காயத்ரி மந்திரம் ஐந்து இடங்களில் நிறுத்தி ஜெபிக்க வேண்டும். முதலாவது நிறுத்தல் "ஓம்"; இரண்டாவது நிறுத்தல் "பூர் புவ ஸ்வஹ"; மூன்றாவது நிறுத்தல் "தத் ஸவிதுர்வரேண்யம்"; நான்காவது நிறுத்தல் "பர்கோ தேவஸ்ய தீமஹி"; ஐந்தாவது நிறுத்தல் "தியோ யோ நஹ ப்ரசோதயாத்", காயத்ரியினை ஜெபிக்கும் போது மேற்கூறிய ஒவ்வொரு பதத்திலும் நிறுத்தி ஜெபிக்கவேண்டும்.

காயத்ரி மந்திரத்தின் அதிஷ்டான தெய்வம் ஸவிதா, மந்திரத்தின் வாய் அக்னி ஸ்வரூபம், கண்டறிந்த ரிஷி விஸ்வாமித்திரர், சந்தஸ் (இலக்கண அமைப்பு) காயத்ரி). இது பிரணாயாமத்திற்குரிய மந்திரம். யார் காயத்ரியினை தியானிக்கிறானோ அவன் மஹாவிஷ்ணுவினை தியானித்ததன்  பலனை பெறுகின்றான்.


எந்தவொரு மனிதனும் மானசீகமாக காயத்ரியினை நடக்கும் போதோ, படுத்திருக்கும் போதோ, அமரும் போதோ ஜெபிக்கலாம். இதனால் எந்த பாவங்களும் அவனை அண்டாது. வேதங்களின் அனைவருக்கும் பொதுவான மந்திரமாக குறிக்கப்பட்டிருப்பது காயத்ரி, "சமனோ மந்த்ரஹ", இது இந்துக்கள் அனைவருக்கும் பொதுவான மந்திரம். அனைத்து உபநிஷத்தினதும், நான்கு வேதங்களினதும் சாரம் மூன்று வ்யாஹ்ருதிகளுடன் கூடிய காயத்ரி. யார் காயத்ரியினை ஜெபிக்கிறானோ அவனே உண்மையான பிராமணன், ஜெபிக்காதவன் சூத்திரன், இதுவே வேதகால பிராமண சூத்திரன் என்பதற்கான பாகுபாடு. (இதிலிருந்து யார் ஞானத்தினாலும் அறிவினாலும் சமூகத்தினை வழி நடத்துகிறார்களோ அவர்களே பிராமணர்கள் எனப்பட்டார்கள் அன்றி பிறப்பினால் வருவதில்லை பிராமணத்துவம், அதை அடையும் பக்குவத்தினை தருவது காயத்ரி சாதனை)


தமிழில் ஸ்ரீ காயத்ரி தேவி தியான ஸ்லோகம்



தமிழில் காயத்ரி தேவியின் தியான சுலோகத்தினை படித்து தியானிக்க விரும்புபவர்களுக்கு சமஸ்கிருதத்தில் உள்ள "முக்தா வித்ரும ஹேம நீல தவளச்சைர்" எனத்தொடங்கும் காய்த்ரி தியான சுலோகத்தின் தமிழாக்கம், இதனை செய்தவர் ஸ்ரீமதி சௌந்தர கைலாசம் அவர்கள். இதுவும் சமஸ்கிருத சுலோகத்திற்கு நிகரானதே! இந்த தியானப் பாடல்களை மனதில் இருத்தி தியானித்து வருவோர் எல்லாவித ஞானங்களையும் கிரகிக்கும் ஆற்றலினைப் பெறுவர்.



தியான பாடல் 

முத்தொடு பவளம் தங்கம் முரண்படு கருமை வெண்மை
இத்தனை நிறங்கள் கொஞ்சும் எழில் முகம் ஐந்து கொண்ட
உத்தமி ஒவ்வொன்றிற்கும் விழிகள் மூன்றுடைய அன்னை
தத்துவ எழுத்து ரூபம் தாங்கிய எங்கள் தேவி
இரண்டு தாமரைகள் சங்கு ஏவு சக்கரம், கபாலம்
மிரண்டவர்க்கபயம், தாளில் விழுந்திடில் வரதம் இன்னும் 
அங்குசம் கயிறு சாட்டை ஆகிய பத்தும் கொண்டே
திங்க்களின் கலைகொள் மௌலித் தேவி காயத்ரி போற்றி!


காலையில் தியானிக்க வேண்டிய காயத்ரியின் ரூபம்
சரஸ்வதி 

ஒளியருள் சூரிய மண்டலத்தின் நடு உள்ளவளை
தெளிவருள் காயத்ரீயை எந்தேவியை சிந்திப்பேனே
சிவந்தவள் விடியும்போது செங்கதிர் நடுவை என்றும்
உவந்தவள் குமரியாக உள்ளவள் அன்னத்தின் மேல் அமர்ந்தவள்
ஜபமாலைக் கை அழகினள் நாவில் "ரிக்: கைச் சுமந்த காயத்ரி
பிரம்ம தேவதைச் சுடரே போற்றி!

பகலில் சாவித்ரீ - துர்கை 

ஒளியருள் சூரிய மணடலத்தின் நடு உற்றவளை
தெளிவருள் காயத்ரீயை என் தேவியை சிந்திப்பனே
வெங்கதிர் நடுவில் வாசம் வெண்ணிறம் காளை மீது
மங்கள சாவித்ரீ ரூபம் மலரெனும் பருவம் நாவில்
பொங்கிடும் யஜூர் வேதம் பொலிந்திடும் கையில் சூலம்
இங்கு காயத்ரீ ருத்ர தேவதை என்பேன் போற்றி!

மாலையில் லஷ்மீ 
ஒளியருள் சூரிய மண்டலத்தின் நடு உள்ளவளை
தெளிவருள் காயத்ரீயை எந்தேவியை சிந்திப்பேனே
கரிதாம் நிறத்தை மூத்த கலைமகள் வடிவை நன்மை
சொரியுமாம் ஒளியிடத்தை சுழலுமாயுதத்தை சென்று 
செரியுமாம் பொழுதில் சாமவேத உச்சரிப்பைக் கொண்ட
கருடவாகனத்து விஷ்ணு தேவதை காயத்ரி போற்றி

காயத்ரி பிரார்தனை

ஓம்
ஒளியினை பதினாங்கெனும் உலகினுக்குதவி ஞான
வெளியில் உலவும் அந்த வெய்யவன் தனக்கும் வற்றா
அளியினால் ஒளியை யூட்டி ஆண்டிடும் பொருளே நல்ல
தெளிவினை தந்து அஞ்ஞான இருளினை தீர்ப்பாய்!


அனைவரும் அன்னையின் அருள் பெற பிரார்த்திக்கிறோம்!

ஸத்குருபாதம் போற்றி!

Wednesday, December 26, 2012

சித்தமும் முற்பிறப்பு சம்ஸ்காரங்களும் (பதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள் 06)

எமது முன்னைய தொடர்களை  வாசித்து விட்டு வரவும்.



சித்தம் எனும் ஆழ்மனம் எமது புறக்கரணங்களாலும் அகக்கரணங்க்களாலும் பெறப்படும் தூண்டல்களை சேமித்து வைக்கும் ஒரு பதிவுக்கருவி என்று முன்னைய பதிவில் பார்த்தோம்.  

இந்தப்பதிவுகளில் இந்தப்பிறவியில் ஏற்பட்ட அனுபவங்கள் மட்டுமல்ல இதுவரை எடுத்த அனைத்துப்பிறவிகளது பதிவுகளும் உள்ளது, ஆக சித்தம் என்பது எமது முற்பிறப்புகளது தொடபுகளை அறிய உதவும் ஒரு HARD DISK கும் தான். 

சிலருக்கு சிலவிடயங்களில் இனம்புரியாத பயம் இருக்கும். அதாவது அந்த பயத்திற்கு வலுவான காரணம் எதுவும் அவர்கள் அறிந்தவகையில் இருக்காது,  ஆனால் பயம் மட்டும் வலுவானதாக இருக்கும். 

அழகான ஒரு ஆண் அழகே இல்லாத பெண்ணை விரும்புவான். 

ஒரு சில வீட்டில் தகப்பனும் மகனும் ஜென்ம விரோதிகள்  போல் இருப்பார். 

அண்மையில் ஒரு புத்தகம் வாசிக்க நேர்ந்தது, அதன் பெயர் "ஆறுமுகக் கடவுள் உரைத்த பூர்வ ஜென்மங்கள்", வழக்கறிஞர் என். ஞானவேல் அவர்கள் எழுதியது, ஆசிரியர் ஆரம்பகாலத்தில் ஆவியுலக தொடர்பாளராகவும் பின்னர் முருகக்கடவுள் அவரூடாக தகவல் தெரிவிப்பதாகவும், அப்படி அவரை நாடி வந்த அன்பர்களில் விசித்திரமான பிரச்சனைகளுக்கு ஆறுமுககடவுள் அதன் காரணம் என்ன என்பதை தெரிவிப்பதற்கு பூர்வ ஜென்ம பாவ புண்ணியங்களை தெரிவிக்கிறார். மிகவும் சுவாரசியமான புத்தகம் இது, இதனை படிப்பதன் மூலம் எமது விடைகாணமுடியாத பல பிரச்சனைகளிற்கு விடை பூர்வ ஜென்ம கர்மங்களில் இருக்கிறது என்பதனையும், நாம் உத்வேகத்துடன் செய்யும் செயல்களுக்கான பதில் விளைவுகளை கடவுளும் நாம் அறியாதபடி எதோ ஒரு பிறவியில், எமக்கு தெரியாதபடி அனுபவிக்க வைக்கிறார் என்பதனையும் உணர்ந்துகொள்ளலாம். 

கடவுள் மனிதனது விடயம் எதிலும் தலையிடாத ஒரு அதியுச்ச பேரறிவு, மனிதன் தன் செய்வதற்குரிய பலனை தானே அனுபவிக்கவேண்டும். இந்த விளையாட்டில் கடவுள் தனக்காக நாம் செய்யும் செயல்களை பதிவு செய்ய ஒதுக்கி வைத்துள்ள பகுதிதான் சித்தம். 

இதன் பதிவுகளுக்கு ஏற்பவே எமது மனதில் விருத்திகள் ஏற்படுகிறது, இந்த விருத்திக்கேற்பவே மேல்மனத்தில் எண்ணங்கள் ஏற்படுகிறது, இதனை இவ்வாறு விளங்கிகொள்ளலாம், எல்லோரும் ஒரு விடயத்தினை ஒரே மாதிரி பார்ப்பதில்லை, பல கருத்து வேற்றுமைகள் காணப்படும், உதாரணமாக ஒரே வகையான மாம்பழம் ஒருவருக்கு மிகவும் விருப்பமானதாக இருக்கும், மற்றொருவருக்கும் பிடிக்காத ஒன்றாக இருக்கும். 

இதைப்போல் பல விடயங்களை நீங்கள் யோசித்தறிந்து கொள்ளலாம், 

இதைப்போல் சித்தத்தில் உள்ள பதிவுகளை சரியான நேரத்தில் தூண்டி விடும் இயக்குனர்கள் தான் கிரகங்கள், குறித்த செயல் நடைபெற வேண்டிய எண்ணத்தினை சித்தத்திலிருந்து வெளிப்படுத்தி செயற்படுத்தும் வேலையினை செய்வது மட்டும்தான் கிரகங்களுடைய வேலையன்றி எந்த கிரகமும் நல்லதும் அல்ல, கெட்டதும் அல்ல! நல்ல கர்ம பிரபாவம் உள்ளவனுக்கு ஏழரை சனிகாலத்தில் அமோக முன்னேற்றம் காணப்படும், தற்போதைய அரை சோதிடர்கள் கூறும் பலங்கள போல் கெட்டவை அல்ல! ஏழரைச் சனி என்பதே கர்மகாரகன் மனக்காரனாகிய சந்திரக்கு முன் வீட்டிலும், சந்திரனுடனும், அடுத்த வீட்டிலு இருக்கும் காலத்தினை குறிப்பதாகும், இதிலிருந்தே நீங்கள் விளங்கி கொள்ளலாம், மனதினூடாக கர்மத்தினை வெளிப்படுத்தும் காலம் தான் ஏழரச் சனி என்பது. சென்ற பிறப்பில் செய்த கர்மங்களில் பலமானவற்றை (அது நல்லதோ கெட்டதோ) சித்தத்திலிருந்து தூண்டி மனதில் செயற்படுத்தும் வேலையினை சனி பகவான் செய்வார். 

இப்படி சித்தத்தில் செயற்பாடு மிக நுட்பமானது, இவற்றையெல்லாம் அறிந்த பதஞ்சலியார் மனிதன் தனது கர்மபிரபாவங்களை கட்டுப்படுத்தி சமாதியினை நோக்கி செல்லும் வழியான யோகம் என்பது சித்தத்தின் விருத்தியினை நிறுத்ததல் என்றார். 

இந்த முதலாவது சூத்திரத்திலேயே யோகத்தின் ஒட்டுமொத்த இலக்கினையும் கூறிவிட்டார், அப்படியானால் அதற்கு பிறகு ஏன் 194 சூத்திரங்களை கூறினார், இதனை இப்படி எடுத்துக்கொள்வோம், நாம் கொழும்பில் உள்ளோம், திருவண்ணாமலை செல்லவேண்டும் எனபதே எமது பயண இலக்கு! அதனை ஒரே எட்டில் தாவி சென்று விடமுடியாதல்லவா! முதலில் பயணத்திற்கு தேவையான ஆயுத்தங்களை செய்ய வேண்டுமல்லவா! அதுபோல் இந்த சூத்திரத்தில் யோகத்தின் இலக்கினை கூறிவிட்டார், இனியுள்ள சூத்திரத்தில் இந்த இலக்கினை அடைவதற்கான பொறிமுறைகள் என்ன? என்னென்ன முன் தயாரிப்புகள் அவசியம்! வழியில் வரும் தடங்கல்கள் என்ன? இதுபோன்றவற்றினை சுருக்கமாக ஆனால் விளக்கமாக கூறுகிறார். 

இத்துடன் பதஞ்சலியாரின் முதல் சூத்திரத்திற்கான எமது புரிதல் முற்றும். 

இது தொடர்பான கலந்துரையாரல்களை எமது முகப்பு நூல் குழுமத்தில் கலந்துரையாடலாம். 

ஸத்குரு பாதம் போற்றி!

Monday, December 17, 2012

சித்த வித்யா - யோக வித்யா - மானச வித்யா போன்ற சித்தர்களின் அறிவுக்கருவூலத்தினை எளிய தமிழில் கற்பதற்கான வழி


எமது பதிவுகளை படித்துவரும் அன்பர்கள் பலர் எமது மின்னஞ்சலுக்கு தொடர்பு கொண்டு சித்தர்களின் வித்தைகளை கற்பதற்கு வழிகாட்டும் படி கேட்டவண்ணம் இருக்கிறார்கள். "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற திருமூலர் வாக்குக்கமைய நாம் எமது குருநாதரிடம் கற்றவற்றை ஆரவமுள்ள அனைவரும் கற்று பயன்பெற இந்த வலைப்பதிவில் பதிந்து வந்தோம். ஆனாலும் நாம் முழுநேரம் இந்த தொண்டில் ஈடுபடமுடியாதவண்ணம் நளாந்த மற்றைய கடமைகள் அதிகரித்தவண்ணம் உள்ளன, பல கட்டுரைகள் முழுமையடையாமல் பாதியில் நிற்கின்றன. ஒரு பதிவு எழுதுவதற்கு கணிசமான அளவு நேர அவகாசம் தேவை. இப்படியொரு நிலையில் எமது பதிவுகளை படித்து மானச, யோகசாதனை செய்யவேண்டும் என எண்ணும் அன்பர்களுக்கு உதவுவதற்கான வழி என்ன என்று சிந்தித்த போது குருநாதர் ஒரு எண்ணத்தினை மனதில் உதிப்பித்தார். அதன் படி எமது பதிவுகளை படித்து சித்தர் வழியில் சாதனை புரிய வேண்டும் எனற் தீராத்தாகம் உடைய அன்பர்களுக்கு இங்கு முன்மொழியப்படும் வழிமுறை உதவுவதாக இருக்கும். அது என்ன?

எந்த ஒரு விடயத்தினை கற்பதற்கு சுயபடிப்பு அவசியம், ஏன் எமது குருநாதரும் சரி, அவருடைய குருநாதரும் சரி ஒரு வித்தையினை கற்பிப்பதற்கு முன்னர் அதற்குரிய அடிப்படை கொள்கைகளையும், செய்முறைகளையும் பாடங்களாக எழுதி கொடுத்துவிடுவார்கள், அவற்றை நாம் மீண்டும் மீண்டும் கற்று ஆழ்மனதில் பதிப்பித்துகொண்ட பின்னரே அதனை பயிற்சி செய்யவேண்டும். ஆக இந்த வித்தைகள் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் இந்த சுய கற்றலை செய்தல் அவசியமாகும்.

இப்பொழுது உங்கள் மனதில் "சரி நாங்கள், கற்கிறோம், ஆனால் அவற்றினை தருவது யார்?" என கேள்வி எழுவதை நாம் உணர்கிறோம், அதற்கான பதில் "ஆம், எமது குருநாதர் எழுதிய பாடத்தொகுப்புகள் அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் உள்ளது, ஆர்வம் உடைய யாரும் பெற்றுக்கொள்ளலாம். விருப்பமானவர்கள் இந்த மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த பாடத்தொகுப்புகளில் உள்ளடங்கிய பாடங்கள் என்ன?

1. காயத்ரி குப்த விஞ்ஞானம்: இந்த பாடத்தொகுப்பு காயத்ரி மந்திர தீட்சை பெற விரும்பும் சாதகனுக்கு போதிக்கப்படுவது, காயத்ரி சாதனையின் அடிப்படையில் இருந்து, காயத்ரி பிரணாயாமம், காயத்ரி தியானம், காயத்ரி மூலம் குண்டலினி விழிப்பு, காயத்ரி யாகசெய்முறை போன்ற விளக்கங்கள் எளியதமிழில் பாடங்களாக  வகுக்கப்பட்டிருக்கின்றன. இதனை கற்று பயிற்சி செய்யும் ஒருவர் காயத்ரி சாதனையின் மூலம் பல பௌதீக, ஆன்மீக நன்மைகளை பெறும் வழிகளை அறிவார்.

2. எளிய ராஜயோகப்பயிற்சிகள்: பதஞ்சலி யோகம் கூறும் அஷ்டாங்க யோகமான இயம,நியம, ஆசன, பிரணாயாம, பிரத்தியாகார, தாரணை, தியானம், சமாதி ஆகியவற்றினை மிக எளிய முறையில் சாதிக்கும் எளிய பயிற்சிகள் அடங்கிய பாடத்தொகுப்பு.

3. இரகசிய வித்யா சாதனை பயிற்சி: குப்த வித்தை என சித்தர்களால் தமது சீடர்களிற்கு கற்பிக்கப்பட்ட அரிய ஞானம், மொத்தம் 23 பாடங்கள், உள்ளடக்கம் வருமாறு: வரவேற்பும் உறுதியும், வித்தியயின் பழமை, பிரபஞ்ச மூலம், பரபஞ்சம் உணர்வுமயம், நினைப்பின் தத்துவம், எண்ணத்துருவங்கள், மன அலையின் செயல்முறை, மூன்று மனங்கள், சாதனை வகைகள்,சாதனைப்பண்பு, இரகசிய வித்யா தளர் சாதனை, இரகசிய வித்யா பிரணாயாமம், சூனிய தாரணை, மனப்பார்வை வளர்ச்சி, மனக் கருத்து வாக்கியங்க்கள், சாதனை தேர்வு, சாதனைக்குறிப்புகள், உடல் சாதனைகள், ஆக்கப்பேறுகள், செழிப்பு சாதனைகள், மனத்தொடர்பு சாதனைகள், கால ஞான சாதனைகள், சூஷ்ம சாதனைகள், முடிவுரை.

4. எளிய தியானப்பயிற்சிகள்: இதில் அடங்கும் பாடங்கள், தியானம் என்றால் என்ன? தியானத்தின் பலன், தியானமும் மனமும், தியானமும் தாரணையும், தியானம் செய்வதற்கான நியமங்கள், தியானத்தேர்வு, உடல் உறுப்பு தியானம், அறாதார விழிப்பு தியானம், காய்த்ரி தியானம், குண்டலினி தியானம், பக்தி தியானம், பிரணவ தியானம், உள்முக தியானம், செயல் தியானம், பிரம்ம லய தியானம்

5. இருதய நோய்க்கு யோக சிகிச்சை: மானச, யோக, சித்த மருத்துவத்தின் மூலம் இருதய நோயினை குணப்படுத்தும் வழிமுறைகள்.

6. ஆண்மை சக்தியிற்கு யோகப்பயிற்சிகள்: மானச, யோக, சித்த மருத்துவத்தின் மூலம் ஆண்மை சக்தியினை பெறும் பயிற்சிகள்.

இப்படி பல நூறு தலைப்புகளில் பாடங்கள் உண்டு, ஆர்வமுடையவர்கள் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்,

இவற்றை பெற்று நீங்களாகவே கற்றுக்கொண்டு இதுதொடர்பான கருத்துப்பரிமாறல்களை கீழ்வரும் சித்த வித்யா விஞ்ஞான முகப்புநூல்  குழுமத்திலும், எமது FACEBOOK கணக்கிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவற்றை எழுதியவர் யோக மஹாரத்னா, டாக்டர். பண்டிட், ஜீ. கண்ணைய யோகியார், அவரது வரலாறு இங்கு காணவும்.

அடுத்த பதிவுகளில் நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய மற்றைய பாடங்களின் விபரங்களைக் குறிப்பிடுகிறோம்.

உலகம் அறிந்திராத ஒரு உன்னத யோகி!


இந்த கட்டுரை எமது குருவின் குருவாம் ஸ்ரீ கண்ணைய யோகியாரின் சீடராகிய அருள் திரு ராஜயோகி ராஜமோகன் ஐயா அவர்கள் தன் குருவின் வாழ்க்கை சுருக்கம் பற்றி  எழுதியது, எமது வாசகர்கள் அறிந்து கொள்ள இங்கே பகிர்கிறோம். 

 - சுமனன் -


குரு வந்தனம்

ஓம் ஆனந்த மாநந்த கரம் பிரசன்னம்
ஞான ஸ்வருபம் நிஜபோத ரூபம் யோகிந்தர மீட்யம்
பவரோக வைத்யம் ஸ்ரீ சத்குரும்
நித்யம் பஜாமி



காவி உடுத்திடாமல் கமண்டலம் எடுத்திடாமல்
காட்டிடை அலைந்திடாமல் காணலிடை நலிந்திடாமல்
பூவுலகம் தன்னை சுத்த பொய் என்றும் புகன்றிடாமல்
புறத்தொரு மதத்தினோரைப் புண்பட பேசிடாமல்
சேவைகள் செய்தற்போதும் தெய்வத்தை தெரிவோம் என்று
தெளிவுற காட்டினாய் உன் தினசரி வாழ்கைதன்னால்
தீவினை இருட்டை போக்கி ஜகமெல்லாம்
விளங்கும் ஆன்மிக யோக ஞான தீபமே
ஸ்ரீ கண்ணைய தேவனே போற்றி போற்றி போற்றி

வாழ்க்கை வரலாறு
யோகி ஸ்ரீ கண்ணையன் அவர்கள் குருசுவாமி தம்பதியினர்க்கு 29-05-1882 அன்று கோயம்பத்தூரில் அவதரித்தார். சிறு வயதிலேயே கடவுளை காண வேண்டும் என ஏக்கம் கொண்டிருந்த அவரை நீலமலை காடுகளின் நடுவே தனது ஆஸ்ரமத்தை அமைத்து கொண்டிருக்கும் ஸ்ரீ அகஸ்திய மாமஹரிஷி அவர்கள் ஆட்கொண்டார். கண்ணையனை தனது பிரதிநிதி மூலம் நீலமலையில் தனது ஆஸ்ரமதிற்கு அழைத்து வர செய்தார் .

18 ஆண்டுகள் அகத்திய மகரிஷியலும் புலிப்பாணி மகரிஷியலும் நான்கு வேதங்கள், 96 தத்துவங்கள், எல்லா மொழிகளின் வடிவ, ஒலி ரகசியங்கள், யந்திர, தந்திர , மந்திரங்கள் ஆக 64 கலைகள், அஷ்டமசித்திகளின் பெருக்கமான 512 சித்திகள் மகரிஷிகளால் கற்பிக்கப்பட்டது. அவருக்கு அளித்த அத்தனை பயிற்சிகளும் நேர்முக அனுபவ பயிற்சி.

கண்ணையன் மூலம் எண்ணற்றவர்கள் பூலோகத்தில் ஆன்மீக வளர்ச்சி பெற காத்து கொண்டிருக்கிறார்கள் என அகஸ்திய மகரிஷி அகக்கண்ணுற்றார். ஆதலால் அவரை பூலோக வாழ்கையை மேற்கொள்ளுமாறு கட்டளையிட்டார். ரிஷி பிரதிநிதி மூலம் மறுபடியும் கோயம்பத்தூரில் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தாய் தந்தையின் வற்புறுத்தலுக்கு இணங்க திருமணத்திற்கு தலை அசைத்தார்.இரு மகவுகளுக்கு தந்தையுமானார். குடும்பத்தோடு சென்னை மாநகரத்தில் உள்ள சூளைக்கு இடம் பெயர்ந்தனர். திடீரென தந்தை இறக்கவே தனது தந்தையின் தொழிலான நாடி ஜோதிடம் செய்ய நேரிட்டது. காலச்சக்கர வசத்தால் குருநாதரின் தாயார், துணைவியார் இருவரும் இவரை பிரிந்து விண்ணுலகம் சென்று விட்டனர்.

தனக்களிக்கப்பட்ட பணியான யோக வித்தையை உலகெங்கிலும் பரப்ப அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. தனது இரு மகவுகளை பேணி காக்க வேண்டி இருந்ததால் தனது குருநாதரின் அறிவுரையின்படி இரண்டாவது மணம் நடந்தேறியது. வாழ்கையில் எல்லா பொறுப்புகளையும் இனிதே நிறைவேற உதவியவர்கள் இவரது சீடர்களும் மாணவர்களும் தான்.

பௌதீக வாழ்கையை தொடர ஆசிரியர் தொழிலை மேற்கொள்ள முடிவு செய்து பண்டிட் பட்டம் பெற முற்பட்டார். பச்சையப்பன் கல்லூரியில் பண்டிட் தேர்வுக்கான வகுப்பை ஓர் வைணவ ஆச்சாரியார் நடத்தி வந்தார். தன்னையும் தேர்வுக்கு பயில்விக்க கண்ணையன் அவரை வேண்டிய பொழுது , இராமாயண இதிகாச வகுப்பை நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் , "உன்னால் பண்டிதன் ஆக முடியாது" என் கடும் சொற்களால் சாடி வெளியே போகுமாறு கூக்குரலிட்டார். மறுநாளும் ஆச்சரியாரை நாட அதே கடும் சொற்கள் மீண்டும் ஒலித்தது. கண்ணையன் மௌனமாக வெளியே நின்று கொண்டிருந்தார். ஆசிரியர் தான் நேற்று நடத்திய கம்ப ராமாயணத்தின் விளக்கத்தை கேட்க அனைத்து மாணவர்களும் பதில் கூறாது விழிக்க, ஆசிரியரின் கண்கள் சிவந்தன. இத்தருணத்தில் கதவருகில் நின்ற கண்ணைய யோகி "நான் சொல்லட்டுமா ?" என்று பணிவுடன் கேட்டார். சினத்தின் எல்லையில் இருந்த ஆச்சாரியார் கொதித்தெழுந்து " நீயா..? சொல்லு.. சொல்லு பார்க்கலாம் .." என்று கர்ஜித்தார். கண்களை மூடிய வண்ணம் ஞான ஒளி கண்டு கம்பராமாயண செய்யுட்களை வரி பிசகாமல் அப்படியே மடை திறந்த வெள்ளம் போல் செப்பி முடித்தார். ஓடி வந்து கண்ணையனை கட்டி பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்தார் ஆச்சாரியார். தேர்வுக்கான கட்டணத்தை தானே ஏற்று தன் மாணவனை "பண்டிட்" ஆக்கினார்.

ரிக் முதல் அதர்வண வேத மந்திரங்கள் மற்றும் இதிகாச, புராண சம்பவ நிகழ்சிகளின் போது அருளப்பட்ட ஸ்தோத்திரங்கள், உயிரினங்களின் உள்ளும் புறம்பும் அண்டத்தில், ஆகாயப்பரப்பில் ஒலியலையென செய்யும் ஜால வித்தைகள் , ஆரம்ப கீர்வனத்திலிருந்து , எல்லா மொழிகளிலும் புதைந்து கிடக்கும் ரகசியங்களை தன் நூல்களில் சொற்பொழிவுகளில் வெளியிட்டவை ஏராளம். ஓர் ஓரின எழுத்து முதல் எழுத்து கோர்வைகளை ஓத செய்து தன் மாணவ சீடர்களுக்கு அவற்றின் வடிவம், சக்தி, நிறம், அலைகழிவு, ஆர்ப்பாட்டம் போன்ற விஞ்ஞான விளக்கங்களை பரிசோதனை வாயிலாக ஆக்கபூர்வமாக அறியச்செய்த தெய்வான்மீகர் இவர்.

அன்றாட வாழ்கையில் காலையில் கண் விழித்தது முதல் பல் தேய்க்க, நாவை வழிக்க, உத்தியோக உயர்வு, வியாபாரம் சிறக்க, அகால மரணம் தவிர்க்க, அறிவு வளர , ஆயுள் நீள, ஆர்வம் நிலை பெற, கடன்கள் மறைய, உறவு - பகை மாற, எண்ணும் காரியங்களில் வெற்றி பெற, எஜமானர்களின் மதிப்பை பெற, ஏவல் தோஷங்கள் மறைய , கெடுமதி ஆவிகள் ஓட, பயம் நீங்க, கர்ப தோஷங்கள் அகல, கர்ப்பம் உண்டாக-ரட்சிக்க, கல்யாணம் ஆக, தொலைந்து போனவர்களை - போனவைகளை மீட்க, கீர்த்தி உண்டாக, கெட்ட கனவுகள், குணங்கள் மாற, கிரக பீடைகள் நீங்க, அருள் பெற, செல்வம் பெற, சௌபாக்கியம் உண்டாக, கணவன் மனைவி அன்புடன் வாழ, கீர்த்தி பெற, ஞானம் பெற, ஆன்மிக தடைகள் நீங்க, பாண்டியத்துவம் பெற, பாவங்கள் விலக, ஊர்வன பயம் நீங்க, மழை வரவழைக்க-தடுக்க, பலம் பெற செப்பிடும் மந்திரங்கள் - பௌதீக இன்ப வாழ்க்கைக்கு ஏதுவான இது போன்ற முடிவில்லா நீண்ட கலியுக சித்திகளின் வானுயர்வு அடுக்கு மாடி மந்திர கட்டடத்திற்கு சொந்தகாரர் இவர் என்றால் மிகை ஆகாது.


காஞ்சி காமாட்சி அம்மனின் அருளாசி பெற்று காஞ்சியின் கண் கண்ட தெய்வமாக விளங்கிய ஸ்ரீ சந்திரசேகர பரமாச்சாரியாரை பல்லக்கில் அமரச்செய்து அம்பதூரிலிருந்து குருநாதரின் வீட்டை கடக்கும் கணத்தில் " நில்லுங்கள்" என்று பல்லக்கை சுமந்த பக்தர்களிடம் கூற, அவருடைய தீர்கப்பார்வை குருநாதரின் பூஜை அறையை நோக்கி சென்றது... இது வீடு அல்ல.. சாட்சாத் அம்பாள் அருள் பாலிக்கும் ஆலயம் எனக்கண்டார். மானச வழிபாட்டிற்கு பின் , சிறிது நேரம் கழித்து தன் பயணத்தை தொடர்ந்தார். தன் தெய்வான்மீகபணிகளை முடித்து பரமாச்சாரியார் திரும்பிய வேளையிலும் இதே காட்சி நீடித்தது. பூஜை அறையில் இருந்த குருநாதரும் பரமாச்சாரியாரின் சக்தி தரிசனத்தை உணர்ந்தார். இவர்கள் தெய்வ கடாட்சம் எங்கெல்லாம் நிறைந்திருக்கிறது என உணர்ந்தவர்கள்.

நமது குருநாதரின் பிரதம சீடர்களில் ஒருவரான சிறப்பு தீட்சை பெற்ற திரு ஆர் .கே. முருகேசு, ஸ்ரீலங்கா அவர்கள், பௌர்ணமி தியானம் முடிந்து மொட்டை மாடியில் (குரு நாதர் அங்கேயே இருந்ததால் குளிரையும் பொருட்படுத்தாது ஓர் ஓரத்தில் உறங்க ஆரம்பித்தார். திடீரென்று "தெய்வ ஒளிக்கதிர்கள் அவர் கண்களில் பாய்ந்தன. யாரும் காண முடியாத கந்தர்வ காட்சியை கண்டார். ரிஷிகள் கூட்டம் நம் குருநாதரின் முன் அமர்ந்திருந்தது. ஏதோ ஒன்றினை காண்பித்து விளக்கம் கேட்க, ஸ்ரீ கண்ணைய தேவன் பதிலுரைத்துகொண்டிருந்தார். ரிஷிகளின் தரிசனம் அவர்களின் ஞான ஒளி கிரணங்கள் இவருக்கு அருள் பாலித்து கொண்டிருந்ததன. அவர் தான் பின்பு ஸ்ரீலங்காவின் ஆன்மிக அரசாக விளங்கிய சுவாமி ஆர்.கே.முருகேசு . மக்கள் கூட்டத்தை அகர்ஷணிக்கும் ஸ்ரீலங்காவின் தெய்வான்மீக விடிவெள்ளியாக பிரகாசித்தார்.

மும்பையில் நடை பெற்ற அகில உலக யோகியர் மாநாட்டில் யோகம் குறித்து நீண்டதொரு சொற்பொழிவாற்றினார். பாண்டிச்சேரியில் வாழ்ந்த சுவாமி கீதனந்த நடத்திய அகில உலக யோகியார் மாநாட்டில் " யோகா மகாரத்னா" என்ற பட்டதை நமது குருநாதருக்கு அளித்து பெருமை சேர்த்து கொண்டது.


ஒரு சமயம் சென்னை திருமுல்லைவாயிலிலுள்ள ஈஸ்வரன் கோவிலில் உச்சிகால பூஜை நடந்து கொண்டிருந்த போது சிவனுக்கு நெய்வேதியம் முடிந்ததும் அதனை சிவனடியார்க்கு கொடுப்பது கட்டாய வழக்கம். அன்று இராமலிங்க அடிகளார் தனது சீடர்களுடன் அங்கே வர நெய்வேத்தியம் சீடர்களுக்கு கொடுக்க படவில்லை. சீடர்களின் பசியை போக்காததால் அடிகளார் கோவிலுக்கு சாபமிட்டார். பிற்காலத்தில் அவ்வூர் மக்கள் நம் குருநாதரை அணுகி பாவ விமோசனம் செய்விக்கப்பட்டு அக்கோயில் புத்துயிர் பெற்றது.


"ஏகம் சத்" என்ற பரம்பொருள் ஒன்றிருக்க, குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருக்கும் கிரஹஸ்தர்களும் எல்லா தேவ தேவியர்களிடமிருந்து அருள் பெரும் ரகசிய முறைகளை அவரவர்களுக்கு தகுந்தபடி ஆக்கி கொடுத்தார். அது மட்டுமல்ல தன தாய் மாமனுக்கு திருப்தி வேங்கடஜலபதியை நேர்முக தரிசனம காண செய்தவர்.

நீலகிரி மலைகாடுகளிருந்து திரும்பி வந்த சமயம், நமது சுவாமிகள் சென்னைக்கு வர வேண்டியிருந்தது. பௌதீக உலகில் இயங்கும் புது கண்டுபிடிப்புகள், அவற்றின் இயக்கங்களை, தான் கற்ற வித்தைகளுடன் நேர்முகமாக ஒப்பிட்டு கொள்வது அவரின் இயல்பாக இருந்தது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்று நீராவி ரயில் இஞ்சின் எவ்வாறு இயங்குகிறது என்று பார்க்க முற்பட்டார். அவ்வமயம் எஞ்சின் இணைக்கப்பட்டு ஒரு ரயில் வண்டி தொடர் பிளாட்பாரத்திலிருந்து புறப்பட தயார் நிலையில் இருந்தது. (பிளாட்பார அனுமதி சீட்டு அந்நாளில் வழக்கு முறையில் இல்லை) பயணசீட்டு பரிசோதகரை அணுகி, தான் பிளாட்பாரம் சென்று ஓரிரு நிமிடங்களில் இன்ஜினை பார்த்து விட்டு வந்து விடுவதாக வேண்டினார். அதற்கு பயணச்சீட்டு பரிசோதகர் அவரை கடும் சொற்களால் பேசி அவரை வெளியே நிற்க வைத்துவிட்டார். . அங்கேயே நின்று கொண்டிருந்த சுவாமிகள் விண்ணப்பித்து கொண்டே இருந்தார். பத்து நிமிடங்கள் ஆயின. கார்ட் விசில் கொடுத்து பச்சை கொடியை காட்டினார். ரயில் புறப்பட ஆரம்பித்தது. சுவாமிஜியின் பார்வை இன்ஜினை நோக்க இஞ்சின் இயக்க நிலையை இழந்தது. ஆம் இரயில் நின்று விட்டது. இஞ்சின் டிரைவர் எவ்வளவு முயன்றும் வண்டி ஓடவில்லை. நிலைய அதிகாரிகள், மெகானிக்குகள் ஓடி வந்து இன்ஜினை இயக்க முற்பட்டார்கள். முடியவில்லை. இந்த காட்சி 30 நிமிடங்கள் தொடர்ந்தது. சுவாமிஜி டிக்கெட் பரிசோதகர் அருகிலேயே நின்று கொண்டிருந்தார் . இந்நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த ரயில்வே நிர்வாக ஊழியர் ஒருவர் சுவாமிஜியை நோக்கினார். இவர் ஒரு சாதாரனமானவர் இல்லை என்று உணர்ந்து, டிக்கெட் பரிசோதகரை அணுகி, பிளாட்பாரத்தில் அனுமதிக்குமாறு வேண்டினார். டிக்கெட் பரிசோதகரும் அனுமதிக்க, இன்ஜினின் இயக்கத்தை கண்டபின் மனக்கட்டுப்பாட்டை தளர்த்தினார். இன்ஜினும் இயங்க ரயிலும் புறப்பட்டது. பின் தான் தங்கி இருந்த அறையை அடைந்ததும் கோபக்கனல் தெறிக்க குருவின் தரிசனம் கிடைத்தது. இவருடைய சித்து விளையாட்டை உணர்ந்த புலிப்பாணி மகரிஷி " சித்தா விளையாடினாய் ? உன்னால் 30 நிமிடங்கள் ரயில் வண்டி தாமதமாக சென்று அடையும். அதனால் மக்கள் அவதிக்கு உள்ளாவார்கள்" என்று கண்டித்து " இனி சித்து விளையாடுவதை நிறுத்து" என்று ஆணையிட்டார்.

இது போன்று இன்னும் குருநாதரின் வாழ்கையில் ஏற்பட்ட ஏராளமான அற்புத நிகழ்வுகள், அவரது யோகா, ஞான, மூலிகை பயிற்சிகள், மந்திர, யந்திர, வித்தைகள், அவரது புத்தக தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

02-12-1990 அன்று - கார்த்திகை மாதம் ஞாயிற்று கிழமை, பிரம்ம முகூர்த்தத்தில், பௌர்ணமியில் அண்ணாமலை கார்த்திகை தீப திருநாளில். உடலில் இருந்து நிரந்தரமாக வெளி வந்து , மாலை சந்தியா காலத்தில் அம்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை மகா தீபம் நோக்கி, ரிஷிகள், சித்தர்கள், யோகிகள், தண்ணொளி ஈந்து முன் செல்ல, தேவர்கள், கண நாயகர்கள் பின் தொடர்ந்து பொற்கமலங்கள் தூவிய வண்ணம் புகழ் பாடி அழைத்து சென்று விட்டனர். இவர் பயன்படுத்திய அனைத்து பொருள்களும் இன்றும் சபையில் இருக்கிறது. இவர் ஒரு ஜீவன் முக்தர். தன்னை நினைக்கும் பக்தர்களுக்கு எல்லா உலகங்களிலும் காட்சி தந்து, அருளும் வரம் நல்க பெற்றவர். பக்தி சிரதையுடன் வழிபடுங்கள். அருள் கிட்டும். இராமாயண சுந்தர காண்டத்தை , சுவாமிஜி அருளிய விளக்கம் நல்கிய " பிரம்ம ப்ராப்தி" யை ரிக்-யஜுர்-சாம வேதத்தில் அருள் கேட்கும் மந்திரங்களை பாராயணம் செய்தால் என்ன பேறுகள் கிட்டுமோ அதே பேறுகளை உத்தம உண்மை யோகியாரின் சரிதத்தை படிப்பவர்களுக்கும் கிடைக்க என் தெய்வ குருநாதரையும், ஸ்ரீ காயத்ரி தேவியையும், ஸ்ரீ ராஜா ராஜேஸ்வரியையும் இரு கரங்கூப்பி , மனமார வேண்டுகிறேன்.

 - ராஜயோகி ராஜமோகன் - 

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

    15-ஜனவரி-2024 பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02 இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்: சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வ...