முந்தைய பகுதிகள்:
பகுதி - 01
**********************************************
சென்ற பதிவில் எனது தந்தையார் அகத்திய மகரிஷியை குருவாக வணங்கச்சொல்லியதுடன் எனது ஆன்மீகப்பயணம் ஆரம்பமாகியது எனலாம். அத்துடன் சுவாமி விவேகானந்தரின் இலக்கியங்கள் படிக்க கிடைத்தது மிக முக்கியமான தாக்கம் என்று எண்ணுகிறேன். அவற்றுள் நான் படித்த இன்று வரை ஞாபகத்தில் உள்ள கருத்து கல்வி பற்றி சுவாமி விவேகானந்தர் கூறியது. உண்மையான கல்வி என்பது மனதை ஒருமைப் படுத்தக் கற்றுக்கொள்வதும், மனதைப் பற்றியது என்ற கருத்து எனது மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
மனதைப் பற்றி பாடசாலையில் எதுவும் சொல்லித்தரப்படவில்லை என்பதால் எனது தேடல் வாசிப்பிலேயே இருந்தது. விவேகானந்தரின் ராஜ யோகம் பெரிதும் உதவியது. எனினும் அதைப்பற்றி அனுபவமாக உணர்ந்த எவரும் கிடைக்கவில்லை. ஆகவே எனது கேள்விக்கான பதில்கள் புத்தகங்கள் அளவில் கிடைத்துக்கொண்டிருந்தது.
இப்படி இருக்கும் போது ஸ்ரீ காயத்ரி சித்தரின் சிறிய நூற்கள் மிகவும் தெளிவாகவும் அதேவேளை யதார்த்தமாகவும் இருப்பதைக் கண்டு மிகவும் விரும்பிப் படித்துவிட்டு அந்தப்புத்தகங்களில் இறுதியில் இருக்கும் பயிற்சி வகுப்புகள் பற்றி ஆர்வம் கொண்டு சுவாமிக்கு ஒரு கடிதம் எழுதினேன். அந்தக்கடிதத்திற்கு பதில் கீழ்வருமாறு வந்தது,
அமராத்மாவே வாழ்க! வளர்க! வளம்பெறுக!
இத்துடன் ஜெபசக்தியேற்றிய அருள் பிரசாதம் இருக்கிறது. ஏழு நாட்களுக்கு சுத்தமாயிருந்து பக்தி விசுவாசத்துடன் காலை மாலை உங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்து இதை நெற்றியில் இட்டு வாருங்கள்.
எங்கும் நிறைந்து அணுவுக்குள் அணுவாய் எல்லா உயிர்களின் உள்ளும் சைதன்ய வடிவமாய் நிறைந்து இயங்கும் அன்னை ஸ்ரீ காயத்ரி தேவி உங்களுக்கு அருள் செய்யட்டும் அன்பு செய்யட்டும்!
அருள் பெறுக! அகம் மலர்க! ஆனந்தம் காண்க!
காயத்ரீ சித்தர்
ஆர். கே. முருகேசு
ஸ்ரீ காயத்ரி பீடம்
நுவரெலியா
இது கிடைத்தது ஒரு நவராத்ரியிற்கு சிறிது நாட்களுக்கு மூன்னர், ஏற்கனவே சுவாமிகளில் ஸ்ரீ காயத்ரி மந்திர மகிமை புத்தகம் வாசிக்கத்தொடங்கி விட்டதால் காயத்ரி மந்திரம் மனப்பாடமாகியிருந்தது. இந்த விபூதிப்பிரசாதத்தை நெற்றியில் இட்டுக்கொண்டு அந்த நவராத்ரியில் இருந்து காயத்ரி மந்திரம் ஜெபிக்கத்தொடங்கினேன்.
அன்றிலிருந்து இன்று வரை எனது காயத்ரி சாதனை தொடர்கிறது. சுவாமிகளின் தொலைபேசி இலக்கம் கிடைத்தது. அழைத்துப் பேசும் பொழுது நேரில் வாங்கப்பா கத்துக்கலாம் என்று மாத்திரம் சொன்னார்.
ஆனால் எனக்கு அப்போது 14 வயது, பாடசாலையில் படித்துக்கொண்டு இருக்கிறேன். சுதந்திரம் இல்லை! கண்டிப்பான அம்மா! ஆகவே சுவாமிகளிடம் போவதற்கு வாய்ப்பு இல்லை! நான் வசித்த இடத்தில் இருந்து நூறு கிலோமீற்றர் தூரம் தள்ளி சுவாமிகளின் வசிப்பிடம் இருந்தது!
எனவே எனக்கு அப்பா காட்டித்தந்த அகத்தியர் மகரிஷி இஷ்ட தெய்வமாக அகத்தியர் மந்திரமும், அப்பாவிற்கு போட்டியாக மனோன்மணி அகவலும், காயத்ரி மந்திரமும் நித்திய உபாசனையாகியது! தினசரி காலையில் எழுந்து பாடசாலைக்கு செல்வதற்கு முன்னர் இதைப் பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொண்டேன்.
படிப்பில் பெரிதாக ஆர்வத்துடன் படித்தவன் என்று இல்லை, இயல்பாகவே வாசிப்பில் இருந்த ஆர்வமும், மன ஒருமைப்பாடும் படிப்பை இலகுவாக்கியது என்று கூறலாம். விஞ்ஞானம் மிகப்பிடித்த பாடம், தமிழும் சைவ சமயமும் படிக்காமலே விடை கூறும் அளவிற்கு வாசிப்பு இருந்தது! சித்திரமும் ஆங்கிலமும் சற்று மனவிரும்பம் இல்லாத கடினமான பாடங்கள்! எப்படியோ பரீட்சைகளில் அதிக முயற்சி இல்லாமல் நல்ல புள்ளிகளைப் பெறக்கூடிய திறமையுடையவனாக இருந்தேன்.
எனது மனதிற்குள் எப்போது சுவாமிகளை காண்போம் என்ற தாகம் உள்ளே கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது! ஆனால் சிறியவனாகிய எனக்கு சுதந்திரமாக செயற்பட வாய்ப்பில்லை!
இதற்கிடையில் சில சன்னியாசிகளை சந்திக்கும் வாய்ப்பு இருந்தாலும் எவரும் ஆழ்மனத்தில் எனக்கு குரு என்ற ஸ்தானத்தில் பொருத்திப் பார்க்க முடியாதவர்களாக இருந்தார்கள்.
சிறுவயதிலிருந்து எதையும் வெறுத்து ஒதுக்குவதை ஒரு பயந்தாங்கொள்ளித்தனமாகவே நான் எண்ணினேன். எதையும் பற்று இல்லாமல் துறக்க வேண்டும் என்றால் அதை நான் அடைந்திருக்க வேண்டும். இல்லாமல் அது துன்பம் பயக்கும் என்று விலகுவது கோழைத்தனம் என்ற எண்ணம் இருந்தது.
சிறுவயதி அதிகம் அம்மாவிடம் குழப்படிக்காக (குறும்பிற்காக) அடி வாங்கிக்கொண்டே இருப்பேன்.
வீட்டில் இருக்கும் உபகரணங்கள் எல்லாவற்றிற்குள்ளும் அவை எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக கழற்றி துண்டு துண்டாக்கி விடுவேன், பின்னர் அதை சரியாக பூட்டுவதற்கு தெரியாது! இறுதியில் அம்மாவிடம் அடி வாங்குவதில் முடியும்!
சிறுவயதிலிருந்து ஒரு காரியத்தை எடுத்தால் எனக்கு திருப்தி வரும் வரை விடாமல் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் எனது அடிப்படைக் குணங்களில் ஒன்று! மேலும் எனது எண்ணத்திற்கு தடையாக வருபவற்றை விலகிவிட்டு இலக்கினை நோக்கி முன்னேற வேண்டும் என்ற உத்வேகத்துடன் முன்னெறும் இயல்பு இருந்தது.
இப்படியாக எனது 15 வயதை கடக்கும் போது எனது சுவாமிகளைக் காணவேண்டும் என்ற தீராத ஆவலுக்கு விடைகிடைத்தது. அந்த நிகழ்வு வெளி நாட்டில் வசிக்கும் எனது சித்தியின் வருகையால் நடைபெற்றது. எல்லோரும் குடும்பமாக சுவாமிகள் வசிக்கும் நுவரெலியா நகரத்திற்கு சுற்றுலா சென்றோம். ஆனால் குடும்பத்தினரின் தெரிவு சீதா எலிய, ஹக்கல பூந்தோட்டம் என்று இருந்தது, சுவாமிகளில் கோயில் இருக்கவில்லை! நானோ சிறு பையன் பெரியவர்களின் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்ய முடியாது! ஆகவே பொறுமையாக மனதிற்குள் ஆர்வத்தை அடக்கிக் கொண்டு பயணத்தில் கலந்து கொண்டேன். மனதிற்குள்ளே சுவாமிகளைக் காண்பதைத் தவிர வேறு எண்ணம் எதுவும் இருக்கவில்லை! கட்டாயம் சுவாமிகளை காண்போம் என்று உறுதியாக எண்ணினேன். எனினும் எனது விருப்பத்தை வெளிக்காட்டவில்லை.
ஒருவாறு காலையில் ஹக்கலைப் பூங்கா சென்று நண்பகல் உணவருந்தி விட்டு ஒரு மணியளவில் சீதா எலிய சீதையம்மன் கோவில் சென்று கீழே இருக்கும் அனுமார் பாதத்தைப் பார்த்து நீராடிக்கொண்டு இருக்கையில் மெதுவாக அம்மவிடம் சென்று சுவாமிகள் இருக்கும் காயத்ரி கோயிலைப்பற்றிச் சொல்லி எல்லோரும் செல்வோமா என்று விண்ணப்பம் கேட்டேன்.
எனது அம்மா பிள்ளைகளின் ஆசைக்கு எப்போதும் குறுக்கே நிற்காத எங்களுக்காக வாழும் ஒரு அபூர்வ பிறவி! கேட்டதுதான் தாமதம் உடனடியாக போகலாம் என்று சித்தி, மாமா எல்லோருக்கும் சொல்லி விட்டார்.
பகல் இரண்டு மணி அளவில் நுவரெலியா லேடி மெக்கலம்ஸ் ட்ரைவ் இல் இலங்கையின் அதியுயரமான மலையான பீதுருதலாகலை மலை அடிவாரத்தில் அமைந்திருந்த காயத்ரி பீடத்திற்கு சென்றோம்!
அங்கு அவ்வளவு நாள் நான் காத்திருந்த அந்த அபூர்வ நிகழ்வு நடந்தது!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.