சிந்தையைத் தூண்டும் கருத்தை விதைத்த அண்ணன் மருத்துவர் விநாயக சுந்தரிற்கு (Vinayaga Sundar) நன்றி!
காலையிலிருந்து கணபதி பெயரில் உள்ளவர்கள் எல்லாம் கருத்துப் பகிர்ந்து சுவாரசியமாக்குகிறார்கள்.
லம்போதரன் ஐயா பகிர்ந்த பாடலிற்கு நாம் பொருள் கூற அண்ணன் விநாயக சுந்தரம் மீண்டும் லம்போதராய என்று பதில் போட அதற்கு நாம் பதில் போட வந்த சுவாரசியமான பதிவு
லம் - போதராய , இதைப் பொதுவாக பெருத்த வயிறு உடையவன் என்று பொருள் கொள்வார்கள். ஆனால் யோக விளக்கம் லம் ( लं laṃ) என்ற மந்திர அட்சர அதிர்வால் போதம் எனும் ஞானத்தைத் தருபவன் என்று பொருள்.
இதையே ஔவைப்பாட்டி மூலாதாரத்து மூண்டெழு கனலை காலாலெழுப்பும் கருத்தறிவித்து என்று பாடுகிறார்.
மூலாதாரத்தை लं laṃ என்ற மந்திர வித்தெழுத்தால் பேதிக்க பிராணனை மூண்டெழுந்து கனலாகி குண்டலினியாகி சிரசைத் தாக்கி அமிர்தம் பொழிவிக்கும் வல்லமை உள்ளவன் லம்போதரன்!
இனி ஔவையாரும் அகத்தியரும் கூறியதை சேர்த்துப் பார்ப்போம். சாதாரணமாக பிராணன் மூலாதாரத்திலிருந்து எழுந்து சிரசைத்தாக்கி நாசியில் வரும் பிராணனில் சேர்ந்து உடலில் புகுகிறது. இதை அகத்தியர் பெருமானார் தனது பாடலில் விளக்குகிறார். இது சாதாரண உடலில் நடைபெறும் செய்கை.
இது எப்படி கனலாகி, குண்டலினியாகி அமிர்தத்தை விளைவிக்கிறது என்பதை ஔவையார்
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
என்கிறார்.
விண்டெழு மந்திரம் என்பதன் பொருள் லம் என்ற பீஜம். இந்த பீஜ மந்திரத்தால் பிராணனைக் கனலான அக்னித் தன்மை உடையதாக்கினால்
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
புரியும் என்கிறார்.
இதற்கு லம் அட்சர ஒலி தேவை. இதுவே கணபதி உபாசனையின் விளக்கமும் கூட. ஸ்ரீ வித்யாவில் கணபதி இல்லாமல் செல்லக் கூடாது என்பதும் இந்தக் காரணம் கருதியே, கணபதியின் லம் பீஜ சக்தி விழிப்புறாமல் பிராணன் யோகக்கனலாக மாறாது.
{யோக ஆர்வக்கோளாறுகளுக்கு ஒரு குறிப்பு: இங்கு பகிரப்படும் அனைத்தும் அறிவுப் பகிர்வு மட்டுமே, எதையும் முயற்சித்துப் பார்ப்பது என்பது குருவின் அனுமதியுடன் மட்டுமே, இல்லாது தானாக குண்டலினி எழுப்புகிறேன், சுண்டெலி எழுப்புகிறேன் என முயற்சித்து மன, உடல் உபாதைக்களுக்கு உள்ளாகக்கூடாது,}
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.