இன்று பலர் தம்மை ஆன்மீகத்தில் இருப்பதாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள்! இப்படி தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது உண்மையில் நான் குழப்பமாகி விடுகிறேன்!
ஒருமுறை ஒரு அன்பர் தன்னை உங்களைப் போன்று நானும் ஆன்மீகத்தில் இருக்கிறேன் என்று அறிமுகப்படுத்தினார். அதற்கு நான் சிரித்துக் கொண்டு நான் ஆன்மீகத்தில் இல்லை! என்றேன். அவருக்கு திகைப்பாகிவிட்டது! அது எப்படி நீங்கள் ஆன்மீகத்தைப்பற்றித் தானே எழுதுகிறீர்கள்! பிறகெப்படி ஆன்மீகவாதி இல்லை எனலாம் என்றார்! எனது பதில் நான் ஆன்மீகம் எழுதவில்லை, எனக்கு மிகப் பிடித்த விஷயத்தைப் பற்றி எழுதுகிறேன், நீங்கள் அதை ஆன்மீகமாகப் பார்க்கிறீர்கள் என்றேன்!
பலர் ஆன்மீகம், லௌகீகம் என்று தம்மை வேறுபடுத்தி உயர்வாக காட்டினால்தான் தாம் உயர்கிறோம் என்று நினைப்பது மனதின் ஒரு மாயை!
மனதை உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் பொறி முறையையே ஆன்மீகம், மனதை உயர்ந்த சிந்தனைக்கு செலுத்தாத எதையும் ஆன்மீகம் என்று சொல்ல முடியாது! ஆக ஆன்மீகத்தின் எளிய விளக்கம் உணர்வாகிய ஆன்மாவை எதுவெல்லாம் உயர்ந்த நிலையில் வைக்கிறதோ அதுவெல்லாம் ஆன்மீகம்.
மனம் தனது புலன்களின் வழி புற உலக இன்பத்தை அனுபவிக்கும் நிலையையே லௌகீகம் என்கிறோம். இந்த அனுபவம் இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை!
லௌகீகம் மண் என்றால் ஆன்மீகம் செடி!
மண் இல்லாமல் செடி முளைக்காது,
ஆனால் மண் செடியை அழிக்காத தன்மையுள்ளதாக, வளர்க்கும் வழியாக இருக்க வேண்டும்.
செடி வளர வேண்டும் என்றால் மண்ணைத் தான் சரியாக பதப்படுத்த வேண்டும். ஆக ஒருவன் தனது உலக வாழ்வாகிய மண்ணை சரியாக பண்படுத்த மனம் செம்மையாகி உணர்வு உயரும்.
பலர் ஆன்மீகம் என்று தமது உலக வாழ்க்கையாகிய மண்ணை பாலைவனமாக்கி வளமற்றதாக்கிவிடுவதையே இன்று நாம் காண்கிறோம்! இப்படி ஆகிய பின்னர் அதில் எந்த விதையையும் விதைக்க முடியாது!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.