அடிப்படையில் எழுதுவதற்குரிய உத்வேகம் எமது அகத்திலும் புறத்திலும் நடைபெறும் விஷயங்கள் சார்ந்து எமது மனதை சிந்திக்க தூண்டுவதிலிருந்து ஆரம்பிக்கிறது!
எமது சிந்தனைகள், கேள்விகளுக்கான, தேடல்களுக்கான முதல் படி எம்மைச் சுற்றி இருப்பவர்களுடன் உரையாடுவதில், கேள்வி கேட்பதில் ஆரம்பமாகிறது. இதில் திருப்தியான பதில் கிடைக்காமல் மேலும் தேடல் அதிகரிக்க, ஆழமான புரிதலைப் பெற வாசிப்பிலும், நூல்களைப் படிப்பதிலுமாக முன்னேறுகிறது.
மிகச் சிறிய வயது முதல் நூற்களால் நிரம்பிய வீட்டில் வாழ்ந்த ஞாபகம் என்னுள் தாக்கம் செலுத்தியது எனலாம். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலத்தில் ஒரு அறை நிறைய மாமாவின் சோவியத் ரஷ்ய நூற்களும், மார்க்சிச நூற்களும் நிரம்பி மார்க்ஸ் - எங்கல்ஸ், மாக்சிம் கார்க்கி போன்ற பெயர்களை பார்த்த ஞாபகம்! இன்னொருபுறம் அம்மாவின் சித்த மருத்துவப் புத்தகங்கள்.
எனது சிறுவயது வாசிப்பு கேள்வி, தேடல் ஆர்வம் சித்தர் பாடல்களிலும், மருத்துவத்திலும், சரித்திர நூற்கள், புராணக்கதைகள், அறிவியற் கோட்பாடுகளை வாசிப்பதிலும் ஆரம்பமாகியது. இந்த சிறுவயது வாசிப்பு ஆர்வத்தில் சரித்திரம் படிக்கும் ஆர்வம் மட்டும் குறித்த காலத்திற்கு பிறகு இல்லாமல் போய்விட்டது! ஏனென்றால் சரித்திரம் என்று எழுதப்படுவது உண்மைச் சரித்திரத்தில் எள்ளளவும் தொடர்பில்லாமல், ஒரு சாராரின் கதையைச் சொல்லும் பெருமை கூறல்களுமாகவும், அதிகாரத்தையும், ஆணவத்தையும் நிறுவும் ஒன்றாகவுமே எனக்குப் பட்டது. ஆனால் ஒரு சமூகத்தின் அறிவியலுக்கான, அறிவிற்கான கூறு சரித்திரத்திலிருந்து அறிந்து கொள்ளலாம் என்பது மறுப்பதற்கில்லை!
ஒரு விஷயத்தின் மேலோட்டமான புரிதலை என்னால் எப்போதும் ஜீரணித்துக் கொள்ள முடிவதில்லை! உதாரணமாக ஒரு விஷயத்திற்கு இது தான் ஒரே காரணம் என்ற ஒன்று ஒரே வரியில் இருப்பதாக ஒரு போதும் நான் நம்பியதில்லை! சிறுவயது முதல் ஒரு விஷயத்தை எடுத்தால் அதன் முழுமையான புரிதலையும் பெறவேண்டும் என்ற முயற்சி ஆழமாக இருந்தது. அதற்கான விடாப்பிடியான முயற்சியும் மன ஒருமையும், ஞாபக சக்தியும் வாய்த்திருந்தது.
உலகமும், எண்ணங்களும், பல் பரிணாமத்தில் இயங்குபவை என்பதையும் ஒன்றுடன் ஒன்று இடைத் தொடர்படைந்து கொண்டிருப்பவை என்பதையும் எப்போதும் உளமார நம்பினேன். அதற்குரிய தேடல்களாக அறிவியலையும், மறையியலையும் படிக்க பெரிதும் ஆர்வம் காட்டினேன்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.