அனேக சைவ ஆகமங்கள் சிவனும் ஸக்தியும் அல்லது பைரவரும் பைரவியும் உரையாடுவது போன்ற வடிவிலேயே இருக்கும்.
விஞ்ஞான பைரவ தாந்திரம் ருத்திரயாமளத்தின் ஒரு பகுதி. இன்று ருத்திரயாமளம் முழுமையாக கிடைக்கவில்லை. இந்த ருத்திரயாமளம் ஸக்தி சிவனிடம் கேட்டது.
ஆக விஞ்ஞான பைரவ தாந்திரம் எல்லா தந்திர நூற்களினாலும் அடையப்படும் உயர்ந்த நிலையை தெளிவாக காட்டுகிறது.
இதன் முதல் உரையாசிரியர் க்ஷேமராஜா என்பவர் முதலாவது சுலோக உரையில் இப்படிக்கூறுகிறார்:
சைவ தத்துவங்கள் வேதங்களை விட சிறந்தது
வாம தந்திரம் சைவத்தைவிட சிறந்தது
தக்ஷிண தந்திரம் வாமத்தை விட சிறந்தது
கௌல தந்திரம் தக்ஷிணத்தை விட சிறந்தது
திரிக தந்திரம் கௌலத்தை விட சிறந்தது.
திரிகம் என்றால் மூன்று என்று அர்த்தம், சிவம், ஸக்தி, நர (மனிதன்) என்ற மும்மைகள் குறிக்கப்படும்.
சிவத்தின் சக்திகள் பரா, பராபரா, அபரா ஆக மூன்று,
நரனாகிய மனிதன் தனது உண்மை நிலையான சிவம் என்பதை தன்னையறிவதன் மூலம் சிவமாகலாம் என்பதே திரிக தத்துவம்.
சிவத்தின் இந்த மும்மை சக்திகளில் பரா என்பது சிவத்தின் அகச்சக்தி, இதனால் சிவம் எல்லையற்ற பரம்பொருளாக திகழ்கிறது,
பராபரா என்பது சிவம் அறியும் அல்லது செயலாற்றும் சக்தி, இது இடை நிலை சக்தியாக இருக்கிறது.
அபரா என்பது சிவத்தின் புறச்சக்தியும் கீழ் நிலைச் சக்தியுமாக கூறப்படுகிறது.
ஆகவே திரிக தத்துவம் மனிதன் சிவத்தின் அபரா ரூபமாக இருக்கிறான், அவன் பரா நிலையை பராபரா சக்தியின் உதவி கொண்டு அடையலாம்.
இதன் படி பரா நிலையை அடையும் அல்லது பயிற்சிக்கும் சாதகன் சம்பவோபாய என்றும், பராபரா சக்தியை சாதனை செய்பவன் சாக்தோபாய என்றும் அபரா நிலை சாதகன் அன்வோபாய என்றும் அழைக்கப்படுவான்.
இதில் சம்பவோபாய நிலை அதிஉன்னத நிலையாக திரிக சைவத்தில் கூறப்படுகிறது. இதன் படி ஒருவன் தனது மனதை எண்ணங்கள் அற்ற நிர்விகல்ப நிலையிற்கு கொண்டு வந்தால் அவன் தான் சிவம் என்று உணரும் நிலை.
இதை பயிற்சிப்பதற்கான 112 உத்திகளை கூறுவதே விஞ்ஞான பைரவ தாந்திரம்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.