மனம் ஒரு ஆற்றல், ஆற்றலைக் கட்டுப்படுத்தினால் பலனுண்டு! ஆபத்தும் உண்டு! அணைகட்டும் நீர் மின்சாரமாவது போல் எண்ணத்தைக் கட்டும் மனம் மகா சக்தியாகும்! அணையில் கட்டிய நீர் உடைந்தால் பெருஞ் சேதமாவது போல் ஏகாக்ரமடைந்த மனம் பக்குவமில்லா உடலை சேதமாக்கும்!
மனதைக் கட்டுப்படுத்துவது என்ற முயற்சி சற்றே அபத்தமானது! ஆனால் மனதை ஒழுங்குபடுத்தல் என்பது அவசியமானது.
இதை யோக மொழியில் சீரிய ஏகாக்கிரமென்பர். ஏகாக்கிரம் என்றால் மன ஒருமை என்று பெயர். ஏகாக்கிரம் என்பது மனதைக் கட்டுப்படுத்தல் அல்ல, மனதில் தோன்றும் எண்ணங்களை ஒழுங்குபடுத்தல்.
சீரிய ஏகாக்கிரம் என்றால் நாம் கவனம் செலுத்த வேண்டிய விஷயத்தை ஒரு logical order - தர்க்கப்படிமுறையில் சரியாக சிந்தித்தல்.
இந்தப் படிமுறையில் தர்க்க மனது ஏற்றுக் கொள்ளும் வகையில் கேள்விகளுக்கு சரியான பதில் இருக்க வேண்டும். தர்க்க மனம் திருப்தியுறாமல் ஆழ்மனம் திறக்காது. ஆழ்மனம் திறக்காமல் மனமது அடங்காது!
ஒரு காரியத்தில் ஏன் செய்கிறோம் என்ற தெளிவு இல்லாமல் காரியத்தில் இறங்கினால் தர்க்க மனமும் ஆழ் மனமும் சண்டையிட்டே காலம் போய்விடும்.
மனதைக் கட்டுப்படுத்த முதல் வழி தர்க்க மனதின் கேள்விகளுக்கு திருப்தியான பதிலைச் சொல்லி சமாதானப்படுத்தல்,
இதற்குரிய எளிய வழி கீழ்வரும் மூன்று கேள்விகளை கேட்டு அந்தக் கேள்விக்கான பதில் திருப்தி என்றால் மட்டும் நாம் செய்ய நினைக்கும் காரியத்தை செய்தல்.
1) இந்தக் காரியத்தை ஏன் நாம் செய்ய வேண்டும்?
2) நாம் செய்யும் இந்தக் காரியத்தால் எனக்கும் என்னைச் சார்ந்தவர்களுக்கும் ஏற்படப் போகும் நன்மை தீமைகள் எவை?
3) காரியத்தால் ஏற்படும் நன்மை தீமைகளை என்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா?
இந்த மூன்று கேள்விக்களுக்கும் திருப்தியான பதில் இருந்தால் மட்டும் காரியத்தில் இறங்க வேண்டும். பலர் இந்தக் கேள்விகளுக்கு திருப்தியான பதில் எதுவும் இல்லாமல் ஏதோ ஒரு உத்வேகத்தில் காரியத்தில் இறங்கி மனம் கட்டுப்படவில்லை, காரியம் சரியாகவில்லை என்று புலம்புவார்கள்.
ஆக மனதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அறிவைச் செம்மைப்படுத்த வேண்டும். அறிவைச் செம்மைப்படுத்த சரியான கேள்வியும், அதற்குரிய உணர்ச்சிகளுக்கு அடிமையாகாத சரியான பதில்களும் தெரிய வேண்டும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.