அரசாங்கம் எல்லோரும் வரிகட்டச் சொன்னவுடன் ஒவ்வொருவரும் எதோ சொத்தைப் பிடுங்கிறான் என்றவகையில் பெரிய பட்டம் பெற்ற புத்திஜீவிகள், அரச ஊழியர்கள் அனைவரும் சிந்தித்து நாட்டில் பதட்டப்படுவதைப் பார்க்கும் போது உழைக்கச் சோம்பேறிகள் மிகுந்த இந்த நாட்டில் பொருளாதாரம் எப்படி வளரும்?
நான் சிறுவயதில் குடும்ப பொருளாதாரம் அளவாக இருக்கும் போது அம்மா சொல்லுவார் எள்ளென்றாலும் ஏழாக பகிர்ந்து உண்ண வேண்டும் என்று! அதற்கு எதிர்ப்பேச்சு மனதில் ஓடும்! அம்மாவிற்கு திருப்பி வாயடித்தால் அடிவிழும் என்பதால் நான் எனக்குள்ளே சொல்லிக்கொள்வேன் ஏழுபேருக்கு தேவையான அளவு கிடைக்கும் வகையில் நாம் உழைக்க வேண்டும் என்று!
நாம் ஒவ்வொருவரும் பொருளாதாரத்தை உருவாக்கும் சிந்தனையும் பணச்சுழற்சி ஏற்படுத்தும் சிறப்புத் திறனும் பெறவேண்டும்! அதிகமாக உழைத்து உபரியை மற்றவர்கள் வாழ்க்கையை மேம்படச் செய்யவேண்டும் என்று முயற்சிக்க வேண்டும்! இலங்கையைப் பொறுத்தவரையில் அதிகமாக உழைத்து வெளி நாட்டில் பதுக்க வேண்டும் என்பதே அரசியல்வியாதிகளுடைய சிந்தனை! படித்தவன் இந்த நாட்டில் ஒன்றும் செய்ய முடியாது; வெளி நாடுதான் தன்னுடைய படிப்பிற்கு சிறந்தது என்று சிந்தனை! எம் ஒருவருடைய சிந்தனையின் கூட்டு விளைவுதான் எமது நாடு என்ற தெளிவு இல்லை!
அண்மையில் ஐக்கிய இராச்சியத்தில் இருக்கும் தொழில் அதிபராகிய ஒரு நண்பனுடன் உரையாடும் போது நான் பல்தேசியக் கம்பனியில் வேலைச் செய்துவிட்டு இப்போது ஊருடன் எனது அலுவலகத்தை செயற்படுத்துகிறேன்; அதே தரத்துடன் எமது ஊர்ப் பிள்ளைகள் கொழும்புக்கு வேலைக்குப் போகாமல் இங்கு ஊரிலேயே நாம் அலுவலகம் அமைக்க சிந்திக்கிறேன்; உங்கள் முதலீடுகளை திட்டங்களை இங்கும் செயற்படுத்த நான் உதவுகிறேன், உங்கள் சிந்தனைக்கு என்று சொன்னேன்! எனினும் தகுதியான தொழில் நுட்ப மூளைகள் உடியய மனித வளம் தேவையான அளவு இருக்கிறதா? என்ற சந்தேகத்தைக் கேட்டார்! உண்மையில் அது மிகவும் சவாலான விடயம்தான்! ஆனால் இன்று இல்லாவிட்டாலும் இன்னும் சிலவருடங்களில் அந்தச் சூழ் நிலையை நாம் உருவாக்கப் பாடுபட வேண்டும்.
வரி என்பது செலவழிக்காமல் உபரியாக இருக்கும் பணத்தை அரசு எடுத்து மற்றவர்களுக்காகச் செலவழிக்கும் ஒரு வழி! உங்களிடம் அதிகமாகப் பணம் இருந்தால் அதை எங்காவது நீங்களே முதலிட்டு பலருக்கு தொழில் வாய்ப்பினை உருவாக்கலாம்! அப்போது அது செலவுக்கணக்காக வரும்! இப்படி உங்களுக்குச் செலவழிக்கத் தெரியவில்லை என்றால் அரசாங்கம் அதை நான் செலவழிக்கிறேன் என்று சொல்வதுதான் வரி!
ஆகவே வீண்பதட்டம் இல்லாமல் பொருளியலும், நிதியியலும் படிக்க ஆரம்பியுங்கள்; இந்த நாட்டில் பட்டதாரிகள் கடிவாளம் கட்டிய குதிரை மாதிரி தாம் பெற்ற பட்டத்தினைத் தாண்டி சிந்திக்கத் தெரியாத பொருளாதாரம், நிதியியல் தெரியாத மூடர்களாக காலையில் இருந்து மாலை வரை எங்காவது பக்குவமாக வேலை செய்துவிட்டு வீட்டில் வந்து நிம்மதியாகத் தூங்க வேண்டும் என்று நினைக்கும் சோம்பேறிக் கூட்டம் இருப்பதாலேயே இப்படி வீண் பயம் எல்லாம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.