இன்று காசி காலை பைரவர் அலங்காரம்!
இன்று நாம் கந்தபுராணத்தின் முதற்காண்டத்தின் கடவுள் வாழ்த்துப் பகுதியில் இருக்கும் பைரவ தியானத்தைப் பார்ப்போம்.
பரமனை மதித்திடாப் பங்க யாசனன்
ஒருதலை கிள்ளியே யொழிந்த வானவர்
குருதியு மகந்தையுங் கொண்டு தண்டமுன்
புரிதரு வடுகனைப் போற்றி செய்குவாம். 9
வெஞ்சினப் பரியழன் மீது போர்த்திடும்
அஞ்சனப் புகையென வால மாமெனச்
செஞ்சுடர்ப் படிவமேற் செறித்த மாமணிக்
கஞ்சுகக் கடவுள்பொற் கழல்க ளேத்துவாம். 10
பரசிவத்தினை மதிக்காமல் ஆணவம் கொண்ட தாமரையில் அமர்ந்திருக்கும் பிரம்மனின் ஒரு தலையைக் கொய்தவரும்,
ஆணவமுறும் வானவர்களின் குருதியையும், அகந்தையும் இல்லாதாக்கி தண்டனை தரும்
அந்த வடுக பைரவ மூத்தியை நாம் போற்றி தியானிப்போம்!
கடும் கோபம் கொண்ட பெரிய அழகனாகிய சிவனின் மீது போர்த்தப்பட்டிருக்கும் புகைபோன்ற ஆடையைப் போல் சிவனைப் விட்டுப் பிரியாமல்,
சிவப்புச் சுடரைப் போர்த்தியிருக்கும் மாமணிபோல்
சிவத்தைப் போர்த்தியிருக்கும் கஞ்சுகம் போன்ற அந்த பைரவக் கடவுளின் பொன்னிறப் பாதங்களை நாம் தியானிப்போம்!
முதல் தியானம் அகந்தை அழிவு, சிவனருள் பரிபூரணமாகப் பெற ஆணவ மலமழிதல் வேண்டும்! இது பைரவர் அருளால் வாய்ப்பது!
இரண்டாவது தியானம் சிவபரம்பொருளுக்கும் பைரவருக்கும் இருக்கும் தொடர்பினை விளக்குகிறது; எப்பொதும் வெஞ்சினம் கொண்ட சிவாக்கினியைப் போர்த்தி நிற்பது பைரவம் என்பதும் கச்சியப்ப சிவாச்சாரியார் விளக்கியிருக்கிறார்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.