குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, June 22, 2021

சர்வதேச யோகா தின அறிவுப் பகிர்வு - 07: சைவமும் யோகமும்

 இன்று உலக யோகா தினம்கடந்த ஒருவாரமாக யோகம் என்பதன் ஆழமான தத்துவார்த்தங்களை எழுதி வந்தோம். வெறுமனே உடலை வளைக்கும் ஆசனங்கள் யோகத்தின் இறுதி இலக்கு இல்லை என்பதை புரிவதற்கும் அதற்குள் ஆழமான அக அனுபவங்களைப் பெறக்கூடிய முத்துக்கள் இருக்கிறது என்பதையும் விளக்குவதே நோக்கம்.
அதில் பல சித்தர்களின் யோக முறை பற்றிய அறிமுகம் தந்திருந்தோம்! ஆழமாக உரையாட விரும்புர்கள் எமது வகுப்புகளில் இணைந்துகொள்ளலாம்!
இந்தத் தொடரின் இறுதிக் கட்டுரை
சைவமும் யோகமும்
****************************
சைவமும் யோகமும்
யோகீஸ்வரன் – யோகிகளின் தலைவன் சிவபெருமான்.
பதஞ்சலி கூறும் யோகம் வெறுமனே மனம் என்ற அந்தக்கரணங்களில் சித்தத்தின் விருத்தியை நிரோதம் செய்யும் யோகம். இப்படி சித்த விருத்தியை நிரோதம்செய்த அந்தக்கரணத்தை வைத்துக்கொண்டு என்னெ செய்வது என்பதற்குரிய பதிலை சைவசமயத்தின் யோக பாதம் கூறும்.
பதஞ்சலி இயம நியம, ஆசன, பிரணாயாம, பிரத்தியாகார, தாரணை சமாதியால் சித்தம் விருத்தி அடங்கும் முறையைக் கூறும் !
நாத சம்பிரதாய குண்டலின் யோகம் என்பது 7 ஆதாரங்களுடன் முடிவுறுகிறது.
சைவ ஆகம யோகம் இதற்கு மேற்பட்ட சிவயோகம் எனும் நிலையைப் பற்றிப் பேசுகிறது.
இது பதினாறு அங்கங்கள் உடைய சோடசகலா பிரசாத கலை யோகம் எனப்படும். சூக்ஷ்ம உடலை வலுப்படுத்தி சுழுமுனை நாடியை வசப்படுத்திய யோகி சிவயோகம் புரியும் தகுதி பெறுகிறான்.
சைவ சமயம் கூறும் யோகப்படிகள்
1) அகாரம்
2) உகாரம்
3) மகாரம் –
4) விந்து -
5) அர்த்த சந்திரன்
6) நிரோதினி
7) நாதம்
😎 நாதாந்தம்
9) சக்தி
10) வியாபினி
11) வ்யோம ரூபிணி
12) அநந்தை
13) அநாதை
14) அநாசிருகை
15) சமனை
16) உன்மனை
இன்றைய சைவத்தின் நிலை யோக பாதத்தினைப் பற்றி கற்பிப்பாரும் இல்லை, சாதகம் செய்வாரும் இல்லை! வெறுமனே கிரியை மார்க்கத்தில் சிக்கிக்கொண்டு சடங்குகள் அதிகமுள்ள ஒன்றாக இருப்பது கவலைக்குரியது!
ஆகமங்களில் யோக பாதத்தினை தொகுத்து பொருள்காணும் பணியை செய்யலாம் என்பது இந்த உலக யோக தினத்தில் உதித்த எண்ணம்!
அதற்கு மகா யோகீஸ்வரரான சிவபரம்பொருளின் ஆசி வேண்டி பிரார்த்திக்கிறோம்!

சர்வதேச யோகா தின அறிவுப் பகிர்வு - 06: சட்டைமுனிச் சித்தரின் வாசியோக உபதேசம்
சர்வதேச யோகா தின அறிவுப் பகிர்வு - 06
**************************************
சட்டைமுனிச் சித்தரின் வாசியோக உபதேசம்
***********************************************************
சட்டைமுனிச் சித்தர் பதினெண் சித்தர்களில் ஒருவர். இவர் போக நாத மகரிஷியின் சீடர்! இவர் வரலாற்றைக் கூறும் போது சிங்களதேசத்து பெண்ணிற்கு பிறந்தவர் என்று போகர் 7000 இல் கூறுகிறார்.

இவரது சட்டை முனி ஞானம் இன்று பலரும் சிலாகித்து பயிற்சி செய்ய ஆர்வமுடன் இருக்கும் வாசியோகத்தினைத் தொடங்குவதற்குரிய ஆரம்ப நிலைகள், பக்குவம், கிரமம் பற்றி உரைக்கிறார்.
இந்தக் கிரமம் புரியாமல், தகுந்த மனம், உடல் சுத்தி இல்லாமலும், இறை நம்பிக்கை இல்லாமலும் வாசி பயிற் சிப்பவர்கள் வாசியோகத்தில் பூரண சித்தி பெறமுடியாது என்று தெளிவாக் கூறுகிறார்.

இன்று யார் வந்தாலும் வாசி கற்பிக்கிறோம் என்று தமக்கு தெரிந்த அரைகுறை வித்தையை எப்படியாவது சீடன் தலையில் இறக்கி அவன் பரிணாமத்தைக் குழப்பி தாம் குருவாகிவிட வேண்டும் என்று அர்த்தம் புரியாமல் சித்தர்களின் வாசி யோகம் கற்பிப்பவர்களுக்கு இது நல்லதொரு வழிகாட்டல்.

மேலும் குருமுகமாய் தீட்சை பெறாமல் ஸ்ரீ வித்தை செய்கிறோம் என்பவர்களை “சிறு பிள்ளைகள் தீண்டலாகாது” என்றும், குருவின் வாய் துறந்து ஆணை பெறாமல் சொந்த விருப்பத்தில் செய்வது சித்திக்கு வழி கோலாது என்பதையும் தெளிவாக விளக்கியுள்ளார்.
வாசியோகம் பயில அவர் கூறும் படிகள் – கிரமம்

பாடல் - 01
1. பூசை செய்தல் முதல் படி; இந்தப் பூசையில் அவரவர் குருபரம்பரைப் படி பல முறைகளில் பூசை செய்வார்கள். சிலர் சுவடிகளை வைத்து பூசை செய்வார்கள், சிலர் தீபத்தினை வைத்து பூசை செய்வார்கள், சிலர் பெண்களை தேவியாக ஆவாகனப்படுத்தி பூசை செய்வார்கள். பல பல யந்திரங்களை வைத்து பூசை செய்வார்கள்.

2. சித்தர் கணங்களாகிய நாமோ மேரு எனப்படு நாற்பத்து முக்கோணங்களுடைய ஸ்ரீ யந்திரத்தை பூசை செய்வோம்.

பாடல் – 02
1. மேருவைப் பூசை செய்தால் அத்தகையவன் சாபமிட்டால் அண்டங்கள் தீயாகப் போகும்.

2. மேருவைப் பூசை செய்ய தீட்சை அவசியம்; குருபரம்பரையில் தீட்சை பெறாமல் நூல்களை தாமாகக் கற்று மேருவிற்கு பூசை செய்ய முடியாது.

3. தீட்சை இல்லாமல் சுயமாக பூசை செய்யப் போகக்கூடாது.

4. குரு வாய்திறந்து உபதேசம் சொல்லி செய் என்றால் மாத்திரமே மேரு பூஜை செய்ய வேண்டும். எமக்கு பிடித்திருக்கிறது என்று எவரும் மேரு பூஜை செய்ய முற்படக்கூடாது.

5. அப்படி குரு ஆணையில் பூஜிப்பவனே அனைத்து சித்திகளையும் பெறுவான்.

உபதேசம் இல்லாமல் ஸ்ரீ வித்தை பேசுபவர்களுரிய அறிவுரை இந்தப்பாடல்.

பாடல் – 03
1. மேரு பூஜையில் வாலை மூன்றெழுத்து முதல் உபதேசம்

2. திரிபுரையில் எட்டெழுத்து இரண்டாவது உபதேசம்

3. புவனேஸ்வரி மகாவித்யா மூன்றாவது உபதேசம்

4. சியாமளை நான்காவது உபதேசம்

5. மேலேயுள்ள நான்கு வித்தைகளையும் முறையாக ஒன்றின் பின் ஒன்றாக குருவின் உபதேசம் பெற்று முடித்த பின்னரே வாசி யோகத்திற்குள் சாதகன் புக வேண்டும்.

பாடல் – 04
1. தகுந்த மனப்பண்புடன் இந்த ஐந்து தீட்சைகளும் முடிக்க வேண்டும்.

2. சியாமளை முடித்த பின்னர் பிரணாயாமம் குருமுகமாய் பயில வேண்டும்.

3. பிரணாயாமம் முடித்த பின்னர் வாசி யோக தீட்சை செய்ய வேண்டும்.

4. இப்படி கண்ணியமாக ஒவ்வொன்றாக முடித்து வாசியோகத்தில் ஏறுபவர்கள் தமது உடல் நலக் குறைவோ, சாதனையில் தடங்கலோ ஏற்படாமல் முன்னேறுவார்கள்.

5. இப்படிச் சாதனை செய்பவர்கள் மாத்திரமே சித்தர் என்ற நிலை அடைவார்கள்

6. இப்படி கிரம தீட்சை எடுத்து சாதனையில் முன்னேற விட்ட குறை தொட்ட குறை வேண்டும்.
*********************************************************

பாடல்கள்
காணப்பா பூசைசெய்யும் முறையைக் கேளாய்;
கைம்முறையாய்ச் சுவடிவைத்துப் பூசை செய்வார்
பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்துப்
புகழாகப் பூசைசெய்வார் பெண்ணை வைத்தும்;
நாளப்பா சக்கரத்தைப் பூசை செய்வார்
நம்முடைய பூசையென்ன மேருப் போலே
ஓதப்பா நாற்பத்துமுக் கோணம் வைத்தே
உத்தமனே! பூசைசெய்வார் சித்தர் தானே.


2. தானென்ற மேருவைத்தான் பூசை செய்வார்
சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும்;
தேனென்ற மேருவுக்குத் தீட்சை வேண்டும்;
சிறுபிள்ளை யாமொருவன் தீண்டப்போகா;
வானென்ற மேருவைத்தான் பூசை செய்தோர்
வாய்திறந்தே உபதேசம் சொன்னா ராகிற்
கோனென்ற வாதசித்தி கவன சித்தி
கொள்ளையிட்டான் அவன்சீடன் கூறி னானே.

3. கூறியதோர் வாலையின்மூன் றெழுத்தைக் கேளாய்;
குறியறிந்து பூசைசெய்து பின்பு கேளாய்; மாறியதோர் திரிபுரையெட் டெழுத்தைக் கேளாய்;
மைந்தனே! இவளைநீ பூசை பண்ணத்
தேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய்;
திறமாகப் புவனையை நீ பூசை பண்ணு;
ஆறியதோர் யாமளையா றெழுத்தைக் கேளாய்;
அவளுடைய பதம்போற்றிப் பூசை பண்ணே.

4. பண்ணியபின் யாமளையைந் தெழுத்தைக் கேளாய்;
பண்பாகத் தீட்சையைந்தும் முடிந்தபின்பு
வண்ணியதோர் வாசியென்ற யோகத் துக்கு
மைந்தனே வைத்துப்ராணா யாமந் தீரும்;
கண்ணியதோர் இத்தனையும் அறிந்தி ருந்தாற்
காயசத்தி விக்கினங்கள் இல்லை யில்லை;
உண்ணியதோர் உலகமென்ன சித்த ரென்ன
உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே

சர்வதேச யோகா தின அறிவுப் பகிர்வு - 05: ஸ்ரீ காகபுஜண்டர் சோடச யோகக் குறள்

 சர்வதேச யோகா தின அறிவுப் பகிர்வு - 05

**************************************
ஸ்ரீ காகபுஜண்டர் சோடச யோகக் குறள்

தரப்பட்டுள்ள பொருள் விளக்கம் ஏற்கனவே சித்தர் மார்க்கத்தில் இருந்து சாதனை புரிபவர்களது புரிதலுக்கான எளிய விருத்தியுரை. எளிய முழுமையான விளக்கவுரை விரைவில் வெளியிடுவோம்.

1:
சின்மயத்தைப் போற்றிச் சிவராச யோகத்தில்
நன்மை பராபரத்தை நாடு

பொருள்: பேரொளியான பூரணத்தை துணைகொண்டு சிவராஜா யோகத்தில் இருந்து பராபரம் என்றார் பூரணத்தை நாடு!

2:
அண்ட முடிமீதி லங்கிர விமதியைக்
கண்டுதரி சித்தல் கதி.

பொருள்; பராபரத்தை அறிய சிவராஜா யோகம் செய்ய வேண்டும் என்று முதல் குறளில் சொன்னோம், அதன் முதல் படி அண்டத்தின் மூலமான நாதமும் விந்துவும் உடலிற்கு ரவி மதி எனும் சூரிய சந்திரனாய் எப்படி அண்டத்திலும் பிண்டத்திலும் இயக்குகிறது என்று அறிய வேண்டும்.

3:
வலமிடமாய் நின்ற மதிரவியை மாறி
விலகா தடியினிற்பின் வீடு.

பொருள்: அண்டத்திலும் பிண்டத்திலும் உள்ள மதி ரவி அறியவேண்டும் என்று முன்னர் சொன்னோம், பிண்டத்தில் மதி ரவி நிற்கும் இடம் வலது இடது மூச்சு என்று அறிந்து அதை நேரிபடுத்தி விரயமாகும் பிராணனை சேமித்து சமப்படுத்தினால் அது வீடு என்ற பேற்றை தரும்.

4:
அறுபத்து நால்யோக மவ்வளவுந் தள்ளி
ஒருபொழுது முண்டுநிலை யோர்.

பொருள்: தந்திர யோகத்தில் பல்வேறு யோகங்கள் பயிற்சிப்பதற்கு உண்டென்றும் அது அறுபத்துநான்கு வகைப்படும் என்று கூறுவர், அவற்றை எல்லாம் பயிலவேண்டும் மன மாயையில் விழுந்து விடாமல் குரு உபதேசித்த சிவராஜா யோகத்தில் நிலைத்து நில்.

5:
உலகமே மாயமென வுன்மனதிற் கண்டு
நலமாக நாதனடி நம்பு

பொருள்: மாயையினால் சூழ்ந்து மனிதன் பிறவிக்கு காரணமான மனத்தை பண்படுத்தி உலகு மாயை என்பதனை மனதின் உதவி கொண்டு விசாரத்தால் அறிந்து எல்லாவற்றிற்கும் மூலமான இறைவனின் பாதத்தை நம்பி உன் சாதனையினை தொடர்வாயாக .

6:
சித்தர் பதினெண்மர் செய்கையிற் றோன்றாத
அத்தனரு ளும்புசுண்டன் யான்.

பொருள்: பல்வேறு பிரளயம், யுகம் கண்ட பதினெண் சித்தர் என்ற கணக்கிற்கும் முன்னராக என்றும் இருக்கும் புசுண்டனாகிய நான் அத்தன் என்ற சிவனிற்கு நிகராக அருள் புரியக்கூடியவன் என்று அறி!

மிகுதி இந்த இணைப்பில் பார்க்கவும்: https://yogicpsychology-research.blogspot.com/.../blog... 

சர்வதேச யோகா தின அறிவுப் பகிர்வு - 04: பாம்பாட்டிச் சித்தரின் குண்டலினி யோகம் 02

 சர்வதேச யோகா தின அறிவுப் பகிர்வு - 04

**************************************
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு எதிர்வரும் நாட்களில் தினசரி யோகம் பற்றிய சிறு கட்டுரைகளை பதிவிடலாம் என்று எண்ணம்.

தமிழ்ச் சித்தர்களின் யோகம் வரிசையில் பாம்பாட்டிச் சித்தரின் பாடல்களில் உள்ள குண்டலினி யோகக்கருத்துக்களைச் சுருக்கமாகப் பார்க்கலாம்;

இந்தப்பாடலில் சிவன், திருமால், பார்வதி ஆகிய தெய்வங்களில் நாகாபரணமாக குண்டலினி இருக்கும் இடங்களும் அது சாதகனுக்கு சொல்லும் குறியீட்டு விளக்கமும் விளங்கப்படுத்தப்படுகிறது.

குற்றமற்ற சிவனுக்குக் குண்டல மானாய்
கூறுந்திரு மாலினுக்குக் குடையு யானாய்
கற்றைக்குழல் பார்வதிக்குங் கங்கண மானாய்
கரவாமல் உளங்களித் தாடு பாம்பே.

சிவபெருமானிற்கு நாகாபரணம் என்பதும், திருமாலிற்கு ஆதிசேஷன் குடை என்பதும், பார்வதியின் கைவளையல் எல்லாம் நாகாபரணமாக காட்டப்படுவதன் இரகசிய அர்த்தம் குண்டலினி சக்தி எப்படி பிரபஞ்சத்தில் இயங்குகிறது என்பதன் இரகசியமே! ஒவ்வொரு இறைசக்தியை உபாசிப்பதன் மூலம் எம்முள் உறையும் பிராண மகாசக்தியான குண்டலினியை வசப்படுத்தும் ஆற்றலில் குறியீட்டு வடிவம் அந்த தெய்வ சக்திகளின் ஆபரணம் இருக்கும் நிலையைக் கொண்டு விளங்கிக்கொள்ளலாம்!
சிவபெருமானின் கழுத்தில் இருப்பது வாசுகி என்ற பாம்பு! இதுவே தேவர்களும் அசுரர்களும் அம்ருதம் கடைய உதவியது. ஆகவே சிவபெருமானின் அருள் இல்லாமல் எவரும் இடகலை பிங்கலை நாடிகளைக் கடைந்து வாசியை உருவாக்க முடியாது! அப்படி சாதனையினால் உடலில் உருவாகும் விஷத்தைப் போக்க நீலகண்டனாகிய சிவபரம்பொருளின் அருட்பார்வை வேண்டும்!ஆகவே வாசியோகம் – குண்டலினி யோகம் பயில விரும்பும் சாதகன் முதலில் சிவனின் அருள் பெறவேண்டும்.

குண்டலினி விழிப்பால் கிடைக்கும் அம்ருதத்தை சரியாக உடலில் சேர்க்க திருமாலில் அருள் வேண்டும். திருமாலிற்கு ஆதிசேஷன் குடைபிடிக்கிறான் என்பது குண்டலினியால் விளையும் அம்ருதத்தினை காப்பவர் திருமால் என்பதாலாகும்!

குண்டலினி பராசக்தியின் கங்கணமாக இருக்கிறாள். கை மனிதனின் முழுத்திறமையை வெளிப்படுத்தக்கூடிய கர்மேந்திரியம். குண்டலியினை முழுமையாக கட்டுப்படுத்த பார்வதியாகிய பராசக்தியின் அருள் முழுமையாக வேண்டும்.

ஆக குண்டலினி சாதனை செய்ய விளையும் சாதகனுக்கு சிவபரம்பொருளன் அருட்பார்வை இன்றி சாதனை செய்யும் தூண்டலே வராது! சாதனையில் வரும் விஷத்தினை நீலகண்டன் அருளினால் வென்று அம்ருதத்தினைப் பெறவேண்டும். இந்த அம்ருதத்தினை உடலில் முறையாகச் சேர்க்க திருமாலின் அருள் வேண்டும். முழுமையாகக் கட்டுப்படுத்த பராசக்தி அருள் வேண்டும்! 

சர்வதேச யோகா தின அறிவுப் பகிர்வு - 03: பாம்பாட்டிச் சித்தரின் குண்டலினி விளக்கம்

 சர்வதேச யோகா தின அறிவுப் பகிர்வு - 03

**************************************
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு எதிர்வரும் நாட்களில் தினசரி யோகம் பற்றிய சிறு கட்டுரைகளை பதிவிடலாம் என்று எண்ணம்.

தமிழ்ச் சித்தர்களின் யோகம் வரிசையில் பாம்பாட்டிச் சித்தரின் பாடல்களில் உள்ள குண்டலினி யோகக்கருத்துக்களைச் சுருக்கமாகப் பார்க்கலாம்;

இன்று பாம்பாட்டிச் சித்தரின் குண்டலினி விளக்கம் பார்ப்போம்!

இன்று பலர் குண்டலின் யோக செய்கிறோம் என்பதைக் கூறக் கேட்கிறோம். இதன் உண்மை விளக்கம் என்பது பற்றி பாம்பாட்டிச் சித்தர் கூறியவற்றைக் காண்போம்.
பாம்பாட்டிச் சித்தரை பலரும் பாம்பு ஆட்டும் குறவர் என்று நினைக்கிறார்கள். அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் உண்மையில் அவர் பாம்பு என்ற உவமையை எடுத்துக்கொண்டு தனது குண்டலினி யோக அனுபவத்தினைக் கூறுகிறார்.

ஒவ்வொரு வரியிலும் பாம்பு எனும் குண்டலினியை சரியாக வழி நடாத்தத் தேவையான நிபந்தனைகளைக் கூறி அந்த நிபந்தனைகள் பூர்த்தியானால் குண்டலினி சரியான பாதையில் குண்டலினி விழித்து உயர் நிலை தரும் என்பதை விளக்குகிறார்.
20 பாடல் தொடங்கி 24 வரையுள்ள நான் கு பாடல்களில் குண்டலினியின் சிறப்புப் பற்றிக் கூறுகிறார்.

அன்பர்கள் இந்தப்பாடலை படித்து விட்டு அதற்குக் கீழே உள்ள உரையினைப் படித்துத் தெளியும் படி வேண்டப்படுகிறார்கள்.

நாதர்முடி மேலிருக்கும் நாகப் பாம்பே
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே
பாதலத்திற் குடிபுகும் பைகொள் பாம்பே
பாடிப்பாடி நின்றுவிளை யாடு பாம்பே. 20

குண்டலினி எங்கிருந்து தோற்றம் பெறுகிறது? நாதனாகிய் சிவபரம்பொருளிடமிருந்து! அது சிவத்திடம் இருக்கும் போதுதான் தலையுச்சியில் உண்மையான ஸ்வரூபத்தில் இருக்கிறது. குண்டலினி ஆற்றல் கீழிறங்கி வரும் போது அதன் ஆற்றலைத் தாங்க முடியாதவர்களுக்கு நஞ்சினைக் கொடுக்கக்கூடியது. ஆகவே குண்டலினி யோகம் என்பது அனைவரும் செய்யக்கூடிய இலகுவான யோகமல்ல! அது சிவபரமொருளின் மூல சக்தி தகுந்த பக்குவம் அற்றவர்களுக்கு நச்சினை கக்கும் தன்மையுடையது. இப்படி தலை உச்சியில் இருக்கும் குண்டலினி மெதுவாகக் கீழிறங்கி பாதாளம் எனும் மூலாதாரத்தில் குடிபுகுந்து உறைந்துகொள்கிறது. இப்படி உறைந்த குண்டலினியை தட்டி எழுப்ப வேண்டும்! இதுவே இந்தப்பாடல் சொல்லும் செய்தி!

வளைபுகும் போதேதலை வாங்கும் பாம்பே
மண்டலமிட் டுடல்வளை வண்ணப் பாம்பே
தளைக்கஞ்சி நின்றிடும் சத்தியப் பாம்பே
தலையெடுத் தேவிளையாடு பாம்பே.

இந்த குண்டலினிப் பாம்பு எழுந்து ஒவ்வொரு வளையாக – மூலாதாரம் தொடங்கி சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, சஹஸ்ராரம் என்று ஒவ்வொரு வளையாக ஏறும் போது சாதகனுக்கு முன்னேற்றத்தினைத் தரும். தலைஇயநற்கருமஞ் செய்யுங்கால் என்ற ஆசாரக் கோவை வார்த்தை தலை என்பது மேன்மைதருதல் என்ற பொருள் தரும். இப்படி ஒவ்வொரு ஆதாரமாக ஏறும் போது மேன்மைதரும் குண்டலினி உடலில் மண்டலமிடும் போது அக்னி, சூரிய, சந்திர மண்டலங்கள் உருவாகிறது என்பது மண்டலமிட் டுடல்வளை வண்ணப் பாம்பே என்ற வரிகளால் பெறப்படுகிறது. இப்படி மனிதனின் சூக்ஷ்ம காரண சரீரங்களை இந்தக் குண்டலினி சக்தி உருவாக்குகிறது. அடுத்த வரி குண்டலினியின் இயற்கை இயல்பினைக் கூறி நிற்கிறது. இந்த ஆற்றல் மனிதனை பூரண சுதந்திரனாக்கும் சக்தி! எந்தத் தளையையும் – பற்றினையும் விரும்பாத சத்திய சக்தி! இதுவே தளைக்கஞ்சி நின்றிடும் சத்தியப் பாம்பே என்ற வரி கூறும் யோக உண்மை!

சிவத்தின் உச்சியிலிருந்து இறங்கி மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களில் உறைந்திருக்கும் இந்த அரிய மேலான குண்டலினி சக்தியை படிப்படியாக எழுப்பி மேலான நிலை பெறவேண்டும்

மிகுதிப்பாடல்கள் அடுத்த பதிவில் பதிகிறோம்!.... 

சர்வதேச யோகா தின அறிவுப் பகிர்வு - 02 : குதம்பை சித்தர் கூறும் யோகம்

 
சர்வதேச யோகா தின அறிவுப் பகிர்வு - 02

**************************************
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு எதிர்வரும் நாட்களில் தினசரி யோகம் பற்றிய சிறு கட்டுரைகளை பதிவிடலாம் என்று எண்ணம்.

தமிழ்ச் சித்தர்களின் யோகம் வரிசையில் குதம்பைச் சித்தரின் ஒரு பாடலில் உள்ள யோகக்கருத்துக்களைச் சுருக்கமாகப் பார்க்கலாம்;

அட்டாங்கயோகம் அறிந்தமெய்ஞ் ஞானிக்கு
முட்டாங்க மேதுக்கடி குதம்பாய்
முட்டாங்க மேதுக்கடி.

இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்று அஷ்டாங்க யோகத்தினை பயிற்சித்து தனது சித்த விருத்திகளை அடக்கிய யோகிக்கு முட்டாள்தனமான நம்பிக்கைகள் ஏதுக்கடி குதம்பாய் ஏதுக்கடி.

ஒரு யோகி தனது சாதனையால் தனது சித்தமாகிய ஆழ்மனதை பரிபூரணமாக சுத்தி செய்து இறைவனுடன் ஒன்றக்கூடிய தியான, சமாதி நிலையை அடையப் பயிற்சி செய்பவன் கிரகங்களுக்கு பயந்து, கர்மங்களை விரட்ட வீணான சடங்குகளைச் செய்வது முட்டாங்கம் என்ற முட்டாள்தனம்.

ஸ்ரீ சர்வ ஞானோத்திர ஆகமத்தின் யோக பாதத்தில் சிவபெருமான் முருகப்பெருமானுக்கு யோகத்தினை உபதேசிக்கும் போது கீழ்வரும் உபதேசத்தினைச் செய்கிறார்;

பிராணாயமத்தினால் தோஷங்களை நீக்குக
பிரத்தியாகாரத்தால் தேவையற்ற தொடர்புகளிலிருந்து மனதை நீக்குக
தாரணையால் பாபத்தினை நீக்குக
தியானத்தினால் அநீச்சுவரமான குணங்களை எரிக்குக
என்று கூறுகிறார்.

அட்டாங்க யோகப்பயிற்சி ஒரு சாதகன் தனது உடலிலுள்ள தோஷங்களை நீக்கி, மனதை தேவையற்ற தொடர்புகளில் இருந்து விடுவித்து, சித்தத்தில் ஏற்கனவே சேர்த்த பாபங்களை எரித்து, தீயகுணங்களை எரிக்கும் என்பது பெறப்படுகிறது.
ஆகவே அட்டாங்க யோகத்தில் நிலைபெற்ற யோகி முட்டாங்கமான முட்டாள்தனமானவற்றைச் செய்யத்தேவையில்லை என்கிறார் குதம்பைச் சித்தர்! 

சர்வதேச யோகா தின அறிவுப் பகிர்வு - 01: யோகத்தின் வரைவிலக்கணங்கள்

 சர்வதேச யோகா தின அறிவுப் பகிர்வு - 01

**************************************
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு எதிர்வரும் நாட்களில் தினசரி யோகம் பற்றிய சிறு கட்டுரைகளை பதிவிடலாம் என்று எண்ணம்.
உங்கள் கருத்துக்கள், கேள்விகள், உரையாடல்களும் இந்தத் தொடரை மேலும் செம்மையாக்கும்! இயலுமான வரை கேள்விகளை பதிவிடலாம்.
முதலாவது கட்டுரை கீழே!
யோகத்தின் வரைவிலக்கணங்கள்
8888888888888888888888888888888888
இன்று யோகா செய்கிறோம் என்றால் ஆசனம் செய்வதையும், பிரணாயாமம் செய்வதையுமே சொல்கிறார்கள்.
யோகம் என்பது இந்திய தத்துவ தர்சனங்களில் மெய்மையை அடைவதற்குரிய செயல்முறை அறிவியல் சார்ந்த ஒன்று! மற்றவற்றை வெறுமனே புத்தியால் தர்க்கத்தால் ஆராய்ந்து உண்மையை அறியும் முறைகளாக இருக்க யோகமோ மனிதனின் மிக ஸ்தூல அடிப்படையான உடலில் இருந்து, பிராணன், மனம், புத்தி, ஆன்மா என்று தன்னுணர்வு மூலம் இறுதி இலக்கான இறைவனைக் காட்டுகிறது.
யோகம் என்பது யுஜ் என்ற சமஸ்கிருத அடிச் சொல்லில் இருந்து வந்ததால் இணைவு என்று பொருள் கொள்ளப்படுகிறது.
யோகம் என்பதன் வரைவிலக்கணப்படுத்த எமக்கு புராதன நூற்களில் வரைவிலக்கணமாக நான்கு கிடைக்கிறது.
முதலாவது ஸ்ரீ இராமருக்கு யோகத்தினை உபதேசித்த வஷிஷ்ட மகரிஷி இப்படி வரைவிலக்கணப்படுத்துகிறார்.
1. “யோக மன ப்ரஸ்மன உபாய”
யோகம் என்பது மனதினை அமைதிப் படுத்துவதற்குரிய உபாயம். யோகத்தின் பெருந் தடங்கல் சலனிக்கும் மனம். சலனத்தைக் குறைக்கும் உத்திகள் யோகம் என்று கருதப்படும்.
அடுத்த இரண்டு வரைவிலக்கணங்கள் யோகீஸ்வரரான ஸ்ரீ கிருஷ்ணனுடையது;
2. "யோக கர்மஸு கௌசலம்"
யோகம் என்பது சரியான மனப்பாங்குடன் கர்மத்தினை செய்தல்! அடிப்படையில் ஒவ்வொரு செயலும் சரியான மனப்பாங்குடன் செய்யப் படவில்லை என்றால் அது மேலதிக மனச் சலனத்திற்கு இட்டுச் செல்லும். செய்யும் செயல் எமது மனதிற்கு அதிக சலனத்தைத் தராதவையாக இருக்க வேண்டும்.
3. ஸமத்வம் யோக உச்யதே
யோகம் என்பது சம நிலை அடைதல். மனம், உணர்ச்சிகள், பிராணன், உடல் மேலும் உடல் ஆக்கப்பட்டிருக்கும் அனைத்து சூக்ஷ்ம தத்துவங்களிலும் சம நிலை அடைதல்;
நான் காவது வரைவிலக்கணம் பிரபலமான ஸ்ரீ பதஞ்சலில் மகரிஷியினுடையது
4. யோக சித்த வ்ருத்தி நிரோதஹ
யோகம் என்பது சித்தத்தின் விருத்தியை நிரோதிப்பது.
இந்த நான்கு அடிப்படையில் யோகம் என்பதைச் சரியாகப் பரிந்துகொள்வது யோகத்தின் முழுமையான பயனைப் பெறுவதற்கு உதவி செய்யும்.

சர்வதேச யோகா தின அறிவுப் பகிர்வு - 07: சைவமும் யோகமும்

  இன்று உலக யோகா தினம் கடந்த ஒருவாரமாக யோகம் என்பதன் ஆழமான தத்துவார்த்தங்களை எழுதி வந்தோம். வெறுமனே உடலை வளைக்கும் ஆசனங்கள் யோகத்தின் இறுதி ...