சிவபெருமானின் திருவிளையாடல்கள் என்று சொல்லப்படுவது அனைத்துமே மனிதனில் ஆணவ மலம் மிகுதியால் உருவாக்கும் அசுரத்தனத்தை நீக்கும் மல நீக்கமே! இந்தப்பாடலில் தாரகாசுரன் மகன்மார் தாருகாட்சகன், கமலாட்சகன், வித்யுன்மாலி. இவர்கள் பிரம்மாவை வேண்டி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றனர். அதன்படி மூவருக்கும் மூன்று பறக்கும் நகரங்களை அளித்தார். இவர்கள் ஆணவ மிகுதியால் செய்த அசுரத்தனங்களை அழித்ததுடன், அந்த வரத்தைக் கொடுத்த பிரம்மாவின் தலையைக் கொய்து அதில் பலியேற்ற தன்மையும் இங்கு குறிப்பிடப்படுகிறது.
முதல் இரண்டு வரிகள் சிவபெருமானின் ஆணவ மலம் நீக்கும் அருளும் பெருமையும் கூறி அடுத்த இரண்டு வரிகள் மனதில் தியானிக்கக் கூடிய உருவத்தின் தன்மை கூறப்படுகிறது.
இங்கு கூறப்படும் புராணக்கதைகள் எல்லாம் ஒருவன் தனது சிவயோக சாதனையில் முன்னேறும் போது அவனது மனதின் படைப்பாற்றல் மலங்களால் உருவாக்கும் ஆணவத் தன்மைகளை சிவ ஒளியால் நீக்கும் தன்மைகளைக் கூறுகிறது என்ற உண்மை அறிவு பெறவேண்டும். புராணனகள் ஆழமான தத்துவங்களின் குறியீடுகள்.
விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி
விளங்குதலை யோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென
துள்ளங்கவர் கள்வன்
மண்மகிழ்ந்தஅர வம்மலர்க்கொன்றை
மலிந்தவரை மார்பிற்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய
பெம்மானிவ னன்றே. 4
{ திருஞானசம்பந்தர் அருளிச் செய்த திருக்கடைக் காப்பு - 04; தலம் : சீர்காழி - 01-பிரமபுரம் ; திருமுறை : முதல்-திருமுறை; பண்: நட்டபாடை}
விண்ணில் பறந்து ஆணவத்தால் தெய்வகுணத்தை வளரவிடாமல் செய்த விண்ணில திரிந்த அந்த அசுரர்களின் கோட்டைகளை சிரிப்பால் அழித்ததுமன்றி! அந்த அசுர்களிற்கு வரம் தந்த பிரம்மா ஆணவமுற்ற போது ஒரு தலையைக் கொய்து அந்தக் கபாலத்தில் பலியும் ஏற்று உண்டு மகிழ்ந்த உள்ளம் கவர் கள்வனே உம்மை நான்
மண்ணில் மகிழ்ந்து ஊர்ந்து தெரியும் அரவத்தையும், கொன்றை மலரை கழுத்தில் அணிந்து, மார்பில் உமையம்மையரை மகிழ்ந்த நிலையில் அணைத்த வண்ணம் இருக்கும் பிரம்மாபுரத்தில் உறையும் இந்தப் பெருமானாரை தியானிக்கிறேன்!
தியானம்:
கழுத்தில் நாகமும், கொன்றை மாலையும், உமையம்மையை இடதுபுற மார்பில் அணைத்த வண்ணம் மகிழ்ந்த நிலையில் இருப்பதாக கண்களை மூடி மனக்காட்சியில் கண்டு தியானிக்கவும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.