இன்றைய காசி பைரவரின் மங்கள அலங்காரத்தோற்றம்!
இன்றைய காலபைரவ தியான பழைய காஞ்சிபுராணத்திலிருந்து.
பைரவ தியானங்களை ஆழ்ந்து கற்பதன் மூலம் பைரவ மூர்த்தி எம்மில் ஏற்படும் ஆணவ மலத்தினை நீக்கும் சிவத்தின் விழிப்புணர்வு சக்தி என்பதனை அறிந்து கொள்ளலாம். 11 பதிவாக பதிந்த கந்தபுராண பைரவ தியானத்தில் சிவத்தினைச் சூழ இருக்கும் அறிவுவடிவான கஞ்சுகம் என்று கச்சியப்ப சிவாச்சாரியார் பைரவரைக் குறிப்பிடுகிறார்.
இனி பழைய காஞ்சிபுராண வடுகபைரவமூர்த்தி துதி
கொச்சையறி வுற்பவமாங் கொள்கையினால் அரிபிரமர் கூடிவீணின் மெய்ச்சமரம் புரிந்திகலி ஒருவரொரு வரை மிகவும் வெறுக்கு நாளில்
அச்சுறவுற் றவரகந்தை விடுமாறு நெருக்கி இனிதருளே செய்யுங் கச்சிவடு கக்கடவுள் மூச்சிகை வேற் படையினையே கருதிவாழ்வாம்.
பேரறிவு, முழுமையான அறிவு வடிவு சிவம்! இதை எவரும் முழுமையாக அறியமுடியாது! ஆனால் அரியும் பிரம்மனும் தமது கொச்சை அறிவினால் உற்பத்தியாகிய கொள்கையால் தம்மால் சிவத்தை முழுமையாக அறிய முடியுமென வீண் சமர் புரிந்து ஒருவரை ஒருவர் வெறுத்துக்கொண்டு அகந்தை கொண்டிருந்தவர்களின் அகந்தையை விடுமாறு நெருக்கி இனிதடுள் செய்த கச்சி எனும் காஞ்சியம்பதியில் இருக்கும் வடுகக் கடவுளாகிய பைரவ மூர்த்தியின் மூன்று சிகை கொண்ட வேலாகிய சூலாயுதத்தை கருதி வாழ்வோம்!
சூலாயுதம் என்பது முப்பொருள் உண்மையை விளக்கும் விழிப்புணர்வு, மும்மலம் நீக்கும் ஆயுதம் என்று அறிந்துகொள்ள வேண்டும். எப்படி மருத்துவர் அறுவைக் கத்தி கொண்டு உடலில் வீணாக வளர்ந்திருக்கும் மலமாகிய நோய்க்கட்டிகளை நீக்கிறதோ அதுபோல் பிறவிப் பிணியறுக்கும் வைத்தியநாதனின் சூலத்தினூடாக பைரவம் எனும் அவரது விழிப்புணர்வினூடாக ஆன்மாவைச் சூழ இருக்கும் மலங்களை அறுத்தெறிகிறார்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.