மனிதனது தொற்றா நோய்க்கான காரணங்களில் முதன்மையானது மன அழுத்தம், மன அழுத்தம் உடலில் தாக்கும்போது தலைவலி, வயிற்றுப்புண், வயிற்றுக்குழப்பம் என்பவற்றினூடாக உடலில் சம நிலையை ஆரம்பத்தில் குழப்பி நீண்டகாலத்தில் இதய நோய், நீரிழிவு, எலும்பு வலுவிழத்தல், சில ஆய்வுகள் தகவல்படி புற்று நோய் என்பவற்றை உருவாக்குகிறது.
உடலின் கட்டுப்பாடு தன்னியக்க நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதுவே இதயம், கல்லீரல், குடல் முதலிய அக உறுப்புக்களை கட்டுப்படுத்துகிறது.
இந்த தன்னியக்க நரம்பு மண்டலம் இரண்டு பிரிவுகளாக அதன் செயற்பாட்டிறு ஏற்ப பிரிக்கப்பட்டுள்ளது.
முதலாவது பரிவு நரம்புத்தொகுதி (sympathetic nervous system) இது உடலை வேகமாக இயக்குவதற்குரிய பொறிமுறையை கொண்டிருக்கிறது.
மற்றையது பரபரிவு நரம்புத்தொகுதி (parasympathetic nervous system) இது முன்னையதற்கு மறுதலை வேலையை செய்கிறது. அதாவது உடலை ஓய்வுபடுத்தப்படுத்த தேவையானவற்றை செயற்படுத்துகிறது.
பரிவு நரம்புத்தொகுதியின் செயற்பாடு வடிவமைக்கப்பட்டுள்ள நோக்கம் மனிதன் ஆபத்து சூழ் நிலையில் விரைந்து செயற்படுவதற்குரிய உடலியக்கங்களை ஏற்படுத்துவதற்காகும். தன்னைச்சூழ ஒருவித ஆபத்து, சண்டை இருக்கிறது என்று மனம் உணர்ந்தவுடன் அது மூளையின் ஹைபோதலமஸும், ப்ரிட்யூடரி சுரப்பியும் இதை உணர்ந்துகொண்டு அதரினல் சுரப்பியை தூண்ட அது Cortisol எனும் ஹோர்மோனை வெளிவிடுகிறது. இந்த ஹோர்மோன் உடலை சூழ் நிலைக்கு தகுந்த வாறு அதிக இரத்த ஓட்டத்தையும், உடலின் இயக்கத்திற்கு தேவையான சக்கரை அளவையும் தற்காலிகமாக உயர்த்தி உடலை ஒருவித அவசர நிலவரத்திற்குள் கொண்டு வருகிறது.
இந்த அவசர நிலவரம் முடிந்த பின்னர் பரபரிவு நரம்புத்தொகுதியினூடாக (parasympathetic nervous system) உடலை ஓய்வுக்குள் கொண்டுவருகிறது. அதிகமாக பாய்ச்சப்பட்ட இரத்தம் மீள்பெறப்பட்டு உடல் சீராக்கப்படுகிறது.
இனி மன அழுத்தம் பற்றிப் பார்த்தால் சரியான ஒழுக்கமில்லாத, மனதைப்பயிற்றுவிக்காதவர்கள் பிரச்சனை வரும்போது மனதை இயக்கிய அவசர நிலவரத்திலேயே எப்போதும் தம்மை வைத்திருப்பார்கள். உண்மையான புறச்சூழல் ஆபத்தோ, அவசரமாக இல்லாவிட்டாலும் தாமாக, சுயமாக பரிவு நரம்புத்தொகுதியை தூண்டி தம்மை ஒருவித அழுத்தத்திற்குள் வைத்திருப்பதால் அவர்கள் உடல் எப்போதும் Cortisol இனை அதிகளவு கொண்டிருக்கும். இப்படி தொடர்ச்சியாக உடலிற்கு ஓய்வு தராமல் உடலை வைத்திருக்கும் போது அதனால் ஏற்படும் தொய்வு நிலை தொற்றா நோய்களாக உருப்பெறுகிறது.
யோகப்பயிற்சியில் உள்ள அனைத்து இயம நியமம் நாம் பரிவு நரம்புத்தொகுதியை பாவிப்பதில் ஒருவித ஒழுங்கை கொண்டுவருகிறது.
ஆசனம் உடலில் இரத்த ஓட்டம், தசை, நரம்பு என்பவற்றினை சம நிலைக்கு கொண்டு வருகிறது.
பிரணாயாமம் மூச்சின் மூலம் பரபரி நரம்புத்தொகுதியை செயற்படுத்தி உடலை ஓய்விற்குள் கோண்டுவந்து பிராணவாயுவின் சம நிலையை உருவாக்குகிறது.
பிரத்தியாகாரம் நாம் சூழ் நிலையால் புலங்கள் வழி மனதை தூண்டி, அது மூளையை தூண்டி பரிவு நரம்புத்தொகுதி இயக்கத்தை தூண்டுவதை கட்டுப்படுத்துகிறது.
தாரணை பரிவு நரம்புத்தொகுதியை துண்டாமல் பரபரிவு நரம்புத்தொகுதியில் இருந்தவாறு மனதை இயக்கும் ஆற்றலை தருகிறது.
தியானம் பூரண ஓய்வினை மனதிற்கும் உடலிற்கும் தந்து உடலை புத்துயிர்ப்பு செய்கிறது.
இதுவே யோகத்திற்கான நவீன அறிவியல் விளக்கம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.