1914ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட சித்த மருத்துவ நூலில் கொரோனாவிற்கு மருந்து சொல்லப்பட்டிருப்பதாக காலையில் ஏப்பிரல் முட்டாள் தினச் செய்தியாக நண்பர்கள் அனுப்பியிருக்கிறார்.
முதலாவது இப்படி ஒரு முட்டாள் தனமாக, சித்த மருத்துவத்தை அவமானப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
சித்த மருத்துவமும் பாரம்பரியமாக சேகரிக்கப்பட்ட ஒரு அறிவுத்தேக்கம். ஒவ்வொரு காலத்திற்கேற்ற வகையில் அது சீரமைக்கப்பட வேண்டியதும், அறிவை விரிவிக்க வேண்டியது அந்தத் துறை சார்ந்தவர்களின் கடமை. கொரோனா என்பது நவீன வைரோலஜியின் பெயர்ப் பாகுபாடு.
சித்தர்களை மாயாவிகளாகவும், அற்புதம் செய்பவர்களாகவும் காண்பித்ததில் சில நாவலாசிரியர்களுக்கும், தொலைக்காட்சித் தொடர்களுக்கும் பெரும் பங்கிருக்கிறது. ஆனால் சித்தர் நூற்களை ஊன்றிப் படிப்பவர்கள் அது மிகப்பெரிய சமூக விமர்சனத் துறை - மூட நம்பிக்கைகளையும், சமூக, அதிகார, ஏமாற்றுக்களையும் சாடிய Critical thinkers ஆகவே அறிவார்கள்.
சித் என்றால் அறிவு, சித்த என்றால் செம்மை (Perfection) என்று அர்த்தம். சித்தர்கள் என்றால் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் நெறியைக் கூறியவர்கள் என்று அர்த்தம்.
வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் நெறிக்கு மனம், உடல், பிராணன் (மூச்சு) ஆகிய மூன்றினையும் எப்படி செம்மைப்படுத்தி உயர்ந்த வாழ்க்கை வாழ்வது என்பதே சித்தர்களின் நெறி! இதில் உடலிற்கு வரும் பிணியைப் போக்கி ஆரோக்கியமாக இருக்க என்ன வழி என்பதையே மருத்துவம் என்று கூறியிருக்கிறார்கள்.
சித்தர்களைப் பற்றி பேசுபவர்கள் எல்லோரும் ஒழுங்காக ஒரு மூல நூலை, அடிப்படைத்தத்துவதை (Basic philosophy) படித்தவர்களாக இல்லை. எவராவது சொன்னதை திரும்பச் சொல்லும் கிளிப் பிள்ளைகளே அன்றி ஆராயும் நோக்கில் கேள்வி கேட்டுத் தெளியும் அறிவுமாட்சியும் இல்லை.
இப்படியில்லாமல் மேற்கத்தேய மருத்துவத்துடன் தம்மைத் தாழ்வுச் சிக்கலுக்கு ஏற்படுத்திக் கொள்ளும் சில தற்குறிகளின் இப்படியான வேலையால் அந்தத்துறையின் நம்பகத்தன்மை இல்லாமல் போகும்.
ஏற்கனவே சித்த மருத்துவத்தின் அடிப்படை தெரியாமல் சந்தர்ப்பத்தைப் பாவித்து தன்னை பிரபலப்படுத்த ஒருவர் தன்னை சித்த மருத்துவர் என்றும், கொரோனாவிற்கு மருந்து இருக்கிறது என்றும் வீடியோ வெளியிட்டு குழப்பம் விளைவித்துக் கொண்டிருக்கிறார்.
வைத்தியன் என்போன் எப்படி இருக்க வேண்டும் என்று அகத்தியர் வைத்திய காவியத்தில்
சீர்பெரு வாகடத்தை செய்பவர் குணங்கள் கேளாய்
நேருரை மாறானாகில் நினைவுதன் மனைவியன்றி
யாரையு முடன் பிறப்பா மென்றவை யவன் வல்லானே
பொய்யது பேசானாகப் புகழறிவுடையோனாக
மெய்யது சொல்வோனாக வினங்குகுரு மறவோனாக
தொய்யவே தாட்சியுண்டாய் சொல்மன தீர்க்கமுண்டாய்
நைவினைப் பாவமின்றி நன்மையில் நடப்போன்றானே
நீதியாய் வாகடத்தை நெறியுடன் திங்கள் தோறும்
ஓதிய பொருள் கடன்னை யுசாவியே யிருப்பானாகில்
தீதிலா னவைக ளுள்ளான் செகமதி லிருக்க மட்டு
மேதினி யதனில்காலன் விதியல்லால் வியாதியுண்டோ
சினவெறி யேறு போலத் திடமுள்ளான் மனதுமுள்ளான்
கனமென வுயிரைக் காக்குங் கருணையான் கதித்தசீரில்
இனமுள்ளா னேத்தமுள்ளா னேற்கையால் தோற்ற முள்ளான்
மனமதில் தயவுள்ளான் வைத்தியனாகு மென்றே (௧௪)
என்று கூறுகிறார்.
மருத்துவ ஒழுக்கத்தின்படி ஒரு மருத்துவர் இப்படி விளப்பரப்படுத்துவதே தவறு! சித்த மருத்துவம் என்றால் நாம் வெறும் கருவிதான், உண்மை மருத்துவன் வைத்தியநாதன் எனும் எம்பெருமான் மட்டுமே! Doctor treat God cures என்ற மனப்பாங்கு இல்லாது நான் குணப்படுத்துகிறேன்! நான் குணப்படுத்துகிறேன் என்பது வெறுமனே ஆணவம் அன்றி வேறொன்றுமில்லை!
மேலும் வைத்தியர் என்பவர் தன்னை நாடி வருபவர்களுக்கு பிணி தீர்ப்பவரே அன்றி தன்னை நாடி வர விளம்பரம் செய்து பிணி தீர்ப்பவர் அல்ல!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.