நண்பர் ஒருவர் உள்பெட்டியில் கேட்ட கேள்விக்கான பதில்கள்; கோரோசனையை கோரோனாவாக்கியதால் கோரோசனை என்னவென்று சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம்;
1. கோரோசனை என்றால் என்ன?
கோ என்றால் பசு என்று அர்த்தம், கோரோசனை என்பது பசுவின், மாட்டின் உணவுக் கால்வாய்ப் பகுதியில் இருக்கும் bezoar எனப்படும் கழிவு உணவுகள், தாவரப்பகுதிகள் சேர்ந்து கல்லுப் போன்று இருக்கும் ஒருவித பொருள். தற்காலத்தில் ஈரலில் இருக்கும் பித்தத்தையும் கோரோசனை என்று கூறுகிறார்கள்.
2) அது உணவு முறையா மருத்துவமா?
இது நஞ்சுகளுக்கான மாற்று வைத்தியப் பொருட்களாக பழங்காலம் தொட்டு பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இது உணவுப் பொருள் அல்ல!
3)தமிழ் வைத்திய முறையில் அதன் வகிபாகம்
சித்த ஆயுர்வேத மருந்துகளில் காய்ச்சல், விஷமுறிவு, மன நோய்களுக்குரிய மருந்தில் முக்கிய பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலில் அரைத்துக் கொடுக்கும் முக்கூட்டு மாத்திரையில் கோரோசனை முக்கியமான ஒரு பொருள்.
4)அந்த முறைமை அறிமுகமானதற்குக் காரணம்., தற்போது யாரும் பின்பற்றுகிறார்களா அல்லது வழக்கொழிந்துவிட்டதா ?
இது சித்த ஆயுர்வேத மருத்துவ முறையில் முக்கியமான ஒரு மருந்து உள்ளீட்டுப் பொருள்; பெரும்பாலும் முக்கூட்டுக் குளிசையில் கோரோசனை சேர்க்கப்படுகிறது; தற்போது வழக்கில் இருக்கலாம். யாழ்ப்பாணத்தில் பிறந்த குழந்தைக்கு தாய்ப் பாலில் கோரோசனை, கஸ்தூரி, குங்குமப்பூ மூன்று ஊறவைத்து மாத்திரையாக அரைத்து குளிப்பாட்டிய பின்னர் தாய்ப்பாலில் உரைத்துக் கொடுக்கும் வழக்கு இருந்தது! இது சளி, காய்ச்சல் போன்றவை வராமல் தடுக்கும், நல்ல கோழையகற்றி!
5)மருத்துவர் ஆலோசனை இன்றி பின்பற்றலாமா? இல்லை என்றால் காரணம்?
மருத்துவம் எப்போதும் நிபுணர்களின் ஆலோசனையுடன் செய்யப்பட வேண்டியது. உணவுப் பழக்கம், இலகுவாகச் சொல்வதானால் சமையலறையில் இருக்கும் உள்ளி, வெந்தயம், சீரகம், மல்லி போன்ற மூலிகையும் அவற்றில் செய்யப்படும் உணவுப் பதார்த்தமும் மருந்தாக உள்ளெடுப்பதால் தகுந்த மருத்துவரின் ஆலோசனை அவசியம்.
குறிப்பாக சித்த ஆயுர்வேத மருந்துகள் ஒருவரின் உடல் கட்டமைப்புடன் (ப்ரக்ருதியுடன்) அனுமானித்து தோஷ சமநிலையைக் கருத்தில் கொண்டு மருந்து தரப்படவேண்டியது; ஆகவே வைத்தியரின் ஆலோசனை அவசியம்.
மேலும் புத்தகங்களில் சரக்குகள் மாத்திரம் தரப்பட்டிருக்குமே அன்றி அவற்றின் சுத்தி முறைகள் தரப்பட்டிருக்க மாட்டாது; சுத்தி செய்யாமல் செய்யப்படும் மருந்துகள் குணப்படுத்தாமல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். சில சரக்குகள் கடும் நச்சுத்தன்மை உடையவை.
6) இதன் சித்த ஆயுர்வேத குணவிளக்கம்:
கோரோசனை தித்த ரசம் (கசப்புச் சுவை), சீதள வீரியம், ருக்ஷ்ண (வரட்சி) குணம் ஆகவே இதன் கர்மம் - செயல்; சுவை நரம்புகளை வலுப்படுத்தும், பசியூட்டும், விஷமுறிக்கும், வயிற்றுக்கிருமி நாசனம் செய்யும், உட்புறச் சூட்டினைத் தணிக்கும்! அதர்வணப் பிரயோகத்தில் வசீகரணத்திற்குதவும்; மங்களம் தரும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.