யோகசாதனையும் சூரிய சந்திர இயக்கமும்
**************************************************************
குறிப்பு: இந்தப்பதிவு ஜோதிடப்பதிவு அல்ல, யோகத்தில் எப்படி பிரபஞ்ச இயக்கத்தின் துணை பெறுவது என்பதற்கான ஒரு சிறு பரிந்துரை
**************************************************
ஒரு யோக சாதகரின் கேள்வி,
அமாவாசை, பௌர்ணமி தினங்கள் விடுமுறை தினங்களாக சில யோகா நிறுவனங்கள் அறிவிக்கின்றன. இதற்கான காரணம் பௌர்ணமி மூச்சின் நிறைவு என்றும் அமாவாசை மூச்சற்ற நிலை என்றும் கூறுகிறார்கள், ஆனால் சம்பிராதாயப்பூர்வமாக அமாவாசை பௌர்ணமி தினங்கள் பொதுவாக சடங்கு ரீதியாக திருவிழாக்களாக கொண்டாடப்படுகிறது, ஆகவே இந்தத்தினங்களில் என்ன யோகப்பயிற்சிகளை செய்யலாம்?
பொதுவாக எமது கலாச்சாரத்தில் நாம் இரண்டு வகை பிரபஞ்ச இயக்கங்களை நாட்காட்டியாக பயன்படுத்துகிறோம்.
1) சூரிய நாட்காட்டி : தமிழ் மாதப்பிறப்பு, சூரியன் ஒரு இராசியிலிருந்து இன்னொரு இராசிக்கு செல்வது
2) சந்திர நாட்காட்டி: அமாவாசை தொடங்கி அடுத்த அமாவாசை வரை, அமாவாசை என்பது சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்வது, அதாவது 0 பாகையில் இருக்கும் நிலை.
இனி இந்த சூரிய சந்திரனாகிய இரண்டு கிரகங்களும் மனித உடலில் உயிரினதும், மனதினதும் பிரபஞ்ச கூறுகள். அதாவது எது எமது சூரிய மண்டலத்தில் மையமாக சூரியனாக இருக்கிறதோ அது மனித உடலில் உயிராகவும், எது பிரபஞ்ச சக்தியை பூமிக்கு கொண்டுவரும் regulator ஆக பிரபஞ்சத்தில் சந்திரனாக இருக்கிறதோ அது மனித உடலில் மனமாக இருக்கிறது என்பதையும் எமது ரிஷிகளும் சித்தர்களும் தமது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறார்கள். இவை இரண்டினது இயக்கம் மனிதனைப் பதிப்பதில் முதன்மையானது.
ஆகவே எமது செயலை பிரபஞ்ச இயக்கத்திற்கு ஒத்திசைவாக (harmony with solar system) ஆக அமைத்துக்கொண்டால் நாம் அதிகமாக பிரபஞ்ச சக்தியை கவர்ந்து பயன்பெறலாம் என்று சாத்திர சாங்கியங்களை வகுத்தார்கள்.
இது எப்படி என்றால் நாம் ஒருஊரிலிருந்து இன்னொரு ஊருக்குப் போகிறோம், அதற்கு அரசாங்கத்தின் இரயில் சேவை இருக்கிறது, அது நேரத்திற்கு செல்கிறது, அது செல்லும் நேரத்திற்கு எமது பயணத்தை ஒத்திசைய வைத்தால் எமக்கு செலவும் குறைவு, பயணமும் இலகுவாக இருக்கும்! இரயிலில் போவது சாலையில் போவதை விட பாதுகாப்பாகவும் இருக்கும்.
இப்படி ஒத்திசையாமல் எமது மனம் போன போக்கில் பயணம் செல்வதானால் செலவும் அதிகம், சிலவேளை விபத்தும் நடக்கலாம்! ஆனால் பணக்காரனும், திறமையானவனுக்கும் இந்த பயணம் இலகுவாகவும், வசதியானதாகவும் இருக்கும்.
இனி கேள்விக்கு வருவோம்,
சூரியன் - உயிர்
சந்திரன் - மனம்
பூமி - உடல்
யோகம் என்பது உடலை ஒழுங்கு படுத்தி, மனதை ஒழுங்குபடுத்தி, பிராணணை (உயிரை) ஒழுங்கு படுத்தி ஒரு நேர்கோட்டில் இணைப்பது.
இந்த இணைப்பு பிரபஞ்சத்தில் ஒரளவு அமாவாசை, பௌர்ணமி தினங்களிலும், கிரகணகாலத்தில் மிகச்சரியாகவும் நடக்கிறது. ஆகவே ஒரு யோக சாதகன், குறிப்பாக ஆரம்ப நிலை சாதகன் பிரபஞ்ச இயக்கத்தை தந்து முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அமாவாசை அன்று சூரியனும், சந்திரனும் , பூமியும் ஒரளவு நேர்கோட்டில் வரும், இது கிரகணகாலத்தில் மிகச் சரியா நேராக வரும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் நிற்கும். இதை உடலில் ஒப்பிட்டுப்பார்ப்பதானால் இந்த நாட்களில் உடல், மனம் , உயிர் என்பவை ஒருவித சம நிலை அடையும். அமாவாசையில் உடலிற்கும் உயிரிற்கும் நடுவில் மனம் சிக்கிக்கொள்ளும்! உண்மையில் ஆன்ம சாதனைக்கு மிக உகந்த நாள்! மனம் ஒடுங்கக் கூடிய வாய்ப்புக்கு பிரபஞ்சம் ஒத்துழைக்கும் நாள்! இந்த நாட்களில் மனதினூடாக செய்யும் காரியங்களுக்கு பூரண மனச் சக்தி இருக்காது. ஆகையால் மனதை ஒடுக்கும் பிரத்தியாகாரம் போன்ற பயிற்சிகளுக்கு உகந்த நாள்! எனினும் மனம் ஏற்கனவே தான் பெற்ற பதிவுகளால் உயிரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகுவதால் ஏற்கனவே சித்தத்தில் பதிந்த பதிவுகள் கட்டுப்பாடு இல்லாமல் கொந்தளிக்கச் செய்யும்! ஆகவே ஏற்கனவே உங்கள் சித்ததில் என்ன பதிப்பித்தீர்களோ அவை உயிரின் கட்டுப்பாடு சற்றுத் தளர்வதால் அறிவு தளர்ந்து மனம் கொந்தளிக்கும்.
பௌர்ணமி அன்று சந்திரன் சூரியனுக்கு 180 பாகை எதிரில் நின்று பூமிக்கு சக்தியை வீசும், இந்த நாளில் மனம் அதிக பலம் பெற்றிருக்கும், மனதிற்கு உயிரின் ஆற்றல் பூரணமாக கிடைக்கும். எனினும் மனதில் உள்ள எண்ணங்களை ஒழுங்கு படுத்தி தாரணை, ஏகாக்கிரம் பயில உகந்த நாள்.
இந்த அடிப்படையில் மற்றவற்றைச் சிந்தித்து அறிந்து கொள்ளுங்கள். ஆசனப்பயிற்சி என்பவை உடலுடன் தொடர்புடையவை, பூமி தினசரி சுற்றுகிறது, ஆகவே தினசரி ஒரு ஒழுங்கில் ஆசனப்பயிற் சி செய்வது சரியானது!
ஆனால் மன, பிராணப்பயிற்சிகள் சந்திர சூரிய சுற்றுடன் தொடர்புடையவை! மனம் சுத்தியான நிலையில் உள்ளவர்கள் இந்த சூரிய சந்திர சுற்றினால் பாதிக்கப்படுவதில்லை! இதனால் தான் பதஞ்சலியும், திருமூலரும் இயம நியமத்தைப் பின்பற்றச் சொன்னார்கள். இயம நியமம் பின்பற்றி மனச்சுத்தி உள்ள எவரும் இந்த விஷயங்களை எடுத்துக்கொள்ளத் தேவையில்லை!
ஆகவே இயம நியமப் பயிற்சியில் முறையாக யோகம் பயிலும் எவரும் இவற்றை பேரிதாக எடுத்துக்கொண்டு குழம்பத்தேவையில்லை!
எமது அனுபவத்தில் சாதனையின் ஆரம்ப காலத்தில் பயிற்சியை இலகுவாக்க இந்த விதிகளைப் பயன்படுத்தலாம்! உயிரின் ஆற்றல் இவை எல்லாவற்றையும் supersede செய்யும்.
எந்த சாதனையாக இருந்தாலும் மூன்று மண்டலங்கள் (45x3= 135) நாட்கள் விடாமல் பயிற்சிக்க இந்த சுற்றின் தாக்கத்திலிருந்து வெளிவந்து குறித்த சாதனை எமது இயல்பாக மாறும்! இது ஒரு பொதுவிதி தமது ஆழ்மனமாகிய சித்தத்தை அளவிற்கு மீறிக் கெடுத்து வைத்திருப்பவர்கள் இதற்கு மேலும் சிலகாலம் முயற்சி செய்யவேண்டியிருக்கும்
ஆகவே இந்த விதிகள் ஆரம்ப சாதகர்களுக்கு பொருத்தி, தொடர்ச்சியாக மூன்று மண்டலங்கள் செய்வித்து, அவர்கள் முன்னேற்றத்தை ஆராய்ந்து ஒருவர் யோக சாதனை தனது இயல்பாகி முன்னேறுவார்கள்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.