அன்பின் மாணவர்களே,
ஒரு சில மாணவர்களின் மனக்கவலை வகுப்புகளை
சில நேரங்களில் தவறவிடுகிறோம்; அதற்கு recording தாருங்கள் என்று விண்ணப்பிக்கிறார்கள்.
இதற்கு ஒரு தெளிவான புரிதலைத் தரவேண்டும் என்பது எனது விருப்பம்!
இந்த வகுப்புகளின் அமைப்பில் இருக்கும்
தத்துவங்களைப் புரிந்து கொண்டால் இந்தக் கலக்கம் வரமாட்டாது.
இந்த வகுப்பு ஆசிரியருடன் நேரில் பயிலும்
வாய்ப்பு; கற்றல் என்பது கேட்டல், சிந்திந்தல், சிந்திப்பதால் எழும் கேள்விகளை ஆசிரியரிடம்
கேட்டுத் தெளிதல் என்பதை நோக்கமாகக் கொண்டது. ஆகவே நிகர் நிலை வகுப்பில் பங்குபற்றினால்தான்
இந்த அனுபவம் வாய்க்கும்!
நாம் கற்றலைத் தொடங்கும் போது குரு மண்டல
வணக்கம், புத்தியைத் தூண்டும் அந்தப் பேரொளியை ஆவாகனம் செய்து எமது மனதை ஒருமைப் படுத்தும்
நிலைக்கு கொண்டு வந்து கற்றலைச் செய்கிறோம். இதுவே இந்த வித்தை பயில்வதற்கான சரியான
முறை. இங்கு குரு தன்னுடைய பல்லாண்டுகால சாதனையில் பெற்ற ஆற்றல், திறனுக்கூடாக உங்கள்
மனதை ஒருமைப்படுத்த உதவுகிறார். ஆகவே நிகர் நிலை வகுப்பின் பலன் குருவின் உதவியுடன் நாம் எம்மை
உயர்த்திக் கொள்கிறோம் என்பது.
இந்த வகுப்புகள் அதிகாலையில் வைத்திருப்பதன்
நோக்கம் – உங்கள் மன, உடல், ஆற்றல்களை ஒழுங்குக்கு கொண்டுவந்து உங்களை ஆற்றல், ஆரோக்கியமுள்ள
பழக்க வழக்கத்தை உங்களில் உருவாக்குவதற்கு!
எமது குருபாரம்பரியத்தின் மிக முக்கியமான
கோட்பாடு – வாழ்வே யோகம்; தனது குடும்ப, வேலைகளைக் காரணம் சொல்லி யோக சாதனையை செய்யாமல்
இருக்கக் கூடாது என்பதாகும்; இதனுடைய அர்த்தம் என்னவென்றால் நீங்கள் யோகவித்தையை சிரத்தையாக
நாம் இங்கு சொல்லித்தருவது போல் சிலகாலம் கற்றால் உங்கள் வாழ்க்கையில் எடுத்த காரியங்களைச்
செம்மையாகச் செய்யும் ஆற்றல் பேறுவீர்கள் என்பதாகும்.
உங்களுக்கு தரப்பட்டிருக்கு ஒரு கர்ம
யோக சாதனை – உங்கள் நாளாந்த வாழ்க்கைப் பணிகள், குடும்பப் பொறுப்புகளைச் செவ்வனே தவறாமல்
செய்து கொண்டு இந்த வகுப்புகளையும் பின்பற்றி, சாதனையையும் செய்ய வேண்டும் என்பதே!
ஆகவே இந்த வகுப்பின் அடிப்படைக் கோட்பாடு
அர்ப்பணிப்புடனும் சிரத்தையுடனும் குருவின் முன்னிருந்து எமது சித்த விருத்திகளை அடக்கி
குரு சொல்வதைக் கிரகிப்பது.
இப்படி இல்லாமல் ஆடியோ, கேட்கிறேன், வீடியோ
கேட்கிறேன் என்பது எமக்கு வசதியான நேரத்தில், எமது சித்தம் பல்வேறு விடயங்களில் விருத்திகளை
உருவாக்கிக்கொண்டிருக்கும் போது வெறும் தகவல்களைப் புரிந்துகொள்வோமே அன்றி எந்த முன்னேற்றத்தையும்
பெறமாட்டோம்!
மாணவரே, நீங்கள் வகுப்பில் பங்குபெற்றாததால்
தகவலை இழக்கவில்லை! உங்கள் மனப்பண்பினை, குருவுடன் சேர்ந்து சாதனை செய்து பெறும் அனுபவத்தினை
இழக்கிறீர்கள்!
ஆகவே உங்கள் வாழ்க்கையை ஒரு ஒழுங்கு முறைக்குள்
கொண்டுவந்து, திட்டமிட்டு வகுப்பில் பங்குபற்றுவது என்ற உறுதியுடன் பங்குபெற் முயற்சி
செய்யுங்கள்!
நீங்கள் அதீத வேலைப்பளு, உலகக் கடமை உள்ளவராக
இருந்தால் ஓரிரு வாரம் எல்லா வகுப்புகளிலும் பங்குபற்றி பின்னர் ஒன்று அல்லது இரண்டு
வகுப்புகளை பங்குபற்றுவத்ற்கு ஏற்ற வகையில் உங்கள் வாழ்க்கை நிகழ்ச்சி நிரல்களை ஒழுங்குபடுத்தி
அர்ப்பணிப்புடனும் சிரத்தையுடனும் தொடர்ச்சியாக கற்று முடியுங்கள்!
இங்கு அனேக வகுப்புகள் நடப்பதன் காரணம்
அவரவர் நிலைக்கு ஏற்ப விடயங்களைக் கிரகித்துக்கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்துவது!
ஆகவே மனக்கலக்கம் இல்லாமல் மேலுள்ள உபதேசத்தை
செயற்படுத்த முனையுங்கள்.
கட்டாயம் நீங்கள் இந்தப் பாதையில் செல்லுவதற்கான
அனைத்து உதவிகளையும் செய்யக் காத்திருக்கிறேன்!
என்றும் அன்புடன்
உங்கள் ஆசான்
அகஸ்திய குலபதி
ஸ்ரீ ஸக்தி சுமனன்
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.