முன்னொரு காலத்தில் ( ) நான் Chaos theory இன் சூழலியல் முகாமைத்துவ பயன்பாடு பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தேன்!
இதை நானும் எனது ஆய்வு மேற்பார்வையாளரும் தமிழில் பெருங் குழப்ப கோட்பாடு என்று மொழிப் பெயர்த்திருந்தோம்.
இந்தக் கோட்பாட்டின் படி நேர்கோட்டு இயக்கத்திலிருக்கும் ஒரு தொகுதி பெருங் குழப்பத்திற் கூடாக முதலில் இரு கூறாக்கம் (Bifurcation) அடையும். படம் பார்க்க. இப்படி இரு கூறாக்கம் அடையும் தொகுதி தன்னை சிக்கல் தன்மைக்கு (complexity) உள்ளாக்குவதன் மூலம் தன்னை உறுதிபடுத்திக் கொண்டு இருக்கும்.
இருகூறாக்கம் நடந்து சிக்கற்தன்மை உருவாகினால் மட்டும் தான் அந்த தொகுதி சம நிலை அடைந்து உறுதியடையும். அப்படி நடக்காமல் தொகுதியை எப்போதும் பதட்டத்தில் வைத்திருந்தால் அது இரு கூறாக்கத்தினை அதிகரித்து சிக்கற் தன்மையினை அதிகரிக்கும். ஆனால் தொகுதி சமனிலைக்கோ, ஒத்திசைவிற்கோ வராது.
சமூகப் புரட்சிகளில் இந்தப் புரிதல் மிக அவசியம். உதாரணமாக எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் சமூகத்தில் மதத்தினால், ஜாதியினால் ஏற்றத்தாழ்வு, பாகுபாடு இருந்த நிலையில் சமூகத்தை புதிய மாற்றத்திற்கு இட்டுச் செல்ல ஒருவித இருகூறாக்கத்தை ஏற்படுத்த, சென்ற நூற்றாண்டில் சிலர் நாத்திகத்தையும், கேலிசெய்தலையும் ஆயுதமாக எடுத்தனர். அதன் காரணமாக சமூகம் அந்த தளைகளில் இருந்து வெளிவந்து புதிய திசையில் செல்ல ஆரம்பித்தது.
அவர்கள் முன்னெடுத்த நாத்திகவாதம் என்பது புரையோடிப் போயிருந்த சமூகத்தை புதிய திசையில் செலுத்துவதற்கு கையாண்ட ஒரு உத்தியே, கிட்டத்தட்ட சமூகம் முன்னேற தடையாக இருந்த ஒரு பாறாங்கல்லை வெடிவைத்து தகர்த்தல் போன்றது. இது காலத்தின் தேவை.
இந்த இருகூறாக்கம் வேதங்கள், பண்பாடு என்பவற்றை மேலும் ஆழமான நுண்மையை நோக்கியே செலுத்தியது எனலாம். மேலை நாட்டவர்கள் அவற்றை அறிவியல் பரிசோதனைக்கு உட்படுத்தி நிருபிக்கத் தொடங்கினார்கள். இன்று எவர் வேண்டுமானாலும் வேதங்களை படிக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
ஆனால் இத்தகைய சமூகப் புரட்சிகளின் இயங்கியலை தவறாகப் புரிந்துகொண்ட, அதை வைத்து தமக்கான அடையாளம், அரசியல் செய்பவர்கள் மீண்டும் மீண்டும் சமூகத்தில் இரு கூறாக்கம் செய்ய ஏதாவது பொய்களும், புனைவுகளும் உருவாக்கி முயற்சிக்கிறார்கள். ஸ்திர நிலை அடைந்த சமூகத்தில் இத்தகைய குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கும் போது அவை கேலிக்கூத்தாகிறது.
இதற்கு உதாரணம் அண்மையில் ஸ்ரீ கிருஷ்ணரை தவறாக சித்தரித்து சுய அரசியல் செய்ய முனைந்து முட்டாளான சம்பவம். கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாத்திகம் வளர்ந்ததை விட கிருஷ்ண உணர்வு வளர்ந்திருக்கிறது. கிருஷ்ணனின் இராச லீலை என்ன என்பதை தெளிவான தத்துவத்துடன் புரிய வைக்கப்பட்டுள்ளது. ஆக கானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அது போல் ஆடியதாம் என்று தனது தலைவர் எந்த சந்தர்ப்பத்தில், எதற்காக நாத்திகம் பேசினார் என்ற பகுத்தறிவு இல்லாமல் ஏதாவது உளறப் போக அதுவே ஒரு பெருங்கேலியாகி சிரிப்புக்கு உள்ளாவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.