இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் என்பது எப்போது சாத்தியம்! அவரவர் தமது நிலையில் திருப்தியும், மற்ற இனத்தவர்களின் கலாச்சார, சமூகப் பழக்க வழக்கங்களை மதித்து அதனை ஊடறுத்து தமது கலாச்சாரம் பண்பாட்டினை திணித்து மற்றவர்களுக்கு அச்சுறுத்தல் செய்யாமல் இருக்கும் போது மட்டும் தான்.
ஆனால் பொருளாதாரம், பணம் என்று மட்டுமே உந்தப்பட்ட சமூகம் இந்த விழுமியங்களை மதிக்காது. இன்றைய உலகை பணம் ஆளுகிறது. ஆக மதம், இனம், கலாச்சாரம் என்பது அதற்கு கீழ்ப்பட்ட மதிப்பில் தான் இருக்கிறது என்பது தான் யதார்த்தம்.
இலங்கையைப் பொறுத்த வகையில் பௌத்தம் இந்தப் பூமியில் வந்திறங்கிய நாள் முதல், தேவநம்பிய தீசன் காலம் தொட்டு அரசனால் பாதுக்காக்கப்பட வேண்டிய, அரசனின் முதற் கடமைகளில் ஒன்றாக வரலாற்றால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
வரலாற்றில் மதம் அதிகார வர்க்கத்தின் கைகளுக்குள் செல்லும் போது அது உண்மை பயன்பாட்டினை இழந்து அரசியலுக்காகவே பயன்படுத்தப்படும்.
அடிப்படையில் ஒவ்வொரு மதம் என்று சொல்லப்படுகிற கட்டமைப்பும் ஆரம்பத்தில் ஒருவன் தன்னைத் தான் ஒழுங்குபடுத்தி தனது சமூகத்துடனும், உலகத்துடனும் ஒத்திசைந்து வாழ்வதற்காகத் தான் அனுபூதி பெற்ற பெரியவர்களால் நெறிப்படுத்தப்படுகிறது. பின்னர் மனித மனத்தில் ஆழத்தில் இருக்கும் அதிகாரம், ஆசை, ஆணவம் போன்ற அறியாமைகளால் அரசியலாக்கப்படும் போது அவை உண்மை நோக்கத்தில் இருந்து பிறழ்ந்து மனிதரிடையே பிளவு உண்டாக்கும் ஸ்தாபனங்களாக மாறுகிறது.
ஆக மதங்களின் கோட்பாடுகள் புலமைத்துவத்தை நிறுவும் அமைப்புகளாக இல்லாமல் மக்களை பண்படுத்தும் விழுமியத்தை உண்டாக்கும் நிலையங்களாக மதஸ்தாபனம் இருந்தால் மட்டுமே சமூகத்திற்கு மதங்களால் பயன். இல்லாவிட்டால் அவை வெறும் அரசியல் ஸ்தாபனங்களே!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.