சிறுவயதில் நானும் எனது தம்பியும் அம்மா தரும் கைக்காசு (Pocket money) சேர்த்து புத்தகம் வாங்க கண்டிக்கு கலைவாணி புத்தக சாலைக்கு போவோம்! இதில் வாங்கியவை புலியூர்க்கேசினின் உரை நூற்கள்! அனேகமாக பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை, கலிங்கத்துப்பரணி என எல்லா நூற்களுமே இருந்தன.
இந்தப் புத்தகங்கள் பின்னர் இருவரின் சதுரங்க சூதாட்டத்திற்கும் பிணையாகும். வெல்பவர்கள் அவர்கள் நூற்களை கொடுத்து விட வேண்டும். இப்படி புத்தங்களின் ஆட்சி ஆட்டத்திற்கு ஆட்டம் கைமாறும்!
இதில் புலியூர்க்கேசிகனின் எனக்கு பிடித்த புத்தகம் காளமேகம் தனிப் பாடல்கள்!
ஆனேகமானவை சிலேடை அணியுடையவை, மேற்போக்கான சொல் அமைப்பில் ஒன்றாகவும் ஆனால் அமைதியினாலே இரண்டு மூன்றாகவும் பொருள் விளங்கும் அணி சிலேடையணி.
இக் காலத்தில் சில இளைஞர்கள் கலாய்த்தல் என்று கூறி செய்யும் அலப்பரையின் மிக உயர்ந்த அறிவுசார் வடிவம்!
காள மேகத்தின் கலாய்த்தலில் நுண் அறிவும், பொருட்ச் செறிவும் இருக்கும்.
சுவைக்காக ஒன்று,
தாம் கவிராயர் என்று தற்பெருமை கொண்டிருந்த திருமலைராயரின் புலவர் கூட்டத்திடம் கேட்கிறார்,
வாலெங்கே நீண்ட வயிறெங்கே முன்னிரண்டு
காலெங்கே உட்குழிந்த கண்ணெங்கே - சாலப்
புவிராயர் போற்றும் புலவீரகா ணீவிர்
கவிராயர் என்றிருந்தக் கால்
புவி ஆளும் இந்த திருமலைராயரின் அவையில் வீற்றிருக்கும் புலவர்களே உங்களை நீங்கள் உங்களைக் கவிராயர் என்கிறீர்கள்? அப்படி என்றால் எங்கே உங்கள் வால்? எங்கே உங்கள் நீண்ட வயிறு? முன்னங்கால்கள் எங்கே? உட்குழிந்த கண்கள் எங்கே?
நீங்கள் குரங்குகளின் அரசன் என்று பொய் சொல்லுகிறீர்கள் என்று கலாய்க்கிறார்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.