அண்மையில் வடமாகாண ஆளுனர் தலைமையில் பௌத்த மாநாடு நடைபெற்றது. ஆளுனர் வால் பிடிக்கிறார், சிங்களவர்களுக்கு இடம் கொடுக்கிறார் என்றெல்லாம் வழமையான கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்.
ஆளுனரின் இந்த முன்னெடுப்பு வரவேற்கப்பட வேண்டியது. ஆனால் தமிழ் மக்களுக்கு இதன் பயன் என்பதை தெளிவுபடுத்தலில், தொடர்பாடலில் தெளிவு இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது.
எமது தமிழ் மக்கள் எப்போதும் பிரிந்து தனியாக இருப்பதையே பாதுகாப்பாகவும், சந்தோஷமாகவும் கருதுகிறார்கள். மற்றவர்களுடன் கலந்தால் நாம் அடிமைப்பட்டு விடுவோம் என்ற பயம் எப்போதும் இருக்கிறது. இது ஒருவித பலவீனம்! இந்த பலவீனத்தை, பயத்தை மறைக்க மற்றவன் எம்மை அழிக்கிறான் என்று பயந்து புலம்பி எவ்வளவிற்கு தூற்ற முடியுமோ அவ்வளவு தூற்றுகிறோம்.
இயற்கையின் விதி ஒன்றுடன் ஒன்று இயைந்து இடைத் தாக்கமடைந்து வலியது பிழைக்க எளியது அழிய, மீண்டும் எளியது வலியதாக, வலியது எளியதாகி ஒரு சக்கரமாக மாறிக் கொண்டு இருக்கும். எதுவும் நிரந்தரமாக வலியதாகவோ எளியதாகவோ இருந்ததில்லை. சரித்திரம் படித்தவர்களுக்கு இது புரியும்.
இந்த பௌத்த மாநாடு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று, ஆனால் பௌத்தம் என்பதை சிங்கள பௌத்தம் என்று வரையறுக்காமல் பௌத்தம் உலக மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய தர்மம் என்றும், தமிழ் பௌத்தர்களும் இருந்தார்கள், இருக்கிறார்கள் என்ற நிலையில் பார்க்கப்பட வேண்டும்.
பௌத்தம் அடிப்படையில் ஒரு தர்மம், பாலியில் தம்மம், அது போல் இந்துமதம் என்று சொல்லப்படுவது ஒரு தர்மம், சனாதன தர்மம்! இரண்டும் தர்மம் என்ற அடிப்படையில் இது இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டில் பெரும் பங்களிப்பினைச் செய்யும். இரண்டுமே எவரையும் வலிந்து மதம் மாற்றியது இல்லை! அவரவர் அகப் பக்குவத்திற்கு தக்க பயன்பெறும் முறையைத் தான் சொல்லித்தருகின்றது.
இந்த நிலையில் இந்து விவகார அமைச்சர் Mano Ganesan எடுத்திருக்கும் இந்து பௌத்த மாநாடு என்பது சரியான நோக்கத்துடன் இருக்கிறது என்று சொல்லலாம்! அவரது உரையில் "இந்து-பெளத்த ஒற்றுமையை உறுதிபடுத்தவே மாநாட்டை நடத்த வேண்டும். அத்தோடு இந்த மாநாடு ஏனைய மதத்தவருக்கு அச்சுறுத்தலாக இருக்கவும் கூடாது " என்ற எண்ணம் மிகச்சரியாகவும் தேசிய ஒருமைப்பாட்டை நோக்கியதாகவும் இருக்கிறது.
பௌத்த தம்மத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் உள்ள அடிப்படையான "தர்மம்" என்ற ஒற்றுமையை தமிழ் சிங்கள இன நல்லிணக்கத்திற்கு உபயோகித்தால் ஒற்றுமையான இலங்கையை நோக்கி நாம் பயணிக்கலாம்!
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லிணக்கத்தை கட்டமைப்பதற்கான வாய்ப்பினை, காலம் ஆளுனர் சுரேன் ராகவனுக்கும் அமைச்சர் மனோகணேசனுக்கும் வழங்கியுள்ளது! எதிர்மறை பார்வைகள் நிறைந்த சமூக அரசியலில் யார் மக்களின் மனதை வெல்வார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.