காளமேகப் புலவர் அந்தக் காலத்து ரஜனிகாந்தின் பாபா பட கரெக்டர்! இந்தப் படத்தில் டெல்லி கணேஷ் கரக்டெர் எப்படி ஒழுக்கமற்ற பாபாவிற்கு வரம் கிடைத்தது என்று அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பார், இதைப் போல தான் காளமேகத்தாரின் பாட்டுகளைப் பார்த்தால் வசைபாடலும், நக்கலும், தாசிகளுடனான் தொடர்பு என்று ஏராளமாக!! இவர் எப்படிப்பட்டவர் என்று கேள்விக்கு உள்ளாக்கும் படியானவர்!
இத்தனைக்கும் அம்பாளின் பூரண அனுக்கிரகத்தினால் கவிபாடும் ஆற்றல் பெற்றவர்.
எப்படி என்றால் இவர் ஸ்ரீ ரங்கத்து வைணவர், இவரது காதலி மோகானங்கி திருவானைக்கா சைவர்!
அக்காலத்தில் வைணவர்களும் சைவர்களும் வேற்று மதத்திற்கு ஒப்பானவர்கள்! வேற்று மதத்தவர்கள் மணம் புரிய சம்மதமில்லை! ஆகவே வரதன் என்ற காளமேகம் சிவதீக்ஷை பெற்று மோகனாங்கியைக் கரம்பிடிக்கிறார். சைவரான காளமேகப்புலவர் திருவானைக்கா கோயிலிலேயே வேலைக்கு அமர்த்தப்பட்டார்.
இப்படி இருக்க அகிலாண்டேஸ்வரி அம்மையார் சன்னதியில் ஒரு உபாசகர் அம்பாளை நோக்கி தான் கவித்துவம் பெறவேண்டும் என்று தீவிரமாக உபாசனை செய்து வந்தார். ஒரு நாள் மோகனாங்கி தான் வரும் வரை இவரை அம்மன் சன்னதியில் காத்திருக்கும் படி கூற இவரும் அங்கு சென்று பிரகாரத்தில் தூங்கிவிட்டார். இரவாகி விட்டது, மற்றொரு புறத்தில் உபாசகர் தனது தீவிர தவத்தை செய்துக் கொண்டிருக்க அம்பிகை பெண்வடிவத்தில் தனது வாய் நிறைய தாம்பூலத்தை குதப்பிக்கொண்டு உபாசகர் அருகில் வந்து வாயைத் திற எனது தாம்பூல எச்சிலை துப்பி உனக்கு கவித்துவம் தருகிறேன் என்று கூறினாள்.
உபாசகரோ தீவிர ஒழுக்க சீலர், பாபா படத்தில் வரும் டெல்லி கணேஷ் மாதிரி, ஆறு நேரம் குளித்து மூன்று நேரம் பூஜை செய்து அம்பாளைப் பூஜிப்பவர். அவரது ஒழுக்க மனதிற்கு தாம்பூலத்தைக் குதப்பிக் கொண்டிருப்பவள் அம்பாள் என்று நம்பாமல் எவளோ தனது தவத்தைக் கெடுக்க வந்த தாசி என்று அவளை விரட்டி விட்டார். அருள்புரிய வந்த அம்பாளோ அருகில் மோகனாங்கி மேல் காதல் கொண்டு காத்திருக்கும் வரதனாரைத் தட்டி வாயைத் திற என்று கூற இவரோ தன் காதலி மோகனாங்கி தான் எழுப்புகிறாள் என்று அரைத் தூக்கத்தில் வாயைத் திறக்க அம்பாள் தனது தாம்பூல எச்சிலை துப்பிவிட்டு சென்றுவிட்டாள்!
மறு நாள் காலையில் எழுந்த வரதனார் எல்லாவிதக் கவியும் பாடும் காளமேகம் ஆனார்!
தீவிர ஒழுக்கத்துடன் அம்பாளை உபாசித்த தவத்தின் பலன் ஒழுக்கமே அற்று தன் காதலியே கதி என்று கிடைத்த வரதரிற்கு கிடைத்தது!
அம்பாளை கல்லாக கண்ட உபாசகரிற்கு நேரில் வந்தவளை அறிந்துக் கொள்ள முடியவில்லை! தன் காதலியே உலகம் என்று இருந்த வரதனாருக்கும் அம்பாளைத் தெரியவில்லை! ஆனால் வரதனாருக்கு தனது காதலி மேல் காட்டிய அன்பு அம்பாளின் அருளைப் பெற துணையானது!
பிரபஞ்சத்தின் அருளும் ஆற்றலும் திறந்த மனதுடன் அன்புடையாருக்கே திறக்குமன்றி தீவிர ஒழுக்கம் மட்டும் இருந்துக் கொண்டு எல்லோரையும் அம்பாளாக பார்க்கும் மனப் பண்பு இல்லார்க்கு இல்லை என்பதற்கு காளமேகத்தாரின் கதை ஒரு நீதி!
நாம் எவ்வளவு முயன்றாலும் அவள் அருள் மட்டுமே சித்திக்கு வழி என்பதும், ஆணவம் உள்ள மனம் அவள் அருள் சுரந்தாலும் ஏற்கமாட்டாது என்பதும், ஆணவமற்று திறந்த மனமுடையாருக்கு அவள் அருள் சுரப்பதில் நிபந்தனை இல்லை என்பதும் காளமேகத்தாரின் கதை சொல்லும் தத்துவம்!