ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 20: நாமங்கள் 26 - 30

கர்ப்பூரவீடீகாமோத - சமாகர்ஷி-திகந்தராயை (26)
எத்திக்கிலும் உள்ளவரை நறுமணத்தால் கவரும் கற்பூர வீடிகை என்ற தாம்பூலம் தரித்தவள் 

கற்பூர வீடிகை என்பது நறுமணம் தரும் பொருடக்களை கொண்டு செய்யப்பட்ட தாம்பூலம். இதில் பயன்படுத்தும் பொருட்கள் ஏலம், லவங்கம், பச்சை கற்பூரம், கஸ்தூரி, கேஸரி , ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி, பாக்கு என்பனவாகும். இவற்றை நன்கு தூளாக்கி சீனி சேர்த்து செய்யும் கலவையே கற்பூர விடிகா. இந்த தூளினை வெற்றிலையுடன் கலந்து தாம்பூலம் தரிக்கையில் அதன் வாசனை அனைவரையும் கவரும் தன்மை உடையது. தேவி இந்த தாம்பூலத்தினை தரித்து வரும் வாசனையினால் இந்த பிரபஞ்சமே நறுமணத்தினை பெறுகிறது. அதனால் அவளை நோக்கி அனைத்தையும் கவர்கிறாள். 559வது நாமத்தினையும் காண்க. லலிதா திரிசதி 14வது நாமமும் இதே பொருளினை தருகிறது. 

இதன் உட்பொருள் அறியாமை உடைய மனிதனை அறிவாகிய வாசத்தினால் கவர்கிறாள் என்பதாகும். புத்தியுடைய மனிதன் தனது பக்தியால் தேவியினை அடைகிறான், ஆனால் அறிவற்ற மனிதன் அவளை அடைவதற்கு ஒரு உந்து கோல் வேண்டும். அந்த உந்துகோலே தாம்பூல வாசனையாக குறிப்பிடப்படுகிறது.

நிஜ-ஸல்லாப -மாதுர்ய-விநிர்ப்பர்த்ஸித-கச்சபீ (27)
கச்சபீ  என்ற சிறந்த வீணை நாதத்திலும் இனிய மொழியாள் 

சரஸ்வதியின் வீணை கச்சபீ  எனப்படும். இது உயர்ந்த இனிய நாதத்தினை தருவது. சரஸ்வதி கலைகளுக்கெல்லாம் அதிபதி. லலிதையின் குரல் சரஸ்வதியின் வீனை நாதத்தை விட இனியது. 

சௌந்தர்ய லஹரி 22 வது சுலோகம் இப்படிக்கூறுகிறது " வாணியனவள் தனது வீணையுடன் சிவனையும் உன்னையும் பற்றிய  மகிமையை வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவிற்கு உனது பாராட்டினை பெற இசைக்கிறாள். உனது தலை அசைவினை கண்டவுடன் வீணையினை மறைக்கிறாள். ஏனெனில் வீணையின் நாணில் எழும் ஓசையின் இனிமையினை விட உனது குரல் மிக்க இனிமையாக இருப்பதால். 

இதற்கு முந்தைய  நாமவிற்கு கொடுக்கப்பட்ட விளக்கம் இதற்கும் பொருந்தும், தனது இனிய குரலினால் அறியாமையில் உழலும் மனிதனை ஈர்த்து நல் வழிப்படுத்துகிறாள் 

மந்தஸ்மித-ப்ராபாபூர-மஜ்ஜத்காமேச-மானஸாயை (28) 
காமேசுவரனுடைய மனது மூழ்கி விளையாடும் பிரவாகம் போன்ற புன்சிரிப்பை உடையவள்

ஸ்மித என்றால் புன்சிரிப்பு என்று பொருள், மந்தஸ்மித என்றால் மயக்கும் சிரிப்பு என்று பொருள். காமேச என்பது சிவன், லலிதை சிவனின் இடது தொடையில் அமர்ந்தவடிவம் காமேஸ்வர காமேஸ்வரி எனப்படும். இது அர்த்த நாரீஸ்வர வடிவத்திலும் வேறானது. இந்த நிலையில் சிவன் லலிதையின் மயக்கும் புன்சிரிப்பில் மூழ்கி இருக்கிறார்.

காம என்றால் பிந்து என்று பொருள், புள்ளி; பிந்து என்பது காமகலா பீஜத்தின் (ஈம்) ஒரு பகுதி. இந்த பீஜம் இரண்டு புள்ளிகளை கொண்டிருக்கும். ஒவ்வொன்றும் சூரியனையும் சந்திரனையும் குறிக்கும். பிந்து அகங்காரத்தினை குறிக்கும், காமம், மற்றும் கலை என்ற இரண்டும் இச்சையினை குறிக்கும். மனமே இச்சையின் காரணம். காமேஸ்வரியின் புன்சிரிப்பு சிவனின் மனத்தினையே அசைக்கப்படுகிறது. இதுவே அவளின் புன்சிரிப்பின் மகிமையினை குறிக்கிறது.

இத்தகைய வசீகர புன்னகையால் பக்தனை கவர்ந்து அவர்களுக்கு ஞானத்தினை அளித்து முக்தியினை தருபவள்.

அநாகலித - ஸாத்ருச்ய-சிபுக-ஸ்ரீ-விராஜிதாயை (29) 
உவமையற்ற அழகு வாய்ந்த முகவாய் கட்டின் அழகுடன் விளங்குபவள்.

அழகிய கன்னங்களை உடையவள். சௌந்தர்ய லஹரி (67) கூறுகின்றது “ஒப்பிடமுடியாத அழகுவாய்ந்த கன்னத்தினை சிவன் தனது முன்னங்கையினால் உனது கீழூதட்டில் உள்ள அமிர்ததினை அருந்துவதற்காக தடவுகிறார்” எனக் குறிப்பிடப்படுகிறது.

காமேச-பத்த-மாங்கல்ய-ஸூத்ர-சோபித-சுந்தராயை (30) 
காமேஸ்வரர் கட்டிய மங்கல நாணுடன் பிரகாசிக்கும் கழுத்தினள்

தேவியினுடய கழுத்து காமேஸ்வரர் கட்டிய மாங்கல்ய கையிற்றுடன் காணப்படுகிறது.

சௌந்தர்ய லஹரி (69) கூறுகிறது “உனது கழுத்தில் காணப்படும் மூன்று கோடுகள் உனது திருமணத்தின் போது மீட்டப்பட்ட இசைக்கருவிகளின் நாண்களைப்போன்று பிரகாசிக்கிறது, இது ஒரு ராகத்தின சுரம், அடைவு, பண்பு ஆகியவற்றை போன்று காணப்படுகிறது.

மாங்கல்ய நாண் கட்டும் பழக்கம் வேதகாலத்தில் இருக்கவில்லை. சாமுத்திரிகா லட்சண சாஸ்திரப்படி நெற்றி, கழுத்து, இடை ஆகியவற்றில் மூன்று கோடுகள் இருப்பது அவர்களைது பாக்கியங்களை குறிக்கும்*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

Comments

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு