ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 19: நாமங்கள் 18 - 25


வக்த்ரஸ்மர - மாங்கல்ய - க்ருஹ - தோரண - சில்லிகாயை (18)
முகத்தில் அழகு வெள்ளத்தில் சலிக்கும் மீன்களைப் போன்ற கண்களை உடையவள் 
தேவியினுடைய கண்கள் தடாகத்தில் அசையும் மீன்கள் போன்று காணப்படுகிறது. முகம் தடாகமாகவும், கண்கள் மீனாகவும் உருவகிக்கப்படுகிறது. மீன் வேகமாக அசையக்கூடியது. அதுபோல் தேவியினுடைய கண்களும் உயிர்களுக்கு கருணையினை பொழிய வேகமாக அசைகிறது. மீன் முட்டைகளை இட்டுவிட்டு கண்பார்வையினாலேயே பொறிக்கச் செய்யும் ஆற்றல் உள்ளவை. அதுபோல் தேவியினுடைய கண்பார்வை பிரபஞ்சத்தை போஷிக்கும் ஆற்றல் உள்ளது. ஏனெனில் அவளது கண்களின் அழகால் அவள் மீனாட்சி, மீனலோஜினி என அழைக்கப்படுகிறாள்.

நவசம்பக புஷ்பாப நாஸதண்ட - விராஜிதா (19)
அன்றலர்ந்த சம்பகம் போன்ற அழகிய மூக்குடையவள் 
 தேவியினுடைய மூக்கு அன்று மலர்ந்த சம்பக மலர் போன்று காணப்படுகிறது.

தாராகாந்தி - திரஸ்காரி - நாஸாபரண - பாஸுராய (20)
நட்சத்திரத்தினும் மிகுந்த ஒளிவீசும் மூக்குத்தியணிந்தவள் 
நட்சத்திரங்களை விட ஒளிரும் மூக்குத்தி உடையவள். அவளுடைய மூக்குத்தியில் மாணிக்கங்களும் முத்துக்களும் காணப்படுகின்றது. தாரா என்றால் நட்சத்திரம், தாரா என்பது மங்களா, சுக்லா என்ற இரு தேவதைகளையும் குறிக்கும். சுக்லா என்பது சுக்கிரன் ஆகியது. இந்த மங்களா சுக்லா என்ற இரண்டும் செவ்வாய் மற்றும் சுக்கிரனை குறிக்கும். இவை இரண்டும் குறித்த வகை இரத்தினங்களை கொண்டிருக்கின்றன. சிவப்பு நிற மாணிக்கம் செவ்வாயினையும், வைரம் சுக்கிரனையும் குறிக்கின்றது. (மணிமாலா 2 -79). இதனை தேவியின் மூக்குத்தியில் இந்த இரு கிரகங்களும் இருப்பதாக கூறலாம். அத்துடன் தேவியின் மூக்குத்தியினை தியானிப்பதன் மூலம் கிரக பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

கதம்ப மஞ்ஜ்ரீ - க்லுப்த - கர்ணபூர - மனோஹராயை (21)
மனோஹரமான கதம்பப் பூவை செவிப்பூவாக வுடையவள் 
காதில் கதம்ப மலரினை அணிந்திருக்கிறாள் அல்லது கதம்ப மலரினை காதினை சூழ அணிந்துள்ளாள்.
இந்த மலர்கள் தேவியின் இருப்பிடமான ஸ்ரீ புரத்தில் சிந்தாமணிக்கிரகங்களுக்கு வெளியே மலர்பவை. இந்த மலர்கள் தெய்வீக வாசனை உடையவை. இந்த வாசனையினை மலர்கள் தேவியின் காதுகளில் இருந்து பெறுகின்றது.

தாடங்க - யுகளீ - பூத - தபனோடுப - மண்டலா (22)
சந்திர சூரியர்களை தோடுகளாக அணிந்தவள் 
தேவி சூரியனையும் சந்திரனையும் தனது காதணிகளாக அணிந்திருக்கிறாள். இதன் அர்த்தம் தேவி சூரிய மண்டலத்தினை கட்டுப்படுத்துகிறாள் என்பதாகும். சூரிய சந்திரரே உயிர் வாழ்க்கைக்கு அடிப்படை. தேவியின் கண்களும் காதுகளும் மார்பும் சூரிய சந்திரராக கருதப்படுகிறது. க்லீம் என்ற பீஜம் தேவியின் இரு மார்பாக கருதப்படுகிறது. அவை க்லீம் பீஜத்தில் உள்ள இரு அரை வட்டங்களும் குறிப்பிடுகின்றன. க்லீம் பீஜம் காம பீஜம் எனவும் குறிப்பிடப்படுகிறது. இது பற்றிய இரகசியங்கள் குருமுகமாய் அறிய வேண்டியது. இந்த சஹஸ்ர நாமத்தில் உள்ள அனேக நாமங்கள் சூட்சுமமாக பிஜங்களை கொண்டிருக்கின்றன. ஆதலால்தான் இந்த சஹஸ்ர நாமம் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சௌந்தர்ய லஹரி சுலோகம் 28 தேவியின் மூக்குத்தியின் மகிமை பற்றி இப்படிக்  குறிப்பிடுகிறது "பிரம்மா, இந்திரன் முதலான தேவர்கள் அமிர்தத்தினை உண்டு இறவா வரம் பெற்றாலும் முதுமையினை எண்ணி பயப்படுகிறார்கள். ஆனால் சிவனோ ஆலகால விஷத்தை குடித்துவிட்டும் ஆபத்து இன்றி இருப்பது உன்னுடைய மூக்குத்தி மகிமையால் அல்லவா!"

பத்மராக-சிலாதர்ச - பரிபாவி - கபோல பூவே (23)
பத்மராக சிலைக்கண்ணாடியிலும் மிகுந்த ஒளியுடைய கண்ணுடையவள் 
தேவியினுடைய கன்னங்கள் ஒளிமிகுந்ததாகவும், மென்மையாகவும், ஒளி பட்டால் தெறிக்கும் தன்மையுடையதாகவும் இருக்கின்றது.  பத்மராகம் என்பது ஒரு வகை சிவந்த நிறமுடைய மாணிக்கம். மாணிக்கம் நான்கு வகைப்படும். விப்ரா, குருவிந்தம், சௌகந்திகம், மானசகந்தா என்பவை. இவற்றுள் விப்ரா என்பது உயர்ந்த வகை. குற்றமுள்ள மாணிக்கங்கள் அணிவதால் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகும். அவளுடைய கன்னங்கள் சிவப்பாக ஒளிர்கின்றன. அவளுடைய உடலும் சிவந்த நிறமுடையது. இதற்கு முன்னர் விபரிக்கப்பட்ட ஆபரணங்கள் எல்லாம் சிவப்பு  நிறமுடையவை. மேலும் அவளுடைய காதணியில் உள்ள சூரிய சந்திரர்கள் தமது ஒளியால் மேலும் அவளது கன்னத்தினை சிவக்க வைக்கின்றனர். தேவியுடன் தொடர்புடைய அனைத்தும் சிவந்த நிறமாக காணப்படுகிறது.
 சௌந்த்ர்ய லஹரி 59 சுலோகத்தில் "உன்னுடைய முகம் மன்மதனுடைய நான்கு சக்கர தேர், உன்னுடைய காதணியின் ஒளி கன்னம் வரை ஒளி வீசுகிறது. இந்த தேரில் ஏறி இருந்து மன்மதன் சிவனை எதிர்க்க துணிகிறான். அந்த தேரின் சக்கரமாக சூரியனும் சந்திரனும் சக்கரங்களாக விளங்குகின்றது" எனக்க குறிப்பிடப்பட்டுள்ளது.

நவவித்ரும - பிம்பஸ்ரீ - ந்யக்காரி - ரதனச் சதாயயை  (24)
புதிதான பவளத்திலும், கொவ்வை பழத்திலும் சிறந்த காந்தி பொருந்திய உதடுகளை உடையவள் 
தேவியின் உதடுகள் பவழம் போன்றும் கொவ்வைப்பழம் போன்றும் சிவந்தது. கொவ்வைப்பழம் பொதுவாக உதடுகளை வர்ணிக்க பாவிக்கப்படுவது. இரண்டும் சிவந்த நிறம் உடையவை.

சுத்த - வித்யாங்குராகார - த்விஜபங்க்தி - த்வயோஜ்ஜ்வலாயை (25)
சுத்த வித்தையே முளைத்தாற் போன்று விளங்கும் இரு பல்வரிசைகளை உடையவள் 
 தேவியினுடைய பற்கள்   சுத்தவித்தை போன்று இருக்கிறது. சுத்த வித்தை என்பது ஸ்ரீ வித்தையினை குறிக்கிறது. ஸ்ரீ வித்தை என்பது  லலிதாம்பிகையின் மிக இரகசியமான சக்தி வாய்ந்த பூஜை முறைகளை  கொண்ட சாதனை முறை. இதனுள் பல்வேறு பூஜை முறைகள் காணப்படுகின்றன. அவற்றுக்கான அர்த்தங்களும் விளக்கங்களும் தனியாக குருமுகமாய் அறிய வேண்டியவை. சுத்த என்றால் தூய்மையானது என்று பொருள். வித்யா என்றால் அறிவு, சுத்த வித்யா என்றால் தூய்மையான அறிவு என்று பொருள். இந்த வித்தை தூய அறிவாக கருதப்படுகிறது. ஏனெனில் உபாசனை மார்க்கத்தில் "நானே அது" என்ற அத்வைத நிலையினை தருவதால்.
சோடஷி மந்திரம் 16 பீஜங்களை உடையது. இதுவே ஸ்ரீ வித்தைக்கு விதை போன்றது. இந்த விதை வளர்ந்து விருட்சமாகும் போது இரண்டு  இலைகள் உடையதாகிறது. ஒரு இலையில் 16 வீதம் 16 x 2 = 32 ஆகிறது. இந்த எண்ணிக்கை மனிதனது பற்களின் எண்ணிக்கை ஆகும். இந்த பற்கள் இரண்டு வரிகளாக கீழ் மேல் தாடைகளில் பதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த இரு தாடைகளும் உள்ளூர இணைக்கப்பட்டிருக்கின்றன. இதைப்போல் ஆன்மாவும், பிரம்மமும் உள்ளூர இணைந்திருந்தாலும் அறியாமையினால் வெளியே வேறாகவே தோற்றுகிறது. ஸ்ரீ வித்யா உபாசனையில் பூஜைகளையும் சாதனைகளையும் விளங்கி தனிமையில் செய்யவேண்டும். அப்போது மட்டுமே அது பலனைத் தரும்.
தேவி மந்திர தீட்சை விதானத்தில் 32 வகை தீட்சைகள் உள்ளது. அத்துடன் இன்னொரு வகை புரிதலும் உள்ளது, சமஸ்க்ருதத்தில் உள்ள 51 அட்சரத்தில் 32 அட்சரங்களில் மட்டுமே லலிதா சஹஸ்ர நாமாவில் உள்ள நாமாக்கள் தொடங்குகிறது. இந்த 32 அட்சரங்களும்  தேவியினுடைய பற்களாக உருவகிக்கப்படுகிறது. அத்துடன் ஸ்ரீ வித்தை தீட்சை குருவின் வாய்மூலம் சீடனுக்கு உபதேசிக்கப்படும் என்பதனை வலியுறுத்துகிறது.
{சுத்த வித்தை பற்றிய மேலதிக குறிப்பு: சுத்த வித்தை என்பது சிவனின் பதினைந்தாவது தத்துவத்தினையும் குறிக்கும். இந்த தத்துவத்தினை அடையும் போது "நான்" என்ற உணர்வும் "அது" என்ற உணர்வும் ஒன்றே என்ற உணர்வு கிட்டும். பிரபஞ்சத்தின் ஆரம்ப முளை நிலையில் அதன் மீதான பார்வை வேறாக இருந்தாலும் இரண்டுக்கும் இடையிலான ஒருமை ஒரு நூல் இழை போன்று காணப்படும். ஒவ்வொரு நிலையிலும் இந்த ஒருமைப்பாடு வெவ்வேறான நிலைகளில் காணப்படுகிறது. க்ரியா என்பது முக்கியமான ததத்துவமாக இருக்கின்றது, இந்த நிலையில் உணர்வு நானும் அதுவும் ஒன்று என்பதாகும். வித்யா தத்துவம் சுத்த வித்யா, சஹஜ வித்யா, கஞ்சுக (எல்லைக்குட்பட்ட அறிவு) வித்யா என்ற முன்று பகுதிகளை உடையது. இங்கு சுத்த வித்தை எனப்படுவது ஐந்தாவது தத்துவமான சத் வித்யா  வினை(ஐந்தாவது தத்துவம்)  குறிக்கின்றது. சஹஜ வித்யா என்பது இயற்கை அறிவு, அது ஒரு தத்துவம் இல்லை. இயற்கை அறிவு என்பது சிவத்தின் விடுதலையான தன்மையினை குறிக்கிறது. சஹஜ வித்யாவும் (இயற்கை அறிவும்) சுத்த வித்தை எனக்குறிப்பிடப்படுகிறது.}
*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

Comments

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு