பன்னிரெண்டாவது பாடலிற்கு சித்தர் பிரான் இட்ட மந்திரப் பிரயோகத் தலைப்பு "களவு வெல்ல" என்பதாகும். இதன் பிரயோகமாக இரண்டு விஷயங்களைச் சொல்கிறார். என்னிடமிருந்து களவாடப்பட்ட பொருட்களைத் திரும்பப் பெறவும், களவு ஏற்படாமல் பாதுகாக்கவும் என பௌதீகமான களவினைத் தடுக்கும் வழியாக இந்தப் பாடலில் மந்திரப் பிரயோகத்தைச் செய்யலாம். அதேபோல் மனதினை புலன்கள் களவாடிவிடாமல் சும்மா இருக்கும் யோக சித்தியைப் பெறவும் இந்தப்பாடலின் மந்திரப் பிரயோகத்தைச் செய்யலாம்.
யோகத்தின் மிக உயர்ந்த சித்தி சும்மா இருத்தல். இதன் அர்த்தம் மிக ஆழமானது! இதை பதஞ்சலி சித்த விருத்தி நிரோதம் என்று சொல்கிறார். அனேகர் ஆன்மீகம் என்றவுடன் உலகப் பற்றுக்களைத் துறந்து காவியுடை உடுத்திக்கொண்டு, எங்காவது திருவண்ணாமலை, காசியில் சென்று அமர்ந்து விட்டால் மோக்ஷம் பெற்றுவிடலாம் என்று நம்புகிறார்கள். வேறு சிலர் ஒன்றுமே செய்யாமல் புலன் களை அடக்கிவிட்டால் ஆன்ம ஞானம் கிட்டும் என்று நம்புகிறார்கள். ஆனால் இவை ஒன்றும் உண்மையில்லை! கண்களை மூடி, காதைப் பொத்தி ஒரு அறையில் அமர்ந்து கொண்டு புலன் களுக்கு எந்தத் தூண்டுதலும் கொடுக்காவிட்டாலும் உள்ளே நாம் ஏற்கனவே பெற்ற அனுபவத்தால் பதிவு செய்த சித்தப்பதிவுகளிலிருந்து எழும் எண்ண அலைகள் ஒருவனை உண்மையில் சும்மா இருக்க விடாது. யோகத்தில் சும்மா இருத்தல் என்பது நான்கு தளங்களில் நடைபெறவேண்டும்.
புலன் கள் அடங்கிய பிரத்தியாகார சித்தி
உடல் அசையாமல் தியானத்திற்கு உகந்ததாக ஆசன சித்தி
மூச்சு தீர்க்கமாக கும்பக நிலையை அடையும் பிரணாயாம சித்தி
மனம் ஏகாக்கிரமடைந்த தாரணா சித்தி
இந்த நான் கும் அடைந்தால் மாத்திரமே உண்மையில் சும்மா இருக்க முடியும். இல்லாவிட்டால் சித்தத்தில் எழும் அலைகளால் அலைக்கழியப்படும் ஒருவனாகவே இருப்பான்.
இப்படி சும்மா இருக்க முடியவில்லை என்றால் எமது புலன் களை, உடலின் ஆற்றலை, மனதை இயற்கையான மாயா சக்தி களவாடுகிறது என்று அர்த்தம். இந்தக் களவாடலைத் தவிர்த்து சும்மா இருக்கும் வழியை இந்தப்பாடலில் அருணகிரிநாதர் கூறுகிறார். இனிப்பாடலைப் பார்த்துவிட்டு பிரயோகத்தை உரையாடுவோம்.
செம்மான் மகளைத் திருடும் திருடன்பெம்மான் முருகன், பிறவான், இறவான்
.சும்மா இரு, சொல் அற .. என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.