காம இச்சை நீங்க
**********************************
ஒன்பதாவது பாடலிற்குரிய பிரயோகமாக சித்தர் பிரான் இட்ட தலைப்பு "பெண்ணுசை ஒழிக்க" - இதன் அர்த்தம் காம இச்சை அதிகம் உள்ள ஆண் விவேகம் இன்றி மயக்கி அவனிடமிருந்து செல்வம், பணத்தை ஏமாற்றிப் பறிக்கும் பொல்லாப்பெண்ணிடமிருந்து ஒருவனைக் காப்பாற்றும் விவேகத்தைத் தரும் பிரயோகம் இந்தப் பாடலில் சொல்லப்படுகிறது. இதுபோல் பெண்களை மயக்கி ஏமாற்றும் ஆண்களிடமிருந்தும் பெண்ணைக் காப்பாற்ற இந்தப் பிரயோகம் சொல்லப்படுகிறது.
பலருக்கு காம இச்சையை நீக்கவேண்டும், தவறான காமத்தைத் தொடரக்கூடாது என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அதைச் செயல்படுத்த முடியாமல் மீண்டும் மீண்டும் தவறான காம இச்சைக்குள் சென்றுகொண்டிருப்பார்கள். காம இச்சையை ஒருவன் தானாக வெல்ல முடியாது. அந்தக் காம இச்சையின் இன்பத்தை விடப் பெரியதொரு இன்பத்தை மனதிற்குக் கொடுத்தால் இந்த தாழ் இச்சையில் மனம் செல்லாது! ஒருவன் உபாசனையால் இறைஆற்றலின் உயர் இன்பத்தை ஒரு தடவை அனுபவித்து விட்டால் அவன் பிறகு பெண்கள் பின்னால் செல்லும் தாழ் இச்சையில் மனம் செல்லாது!
இதை இராமலிங்க வள்ளலார் இப்படிச் சொல்கிறார்;
வேல் கொண்ட கையும் விறல் கொண்ட தோளும் விளங்கும் மயில்
மேல் கொண்ட வீறுமலர் முகமாறும் விரைக்கமலக்
கால் கொண்ட வீரக் கழலுங் கண்டாலன்றிக் காம னெய்யுங்
கோல் கொண்ட வன்மையறுமோ தணிகைக் குருபரனே
முருகனுடைய தரிசனத்தை கண்டவர்களால் மாத்திரமே காமன் எய்யும் மலர்க் கணைகளில் சிக்காமல் இருக்க முடியும்! ஏன் என்றால் முருகன் சிவபெருமானுடைய நெற்றிக்கண்ணான யோக சக்தியில் இருந்து தோற்றம் பெற்ற பரிபூரண ஞான சொருபம்! முருக உபாசனை என்பது ஒரு போர்வீரனுக்குரிய ஒழுக்கத்தைத் தரும் வீரபாவ உபாசனை! முருகனை உபாசித்தால் அவன் ஒழுக்க சீலனாக இருக்க வேண்டும். அல்லது மறக்கருணையால் ஒழுக்க சீலனாக்கப்படுவார்.
இன்று அரைகுறையாகச் சாத்திரம் படித்துவிட்டு தமக்கு இறையருள் உண்டு, ஞானம் உண்டு என்று ஆணவப்படுபவர்கள் எவரும் ஆறுமுகனாரின் விவேகம் எனும் வேலாயுதத்திலிருந்து தப்ப முடியாது. சிறு பிள்ளையாக இருக்கும் போதே பிரம்மனின் அதிமேதாவித்தனத்திற்கு குட்டு வைத்த விவேகி! முருகன் அருள் பெற்றவர்களுக்கு வேல் போன்று மாயைப் பிளந்து உண்மையைப் பார்க்கும் விவேக சக்தி இருப்பதால் எல்லோருடைய சின்னபுத்தி, தாழ் எண்ணம், உள்ஒன்று வைத்துப் புறமொன்று பேசும் இயல்பு தெளிவாகத் தெரியும். இப்படி விவேகம் உடைய எவனையும் யாரும் மயக்க முடியாது!
இனிப்பாடலைப் படித்த பின்னர் பிரயோகத்தின் அர்த்தத்தினை விளங்குவோம்:
மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்?
தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்
நிட்டூர நிராகுல, நிர்பயனே.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.