வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் நோக்கங்களை அறிய முடியாத மனிதர்களுடன் வார்த்தைகளால் உரையாடுவது மிகக் கடினமானது! இறுதியில் தர்க்கத்தில் போய் முடிந்து பகையாகும்!
ஒரே சொல் பலருக்கு அவரவர் அனுபவத்திற் கேற்ப வெவ்வேறு அக அனுபவங்களை ஏற்படுத்தி பலவித அர்த்தங்களைக் கற்பித்திருக்கும். இப்படியான சந்தர்ப்பத்தில் நாம் சரி என்று நினைத்துப் பிரயோகிக்கும் வார்த்தை அவர்களுக்குப் பிழையாகத் தெரியும்!
எம்மை மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் புரியாமல் அவர்களுக்கு நாம் உதவுகிறோம்; உபதேசிக்கிறோம்; வழிகாட்டுகிறோம்; நன்மை செய்கிறோம் என்று ஏதாவது செய்வதும் தவறாக முடியும். அவரவர் தம்மைச் சிறப்பாக தாமே நினைக்கும் போது நாம் அவர்களுக்கு உதவுகிறோம், வழிகாட்டுகிறோம் என்று நினைப்பது அவர்களை எரிச்சலூட்டும், சங்கடத்திற்குள்ளாக்கும்.
மனிதன் வார்த்தைகளால் தனது உணர்ச்சிகளுக்கு ஏற்றவாறு பொருள் கொள்ளவே தன்னைப் பழக்கப்படுத்தியிருக்கிறான்.
கொடுப்பதை வாங்கிக் கொள்ளவும், கூறுவதை ஏற்றுக் கொள்வதுமான மனநிலை இருக்கும் போது மாத்திரமே நாம் உதவுகிறோம், வழிகாட்டுகிறோம் என்பது ஆக்கத்தை உண்டு பண்ணும்.
அப்படி இல்லாவிட்டால் கல்லின் மேல் தெளிக்கும் நீர்ப் போல் இறுகிய மனத்துடன் உரையாடும் போது எண்ணங்கள் தெறித்து விழும்!
ஆனால் மனிதனாகப் பிறந்த யாரும் பூரணமானவர்கள் இல்லை! அனைவரும் குறைகளுடன் பிறந்து தமது குறைகளைச் செம்மைப்படுத்தவே இந்த வாழ்வு என்ற புரிதலும் மற்றவர்கள் எம்மைச் செம்மைப்படுத்த உதவுகிறார்கள் என்ற புரிந்துணர்வும் எமது வாழ்வை சரியான கோணத்தில் பார்க்க உதவி செய்யும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.