சென்ற பதிவில் Cognitive ஆற்றல் தான் மேதா சக்தி என்பதைப் பார்த்தோம். முற்காலத்தில் பாரதீய ரிஷிகள் வாழ்க்கையின் உயர்ந்த இலட்சியங்களை அடைவதற்கு ஒருவனுக்கு இந்த மேதா ஆற்றல் இருக்க வேண்டும் என்று கருதியிருந்தார்கள்.
இந்த மேதா ஆற்றலைப் பெற என்னென்ன வழிகள் இருக்கிறது என்பதை ஆராய்ந்திருந்தார்கள். ஆரம்பத்தில் மனித சமூகம் குழப்பம் குறைவான, வாழ்க்கையின் இலட்சியம் தெளிவாக அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு புருடார்த்தம் கொண்ட இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்த காலத்தில், பூரண உடல் ஆரோக்கியம் இருந்த காலத்தில் அத்தகைய மனிதனிற்கு தனது மனதைப் பயன்படுத்தி மந்திர பாராயணம் போன்றவை இந்த ஆற்றலைப் பெற பயன்படுத்தினார்கள்.
இந்த வகையில் மேதா சூக்தம் எனப்படும் வேத மந்திரத்தொகுதி இந்த ஆற்றலைப் பற்றிப் பேசுகிறது. சூக்தம் என்றால் நன்றாகச் சொல்லப்பட்டது என்று பொருள்படும். மேதா சக்தி பற்றி நன்றாகச் சொல்லப்பட்டது மேதா சூக்தம் எனப்படும். இது பிரம்மத்தை அடைந்து ரிஷியாகும் நோக்கம் உள்ள மாணவர்கள் தாம் மேதா சக்தியை அடையவேண்டும் என்று மேதாவினை அடையத் துதிப்பதாக இருக்கின்றது.
மேதா சக்தியின் நோக்கம் ஒருவன் பிரம்மத்தை அடைந்து ரிஷியாவதற்குரிய ஆற்றலைப் பெறுவதற்கே என்பது பெறப்படுகிறது.
வேதங்களில் மேதா சூக்தம் மூன்று காணப்படுகிறது.
மகா நாராயண உபநிஷதத்தில் காணப்படும் சூக்தம் மேதாவினை அடைய இந்திரன், அக்னி, அஸ்வினி குமாரர்கள், சூரியன், மேதா தேவி ஆகியோரைத் துதிப்பதாக வரும்.
ரிக் வேதத்திலும் வரும் மந்திரங்கள் அங்கிரஸ் முதலான சப்த ரிஷிகள், இந்திரன், அக்னி, பிரம்மா, வருணன், அஸ்வினி குமாரர், சரஸ்வதி ஆகியோரைத் துதிப்பதாகவும், அதர்வண வேத மந்திரங்களில் இந்திரன், அக்னி, வருணன், வாயு, மேதா தேவி ஆகியவர்கள் துதிக்கப்படுகிறார்கள்.
இந்தத் தெய்வங்கள் எங்கோ இருப்பதாக எண்ணத் தேவையில்லை. அண்டத்திலுள்ளது பிண்டத்திலுண்டு என்ற தத்துவத்திற்கு அமைய எமது மனம் எளிதாக ஒடுங்குவதற்கு இவற்றை வெளிமுகப்படுத்தி புலன் வழி அனுபவமாகப் பெற தெய்வங்களாக வழிபடுகிறோம். அந்த ஆற்றல்களை எமது ஆற்றல்களாக்கிக் கொள்வதே இத்தகைய வழிபாட்டின் நோக்கங்களாகும்.
இந்த மூன்று மேதா சூக்தங்களும் ஒருவன் மேதா சக்தியைப் பெற முயற்சிக்க வேண்டும் என்பதையும், அந்த மேதா சக்தி தன்னையறிந்து தனக்கு மூலமான சக்தி எதுவென்பதை அறிந்து மனித குலத்தின் மேம்பாட்டிற்குப் பயன்படும் ரிஷியாக வேண்டும் என்பதையும் இலக்காகக் கொண்டிருக்கிறது.
இதற்கு பிறகு வரும் காலத்தில் குருமுகமாய் தந்திர மார்க்கத்தில் இன்னும் பல உபாசனைகள் ஏற்படுத்தப்பட்டது.
அவைப் பற்றி அடுத்த பதிவுகளில் பார்ப்போம்...
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.