மகாநாராயண உபநிஷத மேதா சூக்தம் மூன்றாவது நான்காவது மந்திரங்கள்.
இந்த மந்திரங்கள் ஒருவன் பெற வேண்டிய மேதா சக்திகள் எவை, அவற்றிற்கு அதிபதிகள் யார் என்பதைக் கூறுகிறது.
1) இந்திரன்
2) சரஸ்வதி
3) அஸ்வினி குமாரர்கள்
4) அப்ஸரா
5) கந்தர்வர்கள்
ஆகிய ஐவரிடமிருந்தும் மேதா சக்தியை நாம் பெற வேண்டும் என்று இந்த இரண்டு மந்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
இது மேதா சக்தியைப் பற்றிய சில இரகசியங்களைக் கூறுகிறது. இங்கு தேவர்களாகக் குறிப்பிடப்படும் தெய்வங்கள் ஒவ்வொன்றும் மனிதன் பூரண இன்பத்துடன் வாழ்வதற்குத் தேவையான சக்திகள்.
இந்திரன் தெய்வ மனதின் அதிபதி, இந்த தெய்வ மனதிலிருந்தே மனித மனம் தோற்றம் பெறுகிறது. தெய்வ மனதின் அதிபதியுடன் மனித மனம் தொடர்புபட்டால் அந்த மனம் நுணுக்கமான விஷயங்களைப் புரியும் ஆற்றல் பெறும்.
சரஸ்வதி மனம் கற்க வேண்டிய பரா - அபரா வித்தைகளுக்கு அதிபதி. சரஸ்வதியின் அருள் வாய்ப்பதால் ஒருவன் பரா - அபரா வித்தைகளில் நிபுணத்துவம் பெறுவான்.
முதலின் தெய்வமனமாம் இந்திரன் அருள் பெற்று பின்னர் மனித மனம் கொண்டு வித்தைகளைக் கற்க வேண்டும் என்ற சூக்ஷ்மத்தை இந்த மந்திரம் கூறுகிறது.
அடுத்தது அஸ்வினி குமாரர்கள் - அஸ்வினி குமாரர்கள் ஆயுள் வேதத்தின் அதிபதிகள். எதை உண்ண வேண்டும் என்ற பதார்த்த குண இரகசியத்தையும், உணவை மருந்தாக்கும் இரகசியங்களையும் பெறலாம். இவர்களிடமிருந்து ஒருவன் உணவையும், மருந்தையும் பற்றிய இரகசியங்களை தனது அறிவிற்குச் சேர்த்துக் கொண்டால் அவன் வாழ்க்கை பூரணத்துவம் அடையும்.
அடுத்து அப்ஸரஸ், அப்ஸரஸுகள் ஒருவன் இன்பத்தை அனுபவிக்கும் மனதை மூளையை ஆற்றலைத் தருபவர்கள். நடனம் இவர்களின் அடிப்படை, அப்ஸரஸுகளின் அமிசம் உள்ளவர்கள் நடனத்தில் சிறந்து விளங்குவர். அப்ஸரஸுகள் உடலை எப்படி யோகத்திற்கு பயன்படுத்துவது என்ற இரகசிய அறிவினைத் தருவார்கள்.
கந்தர்வர்கள் இசைக்கு அதிபதி, ஒருவனுக்கு நாதம், இசையை உணரும் தன்மை பெறுவதற்கு கந்தர்வ அறிவு இருக்க வேண்டும். தலைச் சிறந்த இசை மேதைகள் அனைவரும் கந்தர்வ அமிசமாகவும் கந்தர்வ மேதாசக்தி பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.
இந்த இரண்டு மந்திரங்களும் மேதா சக்தியின் ஐந்து உபசக்திகளைக் குறிக்கிறது.
1) சரஸ்வதி மேதா சக்தி - பரா அபரா வித்தைகள்
2) இந்திர மேதா சக்தி - தெய்வ மனத்திற்கான அறிவு
3) அஸ்வினி மேதா சக்தி - உணவு, மருந்து பற்றிய ஆயுர்வேத மேதா சக்தி
4) அப்ஸர மேதா சக்தி - நடனம், உடலை ஆளும் ஆற்றல், இன்பத்தை அனுபவிக்கும் சக்தி
5) கந்தர்வ மேதா சக்தி - இசை, நாதத்தை உணரும் சக்தி.
இந்த ஐந்து சக்திகளின் விரிவு அனேகம், இந்தக் கட்டுரையின் நோக்கம் இவை பற்றிய அறிமுகம் மட்டுமே, ஆகவே இந்த நோக்கத்தைத்தாண்டி இதை நாம் உரையாடப் போவதில்லை. வேறொரு சந்தர்ப்பத்தில் இது பற்றிப் பார்ப்போம்.
மேதா தேவியின் ஐந்து வகை உப மேதா சக்திகள் இந்த இரண்டு மந்திரங்களில் கூறப்பட்டுள்ளது. பூரண மேதா சக்தி வேண்டுபவன் இவற்றை படிப்படியாகப் பெறவேண்டும்.
தொடரும்...
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.