மஹா நாரயண உபநிஷத மேதாசூக்தம் மேதா தேவி பற்றிக் கூறும் குறிப்புகளை அறிந்துக் கொள்வது மேதா சக்தியைப் பற்றிப் புரிந்து கொள்ள உதவும். இந்த சூக்தத்தில் ஆறு மந்திரங்கள் இருக்கின்றது.
முதல் மந்திரம் மேதா தேவியின் பிரபாவம் கீழ்வருமாறு கூறப்படுகிறது.
1) பிரபஞ்சம் எங்கும் பரந்தவளாக,
2) மங்களமானவளாக,
3) மனதின் அடிப்படைக் காரணியாக உருவகிக்கிக்கப்படுகிறது.
நாம் பெற வேண்டியது/தியானிக்க வேண்டியது என்ன என்பது பற்றிய விபரம் இதனால் பெறப்படுகிறது.
எங்கும் பரந்தவளாக மேதா தேவியை உருவகிப்பதால் எங்கிருந்தாலும் மேதா சக்தியைப் பெறலாம் என்ற உறுதி பெறப்படுகிறது.
மங்களகரமானவள் என்று உருவகிப்பதால் எமக்கு மங்களம் வந்து சேர்கிறது. மனதின்/புத்தியின் மூல சக்தி அவள் என்று உருவகிப்பதால் அவளின் அருளால் நாம் புத்தியை மேம்படுத்திக் கொள்ளலாம் என்பது பெறப்படுகிறது. நாம் பெற வேண்டிய சக்தி எங்கிருக்கிறது? பிரபஞ்சம் எல்லாம் பரவியிருக்கிறது.
இப்படிப்பரவிய மேதா சக்தி எனக்கு நன்மையை, மங்களத்தை தரக் கூடியதாக இருக்க வேண்டும். அப்போது தான் அடிப்படையில் எதைப் பார்த்தாலும் சந்தேகப்படும், பயமுறும் மனிதன் தைரியமாக மேதா சக்தியைப் பெற முனைவான். இறுதியாக அந்த மேதா சக்தி எங்கு வந்து சேர வேண்டும் என்று இலக்கினைக் குறிக்க, அவளை மனதின்/புத்தியின் மூல சக்தி என்று குறிப்பிடுகிறது.
இப்படி முதல் வரிகளில் மேதா தேவியின் பண்புகளை விபரித்து பிறகு அந்தப் பண்புகளைப் பெற வேண்டிய சாதகன் எப்படி இருக்க வேண்டும், அவன் எதை மேதா தேவி தனக்குத் தர வேண்டும் என்பதைக் கூறுகிறது; மேதா தேவியின் அருள் வேண்டுபவன்
1) பயனற்ற பேச்சினைக் குறைக்க வேண்டும்
2) பிரம்மத்தை அடையும் இலக்கினைக் கொண்டிருக்க வேண்டும்.
3) வீரமுள்ள மக்கட் செல்வங்களையும் மாணவச் செல்வங்களையும் கொண்டிருத்தல் வேண்டும்.
பயனற்ற பேச்சுக் குறைந்தால், பயனற்ற எண்ணங்கள் குறையும், பயனற்ற எண்ணங்கள் குறைந்தால் மனதின் சலனம் குறையும். மனதின் சலனம் குறைந்தால் சித்தத்தின் விருத்தி குறையும். சித்தத்தின் விருத்தி குறைந்தால் சித்தத்தில் (ஆழ் மனதில்) சித் என்ற அறிவு விழிப்படையும். இந்த ஆற்றலே மேதா சக்தி.
பயனற்ற பேச்சினைக் குறைக்க வேண்டும் என்றால் இலக்கு உயர்வாக இருக்க வேண்டும். இலக்கு உயர்வாக இருந்தால் அதை அடைவதற்கே எமது நேரம் செலவாகும். இலக்கு தாழ்வாக இருந்தால் நாம் மற்றவர்களைப் பற்றிக் குறை சொல்வதிலும், செயலாற்றாமல் வம்பளப்பதிலும் செலவழித்துக் கொண்டிருப்போம். ஆகவே பரா வித்யாவின் மிக உயர்ந்த இலக்கான பிரம்மத்தை அடைதலை இலக்காக கொண்டவனுக்கே மேதா சக்தி அடையக் கூடியதாக இருக்கும்.
மூன்றாவது வீரமுள்ள மக்கட் செல்வங்களும், மாணவச் செல்வங்களும் இருக்க வேண்டும் ஏன்? உயர்ந்த அறிவைப் பரப்பும் பரம்பரையை உருவாக்கினால் தான் பெற்ற மேதா சக்தியால் உலகம் பயனுறும். ஆகவே மேதா சக்தி பெற்ற ஒருவனுக்கு மக்கட் செல்வங்களும், மாணவர்களும் கட்டாயம் இருந்தால் தான் அந்த மேதைத்துவத்திற்கு விலாசம் ஏற்படும். மக்களும், மாணவர்களும் பெற்றோரைப் போல், ஆசிரியரைப் போல் மேதா சக்தியை பெறக் கூடிய மன ஒழுக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதே வீரமுள்ள மக்கட் செல்வமும், மாணவச் செல்வமும் என்று கூறப்பட்டது.
ஒரு மந்திரமுமே இவ்வளவு அழகாக மேதா சக்தியைப் பற்றிக் குறிப்பிடுகிறது, இந்தத் தொகுப்பில் இன்னும் ஐந்து மந்திரங்களுக்கும் விளக்க எழுதுவோம்!
இதைப் படிப்பவர்கள் எல்லாம் மேதாசக்தி பெற்று குருமண்டலத்தின் மாணவச் செல்வங்கள் ஆக வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.