திடீரென முக நூல் பிரபலங்கள் சிலர் தற்கொலை பற்றி பதிவிடுகிறார்கள்; என்ன காரணம் என்று உரையாடினால் அவர்களுடைய நண்பன் ஒருவன் அதுவும் மருத்துவ பீட மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான் என்ற சோகமான செய்தி கிடைத்தது.
தற்கொலை எங்கே ஆரம்பிக்கிறது என்பதற்கு நவீன அறிவியல் உளவியல் பிரச்சனை என்று பல கதைகள் சொல்லும்.
யோக மனவியல் தனது ஆங்காரம் சார்ந்த பிரச்சனை என்று விளக்கம் சொல்லும். ஆங்காரம் என்றால் மனம் உருவாகுவதற்குரிய மையம் (center) என்று பொருள்.
உதாரணமாக நான் மருத்துவன் என்ற ஆங்காரத்தை - மையத்தை உருவாக்கினால் அந்த மையம் சார்ந்து எனது எண்ணங்கள், ஆழ்மனம், புத்தி என்பன உருவாகத் தொடங்கும். இப்படி உருவாகத் தொடங்கியதை மனம் இறுகப் பற்றிக்கொள்ள களிம்பாக ஆணவம் தொற்றிக் கொள்ளும். பிறகு இந்தக் களிம்பினைக் காப்பாற்ற யதார்த்தத்தை மீறி செயல்பட ஆரம்பிக்கும் போது அது வெற்றி பெறவில்லை என்றவுடன் துக்கம் வரும்.
இது social status இனை முதன்மையாகக் கொண்ட சமூகங்களில் வீட்டிற்கொரு வைத்தியர், பொறியியலாளர் உருவாக வேண்டும் என்ற அழுத்தம் கொடுக்கும் சமூகங்களில் காணலாம். இந்த அழுத்தத்தால் உருவாக்கப்படும் பிம்பத்தை காப்பாற்ற முடியாத போது வேறு என்ன செய்வது என்று தெரியாமல் மனம் ஸ்தம்பித்துப்போய் தற்கொலையாக முடியலாம்.
அடிப்படையில் சந்தோஷமாக வாழ்வது என்பது தான் வாழ்வின் இலக்கு என்று சொல்லிக் கொடுக்காமல், முயற்சிப்பதில் தோல்வி அடைவது இயல்பானது என்பதை சொல்லிக் கொடுக்காமல் போட்டி போடுவதற்கும், தற்பெருமை பேசுவதை, பணச் செருக்கை தம்பட்டம் அடிப்பதை, சாதிச் செருக்கை ஊட்டி வளர்க்கும் சமூகங்களில் இப்படியான ஆணவங்கள் உடைபடும் சந்தர்ப்பங்களில் கொலையும், தற்கொலையும் நடைபெறுவதை அவதானிக்கலாம்.
தாவோயிசத்தின் மூன்று நியதிகளில் ஒன்று வெற்றியின் அபாயம்; அதீத வெற்றி என்பது உச்சி; உச்சிக்குச் சென்றால் விழாமல் இருக்க முடியாது என்பது தான் நியதி.
இன்று இளைஞர்களிற்கு தேவை அக வாழ்க்கை! மனம் எப்படி இயங்குகிறது? எது உண்மையான வாழ்க்கையின் இலக்கு? இழப்பதற்கு என்று எதுவும் இல்லை என்ற தெளிவு?
சமூகம் திணித்த வீண் பிம்பங்களுக்காக விலைமதிப்பற்ற உயிரை வீணாக்குவதல்ல!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.