சாதனை அனுபவம்
--------------
குரு ஸ்ரீ ஸக்தி சுமனன் அண்ணாவின் வழிகாட்டலில் சாதனை செய்ய ஆரம்பித்து இந்த ஆண்டோடு 7 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. இதுவரை தொடர்ச்சியாக சாதனை செய்ய முடிந்ததே இல்லை. சில வேளைகளில் சாதனை ஆரம்பிக்கும் வைராக்கியம் 30 நாட்கள் தாண்டும் போதே இல்லாமல் போய் விடும். அதன் பின்னர் நாட்கணக்கில் / மாதக்கணக்கில் சாதனை செய்யாமல் இருப்பேன். திரும்பவும் சுமனன் அண்ணாவின் உந்துதலால் மீண்டும் சாதனை தொடங்கும். சில நாட்களிலோ சில வாரங்களிலோ அது மீண்டும் நின்று விடும். இவ்வாறாக, 7 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கொரொனா வைரஸ் காரணமாக, மார்ச் மாத இறுதியிலேயே அலுவலகம் மூடப்பட்டதுடன், வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என்ற நிலையும் ஏற்பட்டது. (இன்றுவரை அத்தகைய நிலையே தொடர்கின்றது.) அந்தக் காலப்பகுதியிலேயே, சரியாக வசந்த நவராத்ரி வந்தது.
என்னைத்தொடர்பு கொண்ட சுமனன் அண்ணா, சாதனைக்கான இத்தகைய அரிய சூழ்நிலையை விட்டுவிட வேண்டாம் என்றும் சாதனையை மீள ஆரம்பிக்குமாறும் வலியுறுத்தினார். வசந்த நவராத்ரி சாதனைக்கு விண்ணப்பிக்குமாறும் கூறினார். அதன்படி, வசந்த நவராத்ரியில் நாளொன்றுக்கு 10 மாலை காயத்ரி ஜபம் செய்வதென்று தீர்மானித்து, விண்ணப்பத்தை அனுப்பினேன்.
நவராத்ரி காயத்ரி சாதனை நியதியின் படி, அந்த சாதனைக்கான சங்கல்பமாக “தேவி! என்னை நித்ய சாதகன் ஆக்கியருள வேண்டும்” என்பதையே முன்வைத்து சாதனையைத் தொடங்கினேன். வாழ்வில் நான் தொடர்ச்சியாக அடைந்து வரும் தோல்விகளில் முக்கியமானது சாதனையைத் தொடராமல் இருப்பதே. அதனால் தான் நித்ய சாதகன் ஆக வேண்டும் என்பதையே சங்கல்பமாக வைத்து சாதனையைத் தொடக்கினேன்.
சாதனை தொடங்கத் தீர்மானித்த அன்றே, எனது மிக நெருங்கிய உறவினர் மரணமடைந்த செய்தி வந்தடைந்தது. எனக்கு செய்யத் தீர்மானித்த சாதனையை கைவிட விருப்பம் இல்லை. எனினும், அந்தச் சூழ்நிலையில் சாதனையைச் செய்வது சரியானது தானா? என்ற எண்ணமும் வந்தது. கொரோனாவினால் ஏற்பட்ட விபரீதச் சூழல் காரணமாக, தொலைவில் இடம்பெற்ற சாவு வீட்டுக்குப் போகவும் முடியாதிருந்தது. இதனையடுத்து உடனடியாக, சுமனன் அண்ணாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சூழ்நிலையைத் தெரிவித்தேன். “சாவு உங்கள் வீட்டில் இடம்பெறவில்லை அல்லவா? எதையும் யோசிக்காமல் சாதனையைத் தொடருங்கள்” என்று குரு சொன்ன வார்த்தையை மனதில் இருத்தி, புத்தியை சாதனையில் குவித்து, எனது வசந்த நவராத்ரி சாதனையைத் தொடக்கினேன்.
10 மாலை ஜபம் செய்வது ஒரு மணிநேரத்துக்கு அதிகமான காலத்தை எடுத்துக் கொள்ளும் என்பதால் குடும்பத்தினருக்கு சிரமமாக இருக்கும் என ஆரம்பத்தில் நான் எண்ணியிருந்த போதும், நிஜத்தில் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. அதற்கு மாறாக, என் மனைவி மற்றும் சிறு குழந்தையான மகன் கூட சாதனைக்கு உதவியிருந்தனர்.
கொரோனா காலப்பகுதியில் வீட்டிலிருந்து அலுவலகப் பணி ஆற்ற வேண்டிய நிலையில், வழமையை விட அதிகப் பணிகள் அளிக்கப்பட்டன. அத்துடன், வேறு பல வேலைகளும் சேர்ந்து கொண்டன. எனினும், சரியான திட்டமிடலின் மூலம், அவை சாதனையைப் பாதிக்காத வண்ணம் செய்து கொண்டேன்.
தேவியின் அருளாலும் குரு மண்டலத்தின் அளவற்ற கருணையாலும், நவராத்ரி சாதனை இனிதே நிறைவேறியது. அதை சுமனன் அண்ணாவிடம் கூறிய போது, ’நாளொன்றுக்கு 10 மாலை காயத்ரி ஜபம்’ என்பதை தொடருமாறும், ஒரு லட்ச காயத்ரி ஜப இலக்கை அடையும் வரை 10 மாலை ஜபத்தை நிறுத்த வேண்டாம் என்றும், அவர் அறிவுறுத்தினார். இதனையடுத்து, அவ்வண்ணமே சாதனையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றேன். நேற்றைய தினத்துக்கான சாதனையுடன், குருவருளால் அந்த இலக்கு அடையப்பட்டது.
இந்த சாதனை நாட்களில், தேவியின் எல்லையற்ற கருணையால் எனக்குப் பின்வருவன உணர்த்தப்பட்டன:
1) சாதனையை தவிர்க்கும் மனநிலையை நம்மில் ஏற்படுத்துவதற்காக நமது விதி பல வகைகளில் முயல்கின்றது.
2) கோபம் என்பதே அதில் முதன்மையானது.
3) எரிச்சலுறுதல், கோபம் அடைதல் ஆவேசமாக கத்துதல் ஆகியவற்றால், நமது சக்தி அதி வேகமாக இழக்கப்படுகிறது, நாமும் களைப்படைகின்றோம். அதனால், சாதனை செய்ய இயலாமல் போகின்றது.
4) அவ்வாறாக வரும் கோபத்தின் மூலக் காரணத்தைத் தேடி ஆராய்ந்தால், அது ஓர் அற்ப விஷயத்துக்காக இருக்கும். மேலும், அந்த அற்ப விஷயம் சில நாட்களில் மறந்து போய் விடக்கூடியதாக இருக்கும்.
5) கோபத்தைப் போன்று, சாதனையைத் தடுக்கக்கூடிய இன்னொரு அம்சம் தான் தர்க்கம்;
6) நம்மைச் சுற்றியுள்ள சூழலில், அன்றாடம் நிகழும் தர்க்கங்கள் அனைத்தும், அறிவைப் பெறும் நோக்கத்துடன் செய்யப்படுபவை அல்ல. மாறாக, தம்முடன் கருத்து முரண்படுபவரை மனம் நோகச் செய்யவும், துன்புறுத்தவும், அவரை மறு வார்த்தை பேச விடாது முடக்கினோம் என நம் ஆணவத்துக்குத் தீனி போடவுமே, தர்க்கம் பயன்படுகின்றது.
7) தர்க்கத்தில் வென்றால் வெற்றி போதை உருவாகிறது. அதேவேளை இன்னொருவரை நோகடித்துவிட்ட குற்ற உணர்ச்சியும் உருவாகிறது. மேலும் தர்க்கமும் எமது சக்தியை உறிஞ்சிக் கொள்கின்றது. இவற்றால், சாதனை தடைப்படும்.
8) தர்க்கத்தில் தோற்றால், கடுமையான மன வலி உருவாகின்றது. பழிவாங்கும் உணர்ச்சி உருவாகின்றது. வெறி பிடித்துவிட்ட நிலை ஏற்படுகின்றது. இது சில நாட்களுக்கு நீடிக்கவும் செய்யும். மேலும் தர்க்கத் தோல்வியும் எமது சக்தியை பெருமளவு உறுஞ்சிக் கொள்கின்றது. இதனாலும் சாதனை தடைப்படும்.
9) கோபமும் தர்க்கமும் எம் சாதனையைத் தடைப் படுத்துவதால், அவை எம்மில் எப்போது தோன்றும் என நாம் விழிப்புடன் இருப்பதுடன், அவை தோன்றும் சூழலில், எதிர்வினையாற்றாது இருப்பதன் மூலம், அவற்றின் தோற்றத்தை இல்லாதொழிக்க முடிவதுடன், நமது மனச்சாந்தியையும் மனச் சமநிலையையும் பேண முடியும்.
10) சாதனையைத் தடைப்படுத்தும் இன்னுமொரு அம்சம்: எனது வீட்டுச்சூழல் சாதனைக்கு ஒத்துழைக்காது என நாமே மேற்கொள்ளும் முன்முடிவு.
11) இவ்வாறான முன்முடிவினால், நாமே நம் சாதனைக்கு தடையாக மாறுவோம். உண்மையில், நமது வீட்டுச் சூழல் அவ்வாறு இருக்காது. நமது கற்பனையே நம்மை சாதனை செய்ய விடாது தடுக்கும்.
12) தொடர்ச்சியான சாதனையை உடைத்து நிறுத்தும் பிரதான காரணி, மனம் சாதனையில் உற்சாகமற்றுப் போதல் ஆகும்.
13) நம் குழந்தைக்கு பல்வேறு கதைகள் கூறி, ஆர்வத்தை ஏற்படுத்தி சோறு ஊட்டுகின்றோம். அதைப் போல், மனம் என்ற குழந்தைக்கு, சாதனையில் தொடர்ச்சியாக ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக, நாம் நடந்து கொண்டால், உற்சாகம் குறையாது. இன்ன செயலை / நடத்தையை மேற்கொண்டால், மனக்குழந்தையின் உற்சாகம் அதிகரிக்கும் என, அறுதியிட்டு கூறிவிட முடியாது. ஏனெனில் ஒவ்வொருவரது மனக்குழந்தையும் தனித் தன்மை கொண்டவை. அவரர் மனக்குழந்தைக்கு உற்சாகத்தை அதிகரிப்பது எது என்று, அவரவரே கண்டு பிடித்து, அதன் மூலம் சாதனையில் தொடர்ச்சியைப் பேண வேண்டும்.
14) ’செடிக்குத் தான் வேலி; மரத்திற்கு அல்ல’ என்பதற்கமைய, இந்த மனக்குழந்தையை உற்சாகப்படுத்தும் வேலைகள், ஆரம்ப நிலைக்கு மட்டுமே என்பதை உணர்ந்து, தளர்ந்து போகாதிருக்க வேண்டும்.
15) மேலும், சாதனைக்குத் தடையாக அமையும் பிற பிரச்சினைகள் அனைத்துமே, ‘கூடுதலாக எடுத்துக் கொண்டு, குறைவாக திருப்பிக் கொடுக்கும்’ நமது பழக்கத்தால் விளைபவையே.
16) வீட்டுக்கான பணிகளில் நாம் அதிகளவில் எடுத்துக் கொண்டு, அவற்றைச் செய்து முடிப்பதன் மூலம், வீட்டுச் சூழலில் பிரம்மிக்கத் தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
17) ஏற்கனவே எவ்வளவு வேலைகளைச் செய்கின்றேன்; இன்னும் எப்படி அதிக வேலைகளைச் செய்ய முடியும் எனக் கேள்வி எழுந்தால், அதற்காகத் தான் நாம் காயத்ரி சாதனைச் செய்கின்றோம் என்பதே பதில் என எனக்கு உணர்த்தப்பட்டது. தேவியின் பேரொளி எமது புத்தியைப் பிரகாசப்படுத்த, பிரகாசப் படுத்த, வழிகள் கண்ணுக்குத் தெரியும் என்பதே நான் அனுபவத்தில் கண்ட உண்மை.
சிறு எடுத்துக் காட்டாக,
இந்த கொரோனா காலத்தில், மனைவியாரிடமிருந்து சமையல் கற்றுக் கொண்டு, அவரது பணிச்சுமையை சிறிதளவு குறைத்தேன். இதன் மூலம், நான் காயத்ரி சாதனை தவிர்ந்த புதியதொரு விடயத்தையும் கற்றுக் கொண்டுள்ளேன். அத்துடன், எனது மனைவியாரும் இந்தக் காலப்பகுதியில் மிகச் சிறிய ஜப எண்ணிக்கையிலேனும், குரு அகத்திய - காயத்ரி சாதனையைத் தொடங்கியுள்ளார்.
இவ்வாறாக, குருவருளினால், இந்த ஒரு லட்ச காயத்ரி சாதனையை முடித்துள்ளேன். குருவின் கருணையும் அன்பும் இன்றி எதுவும் சாத்தியம் இல்லை. 7 ஆண்டுகளில் முடியாதது இந்த 3 மாதங்களில் முடிந்தமை ஓர் அற்புதமேயன்றி வேறில்லை. குருநாதர் அகத்திய மகரிஷி உள்ளிட்ட குரு மண்டலத்துக்கு மீண்டும் மீண்டும் எனது நன்றியை இதயத்தால் செலுத்தி நிற்கின்றேன்.