குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, April 30, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 20: நாமங்கள் 26 - 30

கர்ப்பூரவீடீகாமோத - சமாகர்ஷி-திகந்தராயை (26)
எத்திக்கிலும் உள்ளவரை நறுமணத்தால் கவரும் கற்பூர வீடிகை என்ற தாம்பூலம் தரித்தவள் 

கற்பூர வீடிகை என்பது நறுமணம் தரும் பொருடக்களை கொண்டு செய்யப்பட்ட தாம்பூலம். இதில் பயன்படுத்தும் பொருட்கள் ஏலம், லவங்கம், பச்சை கற்பூரம், கஸ்தூரி, கேஸரி , ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி, பாக்கு என்பனவாகும். இவற்றை நன்கு தூளாக்கி சீனி சேர்த்து செய்யும் கலவையே கற்பூர விடிகா. இந்த தூளினை வெற்றிலையுடன் கலந்து தாம்பூலம் தரிக்கையில் அதன் வாசனை அனைவரையும் கவரும் தன்மை உடையது. தேவி இந்த தாம்பூலத்தினை தரித்து வரும் வாசனையினால் இந்த பிரபஞ்சமே நறுமணத்தினை பெறுகிறது. அதனால் அவளை நோக்கி அனைத்தையும் கவர்கிறாள். 559வது நாமத்தினையும் காண்க. லலிதா திரிசதி 14வது நாமமும் இதே பொருளினை தருகிறது. 

இதன் உட்பொருள் அறியாமை உடைய மனிதனை அறிவாகிய வாசத்தினால் கவர்கிறாள் என்பதாகும். புத்தியுடைய மனிதன் தனது பக்தியால் தேவியினை அடைகிறான், ஆனால் அறிவற்ற மனிதன் அவளை அடைவதற்கு ஒரு உந்து கோல் வேண்டும். அந்த உந்துகோலே தாம்பூல வாசனையாக குறிப்பிடப்படுகிறது.

நிஜ-ஸல்லாப -மாதுர்ய-விநிர்ப்பர்த்ஸித-கச்சபீ (27)
கச்சபீ  என்ற சிறந்த வீணை நாதத்திலும் இனிய மொழியாள் 

சரஸ்வதியின் வீணை கச்சபீ  எனப்படும். இது உயர்ந்த இனிய நாதத்தினை தருவது. சரஸ்வதி கலைகளுக்கெல்லாம் அதிபதி. லலிதையின் குரல் சரஸ்வதியின் வீனை நாதத்தை விட இனியது. 

சௌந்தர்ய லஹரி 22 வது சுலோகம் இப்படிக்கூறுகிறது " வாணியனவள் தனது வீணையுடன் சிவனையும் உன்னையும் பற்றிய  மகிமையை வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவிற்கு உனது பாராட்டினை பெற இசைக்கிறாள். உனது தலை அசைவினை கண்டவுடன் வீணையினை மறைக்கிறாள். ஏனெனில் வீணையின் நாணில் எழும் ஓசையின் இனிமையினை விட உனது குரல் மிக்க இனிமையாக இருப்பதால். 

இதற்கு முந்தைய  நாமவிற்கு கொடுக்கப்பட்ட விளக்கம் இதற்கும் பொருந்தும், தனது இனிய குரலினால் அறியாமையில் உழலும் மனிதனை ஈர்த்து நல் வழிப்படுத்துகிறாள் 

மந்தஸ்மித-ப்ராபாபூர-மஜ்ஜத்காமேச-மானஸாயை (28) 
காமேசுவரனுடைய மனது மூழ்கி விளையாடும் பிரவாகம் போன்ற புன்சிரிப்பை உடையவள்

ஸ்மித என்றால் புன்சிரிப்பு என்று பொருள், மந்தஸ்மித என்றால் மயக்கும் சிரிப்பு என்று பொருள். காமேச என்பது சிவன், லலிதை சிவனின் இடது தொடையில் அமர்ந்தவடிவம் காமேஸ்வர காமேஸ்வரி எனப்படும். இது அர்த்த நாரீஸ்வர வடிவத்திலும் வேறானது. இந்த நிலையில் சிவன் லலிதையின் மயக்கும் புன்சிரிப்பில் மூழ்கி இருக்கிறார்.

காம என்றால் பிந்து என்று பொருள், புள்ளி; பிந்து என்பது காமகலா பீஜத்தின் (ஈம்) ஒரு பகுதி. இந்த பீஜம் இரண்டு புள்ளிகளை கொண்டிருக்கும். ஒவ்வொன்றும் சூரியனையும் சந்திரனையும் குறிக்கும். பிந்து அகங்காரத்தினை குறிக்கும், காமம், மற்றும் கலை என்ற இரண்டும் இச்சையினை குறிக்கும். மனமே இச்சையின் காரணம். காமேஸ்வரியின் புன்சிரிப்பு சிவனின் மனத்தினையே அசைக்கப்படுகிறது. இதுவே அவளின் புன்சிரிப்பின் மகிமையினை குறிக்கிறது.

இத்தகைய வசீகர புன்னகையால் பக்தனை கவர்ந்து அவர்களுக்கு ஞானத்தினை அளித்து முக்தியினை தருபவள்.

அநாகலித - ஸாத்ருச்ய-சிபுக-ஸ்ரீ-விராஜிதாயை (29) 
உவமையற்ற அழகு வாய்ந்த முகவாய் கட்டின் அழகுடன் விளங்குபவள்.

அழகிய கன்னங்களை உடையவள். சௌந்தர்ய லஹரி (67) கூறுகின்றது “ஒப்பிடமுடியாத அழகுவாய்ந்த கன்னத்தினை சிவன் தனது முன்னங்கையினால் உனது கீழூதட்டில் உள்ள அமிர்ததினை அருந்துவதற்காக தடவுகிறார்” எனக் குறிப்பிடப்படுகிறது.

காமேச-பத்த-மாங்கல்ய-ஸூத்ர-சோபித-சுந்தராயை (30) 
காமேஸ்வரர் கட்டிய மங்கல நாணுடன் பிரகாசிக்கும் கழுத்தினள்

தேவியினுடய கழுத்து காமேஸ்வரர் கட்டிய மாங்கல்ய கையிற்றுடன் காணப்படுகிறது.

சௌந்தர்ய லஹரி (69) கூறுகிறது “உனது கழுத்தில் காணப்படும் மூன்று கோடுகள் உனது திருமணத்தின் போது மீட்டப்பட்ட இசைக்கருவிகளின் நாண்களைப்போன்று பிரகாசிக்கிறது, இது ஒரு ராகத்தின சுரம், அடைவு, பண்பு ஆகியவற்றை போன்று காணப்படுகிறது.

மாங்கல்ய நாண் கட்டும் பழக்கம் வேதகாலத்தில் இருக்கவில்லை. சாமுத்திரிகா லட்சண சாஸ்திரப்படி நெற்றி, கழுத்து, இடை ஆகியவற்றில் மூன்று கோடுகள் இருப்பது அவர்களைது பாக்கியங்களை குறிக்கும்



*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

Monday, April 29, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 19: நாமங்கள் 18 - 25


வக்த்ரஸ்மர - மாங்கல்ய - க்ருஹ - தோரண - சில்லிகாயை (18)
முகத்தில் அழகு வெள்ளத்தில் சலிக்கும் மீன்களைப் போன்ற கண்களை உடையவள் 
தேவியினுடைய கண்கள் தடாகத்தில் அசையும் மீன்கள் போன்று காணப்படுகிறது. முகம் தடாகமாகவும், கண்கள் மீனாகவும் உருவகிக்கப்படுகிறது. மீன் வேகமாக அசையக்கூடியது. அதுபோல் தேவியினுடைய கண்களும் உயிர்களுக்கு கருணையினை பொழிய வேகமாக அசைகிறது. மீன் முட்டைகளை இட்டுவிட்டு கண்பார்வையினாலேயே பொறிக்கச் செய்யும் ஆற்றல் உள்ளவை. அதுபோல் தேவியினுடைய கண்பார்வை பிரபஞ்சத்தை போஷிக்கும் ஆற்றல் உள்ளது. ஏனெனில் அவளது கண்களின் அழகால் அவள் மீனாட்சி, மீனலோஜினி என அழைக்கப்படுகிறாள்.

நவசம்பக புஷ்பாப நாஸதண்ட - விராஜிதா (19)
அன்றலர்ந்த சம்பகம் போன்ற அழகிய மூக்குடையவள் 
 தேவியினுடைய மூக்கு அன்று மலர்ந்த சம்பக மலர் போன்று காணப்படுகிறது.

தாராகாந்தி - திரஸ்காரி - நாஸாபரண - பாஸுராய (20)
நட்சத்திரத்தினும் மிகுந்த ஒளிவீசும் மூக்குத்தியணிந்தவள் 
நட்சத்திரங்களை விட ஒளிரும் மூக்குத்தி உடையவள். அவளுடைய மூக்குத்தியில் மாணிக்கங்களும் முத்துக்களும் காணப்படுகின்றது. தாரா என்றால் நட்சத்திரம், தாரா என்பது மங்களா, சுக்லா என்ற இரு தேவதைகளையும் குறிக்கும். சுக்லா என்பது சுக்கிரன் ஆகியது. இந்த மங்களா சுக்லா என்ற இரண்டும் செவ்வாய் மற்றும் சுக்கிரனை குறிக்கும். இவை இரண்டும் குறித்த வகை இரத்தினங்களை கொண்டிருக்கின்றன. சிவப்பு நிற மாணிக்கம் செவ்வாயினையும், வைரம் சுக்கிரனையும் குறிக்கின்றது. (மணிமாலா 2 -79). இதனை தேவியின் மூக்குத்தியில் இந்த இரு கிரகங்களும் இருப்பதாக கூறலாம். அத்துடன் தேவியின் மூக்குத்தியினை தியானிப்பதன் மூலம் கிரக பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

கதம்ப மஞ்ஜ்ரீ - க்லுப்த - கர்ணபூர - மனோஹராயை (21)
மனோஹரமான கதம்பப் பூவை செவிப்பூவாக வுடையவள் 
காதில் கதம்ப மலரினை அணிந்திருக்கிறாள் அல்லது கதம்ப மலரினை காதினை சூழ அணிந்துள்ளாள்.
இந்த மலர்கள் தேவியின் இருப்பிடமான ஸ்ரீ புரத்தில் சிந்தாமணிக்கிரகங்களுக்கு வெளியே மலர்பவை. இந்த மலர்கள் தெய்வீக வாசனை உடையவை. இந்த வாசனையினை மலர்கள் தேவியின் காதுகளில் இருந்து பெறுகின்றது.

தாடங்க - யுகளீ - பூத - தபனோடுப - மண்டலா (22)
சந்திர சூரியர்களை தோடுகளாக அணிந்தவள் 
தேவி சூரியனையும் சந்திரனையும் தனது காதணிகளாக அணிந்திருக்கிறாள். இதன் அர்த்தம் தேவி சூரிய மண்டலத்தினை கட்டுப்படுத்துகிறாள் என்பதாகும். சூரிய சந்திரரே உயிர் வாழ்க்கைக்கு அடிப்படை. தேவியின் கண்களும் காதுகளும் மார்பும் சூரிய சந்திரராக கருதப்படுகிறது. க்லீம் என்ற பீஜம் தேவியின் இரு மார்பாக கருதப்படுகிறது. அவை க்லீம் பீஜத்தில் உள்ள இரு அரை வட்டங்களும் குறிப்பிடுகின்றன. க்லீம் பீஜம் காம பீஜம் எனவும் குறிப்பிடப்படுகிறது. இது பற்றிய இரகசியங்கள் குருமுகமாய் அறிய வேண்டியது. இந்த சஹஸ்ர நாமத்தில் உள்ள அனேக நாமங்கள் சூட்சுமமாக பிஜங்களை கொண்டிருக்கின்றன. ஆதலால்தான் இந்த சஹஸ்ர நாமம் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சௌந்தர்ய லஹரி சுலோகம் 28 தேவியின் மூக்குத்தியின் மகிமை பற்றி இப்படிக்  குறிப்பிடுகிறது "பிரம்மா, இந்திரன் முதலான தேவர்கள் அமிர்தத்தினை உண்டு இறவா வரம் பெற்றாலும் முதுமையினை எண்ணி பயப்படுகிறார்கள். ஆனால் சிவனோ ஆலகால விஷத்தை குடித்துவிட்டும் ஆபத்து இன்றி இருப்பது உன்னுடைய மூக்குத்தி மகிமையால் அல்லவா!"

பத்மராக-சிலாதர்ச - பரிபாவி - கபோல பூவே (23)
பத்மராக சிலைக்கண்ணாடியிலும் மிகுந்த ஒளியுடைய கண்ணுடையவள் 
தேவியினுடைய கன்னங்கள் ஒளிமிகுந்ததாகவும், மென்மையாகவும், ஒளி பட்டால் தெறிக்கும் தன்மையுடையதாகவும் இருக்கின்றது.  பத்மராகம் என்பது ஒரு வகை சிவந்த நிறமுடைய மாணிக்கம். மாணிக்கம் நான்கு வகைப்படும். விப்ரா, குருவிந்தம், சௌகந்திகம், மானசகந்தா என்பவை. இவற்றுள் விப்ரா என்பது உயர்ந்த வகை. குற்றமுள்ள மாணிக்கங்கள் அணிவதால் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகும். அவளுடைய கன்னங்கள் சிவப்பாக ஒளிர்கின்றன. அவளுடைய உடலும் சிவந்த நிறமுடையது. இதற்கு முன்னர் விபரிக்கப்பட்ட ஆபரணங்கள் எல்லாம் சிவப்பு  நிறமுடையவை. மேலும் அவளுடைய காதணியில் உள்ள சூரிய சந்திரர்கள் தமது ஒளியால் மேலும் அவளது கன்னத்தினை சிவக்க வைக்கின்றனர். தேவியுடன் தொடர்புடைய அனைத்தும் சிவந்த நிறமாக காணப்படுகிறது.
 சௌந்த்ர்ய லஹரி 59 சுலோகத்தில் "உன்னுடைய முகம் மன்மதனுடைய நான்கு சக்கர தேர், உன்னுடைய காதணியின் ஒளி கன்னம் வரை ஒளி வீசுகிறது. இந்த தேரில் ஏறி இருந்து மன்மதன் சிவனை எதிர்க்க துணிகிறான். அந்த தேரின் சக்கரமாக சூரியனும் சந்திரனும் சக்கரங்களாக விளங்குகின்றது" எனக்க குறிப்பிடப்பட்டுள்ளது.

நவவித்ரும - பிம்பஸ்ரீ - ந்யக்காரி - ரதனச் சதாயயை  (24)
புதிதான பவளத்திலும், கொவ்வை பழத்திலும் சிறந்த காந்தி பொருந்திய உதடுகளை உடையவள் 
தேவியின் உதடுகள் பவழம் போன்றும் கொவ்வைப்பழம் போன்றும் சிவந்தது. கொவ்வைப்பழம் பொதுவாக உதடுகளை வர்ணிக்க பாவிக்கப்படுவது. இரண்டும் சிவந்த நிறம் உடையவை.

சுத்த - வித்யாங்குராகார - த்விஜபங்க்தி - த்வயோஜ்ஜ்வலாயை (25)
சுத்த வித்தையே முளைத்தாற் போன்று விளங்கும் இரு பல்வரிசைகளை உடையவள் 
 தேவியினுடைய பற்கள்   சுத்தவித்தை போன்று இருக்கிறது. சுத்த வித்தை என்பது ஸ்ரீ வித்தையினை குறிக்கிறது. ஸ்ரீ வித்தை என்பது  லலிதாம்பிகையின் மிக இரகசியமான சக்தி வாய்ந்த பூஜை முறைகளை  கொண்ட சாதனை முறை. இதனுள் பல்வேறு பூஜை முறைகள் காணப்படுகின்றன. அவற்றுக்கான அர்த்தங்களும் விளக்கங்களும் தனியாக குருமுகமாய் அறிய வேண்டியவை. சுத்த என்றால் தூய்மையானது என்று பொருள். வித்யா என்றால் அறிவு, சுத்த வித்யா என்றால் தூய்மையான அறிவு என்று பொருள். இந்த வித்தை தூய அறிவாக கருதப்படுகிறது. ஏனெனில் உபாசனை மார்க்கத்தில் "நானே அது" என்ற அத்வைத நிலையினை தருவதால்.
சோடஷி மந்திரம் 16 பீஜங்களை உடையது. இதுவே ஸ்ரீ வித்தைக்கு விதை போன்றது. இந்த விதை வளர்ந்து விருட்சமாகும் போது இரண்டு  இலைகள் உடையதாகிறது. ஒரு இலையில் 16 வீதம் 16 x 2 = 32 ஆகிறது. இந்த எண்ணிக்கை மனிதனது பற்களின் எண்ணிக்கை ஆகும். இந்த பற்கள் இரண்டு வரிகளாக கீழ் மேல் தாடைகளில் பதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த இரு தாடைகளும் உள்ளூர இணைக்கப்பட்டிருக்கின்றன. இதைப்போல் ஆன்மாவும், பிரம்மமும் உள்ளூர இணைந்திருந்தாலும் அறியாமையினால் வெளியே வேறாகவே தோற்றுகிறது. ஸ்ரீ வித்யா உபாசனையில் பூஜைகளையும் சாதனைகளையும் விளங்கி தனிமையில் செய்யவேண்டும். அப்போது மட்டுமே அது பலனைத் தரும்.
தேவி மந்திர தீட்சை விதானத்தில் 32 வகை தீட்சைகள் உள்ளது. அத்துடன் இன்னொரு வகை புரிதலும் உள்ளது, சமஸ்க்ருதத்தில் உள்ள 51 அட்சரத்தில் 32 அட்சரங்களில் மட்டுமே லலிதா சஹஸ்ர நாமாவில் உள்ள நாமாக்கள் தொடங்குகிறது. இந்த 32 அட்சரங்களும்  தேவியினுடைய பற்களாக உருவகிக்கப்படுகிறது. அத்துடன் ஸ்ரீ வித்தை தீட்சை குருவின் வாய்மூலம் சீடனுக்கு உபதேசிக்கப்படும் என்பதனை வலியுறுத்துகிறது.
{சுத்த வித்தை பற்றிய மேலதிக குறிப்பு: சுத்த வித்தை என்பது சிவனின் பதினைந்தாவது தத்துவத்தினையும் குறிக்கும். இந்த தத்துவத்தினை அடையும் போது "நான்" என்ற உணர்வும் "அது" என்ற உணர்வும் ஒன்றே என்ற உணர்வு கிட்டும். பிரபஞ்சத்தின் ஆரம்ப முளை நிலையில் அதன் மீதான பார்வை வேறாக இருந்தாலும் இரண்டுக்கும் இடையிலான ஒருமை ஒரு நூல் இழை போன்று காணப்படும். ஒவ்வொரு நிலையிலும் இந்த ஒருமைப்பாடு வெவ்வேறான நிலைகளில் காணப்படுகிறது. க்ரியா என்பது முக்கியமான ததத்துவமாக இருக்கின்றது, இந்த நிலையில் உணர்வு நானும் அதுவும் ஒன்று என்பதாகும். வித்யா தத்துவம் சுத்த வித்யா, சஹஜ வித்யா, கஞ்சுக (எல்லைக்குட்பட்ட அறிவு) வித்யா என்ற முன்று பகுதிகளை உடையது. இங்கு சுத்த வித்தை எனப்படுவது ஐந்தாவது தத்துவமான சத் வித்யா  வினை(ஐந்தாவது தத்துவம்)  குறிக்கின்றது. சஹஜ வித்யா என்பது இயற்கை அறிவு, அது ஒரு தத்துவம் இல்லை. இயற்கை அறிவு என்பது சிவத்தின் விடுதலையான தன்மையினை குறிக்கிறது. சஹஜ வித்யாவும் (இயற்கை அறிவும்) சுத்த வித்தை எனக்குறிப்பிடப்படுகிறது.}




*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

Sunday, April 28, 2013

உண்மை ஞானத் திறவுகோல் - உண்மையான ஞானம் பெற வேடங்கள் அவசியமா?

உண்மையான ஞானம் பெற வேடங்கள் அவசியமா? என்பது பற்றி விபரிக்கிறது. 

சமய நெறியின் மயக்கத்திலே மயங்கி கிடக்கும் மக்களில் எப்படியோ தவறான பல நம்பிக்கைகள் வேரூன்றியிருக்கின்றன. அவைகளில் ஒன்றை மட்டும் ஆராய்வோம். "இதோ முருகன், இதோ கிருஷ்ணன் என்று கடவுளை பகுத்து கூறுவது போல "இவர் மகான், இவர் யோகி, இவர் சாது, அவர் சந்நியாசி" என பகுத்தறியும் வலியினை கண்டுபிடித்திருக்கிறார்கள் மதவாதிகள். உண்மையை உணரும் வரை நானும் இப்படித்தான் பெரியோர்களை கண்டு வந்தேன். 

சாது, சந்நியாசி, பக்தன், யோகி என்பவர்கள் உடையாலோ, உண்ணல் முதலிய வாழ்க்கை முறைகளாலோ, மற்றவர்களை விட மாறுபட்டு இருப்பவர்கள் அல்ல. பாரத நாட்டில் வாழ்ந்த எந்த சித்தரோ, யோகிகளோ மக்களை விட வேறு பட்டு இருக்கவில்லை. சமய நெறி என்ற மதங்கள் தோன்றுவதற்கு முன்னர் இவ்வுலகில் வாழ்ந்த பக்தர்களும், ஆன்ம முன்னேற்றமடைந்தவர்களும் சாதாரண மக்களை விட வேற்றுமை அற்றுத்தான் வாழ்ந்தார்கள். சமய நெறி ஒரு கட்டமைப்பாக வந்தபின்னர்தான் தமக்குரிய அடையாளங்களை ஏற்படுத்திக்கொண்டனர். அதைதொடர்ந்து எண்ணற்ற வேஷங்கள் வெளியாயின. 

பக்தி, யோகம், தவம் எனும் சாதனங்கள் உடலில் உள்ளுறையும் ஆன்மாவை கவர்ந்திழுக்கும் அறியாமை அழுக்கை அகற்றவும்  அணுவுக்கு அணுவான ஆண்டவனின் அருளைப்பெறவும்தான் செய்யப்படுகின்றன. அறிவை அறியாமையில் இருத்தி செயற்படுவது உடல், உடல் அநித்தியமானது, சாதனைகள் நித்தியத்தினை நாடி செய்யப்படுபவை. யோகம் முதலான சாதனைகள் உடலால் செய்யப்படுபவை அல்ல. அவை உள்ளத்தால் செய்யப்படுபவை. உடலை மறந்து உணர்வினை உள்முகப்படுத்தி செய்யப்படுபவை. உடலை மறந்து செய்யும் ஒரு சாதனை செய்யும் ஒரு சாதகனின் நினைவு உடலை அலங்காரப்படுத்துவதில் எப்படி ஈடுபட முடியும்?

இதற்கு இன்றைய நிலையில்  யோகம் பழக்குகின்றேன் என்று கூறுபவர்களும் மதவாதிகள் போன்றே செயற்படுகின்றனர். மேலும் ஆசனங்களை மட்டும் தெரிந்து கொண்டு தம்மை யோகி என அழைத்துக் கொள்பவர் பலர். 

உடலில் சாதுத்தன்மை இருக்க முடியாது. உள்ளத்தில் தான் சாதுதன்மை இருக்க முடியும். உடலில் பக்தி வராது உள்ளத்தில் தான் பக்தி வர வேண்டும். இவற்றுக்கெல்லாம் ஆதாரமாக உடல் இருப்பதால் உடலினை ஆரோக்கியமாக வைத்திருப்பதுதான் யோகத்தின் ஒரு நோக்கமே அன்றி இதனால் உள்ளத்தில் பற்றி உள்ள மாயை இம்மியளவும் அகன்று விடாது. 

ஒருவன் விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து பத்து விரல்களிலும் பெரிய பொன் மோதிரங்களை அணிந்து எல்லோர் முன்னிலையிலும் திரிகின்றான் என்றால் என்ன அர்த்தம்? தனது செல்வா செருக்கை எல்லோருக்கும் விளம்பரப்படுத்துகிறான் என்பது தானே! காவலனின் உடை அவன் புற உலகில் செய்ய வேண்டிய தொழிலைக் காட்டுகிறது. அதுபோல் மற்றைய தொழில்களும் அதற்குரிய உடையினை கொண்டு அறியப்படுகிறது. இதுபோல் சாதுக்களும் சந்நியாசிகளும் விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டுமா? உடையினைக்கொண்டு ஒருவன் வழக்கறி ஞர் என்று கண்டு வழக்கை ஒப்படைப்பது போல் காவியுடைகளையும், பெரிய ஆசிரமமும் வைத்திருக்கும் பெரிய சாமியார்களை கண்டதும் ஆன்ம ரகசியங்களை கேட்கலாமா? அவர்கள் எல்லோரும் இறையின்பத்தினை அனுபவித்தவர்களா? இன்று இப்படி ஆடைகளையும் வேடங்களையும் கண்டு சென்று துன்பம் அனுபவித்தவர்கள் பலர் என கேள்விப்பட்தில்லையா? 

ஆகவே அன்பர்களே பக்தி, யோகம் போன்ற சாதனைகளுக்கும் உடல் வேஷங்களுக்கும் ஒரு பொருத்தமும் இல்லை என்பதை உணருங்கள். வெளி வேடத்தை கொண்டும்  ஆன்ம முன்னேற்றம் உடையவனை கண்டு பிடிக்க முயன்றால் ஏமாந்துதான் போவீர்கள். பக்தி யோகம் என்பவை உணர்வால் சய்யப்படுபவை. அதற்கு உடைகளாலோ வெறு எதனாலோ வேடங்கள் மாறுதல்கள் செய்யத்தேவையில்லை. இப்படியான மக்களை ஏமாற்றும் பலர் உள்ளார்கள். 

உள்ளத்துறவு வாழ்க்கை 
அக்காலத்தில் வாந்த மகரிஷிகள் மனைவி மக்களுடன் தூய வெண்ணிற ஆடையணிந்து மக்கள் மத்தியில் மக்களோடு மக்களாகவே வந்தார்கள். இந்திரனையே சபிக்கும் ஆற்றல் இருந்தும் தம்மை வேடத்தாலோ, நடிப்பலோ உயர்ந்தவர்களாக காட்டிக்கொள்ளவில்லை உள்ளத்தில் துறவு பூண்டு வந்தார்கள். உடையை மாற்றி உள்ளத்தில் இன்பத்துடன் வாழவில்லை. இப்படியான உயர்ந்த நிலையடைந்த சாதகர்கள் இன்றும் உலகின் பல பாகங்களிலும் தம்மை வேஷங்களால் உயர்ந்தவர்களாக காட்டிக்கொள்ளாமல் மக்கள் மத்தியில் தாமரை இலை மேல் தண்ணீர் போல் வாழ்ந்து வரத்தான் செய்கிறார்கள். இவர்களை குப்த யோகிகள் என்று சொல்லலாம்.  

ஆன்ம  தாகம் கொண்டவர்களே, அடைய வெண்டிய பொருள் என்று ஒன்று உண்டு, அது ஆண்டவனின் திருவடி! அதை அடையவேண்டும் என்ற உண்மை ஆர்வம் உங்கள் உள்ளத்தில் உண்டானால் அதை அடைய வழி காட்டும். எதோ ஒரு வகையில் அத்தகைய குப்த யோகிகளது தொடர்பு உங்களுக்கு நிச்சயம் கிட்டும்!  தட்டுங்கள்! ஞானக்கதவு திறக்கப்படும், கேளுங்கள் உண்மை ஞான திறவுகோல் உங்களுக்கு கொடுக்கப்படும்!

-- குருதேவர் ஸ்ரீ கண்ணைய யோகி அருளியபடி ---


சித்த யோக பயிற்சிப்பாடங்கள் - சாதனை செய்ய விரும்பும் அன்பர்களுக்கு மட்டும்

எமது வலைப்பின்னலை வாசிக்கும் சாதனை செய்ய விரும்பும் அன்பர்களுக்கு உதவக்கூடிய வகையில்  எமது குரு நாதரின் அரிய ஆன்மீகப்படைப்பினை அறிமுகம் செய்கிறோம். 

இந்த நூல் கண்ணைய யோகியார் தமது மாணக்கரிற்கு சித்த யோகத்தினை போதிப்பதற்கான மிக எளிய தமிழில், சிறிய வடிவில் பாடங்களாக எழுதப்பட்ட 36 பாடங்களின் தொகுப்பு. 

பாடங்களின் தலைப்புகளைகளை வாசகர்களின் ஆர்வத்திற்காக தருகிறோம். தேவையானவர்கள் கீழேயுள்ள தொடர்பிலக்கத்தில் தொடர்புகொண்டு பெற்று பயன்பெறலாம். 



  1. உடல் மன ஒய்வும் பயனும்
  2. சுவாசமும் உயர் சித்திகளும்
  3. எளிய மனோ சிகிச்சை
  4. பிறப்பு நிறமும் - பேரின்ப பயன் களும் 
  5. தூக்கத்தில் சகல சித்திகள்
  6. ஆயுள் உறுதிக்கான அருங்காயகற்பங்கள்
  7. பேரறறிவு பெறும் பெரும் சாதனை
  8. திவ்விய விஞ்ஞனமும் வாழ்க்கை வெற்றிகளும்
  9. பிரணாயாமமும் பெரும் சித்திகளும்
  10. சுயதீஷைகளும் சூஷ்ம சித்திகளும்
  11. குண்டலினி எழுப்பும் சாதனை
  12. பரிணாமத்தை உயர்த்தி பராசக்தியினை நெருங்கு
  13. உட்புலன் களை வளர்
  14. யோகியரின் உணவும் சுகாதாரமும்
  15. ஹிப்னாடிச எளிய சாதனை
  16. பிரமித பெரும் சாதனைகள்
  17. ஆவிகளின் தொடர்பும் அரும்பயன் களும்
  18. உன் வருங்காலம் அறி
  19. மானஸதிசை காட்டி
  20. மரண பயம் தவிர்
  21. திராடகதிறன் சக்தி
  22. பாவனா சக்தி
  23. தூங்காமல் தூங்கி சுகம் பெறு
  24. பிரத்தியாகார பேறுகள்
  25. உணர்ச்சிகள் அறுதலால் ஏற்படும் பயன் 
  26. தாரணையும் தனிச்சித்திகளும்
  27. பிறர் மனம் புகுதல்
  28. உள்ளொளியும் உயர் சாதனைகளும்
  29. தியானமும் தினசரி பயன் களும்
  30. தூரக்காட்சி
  31. மனச் சோதனையும் பயனும்
  32. சூக்ஷ்ம உடலைப்பார்
  33. சிகிச்சை கிரணங்கள்
  34. மனச்சக்தியால் வேண்டியதை பெறு
  35. உடலைவிட்டு வா
  36. உன்னை அறிந்து உண்மை வளர்
பெற விரும்புபவர்கள் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களில் தொடர்பு கொண்டு விபரங்களை பெறமுடியும்:
  • ஆத்ம ஞான யோகசபை, சென்னை : 044-26531166/09840987338/09383531166
  • ஆத்ம ஞான யோக சபை, கொழும்பு: 0094-75-7287151/0094-77-6271292

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 18: நாமங்கள் 10 - 17



மனோரூபேஷு கோதண்டா (10) 
மனமாகிய கரும்பு வில்லை உடையவள்
மனம் சங்கல்பம் விகல்பம் என்ற இரண்டு செய்கைகளும் உடையது. சங்கல்பம் எண்ணத்தில் சரியானது என்று முடிவெடுக்கும் செய்முறை, விகல்பம் என்றால் எண்ணங்களுக்கிடையிலான வேறுபாட்டினை உணர்ந்தறியும் செய்முறை. இரண்டும் ஒன்றுக்கொன்று முரணான செய்முறை. மனமும் அறிவைப்போன்று நுண்ணியது. மனம் ஐந்து புலன்களினூடாக பிரதிபலிக்கும். மனம் புலன்களூடாக பெறும் பதிவுகள் மூலம் சங்கல்ப விகல்பங்களை ஏற்படுத்தி எண்ணங்களை தூண்டி இறுதியில் செயலினை செய்ய வைக்கிறது.  இக்ஷு என்றால் கரும்பு என்று அர்த்தம், கோதண்ட என்றால் வில், இடது முன்னங்கையில் கரும்பாலான வில்லினை கொண்டிருக்கிறாள். ஏன் கரும்பாலான வில்? கரும்பினை பிழிந்து சாறு எடுத்தால் அது இனிப்பான சக்கரையினை தரும். அதுபோல் மனதினை பிழிந்து (கட்டுப்படுத்தி வழிப்படுத்தினால்) அவன் இனிப்பான பிரம்மத்தினை அறியலாம். இந்தக் கை மந்திரிணியான ராஜ சியாமளையை குறிக்கிறது.

பஞ்சதன்மாத்ர-ஸாயகா (11)
(சப்த ஸபர்ச ரூப, கந்த, ரச எனும்) ஐந்து தன்மாத்திரைகளை பாணங்களாக உடையவள்
பஞ்ச என்றால் ஐந்து, தன்மாத்ர என்றால் சுவை, தோடு உணர்வு, பார்வை, ஓலி, மணம் ஆகியவை. இவை ஐந்தும் பஞ்ச பூதங்களான ஆகாயம், காற்று, அக்னி, நீர், நிலம் ஆகிய ஐந்தினதும் சுஷும வெளிப்பாடாகும்.

முந்தைய நாமம் வில்லைப்பற்றி பேசியது, இந்த நாமம் தேவியுடைய அம்புகளைப்ப்றி பேசுகிறது. தேவி ஐந்து அம்புகளை வைத்திருக்கிறாள். அந்த ஐந்து அம்புகளும் மலர்களால் ஆனது. இந்த ஐந்து அம்புகளும் பஞ்ச பூதங்களின் சூஷ்ம தன்மையினை விளக்குவது. இந்த ஐந்து மலர்கள் பற்றியும் தந்திர சாஸ்திரங்களில் பல்வேறு விளக்கங்கள் உள்ளன. இந்த ஐந்து மலர்களும் தாமரை, செவ்வாம்பல், வெண் அல்லி, கருப்பு நீர் அல்லி, இனிப்பு மாம்பூ ஆகும். இந்த ஐந்து பூக்களும் மனதினை மன எழுச்சி, பைத்தியம், குழப்பம், தூண்டல், அழித்தல் ஆகியவற்றினை செய்யும். அம்புகள் பொதுவாக போரில் எதிரிகள் மீது செலுத்தப்படுவது. ஆனால் லலிதை இந்த மரலம்புகளை தனது பக்தர்கள் மீது செலுத்தி மாயையின் ஐந்து அங்கங்களாக விளங்கு தன்மாத்திரைகளை வெல்கிறாள். இந்த பஞ்ச தன்மாத்ரைகள் மூலமாகவே மாயை செயற்படுகிறது. இது தேவியின் வலது முன்னங்கை, இது வாராஹி தேவியினை குறிக்கிறது.

8, 9, 10, 11வது நாமங்கள் ரகசிய பீஜ மந்திரங்களை கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு எட்டாவது நாமம் ஹ்ரீம் பீஜத்தினை கொண்டிருக்கிறது. இது மாயா பீஜம் எனப்படுகிறது. எட்டாவது நாமம் ராகஸ்வ என்று தொடங்குகிறது. இது ரா+அக+ஸ்வ எனும் அட்சரங்களால் ஆக்கப்பட்டுள்ளது. அக என்றால் சிவன் சென்று பொருள்.  சிவனின் பீஜம் ஹம் என்பதாகும். இது ஹ எனக்கொள்ளப்பட வேண்டும்.  அடுத்தது ர என்பது எடுத்துக்கொள்ள வேண்டும். ஸ்வ என்பது ஈம் என்ற எழுத்து மேலே பிந்துவுடன் அமைந்தது. இப்படி ஹ+ர+ஈம் என ஹ்ரீம் பீஜம் உருவாக்கம் பெறுகிறது. இது போல் மற்றைய நாமாக்களில் (ட , ர, ல, ய , ஸ, வ, அ, ஈ ,ஊ) போன்ற பீஜங்கள் அமைந்துள்ளன.

இந்தக்காரணத்தினாலேயே லலிதா சஹஸ்ர நாமம் வேதங்களுக்கு நிகராக கொள்ளப்படுகிறது.  மிக முக்கியமாக லலிதா சஹஸ்ர நாமம் ராகத்துடனோ, ஸ்வரத்துடனோ படிக்ககூடாது.

நிஜாரூப-ப்ரப-பூர-மஜ்ஜத்-ப்ரம்மாண்ட-மண்டலா (12) 
தனது சிவந்த திருமேனியின் காந்தி வெள்ளத்தால் உலகனைத்தையும் மூழ்கச் செய்பவள். 

அவளுடைய சிவந்த ரோஜாப்பூ நிறம் இந்த பிரபஞ்சம் பூராகவும் சிவந்த நிறமாக பரவி உள்ளது. இந்த நாமம் தொடக்கம் லலிதையின் முழுவடிவ வர்ணணை ஆரம்பமாகிறது. ஆண் தெய்வங்களை வர்ணிக்கும் போது பாதாதி கேச வர்ணனையும், பெண் தெய்வங்களை வர்ணிக்கும் போது கேசாதி பாத வர்ணனையும் கொள்ளப்படுவது மரபு. இதன் படி லலிதாம்பிகையின் தலையில் இருந்து வர்ணணை தொடங்குகிறது. சிவனை வர்ணிக்கும் போது பாதாதி கேசம், கேசாதி பாதம் ஆகிய இரண்டு விதமும் பொருந்தும். ஏனெனில் சிவம் என்பது சிவனும் சக்தியும் கலந்த அர்த்த நாரீஸ்வர வடிவம் என்பதால்.  பஞ்சதசி மந்திரத்தில் மூன்று கூடங்கள் உள்ளன. அவற்றுள் வாக்ப கூடம் தேவியின் தலையினை தியானிப்பதற்கு கூறப்படுகிறது. இது மரபுப்படி கேசாதி பாத வர்ணனைக்கு பொருந்தி வருகிறது.

சம்பகாசோக-புன்னாக - ஸௌகந்திக - லஸத் கசாய (13) 
சம்பகம், அசோகம், புன்னாகம் சௌகந்திகம் என்ற புஷ்பங்களை கூந்தலில் அணிந்து விளங்குபவள். 

சம்பகம், அசோகம், புன்னாகம், சௌகந்திகம் ஆகிய நான்கு வாசனையுள்ள பூக்கள் தேவியினுடைய கூந்தலினை அலங்கரிக்கின்றது. ஆனால் அவளுடைய கூந்தல் இந்த மலர்களால் மணத்தினை பெறவில்லை, மலர்கள் அவளுடைய கூந்தலினால் மணத்தினை பெறுகிறது. தேவியினுடைய கூந்தல் எப்போதும் நறுமணம் கமழ்வது.

சௌந்தர்ய லஹரி (42 பாடல்) கூறுகிறது, " உன்னுடைய அடர்த்தியான, வழுவழுப்பான, மெல்லிய கூந்தல் மலர்ந்த நீலத்தாமரையினை நினைவு கூர்கின்றன. அது எமது அறியாமையினை அகற்றுகிறது. நான் நினைக்கிறேன் மலர் தோட்டத்தில் உள்ள வாசனைப்பூக்கள் எல்லாம் உன்னுடைய கூந்தலில் இருந்துதான் வாசனையினை பெறுகிறது என்று! கூந்தலின் ஈரத்தன்மை அவளுடைய கருணையினையும், மேன்மை தாய்மையினையும் குறிக்கிறது.
துர்வாசக ரிஷி தனது சக்தி மஹிம்ன தோத்திரத்தில் தேவியினுடைய கூந்தலின் இனிய நறுமணத்தினை ஹிருதய சக்கரத்தில் தியானிக்க கூறுகிறார். இந்த வர்ணனையின் உட்பொருள் தேவியினுடைய கூந்தல் அறியாமையினை போக்கும் வல்லமை உள்ளது என்பதாகும். பிரம்மத்தினை அடைவதற்கு ஞானமே உயர்ந்த பாதையாக கூறப்பட்டுள்ளது. கூந்தலே இத்தகைய பேற்றை கொடுக்க முடியுமானால் தேவியின் முழு வடிவம் என்ன பேற்றை கொடுக்கும். இந்த நான்கு மலர்களும் அந்தக்கரணங்கள் எனும் மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் ஆகியவற்றை குறிப்பனவாகும்.

குருவிந்த-மணிச்ரேணீ - கநத் -கோடீர -மண்டீதா   (14) 
குருவிந்த மாணிக்கங்கள் பதிக்கப்பட்ட ஒளிவீசும் அழகிய கிரீடத்தை உடையவள். 

குருவிந்தம் என்பது ஒரு அரிய வகை சிவப்பு மாணிக்கம். இந்த வகை மாணிக்கம் அணிபவருக்கு அன்பு, செல்வம், விஷ்ணு (தேவியின் சகோதரன்) மீதான பக்தி என்பவற்றை அதிகரிக்கும். இந்தவகை மாணிக்கங்கள் தேவியினுடைய கிரீடத்தினை அலங்கரிக்கின்றது. இந்த குருவிந்த மாணிக்க கிரீடத்தினை ஒருவன் தியானிக்கும் போது அவனுக்கு ஆன்ம முன்னேற்றமும், செல்வவளமும் கிட்டும். சௌந்தர்ய லஹரியும் (42), சக்தி மஹிம்ன தோத்திரமும் தேவியின் கிரீடத்தின் மகிமை பற்றி கூறுகிறது.

அஷ்டமீ சந்த்ர - விப்ராஜ - தலிக  - ஸ்தல -சோபிதா (15)
அரைவட்ட வடிவான அஷ்டமி சந்திரன் போன்று விளங்கும் நெற்றியை உடையவள் 

தேவியின் நெற்றி அஷ்டமி சந்திரனைப்போல் தோற்றுகிறது. பௌர்ணமி அல்லது அமாவாசையில் இருந்து எட்டாவது நாள் அஷ்டமி எனப்படும். இந்த நாட்களில் சந்திரன் இருபுறமும் வளைந்து அழகாக காணப்படும்.

முகச்சந்திர - கலங்காப - ம்ருக நாபி - விசேஷகாயை (16)
சந்திரனில் தோன்றும் களங்கம் போன்று முக மண்டலத்தில் விளங்கும் கஸ்தூரி போட்டினை  உடையவள். 

தேவியின் நெற்றியில் கஸ்தூரி போட்டு காணப்படுகிறது. இது முழுமையான வெள்ளை நிற சந்திரனில் காணப்படும் புள்ளி  போன்றது. சக்தி மஹிம்ன தோத்திரத்தில் 32 பாடல் இந்த தியானத்தினை கூறுகிறது.

வதனஸ்மர - மாங்கல்ய - க்ருஹ - தோரண - சில்லிகாயை  (17)
 மன்மதன் வசிக்கும் மங்கள வீடாகிய முகத்திற்கு தோரணங்கள் போன்ற புருவங்களை உடையவள். 

தேவியினுடைய முகம் மன்மதனுடைய இருப்பிடமாக உருவகிக்கப்படுகிறது. மன்மதன் காதலின் தெய்வம். தேவியினுடைய புருவங்கள் அந்த வீட்டினை அலங்கரிக்கும் தோரணங்கள் போன்று இருக்கிறது எனக்கூறப்படுகிறது. சில்லிகா என்றால் புருவங்கள் எனப்பொருள். புராணங்களில் மன்மதன் லலிதாம்பிகையின் முகத்தை பிரதி செய்து ஒரு புனிதமான இடத்தினை உருவாக்கினான் எனக்கூறப்படுகிறது.




*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

Saturday, April 27, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 17: நாமங்கள் 04 - 09

சிதக்னிகுண்ட-ஸம்பூதாயை (04)  
அறிவாகிய அக்னி குண்டத்திலிருந்து தோன்றிய பரப்பிரம்ம ஸ்வரூபிணீ

சித்+அக்னி+குண்ட+ஸம்பூதா. சித் என்பது நிர்குண பிரம்மனை அதாவது குணங்களற்ற பிரம்மனை குறிக்கும் (இதுவே உணர்வின் அடிப்படை). அக்னி குண்டம் என்பது நெருப்பினை உடைய யாக குண்டத்தினை குறிக்கும். ஸம்பூதா என்றால் தோன்றியவள் என்று பொருள். அக்னி குண்டம் அல்லது நெருப்பு இருளினை அகற்றுவது. இருள் என்பது அறியாமையினை குறிக்கும், அதனை அவித்யா என்பர், (வித்யா என்றால் அறிவு என்று பொருள்) இந்த நாமத்தினை நெருப்பில் இருந்து பிறந்தவள் என்று பொருள் கொள்ளக்கூடாது. அவள் அறியாமையினை அகற்றும் அதியுயர் உணர்வு சக்தி. அவள் தன்னுடைய தூய உணர்வு சக்தியால் அறியாமையினை அகற்றுகிறாள், அவள் ஒவ்வொருவர் உள்ளிருந்தும் ஒளியேற்ற மாயா சக்தியான இருளை அகற்றுகிறாள். 

இதே விளக்கம் கிருஷ்ணன் பகவத் கீதையில் (4-37) தருகிறார் " நெருப்பு விறகுகளை சாம்பல் ஆக்குவது போல், அறிவுத்தீ எல்லாக்கர்மங்களையும் அழிக்கின்றது" ஒருவன் உள்ளிருக்கும் தூய பிரம்மனைப்பற்றிய முழுமையான அறிவு அவனுடைய எல்லாக் கர்மங்களையும் (ஸர்வகர்மாணி) அழிக்கும். அவை நல்லதாயினும் தீயதாய் இருப்பினும். ஒருவன் பிறப்பினை அறுப்பதற்கு தனது கர்மாவில் எதையும் மிகுதி வைத்திருக்க கூடாது. 

தேவகார்ய-ஸமுத்யதா (05)
தேவர்களுக்கு நன்மை புரிவதில் ஊக்கமுடையவள்

அவள் தேவர்களுக்கு உதவி புரிவதற்காக தன்னை உருவாக்கிக்கொண்டாள். என்ன காரணத்திற்காக தேவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்? தேவர்கள் அசுரகளுடன் போர் புரிந்துகொண்டிருந்தனர். அவள் அந்த அசுரர்களை அழித்து தேவர்களுக்கு உதவி புரிந்தாள். தேவர்கள் என்பவர்கள் எப்போதும் தீயகாரியம் எதுவும் செய்யாதவர்கள் அதனால் தேவி அவர்களுக்கு எப்போதும் உதவி செய்பவளாக இருக்கிறாள். அவள் பிரம்மத்தின் ஒரு பகுதியாக இருக்கும் போது ஏன் தனியா அவதரிக்க வேண்டும். அவள் பிரம்மத்தின் பகுதி எனும் போது அவளை "ப்ரகாச" வடிவம் என்று அழைப்பர். ப்ரகாச என்றால் சுயமாக வெளிப்பட்ட அறிவு/உணர்வு சக்தி என்று பொருள், இந்த தத்துவத்தின் மூலமே மற்றைய விடயங்கள் அறியப்படுவனவாகின்றது). இந்த ப்ரகாச வடிவம் சிவம் என அழைக்கப்படுகிறது. மற்றைய பகுதி "விமர்ச" வடிவு என விளக்கப்படுகிறது. விமர்ச வடிவு என்பது சுயமாக வெளிப்பட்ட உணர்வு சக்திக்கு எதிர்மாறான உணர்வு சக்தி, அது சிவனின் விழிப்புணர்வு சக்தி, உலக செயற்பாடு நடைபெறுவதற்கு தேவையான முழுமையான அறிவும் ஆற்றலையும் தரும் ரூபம். இது சக்தி ரூபமாக அழைக்கப்படுகிறது. தேவி அதியுயர் சிவத்தின் விமர்ச சக்தி வடிவாக இருப்பினும், லலிதாம்பிகையின் வடிவிற்குள் சூட்சுமமாக ப்ரகாச வடிவம் உள்ளது என்பதனை இந்த நாமம் வெளிப்படையாக கூறாமல் மறைமுகமாக விளக்குகிறது. இந்த நாமம் அவளுடைய ப்ரகாச வடிவத்தின் விளக்கமாகும். 

யோக வசிஷ்டத்தில் முக்கியமான ஒரு சுலோகம் வருகிறது " எனக்கு இரு வடிவங்கள் உள்ளது, ஒன்று சாதாரணம், மற்றையது அதியுயர்ந்தது. எனது சாதாரண வடிவம் கைகளும் கால்களும் உடைய மனித வடிவம். இந்த வடிவம் அறியாமையுடைய மனித வழிபடுவதற்கு உரியது. மற்றைய வடிவம் அதியுரர் தன்மை உடையது. அது ஆதியும் அந்தமும் அற்ற உருவற்ற வடிவம். இந்த வடிவத்திற்கு எதுவித தன்மைகளோ குணங்களோ அற்ற பிரம்மம், ஆத்மன், பரமாத்மன் எனப்படுகிறது. 

இந்த நாமத்தில் அசுரர்கள் எனக்கூறப்பட்ட உவமானம் அறியாமையினை குறிப்பது. தேவர்கள் என்பது அறிவினை குறிப்பது. தேவி யார் பிரம்மத்தினை அறிவதற்கு முயற்சிக்கிறார்களோ அவர்களுக்கு உதவி புரிகிறாள். 

உத்யத்பானு-ஸஹஸ்ராபா(06) 
ஆயிரம் சூரியன் உதித்தாற் போன்ற பிரகாசமானவள்

உத்யத் - உதித்தல், பானு - சூரியன், சஹஸ்ரா - ஆயிரம் அல்லது எண்ணீக்கை அற்ற, ஆபா - ஒளி. லலிதாம்பிகையின் தோற்றம் ஒரே நேரத்தில் ஆயிரம் சூரியன் உதித்தது போன்ற பிரகாசம் உடையது. உதிக்கின்ற சூரியனின் நிறம் சிவப்பு. இந்த சகஸ்ர நாமத்தின் தியான சுலோகத்தில் தேவியின் நிறம் சிவப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது (ஸகுங்க்கும-விலேபனம்). அனேகமாக எல்லா தந்திர சாஸ்திரங்களும் புராதன புராணங்களும் அவளுடைய தோற்றத்தினை சிவந்த நிறமாகவே வர்ணிக்கின்றன. முந்தைய நாமத்தில் தேவியின் "ப்ரகாச" வடிவம் குறிப்பிடப்பட்டது. இந்த நாமத்தில் "விமர்ச" ரூபத்தினை கூறுகிறது. தேவியிற்கு மூன்று ரூபங்கள் உள்ளன. ஒன்று ப்ரகாச அல்லது சூட்சுமமான வடிவம், விமர்ச என்பது ஸ்தூலமான ரூபம், மூன்றாவது பரா என்பது அதியுயர் ரூபம். ப்ரகாச ரூபத்தினை அடைவதற்கு பல்வேறு மந்திரங்கள் உபயோகமாகின்றன, அவற்றுள் உயர்ந்தது சோடஷி மந்திரம். அவளுடைய விமர்ச ரூபம் (தியான ஸ்லோகத்தில் கூறப்படும்) ஸ்தூல வடிவம். இது ஆயிரம் வடிவங்கள் உள்ளது. அதியுயர் ரூபம் மானச பூஜையினால் மட்டும் உணரப்படக்கூடியது. சிவந்த நிறமாக உருவகிக்கப்படுவதன் காரணம் தியானிப்பதற்கு இலகுவாக இருக்கும் என்பதே ஆகும். அடுத்த நாமத்தில் இருந்து தேவியினுடைய ஸ்தூல ரூபத்தின் வர்ணணை தொடங்குகிறது. சிவப்பு நிறம் அக்கறையினையும் காட்டும், தேவி தனது பக்தர்களின் நலம் மீது அக்கறையும் தாயைபோன்ற அன்பு உடையவள் என்பதனை காட்டுகிறது. 

கிருஷ்ணன் (2-12) கூறுகின்றார் "ஆகாயத்தில் லட்சம் சூரியன் ஒன்றாக உதித்தால் போல், பிரபஞ்சத்தின் உயர்ந்த வடிவம் ஒளிக்கற்றைகளை வீசியவண்ணம் வெளிப்படும்" என்று. 

சதுர்பாஹு-ஸமன்விதா (07) 
நான்கு கைகளையுடையவள் 

லலிதாம்பிகையின் பௌதீக ரூப வர்ணணை இந்த நாமாவில் இருந்து ஆரம்பமாகிறது. தேவி நான்கு கரங்களை உடையவள். இந்த நான் கு கரங்களும் தேவியினுடைய மந்திரிகளை குறிப்பிடுவன, தேவியின் நிர்வாகத்தினை செய்வாதற்கு நியமிக்கப்பட்ட பிரதானமான நான்கு மந்திரிகளையும் குறிப்பிடுகிறது. தேவிக்கு உதவும் இந்த தேவிகளைப்பற்றி அடுத்த நாமாக்கள் குறிப்பிடுகின்றன.

ராகஸ்வரூப-பாசாட்யா (08) 
ஆசை(இச்சை) வடிவான பாசம் உடையவள்

ராகம் என்றால் விருப்பம் அல்லது ஆசை என்று பொருள். பாசம் என்பது ஒருவகையான கயிறு, இது பொருட்களை கட்டி இழுப்பதற்கு உபயோகப்படுத்தப்படுவது. தேவி இந்தக்கயிற்றினை பயன்படுத்தி பக்தர்களின் ஆசைகளை வெளிப்படுத்துகிறாள். மூன்று வித சக்திகள் காணப்படுகின்றன இச்சா, ஞானா, கிரியா சக்திகள் என்பவை அவை. இந்த நாமம் தேவியின் இச்சா சக்தியினை பற்றி கூறுகிறது. தேவி ஒருபோதும் தன்னுடைய பக்தர்களை தமது ஆசைகளுடன் அனுபவிக்காமல் அழுந்திப்போக செய்வதில்லை. தேவியின் இடது பின் கை அஸ்வாரூடா தேவியினை குறிக்கிறது. 

க்ரோதாகாராங்குசோஜ்ஜ்வலா (09) 
கோபமாகிய அங்குசம் தரித்து பிரகாசிப்பவள்

தேவி வலது மேல் கரத்தில் யானையினை அடக்கும் அங்குசத்தினை கொண்டிருக்கிறாள். க்ரோத என்றால் கோபம், வெறுப்பு என்று பொருள், அகாரா என்றால் அறிவு என்று பொருள். இந்த நாமம் சூஷ்ம உடலைப்பற்றிக் கூறுகிறது. அறிவு எப்போதும் சூஷ்ஷுமமானது. யாராவது தனது பக்தர்கள் மேல் வெறுப்பினை உருவாக்க முயன்றால் அவர்களை அங்குச சக்தி கொண்டு அடக்கி அவர்களுக்கு நல்லறிவினை கொடுப்பாள். காளியின் பீஜ மந்திரங்களில் ஒன்று "க்ரோம்", அது இந்த நாமத்தில் மறைந்து உள்ளது. காளி எல்லா தீமைகளையும் அழிப்பவள். இந்த வலது பின் கை சம்பத்கரி தேவியினை குறிக்கிறது. 




*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

Friday, April 26, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 16: நாமங்கள் 02 - 03

ஸ்ரீ மஹாரஜ்ஞ்யை (02)  
ஒப்புயர்வற்ற லோகரக்ஷகி/பேரரசி

இந்த நாமமும் ஸ்ரீ என்ற அடைமொழியுடன் தோங்குகிறது, அதற்கான விளக்கம் முதல் நாமத்தில் தரப்பட்டுள்ளது. மஹாரஜ்ஞ்யை என்றால் அரசிக்கு அரசி, பேரரசி என்று பொருள். 

இந்த சஹஸ்ர நாமத்தில் உள்ள அனேக நாமங்கள் சக்திவாய்ந்த பீஜாட்சரங்களை கொண்டுள்ளது. அந்த பீஜாட்சரங்களை நாமங்களில் இருந்து தனியாக்க இயலாது. பீஜம் அல்லது பீஜாட்சரம் என்பது ஒரு சம்ஸ்க்ருத எழுத்தையோ அல்லது பல எழுத்துக்களின் கூட்டையோ கொண்ட ஒலிகளாக இருக்கும். ஒவ்வொரு பீஜாட்சரமும் மிகவும் இரகசியமானதாக கருதப்படும். இதன் அர்த்தத்தினை புரிந்து கொள்ளாமல் தொடர்ச்சியாக உச்சரிக்கும் போது கூட உச்சரிப்பவனுக்கு அந்த மந்திர சக்தி அலைகளால் பலனை வழங்கக்கூடிய சொற்கள் இவையாகும். இவற்றிற்கு தனிப்பட்ட உச்சரிப்பு விதிகள் காணப்படுகிறது. 

தேவி உபாசனையில் சோடஷி மந்திரமே அதியுயர் மந்திரமாகும். சோடஷி என்றால் பதினாறு கலைகள்* அல்லது எழுத்துக்கள் உடையது என்று பொருள். கலை என்பது சந்திரனின் தேய்வுக்கும் வளர்விற்கும் இடைப்பட்ட பதினாறு நாட்களில் சந்திரனது நிலையாகும். மற்றைய மந்திரமான பஞ்சதசி மந்திரம் பதினைந்து எழுத்துக்கள் உள்ளது. அதற்கு மேலும் ஒரு பீஜ மந்திரத்தினை சேர்க்கும் போது சோடஷி மந்திரம் உருவாகிறது. சௌந்தரிய லஹரியின் முதலாவது சுலோகம் கூறுகிறது " ஓ தாயே, உன்னுடைய மந்திரம் மூன்று கூடங்களை கொண்டுள்ளதாக உள்ளது (இந்த பஞ்சதசி மந்திரம் பற்றி அறிமுக உரையிலும், 85 - 89 நாமாக்களிலும் விவரிக்கப்பட்டுள்ளது), யாரொருவன சோடஷி மந்திரத்தினை விதிக்கப்பட்ட அளவு (900,000 தடவைகள்) ஜெபிக்கிறனோ அவர்களுக்கு இதற்கு மேல் பிறவி இல்லை. இந்த சோடஷியின் பதியனாறு எழுத்து பீஜ மந்திரம் இந்த நாமத்தில் மறைந்துள்ளது. இது குருமுகமாய் அறியவேண்டியது. இந்த மந்திரத்தின் முதலாவது பீஜமான ஸ்ரீம் என்பது இந்த இந்த நாமத்தின் முதல் நான்கு எழுத்துகளில் உள்ளது. இந்த பீஜம் லக்ஷ்மி பீஜம், காத்தலின் சக்தி. 

முதல் நாமம் தேவியின் படைத்தல் பண்பு பற்றி கூறுகிறது, இரண்டாவது நாமம் அவளது காத்தம் பண்பு பற்றி கூறுகிறது. தாயாக படைத்து, பேரரசியாக காத்தல் தொழிலை புரிகிறாள். 

{*கலைகள் பற்றிய மேலதிக விடயங்கள்: கலை என்பது இயற்கையின் ஒரு விஷேடமான இயக்கமாகும். இதனை பிரக்ருதி என்பார்கள். இதன் அர்த்தம் பிரக்ருதி சிவத்தின் அளவு முழுமையடைந்தது என்பதல்ல, ஆனால் சிவம் சக்தியுடன் சேரும்போது சக்தியின் தன்மை அந்தப்பொருளில் வெவ்வேறு நிலைகளில் குறித்தளவு வெளிப்படும். சிவம் என்பது எப்போது இருவகையானது ஒன்று குணங்கள் உள்ளது, மற்றையது குணங்கள் அற்றது. குணங்களற்ற சிவத்தின் வடிவே மிக உயர்ந்த வடிவமாக கருதப்படுகிறது. இது பிரக்ருதியில் இருந்து வேறானது. சிவம் குணத்துடன் வெளிப்படும் போது அவை கலைகள் எனப்படுகின்றது. 

பதினாறு கலைகள் என்பது பதினாறு உயிரெழுத்தையும் குறிக்கும், இவை முழுமையானதும், மற்றைய ஒலிகளை ஆதிக்கம் செலுத்தும் எழுத்துக்களுமாகும். ஸ்ரீ மாதாவான தெய்வீக தாயின் பெயர் இந்த கலைகளால் ஆக்கப்பட்டிருக்கிறது. மேலான ஒன்றை நோக்கிய ஒரு உத்வேகமே கலைகளாக வெளிப்படுகிறது. கலை என்பது ஏதாவது ஒன்றின் சிறிய பகுதி என்றும் பொருள் படும். முழுமையான ஒன்றின் சிறு பகுதி அல்லது பாகம் எனப்பொருள் படும்}

ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேஸ்வர்யை (03)  
சிறந்த சிம்மாசனத்தில் எழுந்தருளியிருக்கும் ஈஸ்வரி

லலிதாம்பிகை அரசிகளுக்கெல்லாம் அரசியானவள் சிங்கத்தில் அமர்ந்திருக்கிறாள். சிங்கம்  பார்ப்பவர் பயமுறும் கம்பீர தோற்றமும் மிருகங்களின் அரசனுமாகும். அதானை பேரரசியான லலிதை வாகனமாகவும் ஆஸனமாகவும் பயன்படுத்துகிறாள். இந்த நாமத்தின் விளக்கம் அவளது மூன்றாவது தொழிலாகிய அழித்தலினை விளக்குவதாக உள்ளது, ஸிம்ஹ என்றால் சமஸ்க்ருதத்தில் சிங்கம் என்று பொருள், இந்த வார்த்தையின் அடி ஹிம்ஸா என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும். ஹிம்ஸா என்றால் அழித்தல் என்று பொருள். ஸ்ரீமத்+ஸிம்ஹ+ஆஸன+ஈஸ்வரி என்றால் ஸ்ரீமத் என்றால் அழித்தலின் சக்தியாகிய அவளிற்கு தரப்பட்ட அதியுயர் மரியாதை, ஸிம்ஹ என்றால் சிங்கம், ஆஸன என்றால் அமர்ந்திருத்தல், ஈஸ்வரி என்றால் ஆளுபவள் என்று அர்த்தம். 

முதல் மூன்று நாமங்களும் ஸ்ரீ என்ற எழுத்துடன் தொடங்குகின்றன. ஸ்ரீ  என்றால் செல்வம், வளம் என்று பொருள். ஸ்ரீ என்ற பீஜம் செல்வத்தின் அதிபதியான லக்ஷ்மியினை குறிக்கும். லக்ஷ்மி ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் மனைவி. இந்த நாமாக்கள் மேலும் ஒரு விடயத்தினை விளக்குகின்றது, லலிதாம்பிகையினை வழிபடுபவர்கள் எல்லவித செல்வங்களையும் அடைவார்கள் என்பதே அது. 

ஜனார்ணவ எனும் புராதன நூலில் ஸிம்ஹாஸன மந்திரங்கள் என்று எட்டு மந்திரங்கள் கூறப்பட்டுள்ளன. இவை ஸ்ரீ சக்கரத்தின் பிந்துவிற்கு நான் கு புறமும் ஜெபித்து ஒன்று பிந்துவில் ஜெபிக்கவேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. இந்த ஸிம்ஹாஸன மந்திரத்தில் இருபத்தினான்கு தேவதைகள் வழிபடப்படுகின்றது. இந்த நாமம் லலிதாம்பிகை இந்த இருப்பத்தி நான்கு தேவிகளுக்கும் ஈஸ்வரி என்பதனையும் குறிக்கிறது. 

இந்த மூன்று நாமங்களும் லலிதாம்பிகையின் படைத்தல், காத்தம், அழித்தல் ஆகிய அதியுர்ந்த தன்மையினை குறிக்கின்றன. அழித்தல் தொழில் எனும்போது ஒருவன் செய்த பாவச்செயல்களையும் முற்றாக அழிக்கிறாள். அவள் தனது உண்மையான பக்தர்களை இறுதியில் தன்னுடன் கலக்கச் செய்கிறாள். இந்தக்கலத்தல் லயம் எனப்படுகிறது. 



*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

Thursday, April 25, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 15: ஸ்ரீ மாதா - உயர்வற உயர் நலமாகிய திருவடிவான தாய்

ஸ்ரீ மாதா (01) 
உயர்வற உயர் நலமாகிய திருவடிவான தாய்


தாயினை நாம் மாதா என்கிறோம். மாதா என்றால் அம்மா. இங்கு ஸ்ரீ என்ற முன்னடைமொழி முக்கியமான ஒன்று. ஸ்ரீ என்பது தாய்மையின் உச்ச நிலையினை குறிப்பது. மனித தாய் தனது குழந்தைகளின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்து அன்பையும் பாசத்தையும் புகட்டுபவள். ஆனால் பிள்ளைக்கு வரும் துபன்பங்களை. அவர்களுக்கு விதிக்கப்பட்ட துரதிஷ்டங்களை நீக்ககூடிய சக்தி உடையவள் அல்ல. லலிதாம்பிகை மனித தாயிற்கும் மேலானவள். அவள் தனது குழந்தைகளின் துன்பங்களை, துரதிஷ்டங்களை அகற்றும் வல்லமை உள்ளவள். குழந்தைகள் எனும் போது இந்த பிரபஞ்சத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் அவளது குழந்தைகளே. அவளே இந்த முழுப்பிரபஞ்சத்திற்கும் அண்டங்கள் அனைத்திற்கும் தாயாவாள். அவள் மாதா என்று அழைக்கப்பட்டாளும் அவளே படைத்து, காத்து, அழிப்பவள். இந்த பிரபஞ்சம் அவளில் இருந்து உருவானது. அவளது ஆணைப்படியே உலகில் அனைத்தும் நடைபெறுகிறது. பிரபஞ்சம் அழியும் போது அவளிலேயே ஒடுங்குகின்றது. இந்த சம்ஸாரம் எனும் பிறவிச்சுழல் பிறப்பு, இருப்பு, இறப்பு என மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது. சம்ஸாரம் ஒரு சமுத்திரம் போன்றது. அந்த சமுத்திரத்தின் அலைக்கு எதிராக நீந்துவது என்பது கடினமான ஒரு செயலாகும். இந்த சம்ஸாரத்தின் அலைகள் புலங்களின் செய்கையால் உருவாகிறது. புலன் கள் மனதின் மீது செல்வாக்கு செலுத்தி மனதினை ஆசையிலும் பற்றிலும் ஆழ்த்துகிறது. இந்த சம்ஸார ஸாகரத்தில் இருந்து எதிர் நீச்சல் போட்டு வெளியேறி இறுதி இலட்சியமான பிரம்மத்தியனை அடைவது ஸ்ரீ மாதாவின் ஆற்றலின் துணையால் மட்டுமே முடியும். அவளது அருளைபெறுவது அவளை வணங்குவதால் மட்டுமே சாத்தியமாகும். 

ஸ்ரீ மாதா என்பது ஸ்ரீ லக்ஷ்மி - எல்லவித செல்வங்களினதும் தெய்வம், சரஸ்வதி - எல்லாவித அறிவுகளின் தெய்வம், ருத்ராணி - அழிவை ஏற்படுத்தும் சக்தி ஆகிய மூவரின் தாய் எனவும் பொருள் கொள்ளலாம். 

துர்வாசகர் ஒரு உயர்ந்த ஞானியாவார், அவர் தேவியின் மேல் ஸ்ரீ சக்தி மஹிம்ன ஸ்தோத்திரம் எனும் அறுபது சுலோகங்கள் கொண்ட அவளை போற்றும் ஸ்தோத்திரம் ஒன்றினை செய்துள்ளார். அவர் ஸ்ரீ மாதாவினை சரணடைந்து கூறுகிறார் " ஹே மாதா! அதியுயர் இரக்க குணமுள்ளவளே! நான் பல பிறவிகளில் பலதாய்களுக்கு மகனாக பிறந்துள்ளேன், இன்னும் பல தாய்மாருக்கு மகனாக பிறப்பேன், எனது தாய்களின் எண்ணிக்கை அளவிடமுடியாது. பல பிறவிகளில் பல தாய்களை அடைகிறேன். நான் மீண்டும் பிறப்பெடுத்து துன்பத்தினை அடைவேனோ என்று பயமடைகிறேன். ஓ மாதா நான் உன்னை சரணடைந்தேன், நான் மீண்டும் பிறப்பெடுக்கும் நிலையில் இருந்து என்னை வெளிப்படுத்துவாய்" என பிரார்த்திக்கிறார். 

ஸ்ரீ என்ற வார்த்தை எந்தவொரு சொல்லுக்கு முன்னாலும் இடப்படும் போது அது மிக உயர்ந்த நிலையினை காட்டுகிறது. தேவியினை வழிபடுவதில் ஐந்து வார்த்தைகளில் ஸ்ரீ வருகிறது; இந்த ஐந்தும் சேர்ந்து "ஸ்ரீ பஞ்சகம்" என்று கூறுவார்கள். அவையாவன ஸ்ரீ புரம் (தேவி வசிக்கும் இடம்), ஸ்ரீ சக்கரம் (தேவியின் படை தேவியர் வசிக்கும் இடம்), ஸ்ரீ வித்யா - தேவியினை உபாசிக்கும் முறை, ஸ்ரீ சூக்தம் - அவளை பணியும் பாடல்கள், ஸ்ரீ குரு - யார் தேவியினை அடையும் வழியினை காட்டுபவர். இந்த ஐந்தும் ஸ்ரீ தேவியினை உபாசிப்பதில் முக்கியமான அமிசங்களாகும். 

ஸ்ரீ என்பது வேதத்தினையும் குறிக்கும். வேதம் பிரம்மத்தில் இருந்து உருவாகியது. லலிதாம்பிகையே பிரம்மம் என்பது இந்த சஹஸ்ர நாமத்தினால் உணரப்பட்டுள்ளது, சுவேதாஸ்வர உபனிடதம் (6-18) "அவனே பிரம்மனை படைத்து வேதங்களை அவனிடம் ஒப்படைத்தான், முக்தியினை விரும்பும் நான், தன்னை அறியும் ஞானத்தை மனதில் வெளிப்படுத்தும்  அந்த ஒளிபொருந்திய கடவுளிடம் அடைக்கலமடைகிறேன்" என விளிக்கிறது.

அத்துடன் இந்த நாமம் பஞ்சதசி மந்திரத்தினை குறிப்பது என கூறப்பட்டுள்ளது.

இந்த சஹஸ்ர நாமம் லலிதாம்பிகையினை அனைத்துக்கும் தாயாக விளித்தவண்ணம் ஆரம்பிக்கிறது என்பதனை அவதானிக்க வேண்டும். இது அவளுடைய பிரபஞ்ச உயிர்கள் மீதான இரக்கத்தினை வெளிப்படுத்துவதாக உள்ளது, மாதா என்பவள் படைப்பவள், இது பிரம்மத்தின் முதலாவது தொழில் ஆகும்.  



*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

Wednesday, April 24, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 14: நான்காவது தியான ஸ்லோகம்


அடுத்து நான்காவது தியான ஸ்லோகத்தின் விளக்கத்தினைப்பார்ப்போம். 

ஸகுங்குமவிலேபநா - மளிகசும்பி - கஸ்தூரிகாம் 
  ஸமந்த - ஹஸிதேக்ஷணாம் 
ஸசரசாப  பாஸாங்குஸாம்                   |
அசேஷஜநமோஹிநீ - மருணமால்ய  பூஷாம்பராம் 
ஜபாகுஸும - பாஸுராம் 
   ஜபவிதௌ  ஸ்மரேதம்பிகாம்             ||

பத அர்த்தம்: 

ஸகுங்கும - குங்குமம் உடைய

விலேபம் - வாசனை

அளிகசும்பி - தேனிக்களால் விரும்பப்படும் 

கஸ்தூரிகாம் - மஞ்சள் பூச்சு

ஸமந்த+ஹஸித+அக்ஷணாம் - அன்பான+புன்னகைக்கும்+தோற்றம்

ஸசர+சாப+பாஸ+ அங்குஸாம் - அம்பு+வில்லு+பாசம்+அங்குசம்       
          |
அசேஷ+ஜந+மோஹிநீ - யாரென்ற பாகுபாடின்றி கவர்ந்திழுக்கும்

அருணமால்ய - விஷேட வகை சந்தனம்

பூஷ - அணிகலன்

அம்பராம் - சுத்த வடிவம்

ஜபாகுஸும - சிவந்த செவ்வரத்தம் பூ

பாஸுராம் - அலங்கரிக்கப்பட்ட

ஜபவிதௌ - ஜபவிதிக்கமைய 

ஸ்மரேதம்பிகாம் - தியானிக்க வேண்டும்

இதன் பொருளை இப்படி உருவகப்படுத்த வேண்டும்: தேவியினுடைய உடல் குங்குமப்பூச்சினையும், மஞ்சள் பூச்சினையும் கொண்டு தெய்வீக மணம் கமழுகின்றதாகிறது. அந்த மணத்தில் தேனிக்கள் கவர்ப்படுகின்றன. பக்தர்களை பார்த்து புன்னகைத்த முகத்தவளாக காணப்படுகிறாள். நான் கு கரங்களிலும் அம்பு,வில்லு,பாசம்,அங்குசம் ஆகிய ஆயுதங்களை கொண்டிருக்கிறாள். தன்னுடைய பக்தனா இல்லையா என்ற வேறுபாடு இன்றி அனைவரையும் கவர்ந்து இழுக்கிறாள். கழுத்தை சூழ சிவந்த சந்தனத்தால் ஆன மாலையினை அணிந்திருக்கிறாள். சிறந்த ஆபரணங்களை அணிந்த வண்ணம் செவ்வரத்தம் பூ நிறத்தவளாக சாதகன் ஜெபத்தின் போது ஒருவன் தியானிக்க வேண்டும். 

அடுத்த பதிவுகளில் இருந்து நாமக்களின் விளக்க உரை தொடரும்.



*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

Tuesday, April 23, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 13: மூன்றாவது தியான ஸ்லோகம்


இனி மூன்றாவது ஸ்லோகத்தின் விளக்கத்தினை பார்ப்போம்

த்யாயேத் பத்மாஸநஸ்தாம்  விகஸித
  வதநாம்  பத்ம  பத்ராயதாக்ஷீம் 
ஹேமாபாம்  பீதவஸ்த்ராம் கரகலிதலஸத்தேம 
  பத்மாம்   வராங்கீம்                               |
ஸர்வாலங்கார - யுக்தாம்  ஸததமபய 
  தாம்  பக்தநம்ராம்   பவாநீம் 
ஸ்ரீ வித்யாம்  சாந்தமூர்த்திம் 
 ஸகலஸுரநுதாம்  ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் ||

பத அர்த்தம்: 
த்யாயேத் - தியானிக்கின்ற

பத்மாஸநஸ்தாம் - தாமரையில் அமர்ந்திருக்கின்ற அல்லது கால்கள் மடித்து 
பத்மாசனத்தில் அமர்ந்திருக்கின்ற

விகஸித வதநாம் - கவர்ந்திழுக்கும் முகம், விகஸ என்றால் சந்திரன் என்றும் பொருள், தேவியின் முகம் பௌர்ணமி சந்திரன் போன்றது, 

பத்ம- தாமரை 

பத்ராய - இதழ்

தாக்ஷீம் - கண்கள் (தாமரை இதழ் போன்ற கண்கள்

ஹேமாபாம் - தங்க நிறம்  

பீதவஸ்த்ராம் -  தங்க இழையுடைய ஆடை

கரகலிதலஸத்தஹேம - கைகளில் உடைய

ஹேமபத்மாம் - தங்க நிற தாமரை (தங்க நிற தாமரைகளை கைகளில் உடைய) 

வராங்கீம் - அதீத அழகான உடல் அங்கள் உடைய

ஸர்வாலங்கார - எல்லவிதமான அலங்காரங்கள் கொண்ட 

யுக்தாம் - நகைகள் 

ஸததமபயதாம்  - தொடர்ச்சியான அபயத்தை அளித்த 

பக்தநம்ராம் - தன்னை வணங்குகின்ற பக்தர்களின் பேச்சைக்கேட்டவண்ணம்

பவாநீம்- பவன் ஆகிய சிவனின் பத்தினி

ஸ்ரீ வித்யாம் - மந்திர தந்திர சாஸ்திரமான ஸ்ரீ வித்தை வடிவினள்

சாந்தமூர்த்திம் - சலனமற்ற உருவுடைய

ஸகலஸுரநுதாம்- எல்லா தேவ தேவியராலும் வணங்கப்படுகின்ற

ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் - எல்லவித சௌபாக்கியங்களையும் தருபவள்

இதன் முழுமையான பொருள் உருவகம் வருமாறு: தாமரையில் அமர்ந்திருக்கின்றாள். எல்லோரையும் கவர்ந்திர்ளுக்கும் முகம், கண்கள் தாமரை இதழ்கள் போன்று அழகானவையாக இருகின்றது. அவளது உடலில் நிறம் தங்க நிறமாக ஜொலிக்கிறது, உடுத்திருக்கும் உடையின் நிறம் தங்க தங்க இழைகளால் ஆக்கப்பட்டிருக்கிறது. கைகளில் தங்கத்தாமரைகளை கொண்டிருக்கிறாள். உடல் செதுக்கிய சிற்பம் போன்று அழகாக இருக்கிறது. உடலை அழகுபடுத்தும் எல்லாவித ஆபரணங்களையும் அணிந்ததிருக்கிறாள். தன்னுடைய பக்தர்களை இடைவிடாமல் காப்பாற்றுகிறாள், அவளுடைய பக்தர்களின் பிரார்த்தனைகளை தேவைகளை கேட்கிறாள், ஸ்ரீ வித்தையின் மந்திர மற்றும் தந்திர முறைகளில் உறைந்துள்ளவள். அமைதியான சலனமற்ற வடிவுடையவள். எல்லா தெய்வங்களாலும் வழிபடப்படுபவள். அதி உயர்ந்த தன்மை உடையவள், எல்லவித சௌபாக்கியங்களையும் தருபவள். 



*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

Monday, April 22, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 12: இரண்டாவது தியான ஸ்லோகம்


இனி இரண்டாவது தியான ஸ்லோகம்

அருணாம்  கருணாதரங்கிதாக்ஷீம் 
  த்ருதபாஷாங்குஷ புஷ்பபாணசாபாம் |
அணிமாதிபி ராவ்ருதாம் மயூகை:
  அஹமித்யேவ விபாவயே பவாநீம் ||

இதன் பத அர்த்தம்: வருமாறு;

அருணாம்: உதிக்கின்ற சூரியன்

கருணா: கருணை

தரங்கிதாக்ஷீம் - கண்களில் இருந்து வெளிப்படும் அலைகள்,   கருணை அலைகளை அள்ளி வீசும் கண்களையுடையவள் தேவி.

த்ருத -  ஆதரவு

பாஷா - பாசக்கயிறு

அங்குஷ - அங்குசம்

புஷ்ப - மலர்

பாண - அம்புகளை (மலர்களை அம்புகளாக கொண்டவள்)

சாபாம் - வில்

அணிமாதிபி ராவ்ருதாம் - அணிமா, மகிமா, கரிமா, லஹிமா, ப்ராப்தி, ப்ராகாம்யா, ஈசத்வ, வசித்வ சித்திகளை சூழ உள்ளவள்.

 மயூகை - ஒளிக்கற்றை

அஹ -  நான்

மித்யேவ - விரும்பும்

விபாவயே - பேரின்பம்

பவாநீம் - பவானி, லலிதா சஹஸ்ர நாமத்தில் 112 வது நாமம்.

இந்த ஸ்லோகத்தின் பொருள் வருமாறு: நான் பவானியை தியானிக்கிறேன், உயர்ந்த பேரின்பவடிவானவள், உதிக்கின்ற சூரியனின் நிறத்தை ஒத்த, இது முன்னைய ஸ்லோகத்தில் அவளது சிவப்பு நிறத்தினை உறுதி செய்கிறது.  அவளது கருணை அலைகளை வீசுகிறது. இந்த தியான ஸ்லோகத்தில் நான்கு கைகளை உடையவளாக கருதப்படுகிறது. பின்னிரு கைகளிலும் பாசமும் அங்குசத்தினை  கொண்டிருக்கிறாள். முன்னிரு கைகளிலும்   கரும்பு வில்லும் மலர் அம்புகளையும் கொண்டிருக்கிறாள். இந்த  இந்த ஆயுதங்கள் பற்றிய விபரமான புரிதல்கள் சஹஸ்ர நாம உரையில் தரப்பட்டுள்ளன. இவை நான்கும் தேவியினுடைய நான்கு பிரதான உதவியாளர்களை குறிப்பன. அஷ்டமா சித்திகள் அவளைச் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த ஒவ்வொரு சித்தியும் ஸ்ரீ சக்கரத்தில் குறிப்பிடப்படுகின்றன. நான் உயர்ந்த ஆனந்தமும் ஒளிக்கற்றை போன்ற உருவமும் உடைய பவானி என்ற ரூபத்தினை தியானிக்கிறேன்.



*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

Sunday, April 21, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 11: முதலாவது தியான ஸ்லோகம்


லலிதைக்கு நான்கு தியான ஸ்லோகங்கள் உள்ளது என்பது பற்றி முன்னர் பார்த்தோம், இனி அவற்றின் விவரணம் பற்றி பர்ப்போம். இந்த பதிவில் முதலாவது தியான ஸ்லோகத்தின் விளக்கம் தரப்படுகிறது. ஸ்லோகம் வருமாறு;

ஸிந்தூராருணவிக்ரஹாம் 
  த்ரிநயனாம்   மாணிக்யமௌலிஸ்புரத்
தாராநாயக  ஷேகராம்  
  ஸ்மிதமுகீமாபீனவக்ஷோருஹாம் |
பாணிப்யா மலிபூர்ணரத்னசஷகம் 
  ரக்தோத்பலம் பிப்ரதீம் 
ஸௌம்யாம் ரத்னகடஸ்த ரக்தசரணாம்
  த்யாயேத் பராமம்பிகாம் ||

இதன் பத அர்த்தம்: வருமாறு;
ஸிந்தூராருணவிக்ரஹாம் - ஸிந்தூரம் என்றால் பெண்களின் நெற்றியில் வைக்கும் குங்குமம் என்று அர்த்தம். அதன் நிறம் சிவப்பு. அருணாம் என்றால் சூரியன் உதிக்கும் போது உள்ள நிறம். அதுவும் சிவப்பே. இது லலிதா தேவியின் நிறத்தினை குறிக்கிறது. அவளுடைய நிறம்  குங்குமம் பொன்ற சிவப்பு எனவும் உதிக்கின்ற சூரியனின் சிவப்பு எனவும்  இருதடவை வலியுறுத்தி உள்ளதன் காரணம் என்ன? வாக்தேவிகள் தேவியின் நிறம் சிவப்பு என்பதனை இரண்டு உதாரணம் கூறி மிக்க வலியுறுத்திய கூறவே. விக்ரஹாம் என்றால் உருவம் என்று பொருள். த்ரிநயனாம் என்றால் மூன்று கண்ணுடையவள் இது பௌதீகமான மூன்று கண்கள் உடையவள் என்று பொருள் இல்லை. பௌதீக கண்களையும் தாண்டி ஞானத்தின் ஊடாக பார்க்க கூடியவள் என்று பொருள். சாதகனுக்கும் ஞானத்தினை பெற்றபின்னரே மூன்றாவது கண் திறக்கப்படுகிறது. இதனாலேயே ஞானத்தை தரும் தேவிக்கும் மூன்று கண்கள் இருப்பதாக உருவகிக்க படுகிறது. இந்த மூன்று கண்களும் சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்றினையின் குறிக்கும். ஆக்ஞ்சா சக்கரத்தின் நிலையினையும் குறிக்கும்.

மாணிக்யமௌலிஸ்புரத் - அவளது கிரீடம் மாணிக்கத்தினையும், சந்திரனையும் கொண்டுள்ளது.

தாராநாயக  ஷேகராம்  - தாரா என்றால் நட்ச்சத்திரங்களை குறிக்கும், நாயக என்றால் தலைவன் என்று பொருள், நட்ச்சத்திரங்களின் தலைவன் சந்திரன், அவனது ஒளியினால் கிரீடத்தில் உள்ள மாணிக்கங்கள் ஒளிருகின்றன.

ஸ்மிதமுகீ - ஸ்மித என்றால் புன்னகை என்று பொருள், முகிம் - முகம், எப்போதும் சிரித்த முகம் உடையவள் லலிதை, பொதுவாக எல்லா தேவ தேவியரும் புன்னகைத்த முகமாய்தான் இருப்பார், அப்படியாயின் லலிதையின் சிறப்பு என்ன? அதன் பதில் 48 வது நாமம் ஆனா மஹா லாவண்யா சேவிதா. அவள் பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த அழகு வடிவானவள். வேறு எதனுடனும் ஒப்பிட முடியாதவள். பல நாமங்களில் அவள் பிரம்மமாக உருவகப்படுத்தப் படுகிறாள். பிரம்மம் என்பது எல்லையற்ற ஆனந்த வடிவானது. லலிதாம்பிகை அழகினதும் ஆனந்ததினதும் இணைந்த வடிவம்.  அழகு என்பது பௌதிக உடலுடனும், ஆனந்தம் என்பது மனதுடனும் தொடர்புடையது. அவளுடைய ஆனந்தமான மனது அழகான உடலிற்கு மேலும்  பொலிவு சேர்க்கிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று கூறுவார்கள். ஒருவனுடைய பண்பும் குணமும் அவகுடைய முகத்தில் தெரியும். உபாசனை செய்பவரது முகத்தில் தேஜஸாக அவரது உபாசனையின் ஆற்றல் வெளிப்படும். (உபாசனை ஐந்து வகைப்படும் - அபிகமான - அணுகுதல், உபதானம் - நைவேத்தியம் முதலியவை செய்தல், இஜ்யா - சமர்ப்பணம், சுவாத்தியம்- ஜெபம், யோகம்- இணைவு அல்லது பக்தி) ஒருவனுடைய முகத்தில் அத்தகைய தேஜஸ் ஒளிரத்தொடங்கும் போது அவன் சரியான பாதையில் செல்கிறான் என்று அர்த்தம்.

ஆபீனவக்ஷோருஹாம் - முழுமையாக விருத்தியடைந்த முலைகளை உடையவள், பெண்ணின் மார்பு தாயாகி பாலூட்டும் போதே முழுமையடைகிறது. உலகத்தினை போசிக்கும் தாயினுடைய மார்புகள்.

பாணிப்யாம் - மடித்த கைகள்

அலிபூர்ண - தேன் நிறைந்த

ரத்னசஷகம் - தேனிகள் சூழந்த மாணிக்கத்தினால் செய்த கிண்ணத்தினை தனது கைகளில் கொண்டவள்.

ரக்தோத்பலம் பிப்ரதீம் -  மறுகையில் சிவப்பு மலர்களை கொண்டவள்.

{இந்த தியான ஸ்லோகத்தில் இரண்டு கைகள் உடையவளாகவே தேவி உருவகிக்கப்படுகிறாள், ஆனால் மற்றைய ஸ்லோகத்தில் நான்கு கரங்களுடனும், சோடஷி ரூபத்தில் பதினாறு கைகள் உடையவளாகவும் வர்ணிக்கப்படுகிறாள்.}

ஸௌம்யாம் - அழகு

ரத்னகடஸ்த - மாணிக்கம் நிறைந்த குடம்

ரக்தசரணாம் - சிவந்த கால்களை பதிக்கின்றாள். மாணிக்கம் நிறைந்த குடத்தில் தனது கால்களை பதிப்பிக்கின்றாள்.

த்யாயேத் - தியானிக்கிறேன்

பராமம்பிகாம் - உயர்ந்த  அம்பிகையினை, பரா (நாமம் 366) என்பது தேவியின் மிக உயர்ந்த வடிவம்.

இந்த தியான ஸ்லோகத்தின் படி தேவியின் வடிவம் வருமாறு; அவளது நீறம் சிவப்பு, அவளுடன் தொடர்புடைய அனைத்துமே சிவப்பாக இருக்கிறது. அவள் எல்லையற்ற அழகானவள். ஒருகையில் மாணிக்கத்தால் செய்த கிண்ணத்தில் தேனினை கொண்டிருக்கிறாள். மறுகையில் சிவந்த மலர்களை கொண்டிருக்கிறாள். அவளது சிவந்த பாதங்களை மாணிக்கங்கள் கொண்ட பாத்திரத்தில் பதிக்கிறாள். ஏன் பாதங்கள் சிவப்பாக இருக்கிறது என்பதை அறிய முடியவில்லை. பாத்திரத்தில் இருந்து வரும் மாணிக்கத்தின் நிறக்கற்றைகளால் ஆக இருக்கலாம். இந்த ஸ்லோகத்தின் படி அவளுடன் தொடர்புடைய அனைத்துமே சிவந்த நிறமுடையது என அறியலாம்.



*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

Saturday, April 20, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 10:லலிதாம்பிகையின் தியான ஸ்லோகத்திற்கான அறிமுகம்



லலிதா சஹஸ்ர நாமத்தில் தேவியை மனதில் உருவகப்படுத்த நான்கு தியான ஸ்லோகங்கள் கூறப்படுகின்றன. தியான ஸ்லோகம் என்றால் தேவியின் தோற்றத்தினை மனதில் உருவகப்படுத்த உதவும் வார்த்தைகளின் தொகுப்பு. முதலாவது "சிந்தூராருண விக்ரஹாம்" என்று தொடங்குவது, இது வாக்தேவிகளால் உருவாக்கப்பட்டது. இரண்டாவது "அருணாம் கருணாதாரங்கிதக்ஷிதாம்" எனத்தொடங்குவது. இது தத்தாத்திரேயாரால் உருவாக்கப்பட்டது. (தத்தாத்திரேர் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் ஸ்வருபமானவர். தத்த என்றால் அளிக்கப்பட்ட, கொடுக்கப்பட்ட என்று பொருள், மும்மூர்த்திகளுமே தம்மை அத்ரி மகரிஷி அனுசூயா தம்பதிகளுக்கு தந்ததால் அவரது பெயரின் பினால் ஆத்ரேய என்று வந்தது). மூன்றாவது "தியாயேத் பத்மாசனஸ்தாம்" என்ற ஸ்லோகம் பற்றி எதுவித குறிப்புகளும் இல்லை. நான்காவது "சகும்கும - விலேபனாம்" என்பது ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்டது. எல்லா ஸ்லோகங்களிலும் தேவியினுடைய சிவந்த நிறம் பற்றி கூறப்பட்டுள்ளது. அது உதிக்கின்ற சூரியனின் நிறத்தினை போன்றது என உருவகிக்கப்பட்டுள்ளது. லலிதாம்பிகை செதுக்கிய அழகுள்ளவள். அவளுடைய  அழகிற்கும் மேலான குணமுள்ளவள். அவளுடைய பண்புகளும் குணங்களும் மிக உயர்ந்தவை, பிரபஞ்ச தாயிற்கு உரித்தானவை. அதனால் தான் இந்த சஹஸ்ர நாமம் அவளை "ஸ்ரீ மாதா"  என்று விளித்து தொடங்குகிறது. அவள் சிம்ஹாசனத்தில் அமர்ந்திருக்க லக்ஷ்மியும் சரஸ்வதியும் இருபுறமும் சாமரை வீசுகின்றனர். அவள்  பரா பட்டாரிகா எனவும் அழைக்கப்படுகிறாள், இதன் அர்த்தம் அரசிக்கெல்லாம் அரசி என்பதாகும். அவள் பராசக்தி, ராஜராஜேஸ்வரி, பரமேஸ்வரி என அழைக்கப்படுகிறாள். இவள் பரமசிவனின் பத்தினி, பரமசிவன் ருத்திரனில் இருந்து வேறானவர். அவள் ஸ்ரீ வித்தையாலும் தசமஹா வித்தையாலும் வணங்கப்படுபவள். இவை இரண்டும் மிக இரகசிய வித்தைகள், தகுந்த குருவின் மூலம் கற்க வேண்டியவை. இவை தாந்திரிக முறை சார்ந்தவை, சாதனையின் மூலம் அதீத ஆற்றலினை உருவாக்க கூடியவை.
சிவனுடையதும் சக்தியினுடையதும் மிக உயர்ந்த வடிவம் மகா காமேஸ்வரன் மகா காமேஸ்வரி எனப்படும். அவர்கள் எல்லையற்றதும் நித்தியமானவர்களும் ஆவர்.  நித்திய நிலையில் அவள் "ப்ரகாச விமர்ச மஹா மாய ஸ்வரூபினி" என அழைக்கப்படுகிறாள். இருவரும் நித்திய வடிவில் நான்கு கைகளுடன் ஒரே ஆயுதங்களை ஏந்திய வண்ணம் உள்ளார்கள். அவர்கள் கைகளில் உள்ள ஆயுதங்கள் - பாசம், அங்குசம், கரும்பு வில், மலர் அம்புகள் என்பவையாகும். இருவரது கிரீடத்திலும் சந்திரன் உள்ளது. மகா காமேஸ்வரர் துய, பளிங்கு போன்ற, நிறமற்ற வடிவானவர். சிம்ஹாசனத்தில் அமர்ந்து இடது காலை மடித்து வலது காலை நிலத்தில் ஊன்றியவண்ணம் இருக்கிறார், தேவி சிவப்பு நிறமுடைய அதீத அழகுடையவள், புன்னைகையினை வீசியவண்ணம் விளையாட்டுத்தனமும், அருளும், பக்தர்களின் பிரார்த்தனையினை எப்போதும் கேட்கும் நிலையில், காமேஸ்வரரை நோக்கி வெட்கத்துடன் நடக்கின்றாள். அவளது ஒவ்வொரு அடியும் காமேஸ்வரரை நோக்கி நகர அவரது தூய வெண்மை நிறம் சிவப்பாகிறது. அந்த நடையின் அழகில் அன்னப்பறவைகள் வெட்கிவிடக் கூடிய அழகுடன் கூடியவை. காமேஸ்வரர் தனது அன்பும் காதலும்  கலந்த [பார்வையினை தேவியின் மீது வீசுகிறார். அவள் அவரது மடித்த இடது துடையின் மேல் தனது வலது துடையினை மடித்து இடது காலை நிலத்தில் உள்ள மாணிக்கங்கள் நிரம்பிய தங்க காலடியில் பதித்து  அமர்கிறாள். அவள் அவரது மடியில் அமர்ந்த கணத்தில் அவர் உடல் முழுவதும் சிவப்பு நிறமாகிறது. இருவரது உடலும் பிரகாசமாக ஒளிரத்தொடங்குகிறது. இதனைக்கண்ட தேவர்கள் அது சூரியனது ஒளியாக இருக்கும் என மயங்குகின்றனர். இந்த தெய்வீக தம்பதியினர் எப்போதும் ஐக்கிய நிலையிலேயே  காணப்படுகின்றனர், அதனாலேயே சஹஸ்ர நாமத்தின் இறுதியில் வரும் நாமங்களில் ஒன்று "சிவ ஸக்தி ஐக்கிய ரூபிணி" என்று  குறிப்பிடுகிறது. இந்த நாமத்தில் விளக்கமே மேலே கூறப்பட்டது. இந்த வடிவம் நித்தியமானது. சிவ ஸக்தி ஐக்கியத்திற்கு மேற்பட்ட நித்திய நிலை எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் இந்த சஹஸ்ர நாமம் லலிதாம்பிகா என்ற நாமத்துடன் முடிவுறுகின்றது. அப்படியானால் லலிதாம்பிகை ரூபம் சிவ சக்தி ஐக்கிய ரூபத்தினை விட உயர்ந்ததா? என்றால் அதற்கான பதில் "ஆம்" என்பதே, அப்படி இல்லாமல் அந்த நாமத்தினை வாக் தேவிகள் இறுதியாக சேர்த்திருக்க மாட்டார்கள். அவர்கள்   "சிவ ஸக்தி ஐக்கிய ரூபிணி" என்ற நாமத்தினை இறுதியாக சேர்த்து லலிதாம்பிகை யினை அதற்கு முதலாக சேர்த்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. இந்த சஹஸ்ர நாமத்தின் இடையில் "பஞ்ச பிரேத சனசினா" என்றும் "பஞ்ச பிரம்ம ஸ்வரூபினி"  என்றும் வருகிறது. முதலாவது நாமத்தின் பொருள் பிரம்மா, விஷ்ணு, சிவன், மகாதேவன், சதாசிவன் ஆகிய ஐவர் மேலும் அமர்ந்திருப்பவள் என்பதாகும். இதன் ஆழ்ந்த பொருள் பற்றி பின்னர் விபரிக்கப்படும். பிரம்மா - படைத்தல், விஷ்ணு - காத்தல், சிவன் - அழித்தல், மஹாதேவன்- அறியாமையினை, மாயையினை அகற்றுபபர், சதாசிவன் - ன் ஞானத்தினை வழங்குபவர். இந்த ஐவர் மேலும் லலிதை அமரும் போது அவளது ஆற்றல் மனிதனால் விளங்கமுடியாத அளவிற்கு அதிகரிக்கிறது. அவளெ எல்லையற்றவள், எல்லாமும் ஆனவள், நான் ஆக இருப்பவள், நீயாக  இருப்பவள், கேட்பதையெல்லாம் தரக்கூடியவள். ஒவ்வொருவருடைய சொந்த தாய் போல் அணுகக்கூடியவள், அவளது எல்லையற்ற ஆற்றலின் முன் பணியும் போது மிகுதியை அவள் ஏற்றுக்கொள்கிறாள். அவளே மிக உயர்ந்த கல்வி, சிவம் சார்ந்ததாகவும் சக்தி இயக்கமாகவும் இருக்கிறாள். சிவம் அமைதியானதும் அசைவற்றதும், சக்தி இயக்குபவளும், பிரகிருதி அல்லது மாயை எனப்படுகிறாள். சிவம் ஆத்மா என்றால் சக்தி எமது கர்மத்திற்கும் செயலுக்கும் ஆதாரமான மனமும் உடலும் போன்றது. லலிதா சஹஸ்ர நாம தியான ஸ்லோகம் இத்தகைய தேவியின் முழுமையான ரூபத்தினை தியானிப்பதற்கான உருவத்தை விளக்குகிறது. அவளை தியானிப்பதால் நாமும் அவளாவோம்.


*****************************************************************************************************************************************

{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

Friday, April 19, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 09: பூர்வ பாகம் தொடர்ச்சி ....


ஹயக்ரீவர் அகத்தியருக்கு ஸ்ரீ வித்தையில் உள்ள ஸ்ரீ புரத்தின் அமைப்பு, ஸ்ரீ சக்கரம், பஞ்சதசி மந்திரம், ஜெப முறைகள், பூஜை முறைகள், அந்தர் யாகம், பஹிர் யாகம் ஆகிய அனைத்தையும் கற்பித்துவிட்டார். ஸ்ரீ வித்தையில் தன்னையும், குருவையும், ஸ்ரீ சக்கரத்தினையும், ஸ்ரீ தேவியினையும் ஒன்றாக அபேத பாவனையினை பெறுவதே இறுதி இலட்சியம். ஹயக்ரீவர் ஏற்கனவே லலிதையின் மந்திரிகளான மந்திரிணி (ராஜா சியாமளா), தண்டினி (வாராஹி) ஆகிய இருவரது சஹஸ்ர நாமங்களையும் அகஸ்தியருக்கு கற்பித்திருந்தார். ஆகவே தற்போது அகஸ்தியர் ஹயக்ரீவரிடம் தனக்கு ஏன் லலிதையின் சஹஸ்ர நாமத்தினை கற்பிக்கவில்லை, தான் அதற்கு தகுதி அற்றவனா என்ற கவலையுடன் வினாவினார். அதற்கு ஹயக்ரீவர் " லோபாமுத்ரையின் பதியே, ஸ்ரீ வித்தை மிகவும் இரகசியமானது, அதனை கேட்காமல் உபதேசிக்க கூடாது, ஆதலால்தான் தான் வலிந்து உபதேசிக்கவில்லை" என்று சமாதானம் கூறினார்.  அகத்தியர் கேட்டதால் ஹயக்ரீவர் அதனை அவருக்கு உபதேசித்தார். அத்துடன் லலிதா சஹஸ்ர நாமத்தினை பாராயணம் செய்ய விரும்புபவனுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்ன என்பது பற்றி கூறினார்;
அவை வருமாறு; ஸ்ரீ மாதாவின் மேல் அதீத பக்தி உடையவனாக இருக்க வேண்டும். தகுதியான குருவினால் பஞ்சதசி மந்திரம் தீட்சை பெற்றிருக்க வேண்டும். மனதில் உறுதியும் பணிவும் இருப்பவனாக இருத்தல் வேண்டும். தீய பழக்கவழக்கங்கல் அற்றவனாக இருத்தல் வேண்டும். இதற்கான காரணத்தினையும் கூறினார். 
பொதுவாக தந்திர சாஸ்திரப்பிரகாரம் செய்யும் சாதனைகள் விரைவாக சித்திகளை தரும். அதில் லலிதா சஹஸ்ர நாமம் அதி சிறந்தது. பொதுவாக தேவியின் சஹஸ்ர நாமங்களில் பத்து சிறப்பானவை. அவையாவன; கங்கா, காயத்ரி, சியாமளா, லக்ஷ்மி, காளி, பாலா, லலிதா, ராஜராஜேஸ்வரி, சரஸ்வதி, பவானி என்ற பத்துமாகும். மந்திரம் என்ற சொல் பொதுவாக ஆண் கடவுள்களை குறிப்பனவாகவும், வித்யா என்பது பெண் தெய்வங்களை குறிப்பதாகவும் இருக்கும். ஸ்ரீ வித்தை மந்திரமும், வித்தையும் கலந்த சிவசக்தி ஐக்கியத்தினை தருவது.  பஞ்சதசி மந்திரத்தில் பன்னிரெண்டு வகையான மந்திர மாறுபாடுகள் உள்ளது. இவற்றில் காதி வித்தை பிரபலமானது. இதனை பரா வித்தை என்றும் அழைப்பர். இந்த மந்திரம் பொதுவாக பதினைந்து எழுத்துக்கள் எனக்குறிப்பிடப் பட்டாலும் இதில் 37 எழுத்துக்கள் உள்ளன. அவையாவன 15 உயிர் எழுத்துகள், 16 மெய்யெழுத்துகள், 03 பிந்துகள், 03 நாதங்கள் ஆக மொத்தம் 37 எழுத்துகள் உள்ளன. (வரிவஸ்யா ரகசியம் II - 27), இந்த 37 எழுத்துக்களில் 36 தத்துவங்களையும், 37வது "அ" என்ற எழுத்து பரப்பிரம்மத்தினையும் குறிக்கும். லலிதா திரிசதி பஞ்சதசியின் எழுத்துக்களை மூலமாக கொண்டு உள்ள தோத்திர நூல், ஸ்ரீ வித்யா பூஜையில் திரிசதி மந்திரங்களில் பின்னர் வேறு எந்த அர்ச்சனையும் செய்யக்கூடாது. பூஜை ஆராத்தியுடன் முடிக்கவேண்டும். பஞ்சதசி மந்திரம் பற்றி முற்பகுதியில் விளக்கியுள்ளோம்.
இந்த் சகஹஸ்ர நாமத்தினை மனதாலோ, வாயாலோ ஜெபிக்கும் போது லலிதாம்பிகை மிக்க சந்தோஷம் அடைகிறாள், அர்ச்சனையாக செய்யும் போது தாமரை, துளசி பத்ரம், வில்வ பத்ரம் கொண்டு செய்யலாம். நித்திய பூஜையின் போது முதலில் ஸ்ரீ சக்கரத்தினை வணக்கி பஞ்சதசி மந்திரம் குறித்தளவு ஜெபம் செய்து பின்னர் சஹஸ்ர நாமம் ஜெபிக்க வேண்டும். இந்த மூன்றில் மற்றைய இரண்டினை செய்ய முடியாவிட்டாலும் சஹஸ்ர நாம பாராயணத்தினை கட்டாயம் செய்யவேண்டும். அர்ச்சனையாக செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை, பாராயணமாக மட்டுமே செய்யலாம். வேறு தோத்திரங்களை ஜெபிப்பதும் மேலதிக பலனைத்தரும், ஆனால் சஹஸ்ர நாமத்தினை விட்டு செய்யும் மற்றைய தோத்திரங்கள் பலன் தரமாட்டாது. லலிதாம்பிகை தனது வாக்கில் உதிர்ந்ததின்படி ஒருவன் வாழ நாளில் ஒருதடவை முயற்சித்து சஹஸ்ர நாம பாராயணம் செய்து விட்டாலே அந்த பக்தனின் பிரார்த்தனையினை தேவி மனமுவந்து கேட்பேன் என்று தேவி கூறியுள்ளாள் எனக்கூறி ஹயக்ரீவர் அகஸ்தியருக்கு லலிதா சஹஸ்ர நாமத்தினை உபதேசிக்க தொடங்கினார்.  


*****************************************************************************************************************************************

{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...