யமக அணியில் புலியூரந்தாதி பாடி சிதம்பரத்து நடராஜரைப் புலியூரானாகத் துதித்த, யாழ்ப்பாண வைபவமாலை பாடிய மாதகல் மயில்வாகனப்புலவர் அப்பம்மாவிற்கு பூட்டனார் முறை!
தங்கத்தாத்தா நவாலியூர் சோமசுந்தரப்புலவர் அம்மம்மாவிற்கு சித்தப்பா! பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய தமிழ் புலவர்! தமிழ்க்கடவுள் முருக உபாசகர்!
அப்பாவும் முன்னோர்களும் தமிழிற்கு இலக்கணம் வகுத்த பொதிகை முனி அகத்திய மகரிஷியைக் குருவாகக் கொண்டவர்கள்!
இவன் பிறந்த போது அம்மம்மா தூக்கி "புலவரின் மகன் நடராசரைப் போல் வருவான்" என்று கூறினாராம்!
நடராசனார் சோமசுந்தரப்புலவர் மகன்! பல நூல்களை மொழி பெயர்த்தவர்! குறிப்பாக வல்பொல ராகுல தேரரின் "What The Buddha Taught" என்ற உலகப் புகழ் பெற்ற நூற்களை தமிழில் மொழிப் பெயர்த்த பெரும் அறிஞர்! அம்மம்மா வாழ்த்தியது போல் நடராசனாரின் பௌத்த ஆர்வமும் இவனைப் பற்றிக் கொண்டது!
எல்லா ஜீனும் கலந்து சஜீதரனாக என்னுடன் வந்து பிறந்திருக்கிறான்! வீட்டிற்கு வருபவர்கள் இருவரும் ஒருவரா என்ற தோற்ற மயக்கம் ஏற்படும் உருவ ஒற்றுமை கொண்டவர்கள் நாம்!
தமிழ்த்தாய் அந்தாதி எழுதி ஒரு வருடத்திற்கு முன்னர் வீட்டில் எமது மகாராணி அம்ருதவர்ஷினி முன்னிலையில் அரங்கேற்றினார்!
இன்று சதீஷ் ராம்தாஸ், காவ்யா, திலோஜனின் உழைப்புடன் இயல், இசை, நாடகமாக கண்களுக்கும், செவிகளுக்கும் விருந்தாக, காணொளியாக வந்திருக்கிறது! திலோஜனை மாத்திரம் ஒருமுறை நேரில் சந்தித்திருக்கிறேன்! மற்றவர்கள் கேள்வியால் அறியப்பட்டவர்கள்! அடக்கமும் அமைதியும், ஆழமும் உடைய கலைஞன் திலோஜன், இயற்கைச்சூழலை தனது கமெராவிற்குள் கவ்விக்கொள்ளும் நுணுக்கம் எப்போதும் நான் இரசிப்பது!
வாழ்த்துக்கள்! தமிழன்னையின் ஆற்றல் எல்லோர் மனதிற்கும் இன்பம் அளிக்கட்டும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.