{தாந்திரீக ஞானப்பாடல்கள்}
********************************************
எவ்வளவு தான் விழிப்புணர்வுடன் இருந்தாலும் மனதின் கீழ் இயற்கைப் பண்பை வெல்வது கடினம்! தேர்ந்த யோக சாதகர்களும் தவறிப் போய் விடுவார்கள்! இப்படியொரு நிலையை எப்படி வெல்வது என்பதற்கு உபாயம் சொல்கிறார் ஸ்ரீ ராம்பிரசாத்!
மனம் எப்போதும் ஆணவத் தூண்டலால் இயங்கிக் கொண்டிருக்கும்; ஆணவத் தூண்டல் மனதின் கடுமையான குறை; சாதனை செய்ய வேண்டும் என்று குரு உபதேசம் இருந்தாலும், உறுதியாக எவ்வளவு தான் முயன்றாலும் எம்முள் இருக்கும் ஆணவத் தூண்டல் எம்மை வீழ்த்திக்கொண்டே இருக்கும்! இதனுடன் போராட முனைந்தால் இது இன்னும் அதிகரிக்கும்!
ஆகவே இலகுவான வழி இந்தப் போராட்டத்தை அன்னையிடம் கொடுத்துவிட்டு நாம் அவள் கருவியாகச் சாதனையை முயற்சிப்பது! இது சாத்தியமானால் தினசரி சீரான தியான சாதனை வாய்க்கும்!
பலர் தியானம் செய்கிறோம், மந்திர ஜெபம் செய்கிறோம் என்று மனதில் ஆணவத் தூண்டலுடன் தொடங்கி சில நாட்களில் ஆணவம் சாதனையை வீழ்த்தப் புலம்பிக் கொண்டிருப்பார்கள்! சாதனை தடைப்படுகிறது, உபாசனை தடைப்படுகிறது என்றால் அவள் நடத்துவிக்கிறாள் என்ற எண்ணம் இல்லாமல், நாம் செய்கிறோம் என்ற ஆணவத் தூண்டல் எங்கோ மனதின் மூலையில் இருக்கிறது என்று அர்த்தம்!
இதற்கு என்ன செய்வது? மருந்து கூறுகிறார் இந்தக்கவிதையில்!
சாதகர்களுக்கு தமது சாதனை ஏன் தடைப்படுகிறது? யோகம் ஏன் பலிக்கவில்லை என்ற கேள்விக்கு விடை தரும் அருமையான கவி இது!
கடுமையான குறை
****************
ஜெகன்மாதாவால் எனக்கு நிவர்த்தி செய்யப்பட வேண்டிய குறைகள் உளது.
என்னைக் காக்கும் தாயாக உன்னை விழிப்புணர்வுடன் வெளிப்படையாக எண்ணும் போது கூட,
எனது வீடாகிய மனமும் உடலும் கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்படுகிறது,
எனது எண்ணற்ற ஆணவத்தூண்டலால்!
ஒவ்வொரு நாளும் உன் நாமத்தை ஜெபிக்க உறுதி கொள்கிறேன், அதியுயர் பாதுகாப்பாக,
ஆனால் எனது இந்த நல்ல நோக்கம் மறக்கடிக்கப்படுகிறது
ஊடுருவும் நபர் வருவது போல.
நான் எனது விளையாட்டுத்தனத்தில் சிக்கியிருக்கிறேன்!
ஹே மாதா, எதன் மூலம் இந்த பற்றை நீக்கப்போகிறாய்?
இந்தக்குழந்தை அகத்திலிருந்து உன்னைப் பிரார்த்திக்க எந்தச் சக்தியையும் நீ தரவில்லை,
ஆகவே என்னிடமிருந்து தொடர்ச்சியான பக்தி உனக்குக் கிடைக்கப்போவதில்லை.
எனவே இனி இது எனது பிழை என்று வருந்தப்போவதில்லை.
புகழும் இகழும், நன்மையும் தீமையும் வாழ்க்கையின் சுவை,
அனைத்து நிகழ்வுகளும் உனது விளையாட்டு!
மெய்மறந்து நீ ஆடும் ஆட்டம்போல்,
நாம் குழப்பத்தினுள் வீசப்படுகிறோம்.
ஹே தேவி, எம்மை உனது ஞானப்பாதையில் செலுத்து.
இந்தக்கவி அவளின் இரகசியத்தைப் பாடும் தைரியமுள்ளவன்:
ஹே, மகாமாயா, தாயே! ஒவ்வொரு மனதிற்கும் ஆற்றல் கொடு,
ஆணவம் அழிந்து சாம்பலாவதை இனிமையானது எனவும்,
ஏமாற்றங்களையும், அதிர்ச்சிகளையும் சுவையாகவும் உணர;
இப்போதே விழிப்புணர்வு கொடு சுதந்திரனாக நடமாட!
ராம்பிரசாத் ஸென்
தமிழில்: ஸ்ரீ ஸக்தி சுமனன்
08-Oct-2020: 07:00 PM
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.