அகத்திய மகரிஷி தனது சீடரான ஸோமானந்த நாதரை சிறிது காலம் மூல நாதர் தனது 3000 வருட தவத்தைப் பூர்த்தி செய்துள்ளார்; அவருடன் சென்று சிறிது காலம் குருகுலவாசம் செய்து வா என்று ஆசி கூறி அனுப்பியிருந்தார்;
ஸோமானந்தரும் மூலரிடம் சென்று பணிந்து வணங்கி சேர்ந்து கொண்டார். முதல் பாடம் ஸோமா இந்தப் பாடல் எனது நீண்ட தியான அனுபவத்தின் தொகுப்பு, கூறுகிறேன், உனது புரிதலைக் கூறுவாயாக என்றார்.
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகந்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்துஅடி போற்று கின்றேனே!
இதன் பொருள் என்னவென்று கூறு பார்க்கலாம் என்றார்!
குருவே உங்கள் ஆசியில்லாமல் இதை நான் புரிந்துக் கொள்ளமுடியாது! உங்கள் திருவடிப் பாதுகையை தியானிக்கிறேன், அருள்புரியுங்கள் என்று அந்தப் பாடலை மனனம் செய்து கொண்டு தியானத்தில் அமர்ந்தான் ஸோமன்!
குருநாதா, ஐந்து கரங்கள் என்பது ஐந்து புலன்கள், யானை முகம் என்பது எமது புலன்களின் அறிவு செயற்படும் மூளையை கீழ்ப்புறமாக நோக்கின் தெரியும் வடிவம், இந்தின் இளம்பிறை போன்ற கொம்புகள் என்றால் இளஞ் சந்திரன் போன்ற வளைந்த கொம்புகள் உடைய புருவங்கள், அதுவே சிவத்தை மறைத்துக் கொண்டிருக்கும் நந்தியின் கொம்புகள், அந்தக் கொம்புகளுக்கு நடுவே புருவமத்தியில் கொழுந்து விட்டு தகிக்கும் ஞானத்தைத் தரும் சிவத்தின் திருவடியை எனது புத்தியில் வைத்துப் போற்றுகிறேன்!
ஆகவே மூளைக்கு நடுவில், புருவமத்தியில் இருந்து உள் நோக்கித் தெரியும் அறிவினை தூய்மைப்படுத்தும் ஜோதிவடிவான இறைசக்தியை எமது அறிவில் இருத்தி தியானிக்க வேண்டும் என்பதே எனக்குப் புலப்பட்ட விளக்கம் ஐயனே என்றான் ஸோமன்!
மூலநாதர் தெய்வீகப் புன்னகையை உதித்தார்!
சிறிது நேர மௌனத்தின் பின்பு கணபதியைத் தொழுவதல்லவா மரபு? இந்தப் பாடலில் கணபதியைக் கூறியிருக்கிறேன் என்று ஏன் பொருள் கொள்ளக் கூடாது என்ற வினாவினை தொடுத்தார்!
அதற்கு ஸோமன் ஐயனே நீங்களே இதைப் புரிந்துகொள்ள பிறிதொரு சமயத்தில்,
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே
என்று சிவத்தை எங்கு காணவேண்டும் என்ற உண்மையைக் கூறியுள்ளீர்கள்; எனது ஐயன் அகத்தீசரிடம் மருத்துவம் கற்கும் போது மூளையின் அமைப்பு யானை முகம் போன்று இருப்பதையும் அது புலன் வழி அறிவைக் கிரகிக்கும் என்பதையும் அறிந்துக் கொண்டேன். ஆழ்ந்து ஏகாக்கிர சித்தத்துடன் இந்தப் பாடலை தியானிக்க இந்த விளக்கத்தைப் பெற்றுக்கொண்டேன்!
இன்னுமொரு விளக்கம் மனதில் உள்ளது; அதைக்கூறலாமா இல்லையா என்ற தயக்கமுள்ளது என்றான் ஸோமன்;
அதற்கு மூலநாதர் "அறிவு தெளிய விரும்புவன் பயமற்று சிந்திக்க வேண்டும், தைரியமாகக் கூறுவாயாக" என்றார்.
இந்தப் பாடல் புத்தியைத் தூண்டும் அந்தப் பேரொளியை எம்முள் இருத்தி தியானிப்போமாக என்ற காயத்ரி மகாமந்திரத்தின் பொருளையும் உள்ளடக்கியிருப்பதாகத் தெரிகிறது. அது சரிதானே ஐயனே! என்றான் ஸோமன்!
மீண்டும் அதே தெய்வீகப் புன்னகையை உதிர்த்துவிட்டு "ஸோமா உனக்கு அகத்தீசர் உபதேசிக்காதது எதுவுமிருக்காது; அவர் கருணை மிகுந்தவர், அவர் திருவடியை சிரசில் தாங்கிய உனக்கு எல்லாச் சூக்ஷ்சுமமும் விளங்கும்! மேலும் புரிதல் என்பது அவரவர் பரிணாமத்திற்கு தக்க, அந்தக் கரணத்தின் சுத்திக்கு ஒப்ப அறிவது தான்! ஆகவே கலக்கமின்றி உனது தியான சாதனையைத் தொடர்வாயாக! என்று கூறிவிட்டு அமைதியாக தியானத்தில் ஆழ்ந்து விட்டார்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.